Tamil Sanjikai

அப்போது எனக்கு ஒரு பதினான்கு வயதிருக்கும்... வீட்டு பீரோவில் இருந்த காசிலிருந்து பத்து ரூபாயை எடுத்து ஊறுகாய் வாங்கித் தின்றதாக என் மீது குற்றச்சாட்டு. அப்பா வேலை முடிந்து வந்தவுடன் என்னை வெளுக்க ஏற்பாடு செய்திருந்தாள் அம்மா.

அவ்வமயத்தில் சில காதல் தோல்விகள் வேறு மனதை கோடாலியை வைத்துக் கீறியிருந்ததால் உள்ளம் கொதித்துப் போய் தற்கொலை செய்துகொண்டு ஏசப்பாவிடம் சென்று சேர்ந்து கொள்வதாய் உத்தேசம்.

ஏற்கனவே ஒருமுறை வீட்டில் பெகளம் வைத்து அப்பா மறுநாள் துவைக்கவிருந்ததால் தாத்தா வைத்திருந்த எலிப் பாஷாணத்தை தின்று வீட்டிலுள்ள எலிகளை தப்பிக்க வைத்திருந்த ஒரு நிகழ்வு உண்டு.

செவம் கலப்படம் மக்கா ! எலியே சாவாது ! இந்த நாயா சாவப் போகுது ?

என்று பிறிதொரு நாளில் தாத்தா அம்மாவிடம் பேட்டி கொடுத்து பாட்டியால் வெளுக்கப்பட்டார்.

‘சின்னப் புள்ளைகளு வெளையாடுக வீட்டுல எலிமருந்தையா வைக்கீரு’ என்று பாட்டி நையப் புடைத்தாள்.

வாய்வழியாக உட்கொள்ளும் விஷங்களின் மீதான கலப்படத் தன்மை அதிருப்தியைத் தோற்றுவித்து தற்கொலை என்பது சாத்தியப் படாத ஒன்றாக நீண்டது. இறுதியாக இருப்புப் பாதையில் படுத்து தொடர்வண்டியால் வருடப்பட்டு இறைவனடி சேரலாம் என்று சைக்கிளை எடுத்துக் கொண்டு தண்டவாளத்தை நோக்கி பயணப்பட்டேன்.

நாகர்கோயில் டூ சென்னை செல்லும் தண்டவாளத்தில் போய்ப்படுத்தாகி விட்டது. அது ஒரு அழகான குளத்தின் கரை. தூரத்தில் தாத்தா ஒருவர் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அவர் பக்கத்தில் ஒரு கழுதை கனைத்துக் கொண்டேயிருந்தது.

தண்டவாளம் கடுமையான சூடு... கொதித்தது. சரளைக் கற்கள் வேறு முதுகில் குத்தி துன்பப்படுத்தியது. இந்த எழவு ட்ரெயினு மயிரெல்லாம் நேரத்துக்கு வந்து தொலைய மாட்டேங்குதே ! என்று சலிப்பு வந்து தொற்றிக் கொண்டது.

அப்போது அந்தவழியாக வந்த போஸ்டுமேன் சொன்னார்.

ஏலேய் மாக்கான் ! இந்த வழியா இப்போ ரெயிலு வராதுடே ! சாயங்காலம் அஞ்சி மணிக்கி வந்து படு! என்று சொல்லி விட்டுக் கடந்து போனார்.

என்னது அஞ்சி மணியா ? வாட்சை பார்த்தேன். மணி மதியம் ரெண்டு ! இன்னும் மூணு மணிநேரம் இதுல படுத்துக் கெடந்தா பாடிய எரிக்கிற செலவு மிச்சம் ! நேரந்தான் கெடக்கே ? போய் சாப்டுட்டு வருவோம் என்று சைக்கிளை எடுத்தேன்.

அப்போது தூரத்தில் தண்டவாளத்தின் குறுக்கே சிவப்பு நிறத் துனியொன்றைக் கட்டி வைத்திருந்தார்கள்.

தண்டவாளத்துல அசைய கட்டி டவல் காயப் போட்டுருக்கானுவளே ! என்ற கவலை எழுந்தது.

துணி துவைத்துக் கொண்டிருந்த தாத்தா கூப்பிட்டார். அருகில் போனேன்.

என்னப்போ! வூட்ல படுக்க எடம் இல்லியா ! இந்த வேனாவெயில்ல அந்தப் பீக்காட்டுல படுத்து கெடந்துட்டு எந்திரிச்சி போற ? எங்க போறியோ ?

நான் ஒன்றும் பேசவில்லை. அவர் மீண்டும் கேட்டார்.

லவ்வு பெயிலியரா ?

நான் பதில் சொல்லவில்லை. அவர் ,

சாவப்போறியாடே ?

எனக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. அவரை முறைத்தேன். அவர் விடவில்லை.

சொல்லுடே ! சரி ! சாவுறதுன்னு ஆயாச்சி ! நீ உடுத்தியிருக்குற மேல் சட்டையையும், கால் சட்டையையும் கழத்தித் தந்துட்டு சாவு !

( அடப்பாவி அம்மணங்குண்டியா போய் தண்டவாளத்துல படுக்கச் சொல்லுகானே கெழவன்.... )

தாத்தா தொடர்ந்தார்....

சாவப் போற ஓந்தானுக்கு என்ன நோனிக்கி வாட்சி, சைக்கிளு மயிரெல்லாம் ? வெள்ளனேர்ந்து துணி தொவச்சா முப்பது ரூவா கெடைக்கும் ! எம்பையனுக்கும் ஒனக்க வயசுதானிருக்கும்.... அவனுக்கு நல்ல துணிமணின்னா என்னன்னே தெரியாது.... இந்த மாதிரி துணியெல்லாம் அவனால கற்பன பண்ணிக்கூட பாக்க முடியாது... யாராவது பழைய துணி குடுத்தா உண்டு... இல்லைன்னா இல்ல.... நானும் அவனுக்கு டவுனுல போயி ஒரு நல்ல கால்சட்டையும், மேல்சட்டையும் எடுத்துறலாம்னு பாக்கேன்..... முடியல.... என்ன செய்ய? இந்த வரும்படி சாப்பாட்டுக்கே பத்தாது... வயிறுன்னு ஒண்ணு இருக்கே ....

நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்... அவர் விடவில்லை...

நாய குளிப்பாட்டி பாயில படுக்க வச்சா அது தரையில போயி கெடக்கும்னு சும்மா ஒண்ணும் சொல்லீரல ! ஒனக்கு என்ன ஒரு பதிமூணு வயசிருக்குமாடே ?

நான் அவரிடம், பதினாலு !

ம்க்கும் .... தூ செவமே ! பதினாலு வயசு வரைக்கும் ஓம்பரம் மாதிரி வளத்து, சோறு போட்டு , நல்ல துணிமணி, காலுக்கு செருப்பு, குண்டி ஓக்காந்து போவ சைக்கிளு , பெரிய கலெக்டரு மயிராண்டிக்கி வாட்சி மயிரு எல்லாம் வாங்கிக் குடுத்து பள்ளிகொடத்துக்கு அனுப்புனா... பொட்டப்புள்ளயளுக்க பொறத்தால சுத்திக்கிட்டு வந்து சாவப்போவுதாம் ! இந்த வயசுல உங்களுக்கெல்லாம் படிக்கதுக்கு என்ன கொள்ளையோ?

இத்தன நாளும் சோறு போட்ட அம்மைக்கும் அப்பனுக்கும் ஒதவாம நன்றி கெட்டுப்போயி எவளோ ஒருத்திக்காக சாவதுக்கு வந்து நிக்கியே ? ஒனக்கெல்லாம் ரோசமே கெடயாதா ?

பக்கத்தில் நின்ற அவரது கழுதையைக் காட்டி, அந்தா நிக்கில்லா கழுத! அதுக்குக் கூட நாலு தோலுல ஒரு தோல்லயாவது சொரணை இருக்கும்... ஒனக்கு அது கூட இல்லியே?

திரும்பி கழுதையைப் பார்த்தேன். அது கனைப்பதை நிறுத்திவிட்டு என்னைப்பார்த்து பல்லை இளித்தது. அவர் விட்டபாடில்லை....

மாணியப் புடிச்சி மோளத் தெரியாத நாயிக்கி காதல் ஒரு மயிருதான் கொறச்சல் ! நீயெல்லாம் செத்துத் தொலஞ்ச்சாத்தான் சரி ! எங்கண்ணு முன்னால நிக்காத ! வெள்ளாவிக் கல்லத் தூக்கி மண்டையில எறிஞ்சிப் புடுவேன்.... ஓடிரு !

கடுமையாகச் சாடி விட்டார். நான் அழுது கொண்டிருந்தேன்.

என்னடா இது சாகப்போன எடத்துல வந்த சோதனை ? துணியோட சேத்து நம்மளையும் தொவச்சிட்டானே கிழவன்???

நான் அழுததைக் கண்ட அந்த தாத்தா என்னிடம் வந்து என் தலையைத் தொட்டார்.

மக்ளே அழாதடே ! தாத்தா ஒன்னய பிசிரா ஏதாவது பேசிருந்தா நாலு அடி அடிச்சிரு ! நா ஒன்னோட நல்லதுக்குத்தானே சொல்லுகேன். நீ மட்டும் நல்லா படிச்சி பெரிய ஆளா வந்து நின்னென்னு வச்சிக்கா ! பொம்பளப் புள்ளையளு பூப்போல ஓடிவரும்டே… படிக்க வயசுல இதெல்லாம் தேவையில்லா மக்கா! போ ! கண்ணத் தொடச்சிட்டு வீட்டுக்கு போ !

நானும் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தேன். வழியெல்லாம் துக்கம் கூடவே வந்து கொண்டிருந்தது. கூடப் படிக்கிற ஒரு ஐந்து பிள்ளைகளின் மீது இருந்த காதலை அவர்களிடம் சொல்லாமலே இருந்தது என்னுடைய குற்றம் இல்லை என்பது எனக்குப் புரிந்தது. கூச்சம் மட்டுமே காரணம் என்பது விளங்கினாலும்கூட அந்த சொல்லாக் காதல்களின் வெற்றுக் கூச்சல் மனதை சமநிலையில் வைக்கவில்லை.

வீடு வந்து விட்டது.

அப்பா வாசலில் உட்கார்ந்திருந்தவர் என்னைக் கண்டதும் எழுந்து வந்து பள்ளையில் ஒன்று வைத்தார். என் முகம் ஹெச்.ராஜா மாதிரி ‘ங்ஙீ......’ என்று ஆகி விட்டது.

அடுத்த அடி அடிக்க வந்த அப்பாவை மாமா ஒருவர் தடுக்க முற்பட அப்பா அவரிடம் ,
வீட்லெர்ந்து பைசா எடுத்துட்டுப் போயி ஸ்கூல்ல உள்ள எல்லா புள்ளைகளுக்கும் ஊறுகா வாங்கிக் குடுத்துருக்கான் ! டீச்சர் வந்து பாக்கும்போது அத்தனை பேரும் கிளாஸ்ல உக்காந்து நக்கீட்டு இருந்துக்கானுவோ! எல்லாம் இந்த நாயி செஞ்ச வேல ! அத ஏன்னு கேட்டதுக்கு தண்டவாளத்துல போயி படுத்துக் கெடந்துருக்கு மூதேவி ! ஏற்கனவே வெசங்குடிச்சதுக்கு ஆஸ்பத்திரி பில்லு இருநூத்தி நாப்பது ரூவா ! ரெயில்ல அடிபட்டா பாடிய எடுக்க ரெயில்வேக்கு ஐயாயிரம் கெட்டணும் ! சோறு போடுகது பத்தாதுன்னு இந்த அழுவழிஞ்ச செலவெல்லாஞ் செய்யணுமா ? செவத்து நாயிக்கி !

அப்பா சொன்னது உண்மைதான் ! அப்போது ஒரு பவுன் தங்கத்தின் விலை வெறும் நாலாயிரத்து சொச்சம் ரூபாய்தான். சாகப்போன காரணத்தை துவைப்புக்கார தாத்தா மடைமாற்றம் செய்திருந்த காரணத்தால் காதல் விவகாரம் மட்டுமே மூளைக்குள் படிந்து இந்த பாழாய்ப்போன ஊறுகாய் மீதான குற்றச் சாட்டு நினைவுக்கு வரவில்லை. ஒரே நேரத்தில் பலவிதமான குற்றங்கள் புரிவோருக்கு குழப்பங்கள் மட்டுமே மிஞ்சும் என்பது உண்மைதான்.

அன்றிலிருந்து இன்று வரை வாழ்வில் திருமணம் உட்பட அநேகம் துன்பங்கள் வந்த போதிலும் கலங்கியதேயில்லை. துவைப்புக்காரக் கிழவன் வெளுத்த வெளுப்பு அப்படி !

எல்லாம் சரிதான் ! நாம தண்டவாளத்தில் படுத்துக் கிடந்தது எப்படி அப்பாவுக்குத் தெரியும்?

ஐந்து மணிக்கு வரும் ட்ரெயின் குறித்த தகவலைத் தந்த அந்த போஸ்டுமேன் பயபுள்ளை வீட்டில் எழுந்தருளி அப்பாவிடம் இவ்வாறு சொல்லியிருக்கிறது....

சார் ! ஒங்க புத்திரபாக்கியம் வேகாத வெயில்ல ரெயில்வே டிராக்குல படுத்துக் கெடக்கு ! தண்டவாளத்து நடுவுல குறுக்கால கெட்டிருக்குற செவப்பு துணி கூட என்னான்னு தெரியாம இப்ப உள்ள புள்ளையளு வளருகு பாத்தேளாய்யா ! பள்ளிக்கூடத்துல வாத்தியாம்மாரு என்ன குந்தராண்டாத்த சொல்லிக் குடுக்கானுவளோ ? எழவுடுப்பானுவ !

வாழ்க்கையில் துக்கித்துப் போய் துவண்டு கிடக்கும் யாதொருவனது வீட்டு வாசலில் ஒரு துவைப்புக்காரக் கிழவன் இருந்தால் தண்டவாளங்கள் ரத்தத்தைப் பார்ப்பதில்லை என்பது புரிந்தது.

-பிரபு தர்மராஜ்

0 Comments

Write A Comment