Tamil Sanjikai

'பினாயில் நாத்தம் உங்களுக்குப் பிடிக்குமா... எனக்குப் பிடிக்காது. ஆனா ஒரு வாரமா அந்த நாத்தத்தோடதான் வாழ்ந்துட்டுருக்கேன். உங்களுக்குப் பிடிக்கலைன்னாலும் கொஞ்சம் கொஞ்சமா பழகிடும். எனக்குப் பழகிடிச்சி. பினாயில் நாத்தம்னா சொன்னேன். இல்லைங்க. வாசனை சொன்னேனே பார்த்தீங்களா... பழகிடும்னு. டாக்டர் விசிட்டப்பல்லாம் நான் ஸ்டாப்பா நான் பேசுறத சொல்றாரு. ஆனாகான்சியஸ்ஸா பேசுறேன்னு சொல்றாரு. ஒண்ணு தெரியுமா...கான்சியஸ்ஸா இருக்கிறவன், தப்பை சரியா செய்வான். அப்போ நான் பண்றது தப்பா சரியான்னு தெரியல. அப்புறம் எப்படி கான்சியஸ்னு சொல்ல முடியும். புரியலைல. ஒரு கவிதை இருக்கு. கல்யாண்ஜியோ , கலாப்ரியாவோ தெரியலை. பறந்து கொண்டிருக்கும் பட்டம் அறுந்து அதன் மாஞ்சா நூல் ஒரு பறவையின் கழுத்தை அறுப்பதாய் ஒரு கவிதை உண்டு. காற்றின் தீராப் பக்கங்களில் எழுதிச்செல்லும் ஒரு பறவையின் வாழ்வை அறுந்துபோன பட்டத்தின் கயிறு முடித்து வைக்குமானால் இந்த உலகத்துல எதுவும் எந்த நேரமும் கான்சியஸ்ஸா ஒரு வாழ்வை மேற்கொள்ள முடியாதுதானே. டாக்டர் வர்றப்போல்லாம் சொல்வார். ரிலாக்ஸ்டா இருங்க. கவலைப்படாதீங்க. சந்தோசமா இருங்கன்னு. எனக்கு அவரைப் பார்த்து கேட்கணும்னு. சந்தோசமா இரு! சந்தோசமா இரு’ன்னு சொல்றீங்களே... எப்படி சந்தோசமா இருக்கிறது? சந்தோசமா இல்லாம இருக்கிறதுக்கு, நான் ஆயிரம் காரணம் சொல்வேன். சந்தோசமா இருக்கிறதுக்கு ஒரே ஒரு காரணம் உங்களால சொல்ல முடியுமா? அவ்வளவு சீக்கிரம் எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு வரமுடியாதுங்க. மறதிதான் நமக்கு சாபம் வரம் எல்லாமே. ஆனா எதை மறக்கணுமோ அதை ஈசியா மறந்துட்டு வரிசையில் நின்னு ஓட்டுப் போடுவோம். மறக்க வேண்டியதை மறக்காம மனசுக்குள்ள போட்டு புழுங்கிட்டு இருப்போம். மனுசங்க எல்லாரும் நல்லவங்க இல்ல. இப்போ நல்லதுக்கும் கெட்டதுக்கும் டெஃபனிஷன் மாறிப்போய் ரொம்ப நாளாச்சி. ஆனா சின்னதான துரோகம், அலட்சியம், நிராகரிப்பு எல்லாத்தையும் மண்டையில ஏத்திக்கிட்டு சுத்திக்கிட்டு இருப்போம். அதை மறந்துட்டு நல்லபடியா வாழ ஒருபோதும் நெனைக்கமாட்டோம். இங்கே நம்மளப் பார்த்து சாப்புட்டியான்னு யாரும் கேட்க மாட்டாங்களான்னு ஏங்கித் தவிக்கிற எத்தனையோ மனுசங்க இருக்காங்க. பாவம் சார், என் ஃப்ரெண்ட், முப்பது வயசுகூட ஆகலை, தனிமை தாங்க முடியாம தற்கொலை பண்ணிக்கிட்டான். அவனுக்குன்னு மனுசங்களை அவன் சம்பாதிக்கலை. இங்க நடக்குற எதுவுமே அவனுக்குப் பிடிக்காமத்தான் செத்துப்போனான். லா.ச.ரா. கூட சொல்லியிருக்காரு. தசைவெறி தணிந்தபின் அவரவர் தனித்தனின்னு. இங்க எல்லாமே தனிதான் சார்.

கீழ்வெண்மணியில வெச்ச நெருப்பு அணையல. அது வெவ்வேறு வடிவத்துல இன்னும் எரிஞ்சிட்டுதான் இருக்கு. கும்பகோணத்துல குழந்தைகளை எரிச்ச நெருப்புக்கும் ஏர்வாடியில பைத்தியங்களை எரிச்ச நெருப்புக்கும் எந்த வித்தியாசமும் இல்ல. ஏன்னா நெருப்பு எந்த வித்தியாசமும் பார்க்குறதில்ல. அதுக்கு எல்லாமே ஒண்ணுதான். நீரில் மூழ்கி நெருப்பில் அவியும் உலகம்னு மனுநீதி சொல்லுது. சுனாமியெல்லாம் அப்படி வந்ததுதான். இந்த இயற்கைக்கு எதிரா நீ எது செஞ்சாலும் அது உனக்கு பதில் தராம இருக்காது. எவ்வளவு நாளைக்குதான் இந்த பூமியில நீ துளை போட்டு உறிஞ்சி எடுப்பேன்னு பாப்போம். ஒருநாள் விக்கித்தான் சாவே. அடுத்த நொடி என்ன நடக்குதுன்னு தெரியாத சுவாரசியம்தான் வாழ்க்கை. இன்னைக்கு கண்ணமூடி படுத்தா நாளைக்கு நல்லபடியா எழுந்திரிப்போமான்னு சந்தேகத்தோட ஒவ்வொரு நாளும் கண்ண மூடுறோம். இதுல எந்த இடத்துல நான் சந்தோசமா இருக்கிறது? சொல்லுங்க. இங்க யாருமே சரியான வாழ்க்கை வாழலை . இப்படி ஒரு தப்பை பண்ணிட்டு நாம நல்லபடியா வாழ்ந்துக்கிட்டுருக்கோம்கிற குற்றஉணர்வு எந்த மனுசனுக்கும் இல்லை. எந்தத் தப்பும் பண்ணாம நாம ஏன் இப்படி ஒரு தண்டனையை அனுபவிக்கிறோம்கிற வலியோட வாழ்றவங்கதான் இங்கே அதிகம்.

சமாதிக்குப் பக்கத்துல இருந்து தியானம் பண்றதெல்லாம் சித்தர் காலத்துலையே உள்ளதுதானே... அப்போ பண்ணின தியானமெல்லாம் மன அமைதிக்காக பண்ணினாங்க. பெளர்ணமி நாள்ல அழுகுணி சித்தர் சமாதிக்குப் பக்கத்துல இருக்குற கடல் மண்மேல உட்கார்ந்து தியானம் பண்றது அவ்ளோ அற்புதமான அனுபவம். ஊற்றை சடலமடி உப்பிருந்த பாண்டமடி, மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கட்டுவதில்லை; மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால் ஊற்றைச் சடலம்விட்டே என் கண்ணம்மா! உன் பாதஞ் சேரேனோ...

அழுகுணி சித்தரோட கண்ணம்மாவுக்கும், பாரதியோட கண்ணம்மாவுக்கும் எந்தச் சம்பந்தமாவது இருக்கா. ஆனா அந்தச் சித்தரே பாடிருக்காரு, இது நாறிப்போன உடம்புன்னு. உடம்பு உடல் ஆகுறது அழுகிப்போன பின்னாடிதானே . மனசுக்காக பண்ணின தியானமும் பாட்டும் இப்போ வேற மாதிரி ஆகிடுச்சு. இப்போ பண்ற தியானமெல்லாம் அரசியலாகிடுது. ஆன்மிகமும் அரசியலும்பிரிக்க முடியாததுதான். ஆனா இப்படி மன நிம்மதிக்கு நம்ம முன்னோர்கள் பண்ணினதையெல்லாம் பணம் பண்ணனும்னு சில அரசியல்வாதிகள் பண்றதெல்லாம் அசிங்கம் சார். இதுக்கு நடுவிலதான் நான் சந்தோசமாவும் இருக்கணும்னு நீங்க சொல்றீங்க. நம்ம பாட்டன் பூட்டன் காலத்துல கடலுக்கு மீன் பிடிக்கப் போனா உசிருக்கு உத்தரவாதமில்ல. கடல்ல எந்நேரமும் காத்து தெச மாறலாம். விஷ மீன் கடிச்சி செத்துப்போன தாத்தனுக்கு கடல் தண்ணியிலதான் அடக்கமே நடந்துச்சி. அதுக்குதான் மீன்பாடுக்கு கடலுக்குப் போனா வாய்க்கரிசி கொடுத்துவிட்டாங்க.

உசிரு நடுக்கடல்ல அநாதையா போனாலும் ஆவியா அலையக் கூடாதுன்னு செத்ததுக்கப்புறம் போடுற அரிசியை உயிரோட இருக்கிறப்பவே கையில வாங்கிட்டுப் போனாங்க. இன்னைக்கி எந்தப் பக்கத்துலேர்ந்து துப்பாக்கிக் குண்டு வரும்னு தெரியாது. வாழ்றதுக்கு மீன் பிடிக்கப் போய் வீசுறவலையில சிக்குறது சாவாதான் இருக்கு. எல்லா அரசாங்கமும் செத்தவன் கணக்கு சொல்லும். செத்ததுக்கு காரணம் சொல்லாது. நீ ஏன் வாழணும்னு கேட்கிற அரசாங்கத்தின் காதுல பொணத்த வெச்சி பட்டினிப் போராட்டம் நடத்துற குரல் கேட்கவா போகுது? சந்தேகத்தின் அடிப்படையில் யாரையும் சுட்டுக்கொல்லலாம்னா இங்க இருக்கிற ஒவ்வொரு மனுசன் கையிலேயும் துப்பாக்கி கொடுத்துடுங்க, சுட்டுக்கிட்டு சாகட்டும்.

பதினாறு வருசமா ஒரு மனுசி சோறு தண்ணி இல்லாம இதுக்காகத்தானே போராடுனாங்க. நிசப்தமான குரல் சர்மிளாவோடது. சமயத்துல ஊசி போட்டுட்டு போனதுக்கப்புறம் கடைசியா எனக்கு அந்தக் குரல் கேட்கும். என்னால என்ன பண்ண முடியும். அந்தக் குரலுக்கும் மதிப்பில்லாம அடங்கிப் போச்சு. காத்து வாங்கவும் காலாற நடக்கவும் போற இடம்தானே சார் மெரினா. உலகத்தின் நீளமான இரண்டாவது கடற்கரைக்கு இப்போ இன்னொரு பேரும் இருக்கு. ஏதாவது பிரச்னைனா போய் உட்கார்ற இடம் மெரினா. ஆனா இளைஞர் சக்தி ஜெயிச்சி ஜல்லிக்கட்டுக்கு பச்சைக்கொடி காட்டுனதெல்லாம் வரலாறுதான். அதுக்காக உண்ணா விரதம், உண்ணும் விரதம், மெளன விரதம்னு எல்லாத்துக்கும் போய் உட்கார்ந்து போராட்டத்தை அசிங்கப் படுத்துறவங்களை யார் கேட்கிறது? தப்பு பண்றீங்களேன்னு தட்டிக் கேட்கிறவங்களுக்குக் கிடைக்கிறதெல்லாம் தடியடியும் தண்டனையும். நூறு வருசம் பெய்யாத மழை பேஞ்சப்போ தமிழ்நாடே கதறுனுச்சே. சென்னைதான் உலகம்னு எல்லா இடத்திலையும் ப்ரார்த்தனை நடந்துச்சே... இப்போ என்ன ஆச்சு? தலையில நின்னு சூரியன் டான்ஸ் ஆடுறான். ஒடம்புல இருக்கிற தண்ணியெல்லாம் வத்திப்போய்தான் வீடு திரும்புறோம். பேஞ்ச மழையை சேமிச்சு வைக்க ஒரு இடம் இல்லாம போச்சேய்யா... எல்லாமே கடல்தான் கொண்டு போச்சு. பெய்யுற மழை கடல்ல மட்டும் பேஞ்சுதுன்னா மக்களுக்கு கஷ்டமில்லையே. இங்க எல்லாமே சம்பவங்கள்தான் நியூஸ்தான், சுவாரசியம்தான். என்ன நடக்குதுன்னு யோசிக்காம ஜஸ்ட் லைக் தட் கடந்து போற மென்டா லிட்டிக்கு மக்கள் எப்பவோ வந்தாச்சு. மீறி யோசிச்சா செவுள்லையே அறையுறாங்க. அந்த அம்மா கன்னத்துல அந்த யூனிஃபார்ம் அறைஞ்ச சத்தம் எனக்குக் கேட்டுச்சு. உங்களுக்குக் கேட்டுச்சா... அவங்களுக்கு வலிச்சது எனக்கு வலிச்சது. உங்களுக்கு வலிச்சுதா... மக்களின் நண்பன் போலீஸுக்கு கன்னத்துல அறைய உரிமை இருக்கு சார். ஆனா அது குற்றவாளிங்க கன்னத்துல.

இந்தப் பூமி கதை சொல்ல ஆரம்பிச்ச காலத்துல இருந்தே நிராபராதிகள்தான் சிலுவையில அறையப்படுறாங்க. அவங்க நிராபராதி இல்லைனு நிரூபிக்கத்தான் கூடவே இன்னும் சில குற்றவாளிகள் தேவைப்படுறாங்க. நாம எந்நேரமும் குற்றவாளியாவோம். அதுக்கான சந்தர்ப்பத்தை இந்த ஒலகம் ஒவ்வொரு நாளும் நமக்கு வழங்கிட்டுதான் இருக்கு. எனக்கு ஒன்ணு புரியவே இல்லைங்க. சினிமா தியேட்டர்ல படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி சிகரெட் பிடிக்கிறதும், குடிக்கிறதும்தப்புன்னு அட்வைஸ் பண்றாங்க. ஆனா பாக்குற படம் ஃபுல்லா குடியும் புகையுமா இருந்தா பாக்குறவனை எவ்ளோ கேனையனா ஆக்குது இந்தச்சமூகம். குடியிலதான் பல குடும்பமும் அழியுதுன்னு டாஸ்மாக்கை மூடச் சொல்லி கெஞ்ச வேண்டியதாயிருக்கு. ஏன் அரசாங்கத்துக்குத் தெரியாதா... குடியில இங்கே எத்தனை குடும்பம் கேவலப்பட்டு நிக்குதுன்னு. அன்னிக்கி டாஸ்மாக் வாசல்ல வலிப்பு வந்து வெட்டிவெட்டி இழுத்தவனுக்கும் குடிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல. ஆனா மக்கள் அவனைப் பாத்துட்டுதான் போனாங்களே தவிர போய் உதவி பண்ணல. ஏன்னா அவன் விழுந்த இடம் டாஸ்மாக் வாசல். ஒனக்கே தெரியுதுல்ல அது அறுவருப்பான இடம். அங்கே நடக்குறதெல்லாம் அசிங்கம்னு அப்புறம் ஏன் அந்தச் சாக்கடையில விழுறே. அன்னைக்கு ஒரு பாட்டு கேட்டேன். ஒரே ஒரு வரி மட்டும் பார்க்கிற மனுசங்ககிட்டவெல்லாம் கேட்டுக்கிட்டேஇருக்கு. குறைந்தபட்ச அன்பைக் கேட்டேன். வேற என்ன சார் கேட்கிறோம்.

குறைந்தபட்ச அன்பைத் தவிர. அதை விட்டுட்டு மாத்திரை ஊசின்னு எவ்வளவு கொடுக்கிறாங்க. முதல்ல இன்சோம்னியான்னு சொல்லிட்டு அதுக்கு டேப்லெட் குடுத்தாங்க. தூக்கம் வரல. அப்புறம் ஸ்கீசோப்ரானியான்னு சொல்லி அதுக்கு மாத்திரை. அதுல தூக்கம் மட்டும்தான் வந்துச்சு. பகல்னு ஒண்ணு எதுக்கு வருதுன்னே தெரியல. வெளிச்சத்தப் பாத்தா எரிச்சலா இருந்துச்சி. ஒருபக்கம் மனசு நல்லாதான் இருக்கேன்னு நம்பிக்கை குடுத்துச்சி. இன்னொரு பக்கம் எதுவுமே சரியில்லாத உலகத்துல நான் மட்டும் ஏன் சரியா இருக்கணும்னு தோணுச்சி. டாக்டருக்கே ஒரு தடவை ட்ரீட்மென்ட் சொன்னேன் . அப்புறம்தான் பைபோலார் டிஸ்ஆர்டர்னு சொல்லி அதுக்கான ட்ரீட்மென்ட் ஆரம்பமாச்சி. கொடுமையா இருக்கும். சைக்கோதெரபிங்கிற பேரே பிடிக்கல. நான் சைக்கோ இல்லைனு என்னால கத்தத்தான் முடிஞ்சுது. கத்தக்கூடாதுன்னு ஊசி போட்டாங்க. அப்புறம் கத்துறப்போல்லாம் ஊசி போட்டாங்க. காக்னிட்டிவ் பிஹேவியர் சைக்கோ தெரபின்னா என்னான்னு தெரியுமா உங்களுக்கு. இந்த உலகத்துல வாழ்றதுக்கான தகுதியை நீ இழந்துட்டேன்னு என்னையே நம்ப வெச்ச ட்ரீட்மென்ட். நான் தனியா இருக்கிறப்போ கூட்டத்தை நெனச்சு பொறாமைப்பட்டேன் . மனிதர்கள்கூட இருக்கிறப்போ எனக்கு தனிமை தேவைப்பட்டுச்சு. அப்புறமா மென்டல் டிஸ்ஆர்டர்னாங்க. எனக்கு சிரிப்புதான் வந்துச்சி. யார் கையிலையோ என்னை ஒப்படைச்சிட்டு வந்துட்டேன்.

மெரினா போராட்டத்துல என் குரல் எடுபடல. ஜல்லிக்கட்டுல என்னை உள்ள விடவே இல்ல. அரசியல் ஸ்டண்ட்டுக்கு எதிரா குரல் உயர்த்த எனக்கு வலுவில்ல. எல்லாத்திலையும் கெட்டவன்னு பேர்தான் வந்துச்சி. எப்படியாவது இந்த சொசைட்டிக்கு நல்லது பண்ணணும்னு நெனைக்கிற ஒவ்வொருத்தருக்கும் விழுற அடிதான் எனக்கும் விழுந்துச்சி. வலிச்சுது. இந்த ஒலகத்துக்கு நீ நல்லவன்னு நிரூபிக்க வேணாம்; நல்லவனா இருந்தாலே போதும்கிறதெல்லாம் பழைய கதையாச்சி. இங்கே எல்லாத்தையும் நிரூபிக்கணும். நல்லவன்னு நிரூபிக்கணும். கெட்டவன் இல்லைனு நிரூபிக்கணும். சமூகத்தின்மேலஅக்கறை உள்ளவன்னு நிரூபிக்கணும். உயிரோட இருக்கிறேன்னு நிரூபிக்கணும். செத்தாலும் செத்துட்டேங்கிறதை எப்படியாவது நிரூபிக்கணும். என்னாலமுடியல. இதையெல்லாம் நிரூபிச்சிதான் இந்த ஒலகத்துல வாழணும்னா நிரூபிக்காத ஓர் இடத்தைத் தேடினேன். கிடைக்கலை. அமைதியானேன். தனியா என்னையேநான் சுருக்கிக்கிட்டேன். கண்ணை இறுக்க மூடிக்கிட்டேன். டாக்டர் ஊசி போடுறப்போல்லாம் எப்படி கண்ணை இறுக்க மூடிக்கிறேனோ அது மாதிரியே... திறந்தா நான் பேசுறதை நிறுத்திடுவேன். நிறுத்திடவா. சொல்லுங்க. என்னால கண்ணைத் திறக்கவும் முடியலை. நிறுத்தவும் முடியலை .

அவன், தான் அணிந்திருந்த பச்சை நிற அங்கியை நீக்கிவிட்டு அந்தப் படுக்கையிலிருந்து இறங்கி தரையில் அமர்ந்து முழங்காலைக் கட்டிக்கொண்டு பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினான். நடுகல் முதல் இதழான முதுவேனில் கால இதழில் ஆகஸ்ட் மாதம் 2017- ல் வெளிவந்த கணேசகுமாரன் எழுதிய சிறுகதை.

0 Comments

Write A Comment