Tamil Sanjikai

ஏறுபொழுது தூங்கிமுடிச்சு மொல்ல எழுந்துவந்து வேலி ஒரத்துல இருந்த வேப்பமரத்து மேல ஒக்காந்துட்டு இருந்துச்சு.

“வெயிலுக்கு முன்னால போயி வாழக்காட்டுக்கு ஒரு செரகு தண்ணிய கட்டுடா” அப்பாரு சத்தம் காத்தோட கலந்துவந்து கேக்குது ரகுவுக்கு.

ரகு – குப்பணகவுண்டரு பேரு சொல்ல இருக்கற கடசி வாரிசு. சர்க்காரு பள்ளிகூடத்துல பத்தாமாப்பு படிக்கறப்போ அவுங்கப்பன் காலமாக, அத்தோட படிப்ப நிறுத்திட்டு அப்பாருக்கும் அப்பத்தாவுக்கும் தொணையா வெள்ளாமையையும், இருக்கற கோழிப்பண்ணையையும் பாத்துட்டு இருக்கான்.

தொட்டி தண்ணிய தொறந்து வுட்டுட்டு, மம்பட்டிய எடுத்து புடிய வாய்க்கா தண்ணில நனச்சு, பக்கத்துல இருந்த முட்டுகல்லுல ரெண்டு தட்டு தட்டிட்டு காட்டுக்குள்ள போனான். கவுண்டரு சாணிய வழிச்சுகொட்டிட்டு கைய கழுவிட்டு உருமாலைய அவுத்து ஒதறிட்டு, கைய தொடச்சுட்டே,

“அம்மணி, காப்பித்தண்ணி ஊத்திட்டியா? பால் கொண்டுபோவ நேரமாச்சு “ கட்ட கொரல்ல அதிகாரமா கேட்டுட்டே போறாரு.

சின்னம்மணி – குப்பணகவுண்டருக்கு வாக்கப்பட்டு வந்த நாள்ல இருந்து சிரிச்சு பாத்ததே இல்ல. மூத்தமவ கண்ணாலத்தப்போ சிரிச்சதுக்கு சன்னலுக்கு மேல மாட்டியிருந்த போட்டாவுதா ஒரு அடயாளோ. காட்டு வேல செஞ்சு செஞ்சு கூனுபோட்டுட்டா இந்த முத்துன கெழவி.

“இந்தாங்க, திண்ணக்காலுகிட்ட வச்சுருக்கே, எடுத்து குடிங்க” னு சொல்லிட்டே ஊறவச்சுருந்த புளிய கசக்க ஆரம்பிச்சா. கவுண்டரு காப்பித்தண்ணிய குடிச்சுபோட்டு பால கொண்டுட்டு சொசைட்டிக்கு போனாரு.

“மேகராசு குழியில, தண்ணி திடீருன்னு நின்னு போச்சாமய்யா, “

“ரெண்டாயிரம் வாழெ நாத்து போட்டிருந்தானே?, இனி முக்காடு போட்டுட்டு போவ வேண்டியதுதா”

“அட நீயொருத்தனப்பா, மழயே இல்ல. போன வருசோ ரெண்டு பணமாயிருச்சுனு இப்புடி துப்பு இல்லாம அகலக்கால் வெச்சா எப்புடி?”

சந்தக்கட மேடைல செட்டியாரும், கவுண்டரு பங்காளி மவனும் கெழக்குமூனா உக்காந்து ஊர்நாயம் பேசிட்டு இருந்தாங்க. இந்தபேச்ச கேட்டதும் பெருசுக்கு சுருக்குனு ஆச்சு, நெஞ்சுக்குள்ள.

ஒன்னும் வாய தொறக்காமா, பால ஊத்திட்டு, வறண்டு போன சேந்து கெணத்துக்கு பக்கத்துல சர்க்காரு போட்டுவச்சுருந்த பைப்ல தண்ணிய புடிச்சு, சைக்கிள் கேரியர்ல வச்சு கட்டிட்டு சைக்கிள தள்ளிட்டே நடந்தாரு.

“என்ன கவுண்டரே.. நம்முழுது அப்புடியே ஒடுதா…? “ வாய புடுங்குறாரு செட்டியாரு.

கோழிப்பண்ணைக்கு உட்டதுபோக, ஒரு முந்நூறு வாழ பாயுது செட்டியாரே.. இல்லீங்காம..!“ மறுவார்த்த பேசாம வலதுபக்கோ இருந்த துண்ட எடுத்து ஒதறியெடுத்து எடப்பக்கோ போட்டுட்டு நடந்தாரு.

“நல்ல நத்தமிருக்கீல பண்டுன பாவந்தே மவனையும் திண்ணுருச்சு, மருமவ அப்பனூட்டுக்கே போயிட்டா” அதுசரி நமக்கெத்துக்கு பெரிய எடத்து சமாச்சாரோ..?” தன்னப்போல பேசிட்டே பொச்சு மண்ண தட்டிட்டே எந்திருச்சு நடந்தாரு செட்டியாரு.

“பளபளனு போனதுமு திலுப்பிருடா, ஒரு தொட்டியிலயே காடு பூறாவுமு பாயோனும்” தண்ணிமடக்கிட்ட நின்னுட்டு இருந்த பேரனுக்கு கட்டள போட்டுட்டு சைக்கிள நிறுத்திட்டு கோழிப்பண்ணைக்குள்ள போனாரு கவுண்டரு.

“ஆத்தா.. ஆத்தோவ்வ்…” அடித்தொண்டைல கத்திட்டு பதட்டத்தோட ஓடியாந்தா.

“ஆத்தா.. குழியில என்னமோ பர்ருனு சத்தம் வந்துச்சு, வந்து பாத்தா தண்ணி நின்னுகெடக்குது”

“பீசு கீசு போயிருக்குமுடா.. கட்டைய கழட்டிப்பாரு” அடுப்பங்கறைல இருந்து மொல்ல கைய ஊணி எந்திருச்சு வந்தா கெழவி.

“மோட்டாரு ஓடுது, தண்ணிவரல”

“அப்பாரு அப்பாரேவ்வ்”

இவுங்க பேசறத கேட்டுட்டு இருந்த கவுண்டரு “ மோட்டார நிறுத்துடா” னு சொல்லிட்டே வெளிய வந்தாரு. மனசுக்குள்ள சந்தகடைல கேட்ட பேச்சு வந்துட்டு போவுது. வெசனம் கட்டல் போட்டு படுக்க ஆரம்பிக்குது.

வந்தவரு மோட்டார எடுத்துட்டு.. நிறுத்தி… எடுத்துட்டு.. நிறுத்தி… பாக்குறாரு. வெறுங்காத்துதே வருது. தண்ணியில்ல வெறு மோட்டாருதே ஓடுதுனு புரிஞ்சிட்டாரு. “வயசுக்கு வந்து ரெண்டு வருச ஆன கொமரி புள்ள மாதிரி மினிக்கிட்டு, பொடவிட்டு நிக்குது வாழமரங்க… “

“இப்பத்தே கெழவிக்கு வெவகாரோ புரிய ஆரம்பிக்குது. இத்தன காலோ பொழச்சதுக்கே அர்த்தமில்லாம போயிருமோ.. ஆடு கெடந்த சாலைல மசுரு கூட இல்லாம போகுமோனு” கண்டது எல்லா ஓடுது கெழவி மனசுக்குள்ள.

“அட மவராசா.. என்னாச்சு எரும மல்றாப்ல ஓடுன தண்ணியும் நின்னு போச்சா… இனி பண்டங்கன்னுக்கு தண்ணிக்கு எங்க போறது” பேரங்கைய புடிச்சுட்டு அழுவறா கெழவி.

:கெழவி போட்ட சத்தத்துல என்னமோ நடக்குதுனு ஆத்தாவையும் பேரனையும் காத வெடச்சுட்டு வெரிச்சு பாக்குது மரத்தடிய கட்டியிருந்த செவல மாடு.

“எலேய்.. கெழட்டு முண்ட.. தொறக்காத..” அதட்டறாரு.. சாலக்குள்ள கட்டல்ல உக்காந்திருந்த கவுண்டரு.

“நீ பண்டுன பாவந்தே.. இவனையு புடிச்சு ஆட்டுதே… இன்னுமா புரியல” பெருசுக்கு கேக்காத அளவுக்கு மொல்ல சொல்லிட்டே துணிதப்புற கல்லுமேல உக்காந்தா கெழவி.

“என்ன நடக்குது…? என்ன நடந்தாச்சு ? என்ன பாவோ..?“ ஒன்னுமே புரியல ரகுவுக்கு. தொட்டில இருந்த தண்ணியும் முறிச்சுட்டு கட்டியாச்சு. இனி பொழங்கறதுக்கு என்ன பண்றதுனு தெரியாம தென்னமரத்தடிய உக்கந்துட்டு இருந்தா, ரகு.

விசியம் எப்படியோ செட்டியாரு காதுக்கு போக, வவுத்த நீவிட்டே, பட்டாப்பட்டி டிரவுசரோட வந்தாரு செட்டியாரு.

“என்ன ராசா.. தண்ணி நின்னு போச்சா.. ம்ம்ம்.. ஒங்க சித்தப்பன் போன வாரோ ஓட்டுன போருல ஒங்க தண்ணி மாட்டிருக்கும். முந்தாநேத்துதா மோட்டாரு மாட்டுனாப்ல, அதுக்குள்ள வேலய காட்டிருச்சா…”

“ஒரு காலத்துல ஒங்க அப்பாரு அவுங்கள ஊர விட்டு தொறத்தீட்டு இருக்கற ரெண்டு அனப்பையும் புடுங்க பாத்தாரு.. ம்ம்ம் ஆண்டவங்கணக்க யார் மாத்தமுடியும்…??”

“ஆமங்க.. தண்ணி நின்னுபோச்சு”

“அதுசரித்தே மண்ணுக்குள்ள போற தண்ணிய கைய வச்சா குறுக்காட்ட முடியும்…??”

பேசிட்டே ரெண்டு பேரும் சாலைக்கு வந்து சேந்தாங்க.

“வாய்யா. இப்பத்தே வழிதெரிஞ்சுதாக்கும்…?” இருக்கற சோகத்த கொசுவணத்துல முடிஞ்சுட்டே வீட்டுக்கு வந்தவர வரவேக்குறா கெழவி.

“கவுண்ச்சீ.. மனசு உட்றாதீங்க.. ஒன்னோரு குழி ஒட்டுனா போதும்” ஆறுதலா நாலு வாத்த பேசீட்டு, கெழவி போட்டுத்தந்த சக்கர இல்லாத காப்பி தண்ணிய கஷ்டப்பட்டு குடிச்சுட்டு நடைய கட்டுனாரு.

“கட்டல்ல கவுண்டரு”

“சாலக்குள்ள கெழவி”

“தென்னமரத்தடிய ரகு”

பொழுது ஓடிருச்சு.. மாட்ட புடிச்சு கட்டுதாரைல கட்டி பால கறந்து ஊட்டுக்கு தயிர்த்தண்ணிக்கு அளவா வெச்சுட்டு. மனசுல எந்த கொழப்பமு இல்லாம சைக்கிள எடுத்துட்டு கெளம்பிட்டான் வாரிசு.

கவுண்டரு.. பொடவுட்டு நிக்கற வாழக்காட்ட பாத்துட்டே கோழிப்பண்ணக்கி போறாரு, மேவு போட.

கெழவி வேண்டா வெறுப்பா எந்திருச்சு லைட்ட போட்டா..

“கரண்டு இல்லயா..??”.

“இந்த கொள்ளைல போனவனுக்கு என்ன கேடு… மால நேரத்துல நிறுத்திவச்சுட்டான்.. சோறு தண்ணி பண்ட வேண்டாமா..?” தன்னப்போல பேசீட்டே கொழாப்ப பத்தவச்சு மேந்திண்ணைல வெச்சுட்டு அடுப்பு பத்தவெச்சா, கெழவி.

ரகு பால ஊத்திட்டு, சலம் பாக்கறதுக்கு கூப்ட நெலா வெளிச்சத்துல சைக்கிள எடுத்துட்டு காரக்காடு போறான். சோசியர பாத்து நடந்த வெவரத்த முழுசா சொல்லி முடிக்க…

”காத்தாலக்கி நேரத்துல வாறம் போ கண்ணு…”

சைக்கிள எடுத்துட்டு, குழி ஒட்டி தண்ணி வந்துட்ட மாதிரி ஒரு குருட்டு நம்பிக்கீல வந்துட்டு இருக்கான்.

“ரகு…. ரகு… எங்கடா போன..?”

சந்தகட பக்கத்துல வந்ததும், சர்க்காரு பள்ளிகூடத்துல பத்தாமாப்பு வரக்கி படிச்ச சுமனு பரபரப்பா ஒடியாந்தா.

“ஏண்டா… என்னாச்சு…?”

சைக்கிள்ல இருந்து எறங்கி நிக்குறான், ரகு.

“ஒங்க அப்பத்தாவுக்கு…” ஓடியாந்த வெசைல மூச்சு வாங்குறான்.

“அப்பத்தாவுக்கு… அப்பத்தாக்கு என்ன ஆச்சு…?” பதட்டத்துல கை நடுங்க சுமனு தோள புடிச்சு உளுக்குறான்

“பொழுதோட பால் காயவெக்கீல எப்படியோ சீலைல தீப்பத்தி, ஒடம்பு பூறாவுமு தீக்காயோ. இப்பத்தே செட்டியாரு நூத்தியெட்ட வரச்சொல்லி கூட்டிட்டு போறாங்கடா.”

ரகுவுக்கு பேச்சு மூச்சுலா நின்னு போச்சு. கண்ணுல தண்ணி போவுது. நெனவு தெரிஞ்ச நாளு மொதக்கொண்டு அம்மா கூட இருந்ததவிட ஆத்தாகூடத்தே அதிக நாள் இருந்துருக்கறான். இனி என்ன பண்ட போறமோனு நெல கொழஞ்சுபோயி நிக்க…

”நைட்டு எட்டுமணி பஸ்சு வரும். நீ சைக்கிள குடு, எங்கூட்டுல நிறுத்திட்டு வர்றேன், இப்புடியே போவலாம்” சைக்கிள வாங்கிட்டு வேகு வேகுனு போறான். சுமனு.

பஸ்சு வர்ற சத்தோ ரொம்ப தெளிவா கேக்குது. புள்ளாகோயலு முக்கு வந்தாச்சு. “காணுரு டிக்கெட்டு எல்லா எறங்கலாம்” கண்டெக்டரு சத்தோ கேக்குது. சந்த கடக்குள்ள வந்து திலும்பி வந்தவழிய பாத்து நிக்குது பஸ்சு.

ரகுவும் சுமனும் ஏறி உக்காந்து திலுப்பூரு “பெரிய ஆசுபத்திரி ரெண்டு”

நேரம் போகுது. தூரோ போகல.

ஆசுபத்திரில அப்பத்தாவ வாழ எலைல படுக்கவச்சு வைத்தியம் பாத்துட்டு இருக்காங்க. பொழுது வெடியுது. கொஞ்ச நேரங்கழிச்சு கண்ணு முழிச்சு பாக்குறா கெழவி, பேரன பாத்து கண்ணசைக்கிறா, ரகுவும் உள்ள போயி ஆத்தா கைய புடிச்சு தம்பட உள்ளாங்கைல வச்சு இதமா புடிச்சுக்கறான். வேற ஒன்னுமே பேசல.

“ஒங்கப்பார போயி பாரு சாமி, ஆத்தாவ நா பாத்துக்கறேன்” பக்கத்துல நிக்கற செட்டியாரு மௌனத்த கலக்கிறாரு. கொஞ்ச நேர இருந்துட்டு, ரெண்டு பேரும் பத்துமணி பஸ்சு புடிச்சு தோட்டம் வந்து சேராங்க.

சோசியரு வந்து நடந்த வெசியத்த கேட்டுட்டு கவுண்டரு கிட்ட உக்காந்துட்டு இருக்காரு. ரகு வந்ததும் ஆத்தாவ பத்தி கேட்டுட்டே “நல்லா தண்ணி ஆடுற தேங்காய எடுத்து குடுமிவுட்டு மட்டைய வாங்கி கொண்டா கண்ணு” சுமனுக்கு ஒரு கட்டளைய தொடுக்குறாரு, சோசியரு.

“தேங்கயி ரெடி.”

தோல்ல இருந்த துண்ட அவுத்து இடுப்புல கட்டி கெழக்குமூனா நின்னு பூமித்தாய தொட்டு கும்புட்டு, கைய மடக்கி வவுத்துக்கு செங்குத்தா மின்னுக்கு நீட்டி, வெரலு பக்கமா குடுமியையும் உள்ளாங்கைல மண்டையையும் வச்சுட்டு வாழக்காட்டுக்கு வடக்கால இருக்கற பள்ளத்து ஓரமா நடக்க ஆரம்பிக்கறாரு. ஒரு அஞ்சாரு வெளா தாண்டுனதும் தேங்காயி செங்குத்தா எந்திருச்சு நிக்குது. ஒன்னோரு அடி எடுத்து வச்சுததும் தேங்காயி துள்ள ஆரம்பிச்சு, கைய விட்டு குதிச்சு விழுகுது கீழ. சோசியரு மொகத்துல ஒரு பெரும கலந்த பூரிப்பு. அந்த பாத்திக்குள்ளய குறுக்கிமு நெடுக்கீமா நடந்து ஒரு எடத்துல உத்து வெக்கிறாரு.

“ஒரு பாலக்குச்சி ஒன்னு முறிச்சுட்டு வா கண்ணு” உத்து வெச்ச எடத்துல அடிச்சாச்சு குச்சிய.

“ரெண்டு மட்டம் இருக்குது, தெகுரியமா ஓட்டு, காடு பூராமு பாயும்”

“வண்டிய வரச்சொல்லுட்டா”

வண்டி வந்தாச்சு. பூமிக்கு சலமூல பாத்து வண்டிய நிறுத்தி, செய்ய வேண்டிய சம்பரதாயமெல்ல பண்டி ஆரம்பமாகுது, தண்ணிக்கான தேடலு.

“நேரம் போவுது, குழி ஆழமாவுது”

வரப்பொக வண்டிய மறைக்குது.

“நுறு”

“எரநுறு”

செம்புலி வெங்க

மசனை

காக்கா மண்ணு

“ஆறுநூறு”

“கல்லு மாறுது”

வெங்க கல்லு மாறி மாறி போவுது

கவுண்டரு “இனி உன்ன சொமக்க முடியாதுனு காலு சொல்ல” கட்டலுக்கு போறாரு.

“போனு கத்துது”

கவுண்டருக்கு கண்ணு சாலாசரம். மொல்ல எடுத்து பச்ச பொத்தான அமுத்தி “ அலோ”

“கவுண்டரே ” பழக்கப்பட்ட செட்டியாரு கொரலு கேக்குது

“மவராசி புண்ணியங்கேட்டுட்டா கவுண்டரே… கையெழுத்து போடறதுக்கு உரிமக்காரரு ஆராச்சு வரோனுமுனு சொல்றாங்க.”

“ஆயிரத்தி எழுவது”.

வண்டி படுத்து எந்திருக்குது. காத்து, மண்ணு, கல்லு ஒன்னுமே வரல. “செரியான தண்ணி கண்ணு”

“இனி எவங்குழி நிக்க போவுதோ…?” மனசுக்குள்ள ஒரு நெருடலோட,துண்ட ஒதறி தோல்ல போட்டுட்டு பெருமயா நடக்கறாரு சோசியரு.

- எஸ்.பழனிச்சாமி

0 Comments

Write A Comment