Tamil Sanjikai

'மத்யபானம்' என்றால் கப்பைக் கிழங்கு தேசத்தில் ' டோஸ்' ( உற்சாக பானம் ) என்று அர்த்தம்.

உச்சநீதிமன்றம் சொன்னாலே ஒன்றிணையாத மாநிலங்களின் மாற்றுக் கருத்துக்கள் கூட குப்பிகளின் வாயிலாக ஒன்றிணைந்து இருக்கிறது. தண்ணீர் தர மாட்டேன் என்று சொல்லும் கர்நாடகாவிலும், கேரளாவிலும் கூட மலிவு விலையில் நல்ல தரமான உற்சாக பானங்களும், இலவச கொறிப்பான்களும் , விலையில்லாக் குவளையும், குப்பிக்குடி நீரும் இலவசமாக வழங்கப் படுகிறதென்றால் மொழி, மத, இன, கலாச்சார பிரதேசங்கள் தாண்டிய எண்ணங்களின் ஆதார ஸ்ருதி என்பது உற்சாக பானம்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இவ்வுலகில் சமத்துவம் என்பது எங்கிருக்கிறதோ இல்லையோ சாராயக் கடைகளில் உண்டு என்பது ஆன்றோர் வாக்கு. ஏன் உணவகங்களில் இல்லையா? என்று கேட்கும் வயித்துப் பக்காளிகளுக்கு , ஒரு வாளிக் கஞ்சியும், செம்புத் தகட்டில் அடைக்கப்பட்ட ஒரு வாதையும் வழங்கப்படும்.

‘குடி’யால் மாநிலங்களும் , ‘குடி’மக்களின் வேற்றுமைகளும் ஒன்றுபட்டது என்னும் வரலாற்றை சாமான்யமான 'குடி'மகன் ஒருவர் வரலாற்றுப் புத்தகத்தின் பின் அட்டையில் எழுதினார்.

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.

அதாவது கனவான்களே ! ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும் என்பதையே பொய்யாமொழிப் புலவர் கூறுகிறார் .

அக்காலத்தில் மரவேலை என்றால் கூப்புடு 'முல்லை'யை என்னும் அளவிற்கு புகழ் பெற்றவர் அவர். முல்லை என்றவுடன் தலை நிறைய பூவுடன் தழையத் தழைய வரும் இளம்பெண்டிரைக் கற்பனை செய்பவர்கள் இந்தாண்டின் சிறந்த ''கோழிக்கள்ளன்'' விருதுக்கு பரிந்துரைக்கப் படுவார்கள்.

அவர் பெயர் முல்லைவேந்தன். வயது நாற்பதாகிவிட்டது என்றாலும் திருமணமாகவில்லை. முல்லையின் தகப்பர் முடிசூடியபெருமாள் அக்காலத்தில் வாழ்ந்த ஒரு பானமோற்சவர். உற்சாக பானம் அவரைப் பாடையில் தூக்கி செல்லவில்லை என்றாலும்கூட அவர் பாடையில் போகும் காலம் வரையிலும் தன் மனைவியை விட அதிகமாக பானத்தை நேசித்து தழுவிக் கொண்ட ஒரு மிகப்பெரிய குடியாண்டவர். ஆகையால் முல்லைக்கு பெண் கிடைப்பதில் மிகுந்த சிரமம் இருந்தது.

''தகப்பனைப் போல பிள்ளை, குப்பியைப் போல குவளை''

என்று முல்லைக்கு பெண் தர யாரும் முன்வரவில்லை. தெரியாத தேவதையை விட தெரிந்த சாத்தானே மேல்! என்று பானத்தைத் தழுவத் தொடங்கினார் முல்லை.

ஒரு பெரிய கோடாலியை எடுத்து மரத்தைப் பிளப்பது தொடங்கி, ஒரு சிறு உளியை எடுத்து, மரத்தை பிசிறு தட்டாமல் செதுக்குவது வரை முல்லைக்கு நிகர் ஒரு பயல் கிடையாது. அப்படி ஒரு திண்ணமான ஆள்.

முல்லைக்கு மொழிகளின் மீது அத்தனை பிடிப்பு இல்லாததாலும், பானக் கடையில் அநேகர் சேர்ந்து மொழிகளற்ற சப்தங்களை உருவாக்கியதாலும் முல்லைவேந்தன் கூட்டமான இடங்களைத் தவிர்ப்பார். பெரும்பாலும் பானக்கடைகள் ஆர்ப்பரிக்கும் சத்தங்களை உருவாக்கும் என்பதால் தன் எடுபிடி கைலாசத்தை அனுப்பி பானக்குப்பிகளை ஊர்முகப்பிலுள்ள கிணற்றங்கரைக்கு வரவழைப்பார்.

கைலாசம் ஒரு சுறுசுறுப்பான சுள்ளான். தன் குருவின் சொல்லைத் தட்டாதவன். அவருக்கு ஒரு முழு குப்பி சாராயமும், வாத்துக் கறியும் வாங்கி விட்டு தனக்கு ஆகாரமும், கொறிப்பதற்கு பட்டாணிக் கடலையும் வாங்கி வருவான்.

குப்பியின் வருகையானது முல்லைக்கு மட்டற்ற மகிழ்ச்சியை வழங்கிவிடும். அந்தக் குப்பியை எடுத்து கிணற்றின் கரைதனில் வைத்து பாடத்துவங்கி விடுவார்.

உனைக்கண்ண்டு....... மயங்ங்ங்காத… பேர்களுண்டோ…. !

உனைக்கண்ண்ண்டு....... மயங்ங்ங்கா…த…. பேர்களுண்....டோ…….!

உனைக்கண்ண்ண்ண்..டு....... மயங்கா….....த…………. பேர்களுண்டோ..............!

வடி... வழ..... கிலூ....ம்ம்ம்ம் குண...மதிலூ நிகரிலுன்னைக்

கண்ண்டும்மயங்......காத........... த பேர்களுண்டோ !!!!!

பாட்டைக் கேட்டு அந்தப் பிரதேசத்தில் உலவும் கொசுக்கள் அத்தனையும் பறந்து ஓடி விடும்...

குப்பியில் உள்ள உற்சாக ஜலம் முழுவதும் தீரும்போது வாத்துக்கறியின் முக்கால் பங்கை கைலாசமும், கால் பங்கை வயலிலுள்ள எலிகளும் தின்றிருப்பார்கள். பட்டாணிக்கடலைகள் கிடைத்தால் உண்டு, இல்லையென்றால் இல்லை. வெறும் உற்சாக நீராகாரம் மட்டுமே போதுமானது என்றுசொல்லி முல்லை சமாதானமாகி விடுவார். இவை வழக்கமாக நிகழும் காரியங்கள்தான்.

குடியின் முடிவில் முல்லை தன் முன்னோரை தூய தமிழில் வாழ்த்துவார். தனக்குத் திருமணமாகாமல் தனியனாக மகிழ்ந்திருப்பதற்கு அவர்களுடைய தூய நடத்தைகள்தான் காரணம் என்று எண்ணி கண்கலங்குவார். கைலாசம் ஆறுதல் கூறிக் கொண்டே பட்டாணியையும், வாத்துக் கறியையும் வாரி வாய்க்குள் இறைப்பான். செகண்ட் ஷோ முடிந்து செல்பவர்கள் இவர்களைக் கடந்துதான் செல்ல வேண்டும்.

ஊர் எல்லையின் நள்ளிரவு நேரத்து பாதசாரிகளும் , உடுக்கையோடு வரும் ராப்பாடியும் இவர்கள் இருவரது இருப்பின் தைரியத்தில்தான் ஊருக்குள் நுழைவார்கள் அல்லது வெளியேறுவார்கள். ஆனால் ராப்பாடியோடுகூட துணைக்கு வரும் வாதைகள்தான் தயங்கி நிற்கும். முல்லையின் பான மிகுதி பாடல்கள்தான் வாதைகளின் அச்சத்துக்குக் காரணம். ஒருகட்டத்தில் தன் பெற்றோரை பாடுபொருளாக்குவார் முல்லை. வானத்தைப் பார்த்தபடியே கதறுவார்.

எச்சிக்கல தாயோளி ! நீ குதிச்ச குதிக்கும், குடிச்ச குடிக்கும் இன்னைக்கி நா ஒத்தையில கெடந்து நாக்க நாக்க வாங்கிட்டு கெடக்கேன். பேரு கொள்ளாம் ! முடிசூடியபெருமாளு ! காவக்கார கொன்ன பய ! தொட்டிக் கூய்மோன! ஒன்னாலத்தானல நா இங்க ஒத்தையில கெடந்து சாவுகேன்! இன்னக்கி வரைக்கும் ஒரு முக்கோணத்தையும், வட்டத்தையும் கண்டது கெடயாது ! கவுட்டைக்கெடையில கைய வச்சிக்கிட்டுதானே படுத்துக் கெடக்க வேண்டியிருக்கு ! எங்கம்மய நீ படுத்துன பாட்டுக்கு ஒத்தப் புள்ளையா என்னைய பெத்துப் போட்டுகிட்டு ஓடிப்போயிட்டா ! பொறந்ததுலேர்ந்து பாலக்கண்டது கெடயாது ! பூரா தண்ணிதாம் ! இங்க பாத்தியா கூய்வுள்ளா !

( கையிலிருந்த குப்பியை வானத்துக்கு நேராக ஏறெடுப்பார், அவரது தகப்பனார் வானத்திலிருந்து இந்தக் காட்சிகளையும், வசவுகளையும் காண்பார் என்று முல்லை நினைத்திருக்கக்கூடும் )

முடிவில் முல்லையின் கண்களிலிருந்து அருவி பெருகும். தன்னுடைய தனிமையைப் போக்க வந்த தேவதூதன் இவன்தான் என்று கைலாசத்தைக் கட்டிப் பிடித்தவாறே அழுவார்.

பின்னிரவின் சுவர்க்கோழிகளை உறங்க வைத்த பின்தான் இருவரும் தூங்கப்போவார்கள். கைலாசத்துக்கு பானப்பழக்கம் கிடையாது என்றாலும் எள்ளோடு சேர்ந்த எலிப்புழுக்கையாகவே முல்லையோடு சேர்ந்து நிலவு காய்ந்து, இரவு முழுவதும் பனிகுடிப்பான். மறுநாள் வழக்கம் போல பட்டறைக்குச் சென்று விடுவார்கள்.

ஒருநாள் இரவில் இரண்டு குப்பிகளின் முடிவில் கைலாசம் கண்கள் அடைக்க பாடத் துவங்கினார்.

 

சத்ழ்வகுண்ண....போத....ழ்ன்‌ன் ! சழ்வகுண்........ண....போழ்த....ழ்ன்‌ன் ! சரணமேது............

சத்ழ்வகுண்ண....போதழ்....ழ்ன்‌ன் ! சர்ழ்வ.... குண்..ணப்போழ்தழ்ன் சரணமேது.....

அப்போது வயலில் கூட்டமாக நின்று வாத்துக்கறியின் எலும்புகளை ருசித்துக் கொண்டிருந்த எலிகளைப் பார்த்து பாம்பு ஒன்று பதுங்கிப்பதுங்கி வந்து கொண்டிருந்தது. கூட்டமாக எலிகளைக் கண்டு அகமகிழ்ந்த பாம்பு நினைத்துக் கொண்டது.

என்னடே இது ! என்னிக்குமில்லாம இன்னிக்கின்னு பாத்து பயலுவ கூட்டமா நிக்கானுவளே ? தேடும்போது கிடைக்க மாட்டானுவோ ! செவத்த பசிக்கின்னு சொல்லி எறும்பு புத்துல வாய வுட்டு கடிபட்டதுதான் மிச்சம் ! பசி தீரலை ! ரெண்டு பயலையாவது தூக்கிரணும்! என்று பறந்து வந்து கொண்டிருந்த போது,

சத்ழ்வகுண்ண....போத....ழ்ன்‌ன் ! சழ்வகுண்........ண....போழ்த....ழ்ன்‌ன் ! சரணமேது............

என்ற குரலைக் கேட்ட பாம்பு திடுக்கிட்டு அண்ணார்ந்து பார்க்கவும், கிணற்று மேட்டின் ஓரத்தில் அமர்ந்திருந்த கைலாசம் குப்பியைத் தட்டி பாம்பின் மீது விடவும் , குப்பியில் இருந்து தெறித்த வெள்ளிநிறத் திரவம் வாயைப் பிளந்தவாறே நின்ற பாம்பின் தொண்டைக்குள் புகுந்தது. பாம்பின் தொண்டை எரிந்தது. பானம் பாம்பின் குடலுக்குள் சென்றதுதான் தாமதம். பாம்பானது பரவச நிலையை அடைந்தது.

என்ன தண்ணியப்பா இது ? பயங்கரமா இருக்கே ! வயல்ல பூச்சிக்கொல்லி மருந்தடிச்ச தண்ணிய குடிச்சிருக்கோம் ! கொளத்துல மனுசங்குளிச்ச தண்ணிய குடிச்சிருக்கோம் ! காட்டுக்குள்ள வரைக்கும் போய் அங்குள்ள தண்ணிய குடிச்சிருக்கோம் ! அந்தத் தண்ணிலயெல்லாம் இல்லாத உஜாரு இந்தத் தண்ணில இருக்குன்னா இது லேசுப்பட்ட தண்ணி ஒண்ணும் கிடயாது ! என்று எண்ணிக்கொண்ட பாம்பு, இதுநாள் வரைக்கும் இந்த அற்புதத் திரவத்தை தமக்கு அறிமுகம் செய்யாத கடவுளை கெட்டகெட்ட வார்த்தைகளால் திட்டத் துவங்கியது.

சர்வத்தையும் அறிந்த கடவுளுக்கு இந்த சர்ப்பத்தின் வசவுச் சொற்கள் கேட்காமல் இருக்குமா? சடாரென பாம்பின் முன்பாக தோன்றினார் கடவுள். எடுத்த எடுப்பிலேயே கடவுள் கேட்ட கேள்வி இதுதான்...

அடப் பரதேசி பாம்பு நாய ! நாம்பாட்டுக்கு ரெண்டு மனுச ஜென்மங்கள படச்சி ஒரு தோப்புக்குள்ளாற வுட்டுருந்தேன்... நீ பாட்டுக்கு ஒரு எழவுடுத்த ஆப்பிள் பழத்த குடுத்து ஏமாத்தி, அந்த ரெண்டு பேவுள்ளையளையும் அம்மணங்குண்டியா ஓட வுட்டதுமில்லாம இப்போ என்னையவா கேள்வி கேக்க ! ஒரே சவுட்டுதான் ! செத்தொழிஞ்சிருவ செவமே !

கடவுள் அயர்ந்து போய் புலம்பினார். நா எங்கடே அந்தத் தண்ணிய படச்சேன் ? இந்த எழவுடுத்த மனுச நாய்கள் எல்லாஞ்சேந்து சாராயம் வடிச்சி குடிச்சதுமில்லாம இந்த பாழாப்போன பாம்புக்கு வேற ஊத்திக் குடுத்து , செவம் நாலரை அடி நீட்டமிருக்குமா ? இந்த குள்ள பாம்பெல்லாம் என்னைய மானங்கெட்ட கேள்வி கேட்டுட்டு திரியிது ! இந்த மனுசப் பயக்கள வச்சிக்கிட்டு ஒரு மயித்தயும் புடுங்க முடியாது போலிருக்கே ? தெரியாம படைச்சித் தொலைச்சிட்டேண்டா ஒங்கள ! இனிமே என்னய திட்டுனீன்னா மரியாத கெட்டுரும் ராஸ்கல்! என்று பாம்புக்கு எச்சரிக்கை செய்துவிட்டு, தலையிலடித்துக் கொண்டே விடைகொடுத்தார் கடவுள்.

இந்த மனிதர்கள்தான் தனது படைப்பிலேயே சோரம் போன படைப்பு என்று கடவுள் பலமுறை உணர்ந்திருந்தாலும் அன்று நடந்த சம்பவமானது அவருக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது. பின்னே தன்னுடைய ஒரே எதிரியான சாத்தானின் வளர்ப்புப் பிராணியின் வாயிலிருந்து தகாத வார்த்தைகளைக் கேட்டது ஒரு சாமானியமான காரியமா ? சோகத்தில் சோர்ந்துபோய் வரப்பு வழியாக நடந்து போனார் கடவுள்.

போதையின் நிமித்தம் கடவுளின் பாஷை சரியாகப் புரியாத பாம்பு கண்கள் சொருக எலிகள் கூட்டத்தை ஏறெடுத்தது. அங்கே முன்னே பார்த்ததைவிட ஏராளமான எலிகள் இருந்ததைக் கண்டது. ஆனால் முதலில் இருந்த எலிகளின் மீதான பசிப்பார்வை இப்போது மாறியிருந்ததை பாம்பால் உணர முடியவில்லை. மாறாக அந்த எலிகளின் மீது பாம்புக்கு நேசம் பிறந்தது. அவைகள் தன்னுடைய இனத்தாரால் தொடர்ந்து கொல்லப் படுவது குறித்த அச்சமும், பரிதாபமும் தொடர்ந்து பாம்பைக் கேள்விக்குள்ளாக்க பாம்பு கதறி, மானசீகமாகக் கண்ணீர் விட்டு அழுதது.

உற்சாக பானமானது மனிதர்கள் மட்டுமல்லாமல் இப்பூவுலகில் வசிக்கும் அநேக பிராணிகளையும் கண்ணீர் விட வைத்து, சக ஜீவராசிகளின் மீதான தங்களுடைய அன்பை வெளிப்படுத்த ஏதுவாய் இருந்த அந்தநாள் மிகவும் உன்னதமான நாளாய் அமைந்து போனது.

பாம்புக்குத் துக்கம் தாளவில்லை. தொடர்ந்து அழுதுகொண்டிருந்தது. எலிகளின் துச்சமான மரணங்கள் குறித்துத் தனக்குள்ளே பல கேள்விகள் எழுந்த வண்ணமிருந்ததால் அதனால் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை. முல்லையும் பாட்டை நிறுத்தவதாயில்லை.

தீளக் கழுணாகழனே ! நழழாஜா ! நீழகழ்ண்டழே!

பாம்பு மெதுவாக ஊரத் துவங்கி, வரப்பில் ஏறி, மேட்டில் ஏறி கிணற்றின் கரையருகில் வந்து , வானத்தை நோக்கி தொடர்ந்து பாடிக் கொண்டிருந்த முல்லையின் அருகில் வந்து படுத்துக் கிடந்தது. கைலாசம் உட்கார்ந்து கொண்டே தூங்கிப் போயிருந்தான்.

மவுணகுழுவே கழணே எழையாழ்ண்ட நீழகழ்கண்டனே..... ஊ.........

என்றவாறே பாடலைப் பாதியில் நிறுத்திய முல்லை கண்ணயர்ந்தார். மூன்று பேரும் நிம்மதியாக நித்திரையடைந்திருந்தார்கள். அதிகாலையில் கண்விழித்த முல்லை தன்னருகில் கிடந்த பாம்பைத் தன் கையால் தடவிப் பார்த்துவிட்டு இப்படிக் கூறினார்.

எலேய் கைலாசம் ! செத்த தள்ளிப் படுக்கப் புடாதா ? இவ்வள கிட்டக்கக் கொண்டாந்து நீட்டிக்கிட்டு கெடக்க? செவத்துப் பெயெலே !

அப்போது கிணற்றுக்கு தண்ணீர் பிடிக்க வந்த வேலம்மை பாம்பு கிடப்பதைப் பார்த்து கத்தினாள்....

அய்யோ ! பாம்பூ.................

அதற்கு முல்லை இவ்வாறு பதிலளித்தார்.

வேட்டி வெலகுனா அப்டித்தான் ! காலையில அப்புடித்தான் இருக்கும் ! நீ எதுக்குட்டி அதப் பாக்க ? பேசாம தண்ணிய கோரிக்கிட்டு போங்களாம்ளா ! பாம்பு , கூம்புன்னுக்கிட்டு ஓலம் வச்சிக்கிட்டு கெடக்காளுவ ! செத்தமூழியளு !

மக்கள் நடமாட்டத்தைக் கவனித்த பாம்பு, தான் எப்படி இங்கு வந்தோமென்று குழம்பி வயலுக்குள் பாய்ந்து பறந்தது. ஊருக்குள் சென்று ஆட்களைத் திரட்டி வந்த வேலம்மைக்கு அங்கே பாம்பு இல்லாததைக் கண்டு ஆச்சரியமாய்ப் போனது. முல்லையும், கைலாசமும் கிடந்த கிடையைக் கண்ட மக்கள் இப்படிச் சொன்னார்கள்.

எட்டி வேலம்ம ! ஒரு பாம்புன்னு சொன்ன ? இங்க ரெண்டண்ணம் கெடக்கு ? குடிச்சீட்டு படுத்துக் கெடக்கவனுவளுக்கு அடிசீல அவுந்து கெடக்கது எப்புடி தெரியும் ? நாமதான் பாத்து நிக்கணும் ! நல்லகாலம் சவுட்டலை ! செவங்கள் செத்துருக்கும்! என்றவாறே கைலாசத்தையும் முல்லையையும் எழுப்பி வேட்டியைக் கட்டிக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள்.

வேலம்மைக்கு ஒரே வெட்கமாகப் போய்விட்டது. முதலில் அவள் பார்த்தபோது அத்தனை வெளிச்சம் அங்கே இருந்திருக்கவில்லை. பளபளப்பாக இருந்திருந்ததால் பாம்பு மட்டும் தென்பட்டது. ஆனால் அங்கே தான் பாம்பைக் கண்டது உண்மைதான் என்று மக்களை நம்ப வைக்க முற்பட்டாள். மக்கள் ஒரு எகத்தாளச் சிரிப்போடு விடை கொடுத்தார்கள்.

கைலாசம் முல்லையிடம் வேலம்மைக்கு நடந்த சம்பவத்தைச் சொன்னான். அதற்கு முல்லை இவ்வாறு விடையளித்தார்.

வுடுடே! அவ பாக்காத பாம்பா ?

அப்படித்தான் ஒருகாலை வேளையில், கண்ணப்பனின் புதுவீட்டு நிலையில் கதவைப் பூட்ட வேண்டி மராமத்து வேலையை ஆரம்பித்திருந்தார் முல்லை. தளர்ந்திருந்த மர இடைவெளிகளை பாளியால் நெருக்கத் தொடங்கினார்கள் . அப்போது ஊருக்குள் புதியதாய் குடும்பம் ஒன்று வில்வண்டியில் வந்து இறங்கியது. முதலில் இறங்கியவர் தன் உடைகளின் மூலம், தான் ஒரு ‘சேட்டன்’ என்பதை அறிவித்தார். அவர் பெயர் குஞ்சாலிக்குட்டி . பின்னால் ஒரு சேச்சியும் அவரோடு கூட ஒரு பைங்கிளியும் இறங்கியதைக் கண்ட முல்லையின் மூக்கில் பிச்சிப் பூவின் வாசம் முதன்முதலாக நுழைந்தது.

அவளைப் பார்த்துவிட்டு , குனிந்து , தான் சீவிக் கொண்டிருந்த கதவைப் பார்த்தார். அது ஒரு வாளிப்பான ஈட்டித்தடியில் உருவான கதவு.

சொப்பன வாழ்வில் மகிழ்ந்து....................................சொப்பன வாழ்வில் மகிழ்ந்து........ சுப்ரமண்ய.......சாமீ ................... உனைமறந்தார்..................

தன் வருங்காலக் கனவுக்கன்னியின் பெயர் மோளிக்குட்டி என்றும், மாமியார் பெயர் ஓமனை என்றும், அவர்கள் வியாபாரத்திற்காக புலம் பெயர்ந்ததாகவும் அறிந்து கொண்டார். கதவை நிமிர்த்தி, விசிறியையும், கொண்டியையும் மாட்டிக் கொண்டிருக்கும்போது அந்தி சாய்ந்திருந்தது. கைலாசம் எழுந்து லாந்தர் விளைக்கைப் பற்ற வைத்துவிட்டு அமர்ந்தார். கடையின் வாசலில் ஒரு நிழல் அசைவதுகண்டு முல்லை நிமிர்ந்து பார்த்தார். அங்கு நின்றது சேட்டன்.

உடனடியாக எழுந்த முல்லை , உள்ள வாங்கய்யா ! என்றார்.

சேட்டன் பணிவுடன், இவீடே ஷோப்பு எவிடயா ?

முல்லை சேட்டனிடம் , சோப்பு பணிக்கர் கடையில் கிட்டும்! என பதிலுரைத்தார் .

இந்த நிகழ்வு முல்லையின் வாழ்வில் இன்னொரு அந்நிய மொழியின் பயணத்தையும், வேறொரு மாநிலத்தோடான இணைப்பு முயற்சியையும் தொடங்க ஏதுவாயிருந்தது.

சேட்டன் அடுத்த கட்டமாக , சோப்பு அல்லா! ஷோப்பு ! ஷோப்பு! கள்ளு ஷோப்பு !

என்றவரிடம் கைலாசம்.... கல்லு சோப்பு கிடைக்குமா’ன்னு தெரில ... ராட்டு சோப்பு கிடைக்கும்... ஒங்களுக்கு குளிக்கிற சோப்பு வேணுமா ? துவைக்கிற சோப்பு வேணுமா? என்று கேட்டு வைத்தார்.

சோப்பு அல்லா ! ஷோப்பு ! வெள்ளம் ! வெள்ளம் ! என்றார் சேட்டன்.

ஓ வெள்ளமா ? மக்களே கைலாயம் ! ஒரு கிளாஸ் தண்ணி எடுத்துட்டு வாடே ! என்றார்.

ஈ வெள்ளமல்லா ! ஆ வெள்ளம் !

என்ற சேட்டனிடம் முல்லை, 1974-ல் வந்த பெருவெள்ளம் குறித்து எடுத்தியம்பினார். உடனடியாக மயக்கத்துக்குப் போன சேட்டன் இறுதியாக முல்லையிடம் தன் கைகளின் நான்கு விரல்களை உள்மடக்கி , கட்டைவிரலை ஆகாயத்திடம் காட்டி கேட்ட போது முல்லைக்கு பிடிகிட்டியது.

ஓ.............! செவுருமுட்டி ?

அப்போது உற்சாகபானத்தைப் பல்வேறு பெயர்களில் அழைப்பார்கள். அதில் ஒன்றுதான் சுவர்முட்டி. அதைக்குடித்தால் சுவர்மீது முட்டியபடியே நிற்கவேண்டி இருக்குமாம்.

‘செவுருமுட்டி’ என்ற வார்த்தையைக் கேட்டபோது சேட்டன் மீண்டும் மயங்கினார். அவரிடம் முல்லை, எங்கூர்ல செவுருமுட்டி'னா சாராயம்’னு அர்த்தம் ! என்று பதிலுரைத்தபோது சேட்டனின் கண்கள் சமநிலைக்கு வந்தன. சேட்டனை அமரச் செய்து விட்டு , கைலாசத்திடம் குப்பி கொள்முதல் செய்யும் பணி ஒப்படைக்கப் பட்டது.

எண்ணே ! வாத்துக்கறி வாங்காண்டாமாண்ணே ??? என்று இழுத்தவனைப் பார்த்து முறைத்து விட்டு, சேட்டனிடம் முல்லை, அது.... நீங்க ஊருக்குப் புதுசுல்லா ? அதான் பையன் கொஞ்சோல ஆர்வத்துல கேக்கான் ... நீங்க வாத்துக்கறி சாப்பிடுவீயளா ? னு கேட்டார் முல்லை.

உவ்வு ! ஆகாஷத்தே விமானத்தயும், சமுத்திரத்தே வள்ளத்தயும் விட்டு ஞான் பாக்கி அத்தரயும் கழிக்கிம்! என்ற சேட்டனை மனசுக்குள் ‘வயித்தாளித் தாயோளி’ என்று கேட்டுவிட்டு பாக்கெட்டிலிருந்து காசு எடுத்துக் கொடுத்தார் முல்லை.

இரு குப்பிகளோடு வந்த மண்டையன் கைலாசத்தை எண்ணி மனதுக்குள் அமைதி குலைந்தார். தன்னை ஒரு குடிகார நாயாக இந்த கைலாசம் நாயே காட்டிக் குடுத்துரும் போலயே ! என்று எண்ணினார்.

பானமுற்ற தமிழனுக்கு தமிழனே தண்ணி குடுக்கமாட்டான் ! மலையாளி எப்புடி பொண்ணு குடுப்பான் ? என்ற கேள்வி முல்லையின் மூளைக்குள் தோன்றியது.

சேட்டன் முல்லையிடம் , சகாவே ! மத்திய பானங் களிக்குவோ ? என்றார்.

அதற்கு முல்லை, இல்ல ! அதுவந்து எங்க ஐயனுக்கு இன்னிக்கி பத்தாமத்த ஆண்டு தெவசம் ! அதான் மூலைக்கி வைக்க வாங்கியாரச் சொன்னே ! எனக்கு குடிக்கிற பழக்கம் இல்ல! என்று ஒரு முழு யானையை டிராயர் பைக்குள் ஒளித்து வைத்தார் முல்லை.

கைலாசம் ஒன்றும் புரியாமல் விழித்தான். முல்லை சொன்னதை உண்மையென்று நம்பிவிட்டார் சேட்டன் .

சாதாரணமாக ஒரு கப்பிலேயே அஞ்சு கண்ணனாகி விடும் சேட்டன், ஒரு முழுக் குப்பியைப் பார்த்ததும் மனதுக்குள் மரித்தார். காணாதவன் கஞ்சியைக் கண்டது மாதிரி ஊற்றி ஊற்றிக் குடித்ததில் பட்டறையின் வாசலில் மல்லாந்தார் சேட்டன். உள்ளே கிடந்த கண்ணப்பன் வீட்டுக் கதவும், வெளியே கிடந்த சேர நாட்டுக் கஞ்சியும் ஒன்றாய்க் காட்சியளித்தனர்.

முல்லையும், கைலாசமும் சேர்ந்து, சேட்டனை செங்குத்தாகத் தூக்கி, சேட்டன் வீட்டு வாசலில் கொண்டுபோய்க் கிடத்தினர். உள்ளேயிருந்து ஓடிவந்த சேட்டனின் மனைவி ,

சொ ! இது எந்தா ஒரு நாணக் கேடு ? ஈ மனுஷன்டே ஒரு சல்லியம்! ஞான் மரிக்காம் போவுகா ! என்று கண்ணீர் சிந்தினாள்.

மோளே ! மோளிக் குட்டி ! வெள்ளம் எடுத்தோட்டு வாடி! என்றவுடன் முல்லைவேந்தரின் கண்கள் காதல் வெள்ளத்தை சிந்த ஆரம்பித்தன.

கைலாசம் இதை எதிர்பார்த்தான். ஏலே ! நீ பட்டறைக்கு போ ! கதவத் தொறந்து போட்டுட்டு வந்துருக்கோம்! ஓர்மையிருக்கா ? என்று முல்லை சொல்லவே , கைலாசம் பறக்கவிட்ட காதல் பட்டத்தின் நூல் நொடியில் அறுந்தது.

மேல் சீலை வெறுத்த சேரநாடு, முல்லையின் கண்களை மூடத் தடையாக இருந்தது. மோளியின் வாளிப்பான வனப்பு வெள்ளத்தைப் பருகினார். தாம் இத்தனை நாள் பூமியில் வாழ்ந்ததற்குரிய அர்த்தம் அந்த அர்த்தராத்திரியில் புரிந்து போனது.

மோளியின் புஞ்சிரி கண்ட முல்லை , பெட்டைக்கோழியைக் கண்ட சேவலைப் போல படபடத்தார். மனம் நிறைய சந்தனம் மணக்க பட்டறைக்கு திரும்பிய முல்லையை எதிர்கொண்ட கைலாசம் குப்பியோடு நின்றிருந்தான். சேட்டன் தின்று மிச்சம் வைத்த வாத்துக்கு இந்நேரம் பரலோக பதவி கிடைத்திருக்கும். கிணத்தங்கரையில் குடி கொண்டவரிடம் கைலாசம் கேட்ட முதல் கேள்வி ,

யண்ணே ! மலையாளத்துல 'சரக்கு' ன்னா என்னண்ணே அர்த்தம் ?

அதற்கு முல்லை, சரக்குன்னா ‘வெடி'னு அர்த்தம் என்றார்.

ஓ ! நம்ம ராசாத்தி மாறியா ? என்ற கைலாசத்துக்கு பள்ளையில் ஒண்ணு விட்டார் முல்லை.

ஏனென்றால் ஊரின் அப்போதைய யவனத்து பொது சுந்தரி ராசாத்தி , முல்லைக்கு ஒன்று விட்ட மாமன் மகள். அவளது கதை இங்கு வந்தால் இக்கதை ''சரோஜா தேவி'' வகையறா ஆகிவிடும் அபாயம் உள்ளதால் விட்டுவிடலாம்.

சாயங்காலம் தோறும் முல்லையின் பட்டறையில் ஆஜரானார் குஞ்சாலிக்குட்டி சேட்டன். சேட்டன் பானத்தில் மயங்கினால்தான், தாம் மோளிக் குட்டியை மயக்கமுடியும் என்ற அகில உலக ஐன்ஸ்டீனின் விதியால் முல்லை சேட்டனின் அதிகார பூர்வ , இலவச பானக் கிட்டங்கியாய் மாறினார்.

சேட்டனை சுதிமீட்டி எட்டு மணிக்கெல்லாம் உறங்க வைத்துவிட்டு, சேட்டனின் மனைவியிடம் நல்ல பெயர் வாங்கி, சேட்டனின் மகளோடு காதல் மொழி பேசி விட்டு , பட்டறைக்குத் திரும்பி பானமுற்று இரவு படுக்க தினமும் பன்னிரெண்டு மணிக்கு மேலானது. இப்படியாக சேட்டனுக்கு தினம் முல்லை தம் சொந்த செலவில் பானம் வாங்கி கொடுத்து, சேட்டனின் ஈரலைக் கொதிக்க வைத்து, ஒருமழை நாளில் சேட்டனுக்கு மலர்வளையம் வைத்த கையோடு மோளிக் குட்டிக்கு மலர்மாலை சூடினார் முல்லை.

ஒரு கெட்டது நடந்தால் ஒரு நல்லது நடத்துவதுதானே ஐதீகம் ?

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.

அதாகப் பட்டது குடிமக்களே ! அய்யன் வள்ளுவன் என்ன சொல்கிறாரென்றால், குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள்
சூழ்ந்து கொள்வார்கள்.

அவர் கூறியது மாதிரியே தன்னைக் குற்றமற்றவனாகக் காட்டிக் கொண்டு , குடிமகனாகிய குஞ்சாலிக் குட்டி சேட்டனின் குடி நலத்திற்குப் பாடுபட்டு, அவரைக் காடு சேர்த்த முல்லையை , தன்னில் பாதியாக மோளிக் குட்டியும், தன் வாழ்க்கையின் மீதியாக சேட்டனின் மனைவி ஓமனையும் சூழ்ந்து கொண்டார்கள்.

கைலாசத்திற்கு மோளிக்குட்டி மீது ஒருதலைக் காதல் இருந்தது ஆனாலும் முதலாளியின் மீதிருந்த அன்பில் அவளைத் தார்மீகமாக முல்லைக்குத் தாரை வார்த்திருந்தான். சேட்டனின் திருமணத்தன்று இரவு பட்டறையில் தனித்து படுத்திருந்தான் கைலாசம். கண்களில் இருந்து வழிந்த நீர் தரையில் விழுந்து ஓடி, தெற்கு மூலையில் உள்ள மடை வழியாகப் பாய்ந்து, பட்டறையின் அருகே ஓடிய வாய்க்காலில் கலந்து, பழையாற்றில் குதித்து சுசீந்திரம் வழியாகச் சென்று மணக்குடி பொழியில் பொழிந்து, கடலுக்குள் சங்கமித்து சமுத்திரத்தின் நீரை மேலும் உப்பாக்கியது.

அதற்கு காரணம் மோளிக்குட்டி என்று நீங்கள் நினைத்தீர்களானால் அதுதான் விசுவாசம்... தொழில் பக்தி, முதலாளி மீதான நேசம். இத்தனை நாள் மழையோ, வெயிலோ எப்படியானாலும் முல்லையோடுதான் இரவைக் கழித்து வந்தான் கைலாசம். அவரைப் போய் இந்த மூழி என்னிடமிருந்து பிரித்து விட்டாளே! என்று தலையணை முழுவதும் நனைந்ததில் உறக்கம் தொலைந்தது. மோளிக் குட்டி மீதான ஒருதலைக் காதல் மறைந்து கடுப்பு வந்தது. வெப்பிராளத்தில் வாய்விட்டு அழுது விட்டான்.

புரண்டு படுத்த போதுதான் அது இருந்தது.... அது ஒரு திறக்கப்படாத முழுக் குப்பி. எடுத்து ஒரே மடக்கில் குடிக்கவும் முழுக்குப்பியும் வற்றி..... நெஞ்சு லேசாகிப் போனது.

இருட்டு அறைக்குள் புதிதாய் ஒரு வெளிச்சம், அவ்வெளிச்சத்தை போதி மரத்து ஞானத்தோடு ஒப்பிட்டால் புத்தர் கூட கோபித்துக் கொள்ள மாட்டார். இந்த அஃறிணை திரவத்தில் இத்தனை ஜீவனும், ஆதரவுமா ? கைலாசம் வானத்தில் பறந்தான். நாகராஜா கோவில் திருவிழாவின் ராட்டு ஞாபகத்துக்கு வந்தது.

அய்யோ ! என்ன ஒரு ஆனந்தம்! மனதுக்குள் ஒரு அசாத்திய தைரியம்... இனி முல்லையும் வேண்டாம் தொல்லையும் வேண்டாம் ... இந்தப் பிள்ளை போதும்! என்று பானக்குப்பியை மார்போடு சேர்த்தணைத்தான்.

இப்படியாக அத்தனை நாளும் பானத்தின் விந்தைகள் குறித்து அறியாத பாவி கைலாசம் பாவவிமோசனம் அடைந்தான்.

அங்கு முல்லையின் முதலிரவு அறையில் கதை வேறாக இருந்தது .... நெஞ்சத்தில் மோளிக்குட்டி கிடந்தாலும், வயிற்றுக்குள் உற்சாக பானம் இல்லாததால் முல்லை உறக்கமின்றித் தத்தளித்தார். கைலாசத்தின் நினைவும், சாராயத்தின் மணமும், வாத்துக்கறியின் சுவையும் இல்லாத அந்த அறையின் மல்லிகைப்பூ வாசம் என்னவோ ஒரு அரளிப் பூவின் நாற்றத்தை ஒத்திருந்தது.

ஆடை துறந்த நங்கை பாவியாவதும், தக்கை துறந்த குப்பி ஆவியாவதும் இவ்வுலகின் நியதியன்றோ ? சடுதியில் முல்லைக்கு மோளி மீதான மையல் காலாவதியாகி இருந்தது. மோளிக்குட்டி நித்திரை கொண்டிருந்தாள்.

உடனடியாக படுக்கையை விட்டு எழுந்து, அவசரத்தில் கோவணத்தை மறந்து வேட்டியை மட்டும் கட்டிக்கொண்டு பட்டறை நோக்கி நடந்தார். பட்டறையின் வாசலில் இலங்கையில் இருந்து வந்து கிடந்த வேங்கைத் தடியின் அருகில் , கைலாசம் நெஞ்சோடு குப்பியை சேர்த்தணைத்தவாறே வேட்டிக்கு விடை கொடுத்துக் கிடந்தான். அங்கு நடந்த காரியங்கள் முல்லைக்குப் புரிந்து போனது. நேராக சுடலையின் கடைக்கு நடந்தார். எந்நேரமும் பானம் தங்கு தடையின்றி கிடைக்கும் என்பதால் நள்ளிரவில் கூட குடியானவர்கள் ஆங்காங்கே வீற்றிருந்தனர்.

ரெண்டு குப்பியை வாங்கி ஒரே வீச்சில் விழுங்கினார். வாத்துக்கறி தீர்ந்து போனதால் கருவாடு தரப்பட்டது. பட்டறைக்குத் திரும்பியவரின் கால்கள் ஒன்று வடக்கும் , இன்னொன்று தெற்கும் வைத்தன. காலையில் கண்விழித்த மோளி தன் புது மணவாளனைக் காணாமல் துணுக்குற்றாள்.

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.

என்னும் குறளுக்கேற்ப ,தன் மேல் பசலை படர்வதைக் கண்டு அந்த அதிகாலை நேரத்தில் தன் தாயைக் கூட்டிக் கொண்டு பட்டறைக்கு சென்ற போது இரவு வெளுக்க ஆரம்பித்தது. பட்டறை வாசலில் லங்கோடு இல்லாமல் கிடந்த இரண்டு அரையாப்புகளையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு , தன் மருமகன் ஒரு மலைவாசியைப் போல கிடந்த கோலம் கண்ட மோளிக் குட்டியின் தாய் சொன்ன வார்த்தைகள் இவைதான்...

ஓ ! எந்தாடி இது சாதனம் ? மோளே! மோளிக்குட்டி! நீ ஒரு பாவம் ஆயிப் போயல்லோடி !

( மலையாளத்தில் தமிழ் வார்த்தைகள் நிறைய இடங்களில் மோசப்படுத்தப் பட்டுவிடும் என்பதால் வாசகர்கள் இவ்விடத்தை நிதானமாகக் கையாளுதல் அவசியம் )

சூரியன் மேலெழுந்தபோது அதிகாலையில் வேலைக்குச் சென்றோர் அந்தக் காட்சியைக் கண்டனர். அவர்களுக்கொன்றும் அந்தக் காட்சி புதிதில்லை என்றாலும் மோளியின் தாய் ஓமனைக்குப் புதிது.

கைலாசத்தின் அருகில் ஒரு பெரிய வேங்கைத் தடியும், முல்லைவேந்தனின் அருகில் ஒரு சிறிய உளுத்துப் போன முருங்கைத் தடியும் கிடந்தன....

இது எந்தாடி சாதனம் ? என்று மோளியின் தாய் ஓமனை சொன்ன வார்த்தைகள் அந்த நிலப்பரப்பின் காற்றுவெளிகளில் கரைந்து பக்கத்து பிரதேசங்களைக் கடந்து சென்றன.....

உற்சாக பானம் என்பது எப்பேர்ப்பட்ட தேக்குத் தடியையும் உளுத்துப் போக வைத்துவிடும் வல்லமை பெற்றவை.

-பிரபு தர்மராஜ்

1 Comments

  1. யோவ் சிரிச்சு முடியலயா.. நல்லா இரும்வே.. நெறய எழுதும்

Write A Comment