Tamil Sanjikai

"முடிவா உப்ப என்னுங்குறீடா?" என்றாள் மாரம்மாள். வீச்சுவீச்செனக் கத்திக் கொண்டிருந்த கோழிக்குஞ்சுகளைப் பிடித்து கூடைக்குள் விட்டபடியே.

"எத்தன சலக்கா சொல்றதாமா? கோயமுத்தூருலருந்து நாளைக்கி அவிய வருவாங்க. உம்புருசங்குட்ட சொல்லி குறுக்காட்டி ரவுசுடாம இருக்கச்சொல்லு போதும்" என்ற சுப்பன், பேண்டை அவிழ்த்துவிட்டுக் கைலிக்கு மாறி, கொல்லைக்குச் சென்றான். அவனைத் தொடர்ந்து சென்ற மாரம்மாள் பொரிந்து தள்ளினாள்.

"ஊருக்குள்ளார கெவுரதையோட இருக்குறது புடிக்கிலீடா ஒனக்கு. பெரிய பரம்பரையில பொறந்து போட்டு உன்ற புத்தி இப்புடியும் போவோனுமா?"

"ந்தா, சும்மா அழுது டிராமாப் பண்ணிட்டிருக்காதீம்மா.. உப்பல்லாம் காலம் ரெம்ப மாறிட்டுது. ஏன் தெக்குத்தெரு தனபாலூட்ல நடக்குலியா ?"

"அந்தக் கட்டீத்தின்னி நாயமெல்லாம் என்றகூட எடுக்காத. அவனல்லாம் ஒரு ஆளுன்னு நாயத்துக்கு இழுக்குற நீயி. சும்மா ஊட்ல தொசங்கட்டீட்டிருக்காம ஆகுற வழியப்பாரு. என்னானாலும் ங்கொய்யன் இதுக்கெல்லாம் ஒத்துக்கமாட்டாப்டி"

"அவுரைய நாம்பாத்துகுறேம்மா.. நீ குறுக்காடிபூந்து ஒழப்பியுடாமிருந்தாச் சேரி"

மாரம்மாள் சுப்பனையே சிலகணங்கள் வெறித்துக் கொண்டிருந்தாள். சுப்பன் சிமெண்ட் தொட்டியிலிருந்து நீரெடுத்துத் தலையிலூற்றிக் குளிக்கத் துவங்கினான். சோப்பினை எடுத்து உடலெங்கும் பூசிக்கொண்டிருந்தவனை மாரம்மாள் செய்வதறியாது பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு சலிப்புற்ற குரலில் புலம்பலாகக் கூறினாள்.

"என்றகூட்ட சொல்லி என்னத்துக்காச்சு. நீயாச்சு உன்றய்யனாச்சு" என்றபடி வீட்டினுள் சென்றுவிட்டாள்.

சுப்பனுக்கு தனது தந்தை பழனிச்சாமியை நினைத்துத்தான் கவலையாக இருந்தது. நாளை அவர்கள் வந்திருக்கையில் ஏதேனும் ஏடாகூடமாக செய்துவைத்தால் எப்படிச் சமாளிப்பதென்று. இரண்டாண்டுகள் முன்பு அப்படித்தான் ஆனது. அவர்கள் ஈரோட்டினின்று வந்திருந்தார்கள். சுப்பனும் வீட்டில் விஷயத்தைக் கூறியிருக்கவில்லை. உறவுஜனங்களோடு ஒரு இன்னோவா காரில் வந்து இறங்கினார்கள்.

"பழனிச்சாமியண்ணன் ஊடுங்களா?"

திண்ணையில் பண்ணையாட்கள் அமர்ந்து கீற்று வேய்ந்து கொண்டிருக்க, மாரம்மாள் எழுந்து அவர்களை வரவேற்றாள்.

"அக்கானுங்.. அவுரு தோட்டத்துக்குப் போயிருக்காப்டிங். உப்ப வந்திருவாப்டி. நீங்க?"

வந்தவர்கள் விபரம் கூறினார்கள். "பள்ளிப்பாளையத்துல்ருந்து வரமுங். தம்பி இல்லிங்ளா?"

"ரெண்டுவேருந்தான் போயிருக்காங். பொறுங் காப்பித்தண்ணி வச்சிக் கொண்டாறேன்" என்றபடி மாரம்மாள் உள்ளே சென்று காப்பி கலந்தபடியே சுப்பனுக்கு போன் செய்தாள். பழனிச்சாமியும் சுப்பனும் வந்தபொழுது அவர்கள் தென்னந்தோப்பைச் சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பழனிச்சாமியிடம் எப்படி விஷயத்தைக்கூறுவதென சுப்பன் தயங்கிக் கொண்டிருந்தான். பழனிச்சாமி அவர்களுடன் நன்றாக சிரித்துப்பேசினார். விட்டினுள் ஜமுக்காளம் விரித்து அவர்களை உட்காரவைத்து, ஊர்க்கதைகள் பேசினார்கள்.

"அப்பறம் அம்முணி என்ன படிச்சிருக்குதுங்?"

"கட்டிக்குடுக்குற புள்ளைக்கி என்னத்துக்குன்னு பிளஸ்டூவோட நிப்பாட்டிட்டமுங்"
பழனிச்சாமி சத்தமாகச் சிரித்தார்.

"அத்செரிங்.. கஞ்சிக்கி வழியில்லீன்னா படிக்கோனும். காடுகரையை வச்சிக்கிட்டு என்னத்துக்கு படிக்கவைக்கிறதுன்னு வேண்டா. என்ற மவனுங்கூடி சாஸ்தி படிக்கிலிங். எட்டாங்கிளாசு வரைக்கிம் போனாம். இருக்கிற பண்ணையத்தப்பார்ரா போதும்னு உட்டுப்போட்டம்"

எல்லோரும் சேர்ந்து சிரித்துக்கொண்டார்கள். மெல்லமெல்ல விபரமாகப் பேசிய பொழுது விஷயம் உடைபட்டபொழுதுதான் சகலமும் புரண்டது.

"ஏனுங் நாம என்ன கூட்டமுங்?"

அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.

"தரகர் தன்ராசுகுட்ட சொல்லிருந்தமுங்களே.. தம்பிக்கி விசயந்தெரியும்னு சொன்னாப்டி" பழனிச்சாமி சுப்பனை திரும்பிப்பார்த்தார். அவன் விரல் நகங்களை ஆராய்ந்து கொண்டிருக்க, பழனிச்சாமி பட்டென்று எழுந்துகொண்டார்.

"இல்லீங்.. இது சரிப்பட்டுவராது.. நீங்க வேறடம் பார்த்துக்குங்" என்றார் தாட்சனியமின்றி. அவர்கள் முகம் சுண்டிப்போனது. ஒருவார்த்தைகூடப் பேசாமல் காரிலேறிக் கிளம்பி விட்டார்கள். தரகர் அப்பொழுதே படித்துப்படித்துக் கூறினார்.

"வெளையாட்டு விசயமில்ல தம்பி. அய்யனாத்தாகுட்ட ஒரு வார்த்தை கேட்டுக்க" என்று ஆயிரமுறை கூறியிருந்தார். மறுபடியும் எப்படி அவரை எதிர்கொள்வதென கவலைப்பட்டான். அவர்கள் சென்றபின் பழனிச்சாமி தாண்டவமாடினார்.

"கிறுக்குத்தாயோளியாடா நீயி? சனமுட்டு சனத்துல பொண்ணெடுக்க நீயென்ன மொண்டியா மொடமாடா?” என்றார் கடுமையாக. மாரம்மாள் தான் சமாதானம் செய்தாள்.

"செரியுடுங்.. அவஞ் சின்னப்பையன் தெரியாம செஞ்சிவோட்டான்"

"ஆமா சின்னப்பையன். எடுத்து வச்சு சீராட்டு. எப்டியாப்பட்ட தலக்கட்டுல பொறந்துவோட்டு.. எவம்டா இப்புடியல்லாம் உன்னையவ உசுப்பியுட்டான்?" அன்றுதான் தந்தையை எதிர்த்துப்பேசினான் சுப்பன்.

"உப்ப என்னாயிப்போச்சுன்னு இந்த குதி குதிக்குறீங்? ஊருல நாட்டுல நடக்காததா? என்ற கூடப் படிச்சவென்ல்லாம் பவுசாக் கலியாணங்கட்டி ரெண்டுமூனு புள்ளகுட்டீன்னு இருக்குறானுங்க. இன்னும் எத்தனகாலத்துக்கு நானிப்புடியே மொட்டப்பயலா சுத்துறதுன்னு வேண்டாம்?"

சுப்பன் அப்படியெல்லாம் எதிர்த்துப்பேசுகிற ஆளில்லை. திடுமென அவன் அப்படிப் பேசியதில் பழனிச்சாமி சற்று வாயடைத்துத்தான் போனார். ஆயின் உறுதியான குரலில் மாரம்மாளிடம் கூறுவதுபோல் கூறினார்.

"சனமுட்டெல்லாம் கட்டிரலாமுன்னு கனவுலிங்கூட நெனைக்க வேண்டாம். நானுசுரோட இருக்குறவரைக்கிம் அது நடக்காது சொல்லிப்போட்டன்”

"ஏன் கோமதியத்த மவன் ஐயிரூட்டுப் புள்ளைய கட்டீட்டு வந்தானாம்மா. அப்ப எங்க போச்சு சனங்கூட்டமெல்லாம்?" என்றான் சுப்பன் இகழ்ச்சியாக.

"ஆனையப்பார்த்து குதுர சாணிபோட்டாப் பொச்செனத்துக்காவும்? ஊருல கண்டவனும் கண்டவளோட போவான். அந்தப்பண்ணையமெல்லாம் நம்மூட்ல செல்லடியாவாது. நாமென்ன பாக்காமலா இருக்குறோம்? இல்ல காடுகழனி நகநட்டுன்னு கேக்குறமா? போனவாரங்கூடி நம்ம செங்கோடனுக்கு சின்னாத்தா பேத்தியைப்போயி பார்த்துப்போட்டுத்தான் வந்தேன். அந்தப்புள்ள என்னமோ படிப்பு சொன்னுச்சி.. அதப்படிச்சிவோட்டு அம்பதனாயிருவா சம்பாதிக்கிதாமா. படிச்ச மாப்புள்ளதான் வேணுமாமா. என்னவன்னச்செல்ற?" அன்றைய பிரச்சனை அத்துடன் முடிந்துபோனது.

அவர் கூறியதிலும் நியாயமில்லாமல் இல்லை. அவர்களும் எங்கு வரனிருக்கிறது என்றாலும் உடனடியாக விசாரிப்பதும், சென்று பார்ப்பதுமாகத்தான் இருந்தார்கள். எல்லா இடங்களிலும் கேட்கும் ஒரே பல்லவி, படித்த மாப்பிள்ளை வேண்டும் என்பதாக இருந்தது. அதிலும் விவசாயமெனில் வேண்டவே வேண்டாமென்கிறார்கள். எல்லோரும் படித்துவிட்டு ஏதேதோ வேலைக்குச்சென்றால் உணவெங்கிருந்து வரும்? விவசாயமெனில் அத்தனை இளப்பமாகப் போயிற்று என நினைத்துக்கொண்டார்.

குளியல் முடிந்து வீட்டினுள் வந்து உடைமாற்றிக்கொண்டு சாப்பிட அமர்ந்தான் சுப்பன். வெளியில் டிவிஎஸ் பிப்டி ஓசை கேட்டதை வைத்து தந்தை வந்துவிட்டதை உணர்ந்துகொண்டான். சாப்பிட்டுக்கொண்டிருந்த சுப்பனை ஒருதரம் பார்வையால் நனைத்து விட்டுக் கைகால் கழுவ கொல்லைக்குச் சென்றார். அவர் மனமெங்கும் சுப்பனைப்பற்றித்தான் இருந்தது. வருகிற தைமாதம் வந்தால் அவனுக்கு நாற்பதாகிறது. என்னவோ தரித்திரம் பிடித்ததுபோல வரும் வரனெல்லாம் தட்டியபடியே இருக்கிறது. காலத்திற்கு நல்லது நடந்திருந்தால் பேரப்பிள்ளைகளால் நிரம்பியிருக்கும் வீடு. ஒற்றைக்கு ஒற்றை பிள்ளை. ஒரு நல்லது செய்துவைக்க இயலவில்லை. போகிற வருகிற விஷேஷங்களிலெல்லாம் பதில்கூறி மாளவில்லை.

"ஏம்பழனிச்சாமி ஊருட்டு நல்லதுக்கெல்லாம் மொய்யெளுதீட்ருக்குற.. உம்பட வூட்டுல எப்ப?" முன்னமெல்லாம் ஏதேனும் பதிலளித்துச் சமாளிப்பார். இப்பொழுதெல்லாம் நேராகவே கேட்டுவிடுகிறார்.

"ஒம்மருமவனுக்கு நீதான் ஒரு பொண்ணு பாத்துக்குடுக்குறது" பார்க்கிற ஒருவர் விடாமல் பெண்ணிருந்தால் கூறுங்களென புலம்பும்படியாயிற்று. ஒன்றும் தகையவில்லை. சொத்துபத்து பிரச்சனையில்லை. நான்கு தலைமுறைக்கு உழைக்கத்தேவையற்ற அளவிற்கு நிலபுலன்கள் கிடக்கிறது.

தனது காலத்தில் இத்தனையெல்லாம் சிரமங்களில்லை என நினைத்துக்கொண்டார் பழனிச்சாமி. பதினேழே பதினெட்டோ வயது. ஒரு அறுவடைக்கு அடுத்தமாதம் அவரைப் பெண்பார்க்க அழைத்துச் சென்றார்கள். அதற்குத்தானென எதுவும் கூறியிருக்கவில்லை. விருந்துக்கு என்றுதான் கூறினார்கள். வயிறார உண்டுமுடித்து, தோட்டத்தில் வெற்றிலைமென்று இளைப்பாறுகையில் பழனிச்சாமியின் அப்பா சொன்னார்.

"அந்த மாடுமேச்சிருக்குதுல்ல.. அதையத்தான் நீ கட்டிக்கப்போறீடா" அவ்வளவு தான்.. வேறு எவ்விதக் கேள்விகளும் விளக்கங்களுமில்லை. மூன்றுமாதத்தில் ஊர்வியக்க மாரம்மாளை மணந்துகொண்டார்.


அவர் வீட்டுள் நுழைந்ததும், அவருக்கும் ஒரு தட்டுவைத்துச் சோற்றைப் பரிமாறினாள் மாரம்மாள். இரண்டு கவளம் உண்டுவிட்டு சுப்பனிடம் கேட்டார்.

"தோட்டத்துல பம்புசெட்டு லிப்பேராட்டருக்குது. கருப்பன வரச்சொல்லி என்னேதுன்னு பார்த்துட்ரு தம்பி"

"அவம்போனவட்டம் காயல் கட்டயிலேயே இனி புடுங்குச்சின்னா புதுசுதாம் போடோணும்னான். செரி போன் பண்ணிப்பாக்குறேன்" மாரம்மாள் சுப்பனைப்பார்க்க, சுப்பன் அவளைப்பார்ப்பதைத் தவிர்த்தான். பின்பு அவளாகவே ஆரம்பித்தாள்.

"ஏனுங் அவனென்னமோ சொல்றான் என்னன்னு கேளுங்க?" சுப்பனுக்கு இது பிடிக்கவில்லை. தந்தையின் மனநிலைக்கேற்ப, தக்க தருணத்தில் கூறலாம் என்றிருந்தான் அவன்.

"என்றா?" அவன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, சோற்றினை விரல்களால் அளைந்து கொண்டிருந்தான்.

பழனிச்சாமி சாப்பிட்டுவிட்டுத் தட்டிலேயே கையைக் கழுவிக்கொண்டு எழுந்தார். வெளியில் திண்ணைக்கு வந்து அமர்ந்துகொள்ள, விசுவிசுவென காற்றடித்ததில் சுகமாக கண்களை மூடிக்கொண்டார். சுப்பன் ஒரு துண்டில் கையைத்துடைத்தபடி திண்ணையில் அவருக்கு எதிர்ப்புறம் அமர்ந்துகொண்டான். மாரம்மாள் நிலைப்படியருகே சுவரில் சாய்ந்துகொண்டாள். அந்தி கவிழ்ந்து இருளத்துவங்கியது. தொலைவிலிருந்து ஃபேக்டரி ஒன்றின் சங்கொலி கேட்டது.

"என்ன தம்பி?" என்றார் பழனிச்சாமி மிருதுவாக. அவன் தயங்கினான்.

"அதாரோ நாளைக்கி வராங்களாமா.. மாப்புள பாக்குறதுக்கு" என்றாள் மாரம்மாள். அவளது குரலில் கேலியிருந்ததோ என்றெண்ணினான் சுப்பன். பழனிச்சாமி புரிந்துகொண்டார். இடுப்பு மடிப்பினின்று கொஞ்சம் புகையிலையை எடுத்து வாயினுள் அதக்கிக்கொண்டபடி கேட்டார்.

"எந்தூரு?"

"கோயமுத்தூருக்கு மேக்க தொண்டாமுத்தூர்"

“படுச்சிருக்குதாமா?”

“எம்மே வரைக்கிம் படிச்சிவோட்டு அவ்வடத்தாலிக்கே எங்கியோ டீச்சர் வேல பாக்குதுன்னாங்க”

"அய்யனாத்தா?"

"இருக்குறாங்கங்.. நாலு பொம்பளப்புள்ளைங்க. இது நாலாவது"

"மத்த புள்ளைங்கள்லாம்?"

"எல்லாங் கட்டிக்குடுத்துட்டாங்களாமா. ஒரு புள்ள மட்டும்..."

"சொல்லு"

"ஒரு புள்ள மட்டும் புருசங்கூட பொளைக்காம ஊட்டோட கெடக்குதாமா"

"வசதியெப்புடி? நாமதான் சொமக்கோணுமா?"

"அதெல்லாம் பரவால்லாம இருக்குதுங்.. நம்மளாட்ட பண்ணையந்தான். மலையடிவாரத்தில காடு இருக்குதாம்பா. எடையில எலக்சன்ல ஏதோ நின்னு கொஞ்சம் காசுட்ருக்குறாப்டிபோல”

"எப்ப வராங்களாமா?"

"நாளைக்கி மதியத்துக்குள்ள வரம்னு சொல்லியுட்ருக்குறாங்க" பழனிச்சாமி சிலகணங்கள் ஏதோ சிந்திப்பது போலிருந்தார். பிறகு மாரம்மாளிடம் திரும்பி,

"நீயொன்னு செய்யி. நாளைக்கி சரசாளக் கூட்டிட்டு, நேரத்தோட டவுனுக்குப்போயி ஒரு பட்டுசீல எடுத்துட்டு வந்துரு" பெரும் பிரளயமொன்று எழுந்தடங்குமென எண்ணியிருந்த மாரம்மாள் ஆச்சரியப்பட்டுப்போனாள்.

"ஏனுங் நல்லா ஓசனவன்னீங்ளா? அவிய என்ன சனமோ என்னமோ” அவர் மெல்ல எழுந்துகொண்டார். கைலியை நன்றாக மடித்துக்கொண்டு படிகளில் இறங்கி சத்தமாகக்கூறினார்.

"அம்பதுநூறு சாஸ்தியானாலும் நல்லதாப்பாத்து எடுத்தாந்துரு".. என்றபடி கடைத்தெரு நோக்கி நடக்கத் துவங்கினார் பழனிச்சாமி.

0 Comments

Write A Comment