Tamil Sanjikai

 

''மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்''

அதாகப்பட்டது பேரன்புடையோரே!

மலை போன்ற துன்பம் உங்கள் முன்பாக அணிவகுத்து நின்று, நீங்கள் மண்ணாய்ப் போகும் தருணம் ஏற்பட்டு, காடு ( சுடுகாடு ) மேற்கொள்ளும் சூழ்நிலை வரும் போது, மணி போன்ற நீர் ( உற்சாகபானம் ) நிழல் போல நின்று, உங்களை அரண்போல காக்கும் என்று மேற்கண்ட குறளை நீங்கள் மொழிபெயர்ப்பீர்களானால் திருவள்ளுவரின் ஆத்மா உங்களைப் பிய்ந்த செருப்பால் அடிக்கக் கூடும்...

இப்படியாக திருவள்ளுவர் எழுதிய சுமார் முப்பத்தைந்தாயிரத்து முன்னூற்றி ஐம்பத்தினான்கு குறளையும் கற்றறிந்த ஆசான் ஒருவர் அந்நாட்களில் வாழ்ந்து வந்தார். 'முப்பிடாதி ஆசான்' என்று சொன்னால் இறச்சகுளத்திலுள்ள அத்தனை காக்காய், குருவிக்கும் கூட தெரியும். ஒரு நாய் அவரை நோக்கிக் குரைத்தால் கூட அந்த நாய் மீது ஒரு குறளை பதிலாகச் சொல்லி அந்த நாயிடமிருந்து விடைபெறும் வல்லமை பெற்றிருந்தார் முப்புடாதி ஆசான்.

அப்படித்தான் ஒருமுறை இரண்டு ஆடுகளைக் கடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தெருநாய் ஒன்று ஆசானைப் பார்த்துக் குரைத்து விட்டது. அந்த நாயை ஆசான் வெகு சாந்தமாகப் பார்த்து, அதனிடம் ஒரு குறளை எடுத்தியம்பினார்.

"நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி யாகி விடும்"

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து இறுதியில் என்னிடமே உன் வேலையைக் காட்டுகிறாயா நாய் செவமே? மிதிவாங்கி செத்துப் போவாய்! என்று ஆசான் கூறிய குறள், வள்ளுவர் பற்றி எதுவும் அறிந்திராத அந்த நாயின் காதுகளில் வன்மமாய் எதிரொலித்து, அந்த நாயானது ரத்தம் கக்கி மரித்தது.

இங்கு பிறந்தார்! அங்கு பிறந்தார்! இன்ன சாதி! அன்ன சாதி! என்று வள்ளுவரின் பிறப்பையும், சாதியையும் கூறு போடும் கொம்மண்டையன்களின் மத்தியில், வள்ளுவர் பிறந்த இடத்தை அப்போதே கண்டுபிடித்த மாபெரும் அறிஞர் முப்பிடாதி ஆசான்தான் என்றால் அது ஒரு மிகச்சிறிய வார்த்தைதான்...

வள்ளுவர் பிறந்ததாக ஆசான் கருதிய இடம் ஒழுகினசேரிக்குத் தெற்கே அமைந்த மீனாட்சிபுரம். அப்போது நாகர்கோவிலில் திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்டு இருந்த மீனாட்சிபுரத்தில்தான் வள்ளுவர் பிறந்ததாக அவர் எடுத்துரைத்த போதெல்லாம் தமிழ்ப்புலவர்கள் பலரும் பம்மிப் பதுங்கி, தெறித்து ஓடினார்கள்.

மேற்படியாரின் சஞ்சாரமும் அந்தப் பிரதேசத்தில்தான் அமைந்திருந்தது. எட்டாம் வகுப்பு வரை படித்து, திருவள்ளுவரின் காமத்துப்பாலை மட்டுமே குடித்து வளர்ந்த முப்பிடாதி ஆசான் மூட்டை தூக்கும் பணி செய்து வந்தார். பகலில் பணியோடு சேர்ந்த குறளும், மாலையில் குறளோடு சேர்ந்த பானமும் அவரது பொழுதுகளை ஆக்கிரமிக்கும்.

இரண்டு வாசுகிகளைக் கொண்ட அவரது இரவுக்காலங்கள் பெரும்பாலும் வீட்டுத்திண்ணையிலே கழியும். ஏனென்று கேட்போருக்கு ஒரு துயரக் கதையை மட்டுமே ஆசானால் கூற இயலும். மூத்தவடியாள் அரசாயி, இளையவடியாள் பரமாயி. மழைக்காலத்தில் மட்டும் ஓரிருமுறை ஆசான் வீட்டினுள் அனுமதிக்கப்பட்டதால் இரண்டு மீனாட்சிகளுக்கும் தலா இரண்டு மக்களை வழங்கி, ஈன்ற பொழுதின் பெரிதுவர்ந்திருந்தார். 

திருக்குறளில் ஒரே ஒரு ஒரு அதிகாரத்தை மட்டும் ஆசான் வெறுத்தார். அதுதான் 'கள்ளுண்ணாமை'. பெருவாரியான பானமுற்ற காலங்களில், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அவ்வூர் மாக்களுக்கு வழங்குவார். சிலசமயம் எச்சரிக்கை மொழியாகவும்...

அப்படித்தான் ஒருநாள் , இரண்டு முறை பி.யு.சி யில் தோல்வியுற்று, is, was, but போன்ற ஆங்கில வார்த்தைகள் மற்றும் விகுதிகளைத் தன் பேச்சுக்கிடையே உபயோகித்துத் திரிந்த ஒரு அரையாமாடன் ஒருவனுக்கு ஆசான் அறிவுரை வழங்க நேர்ந்துவிட்டது. அந்த அறிவுரையானது திருக்குறளுக்கு ஆங்கில உரை எழுதிய ஜி.யு.போப்புக்கே சவால் விடுகிற மாதிரியான ஒரு நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது.

காலையில் பணிக்குக் கிளம்பி தெருவில் இறங்கிய ஆசான் எதிரில் வந்த பழங்கஞ்சி முருகேசனின் மகன் குணசேகரனிடம் கேட்டார்,

லேய் முருகேசம் மொவன! மணி எத்தனடே? என்று கேட்டதற்கு, அவன்தரப்பில், டைம் வாஸ் டென் தர்ட்டி பைவ்! என்று பதிலளிக்கப்பட்டது.

இந்த முழுமையான ஆங்கில அறிவானது, தமிழ்சார் பெரும்புலமை கொண்ட ஆசானின் ஆங்கிலப் புலமையைப் பறைசாற்ற ஏதுவாய் அமைந்து, ஒரு கோபமான அடுத்த கேள்விக்கு இட்டுச் சென்றது.

ஆர் யூ த இண்டியன்? என்ற ஆசானின் அடுத்த எதிர் கேள்விக்கு 'சன் ஆப் பழங்கஞ்சி முருகேசன்' அசால்ட்டாக வழங்கிய பதிலானது,

‘ஐ டோன்ட் நோ’!

இந்த அசட்டையான பதில் ஆசானுக்கு கடும் கோபத்தை உருவாக்கியது. கோபத்தில் ஆசான்,

பெரிய இங்கிலீசுகாரன் கொட்டையில மொளச்சவரு... தமிழ்ல பதில் சொல்ல மாட்டாரு! தாயளி! சாய்ங்காலம் நா திரும்பி வரும்போது இந்த லாங்குவேஜ நீ மறந்துருக்கணும். இல்லனா என்ன நடக்கும்னு நாஞ்சொல்ல மாட்டன்...! என்று குணசேகரன் எச்சரிக்கப் பட்டான்.

இறுதியாக ஆசான் குணசேகரனிடம், ''ஸ்டடி க்ளீன், ஆஃப்டர் தட்... ஸ்டான்ட் அதற்குத் தக''... என்று ஈரடிக் குறளை ஒரே அடியில் விளங்க வைத்து, குணசேகரன் என்ற அரையாப்பின் ஆங்கிலப் புலமையை ஆணியில் அடித்து தொங்க விட்டுவிட்டு விடை கொடுத்தார்.

ஊரிலுள்ள ஊச்சாளிகள் மத்தியில் இந்த சம்பவம் நடைபெற்றபடியால், மெத்தப் படித்த குணசேகரன் ஆசானிடம் வார்த்தைக் குத்து வாங்கிய காரியம் ஊருக்குள் பரவ ஆரம்பித்தது.

அதுவரையிலும் அந்த ஊரிலேயே முதன்முதலாகக் கல்லூரிக்குச் சென்று படித்து, கற்றறிந்த சான்றோன் என்றுதான் குணசேகரன் அறியப்பட்டிருந்தான். அந்த சம்பவத்திற்குப் பின் அந்த சான்றோனின் 'ர்' விகுதி 'ன்' விகுதியாக மாறி தெருக்களில் திரிந்தது. அதாவது 'படித்தவர்' என்ற பெயர் திரிபு அடைந்து 'என்ன எழவ படிச்சானோ' என்பதான ஒரு ஒலியாக மாறி இந்த வளிமண்டலத்தில் கிடந்து அலைந்தது.

ஆசானுக்கு இரண்டு மனையாட்கள் உண்டெனினும், தேவதாஸ் கணக்காக எப்போதும் ஒரு நாயோடே சஞ்சரிப்பார். அந்த நாயின் பெயர் ‘மணி’. ஒருநாள் அதை நாயென்று விளித்த எச்சிக்கைக் கஞ்சன் சுந்தரத்துக்கு, ''நன்றியில் செல்வம்'' அதிகாரத்திலிருந்து ஒரு குறளும், கூடவே கொஞ்சம் கெட்ட வார்த்தைகளும் பரிசாகக் கிட்டியது.

"வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்"

அட செத்த பெயலுக்குப் பெறந்த செவத்துப் பெயலே! நன்றி'ன்னா என்னன்னு நாய்கிட்ட கேட்டுப் படிலே! பீயில அரி பொறுக்கி கஞ்சப்பயலெல்லாம் வாயி பேசிக்கிட்டு திரியானுவ ! அதுக்குத்தான் மணி'ன்னு பேரு இருக்குல்லாடே? பேரச் சொல்லிக் கூப்புட என்ன கொள்ளையோ ? ஒன்னைய நா கொம்மைய ஓளி’ன்னு கூப்டா நீ பொறுப்பியா? மணி’ன்னு கூப்புடணும் புரிஞ்சா! விடிய வெள்ளனையே வெளுப்பு வாங்கிறாத... ஓடிரு....

கஞ்சன் சுந்தரம் கல்லானான்.

எப்போதும் ஆசானோடு கூடவே திரியும் மணி சாயங்கால வேளைகளில் மட்டுமே ஆசானிடமிருந்து சற்று ஒதுங்கப் பார்க்கும். அதுதான் ஆசான் பானமுறும் நேரம். பானத்தின் மிகுதியில் ஆசானின் சிரசுக்கு தலையணையாகவும், ஆசான் கோபமாய் இருக்கும் வேளைகளில் மணி அவரின் கால்களுக்கு செருப்பாகவும் இருப்பதுண்டு.

பானக்கடையில் ஆசானிடம் சண்டையிட முனைவோருக்கு மணி ஒரு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தது. ஒருநாள் ஆசான் கடுமையான போதையில் படுத்திருக்கும் போது அவரது பொக்கரையில் ( பணமுடிப்பு ) இருந்து நாலணாவைக் களவாண்ட கணபதிக்கு கோட்டாறு ஆஸ்பத்திரியில் தொப்புளைச் சுற்றி பதினாறு ஊசி போட்டார்கள்.

மறுநாள் விஷயமறிந்த ஆசான் அரசு ஆஸ்பத்திரியில் எழுந்தருளி கணபதியிடம் சொன்ன குறளானது பின்னாட்களில் கோட்டார் அரசு மருத்துவமனையின் வெளிச்சுவரில் ஓவியர்களின் உதவியோடு எழுதப்பட்டது.

"அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்"

கணபதி வாயே திறக்கவில்லை. வீங்கிய தொப்புளோடு படுத்துக் கிடந்தான்.

ஒருநாள் பானமிகுதியில் சாராயக் கடையிலிருந்து நேராக ஆற்றுக்குக் குளிக்கச் சென்ற ஆசானோடு மணியும் சேர்ந்து கொண்டது. அசாத்தியமான ஒரு நீராடலின் முடிவில், ஆசான் தன்னுடைய வேட்டியை அலச நினைத்து, குளித்தும்கூட கொஞ்சமும் தணியாத போதையில் வேட்டி என்று நினைத்து படிக்கட்டில் படுத்துக்கிடந்த மணியின் பின்னங்கால்களைப் பிடித்து, சலவைக் கல்லில் நாலு துவை துவைத்தார்...

இந்தத் தாக்குதலை சற்றும் எதிர்பாராத மணி அதிர்ச்சியில், ஆசானின் முகம் முழுவதும் மலத்தை இறைத்துவிட்டு மயங்கியது. முகத்தில் வழிந்த நாய் மலம் சடுதியில் நிகழ்ந்து விட்ட அசம்பாவிதத்தை ஆசானுக்கு உணர்த்தியது. ஆசான் மணியின் கால்களை விடுவித்தார். மணி ஆற்றில் ஜலசமாதியானது.

மேற்படியார் மணியை ஆற்றில் கொண்டுபோய்த் துவைத்த கதை ஊருக்குள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பரவி பஞ்சாயத்து பிரசிடெண்டின் காதுகளை எட்டியது. இது குறித்து பஞ்சாயத்து பிரசிடெண்டு ஆசானிடம் கேட்டதற்கு, தான் மணியை ஒரு ட்ரெய்னிங்குக்காக வள்ளியூருக்கு அனுப்பி இருப்பதாகவும், தன்னுடைய குடிப்பழக்கத்தால் மனமுடைந்த மணி, அண்டி ஆபீஸின் பின்புறமுள்ள பாழ்பட்ட கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் இருவேறு பதில்களை கூறி பிரசிடெண்டுக்கு மனப்பிறழ்வு ஏற்படக் காரணமானார்.

இப்படியாக ஆசானுடைய புவி வாழ்வின் அத்தியாயம் முடிவுக்கு வந்த நாளின் அதிகாலை கொஞ்சம் கனவாரத்தோடேதான் கண்விழித்தது. முந்தைய இரவு அருந்திய சாராயத்தின் கரங்கள் தன் பிடியைத் தளர்த்தாத நிலையில், வேட்டி ஒரு திண்ணையிலும், ஆசானின் உடல் ஒரு திண்ணையிலும் கிடந்தது.

இந்த கோலத்தைக் கண்ட ஆசானின் மூத்தவடியாள், ஒரு வாளித்தண்ணீரை எடுத்து ஆசானின் முகறையில் வீசினாள். அதிகாலைப் பனியில் குளிர்ந்த நீர் தன்னுடைய உடலில் பட்டதும் துள்ளி எழுந்த ஆசான் குளிரில் நடுங்கிப் போனார். சாதாரணமாகவே தன்னுடைய இரு மனைவிகளைக் கண்டு அஞ்சும் ( போதையற்ற சமயங்களில் ) அஞ்சாநெஞ்சனான ஆசானுக்குக் கொஞ்சம் கோபம் வரத்தான் செய்தது.

அப்போதுதான் தன் வேட்டி திண்ணையில் கிடப்பதையும், முந்தைய நாள் பானத்தின் மிகுதியில், தன் கோவணத்தைக் கழற்றி செந்தூரான் வீட்டுக் கழுதையின் கண்களில் கட்டியதும் நினைவுக்கு வந்தது. இடுப்புக்குக் கீழே குளிரெடுத்ததைக் கண்டு ஓடிச்சென்று வேட்டியைக் கைப்பற்றி எடுத்து இடுப்பில் கட்டினார்.

அதிகாலைப் பொழுதாகையால் குறிப்பிட்ட ஒன்றிரெண்டு பேர் மட்டும் ஆசானின் தவக்கோலத்தைக் கண்டு சாப விமோசனம் அடைந்தனர். அதில் ஒருவன் கறவைக்கார முத்து. இப்படி ஒரு மடுவை அவன் அதுவரை கண்டதில்லையாதலால் அன்று அவன் பால் கறக்கச் செல்லவில்லை.

ஆசான் கடுப்பில், ஏ எழவுடுப்பா! என்ன எழவுக்குட்டீ விடியக் காலைல ஓலம் வய்க்க...? நா என்ன செத்தா போனே? அரிவட்டி முண்ட!

அதற்கு ஆசானின் மனைவி, வாயி ரொம்ப நீளுகு ! வென்னிய கோரி ஊத்திருவேன் ! சிம்மிணி வெளக்குக்குக் கீழ சக்கரம் ( பணம் ) வச்சிருக்கேன்.. ரேசங் கடையில அரிசி குடுக்கானுவளாம்... மரியாதைக்கி வாங்கிட்டு வந்து வூட்ல வையும்...

' சக்கரம் வச்சிருக்கேன் ' என்ற வார்த்தைகள் ஆசானின் காதுகளில் ஒரு காதல் கவிதையினைப் போல வந்து விழுந்தது. தானத் தந்த ! தானத் தந்த! தானத்தத் தானனா ! உற்சாகபானம் கொள்முதல் செய்ய முத்லீடு வந்துவிட்ட மகிழ்ச்சியில் ஆசான் தன் மூத்தவடியாளை  நோக்கி ஒரு குறளை வீசினார். அது,

"பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்"

அந்த மயிரெல்லாம் கெடக்கட்டும்... மரியாதக்கி நடந்துக்கிட்டீருனா ராத்திரிக்கி கஞ்சி... ஒழுங்கு மரியாதயா போய்ட்டு அரிசி வாங்கிட்டு வரணும்! கூம்பக் கலக்கிப்புடுவேன் ! மனசுலாச்சா ஓய் ?  என்று கூறி ஆசானது குறளறிவைப் பெயர்த்து, குரல்வளையைக் காய வைத்தாள்.

அப்போதுதான், தானொரு மிகப்பெரிய ஆசானாய் இந்த ஊரில் பெயர் பெற்ற சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

ஆசானின் நினைவுகள் சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால் நீச்சலடித்தன. இறச்சகுளம் மலையடிவாரத்தில்தான் ஆசானின் வீடு. அந்தக் காலத்தில் மரச்சீனிக் கிழங்குகளை உண்பதற்காக மலையிலிருந்து கரடிகள் கீழே இறங்குவதுண்டு. கரடிகள் சுத்தமான சைவப் பட்சிணிதான் என்றாலும் கூட வழியில் எதிர்ப்படும் மனிதர்களைத் தேவையேயில்லாமல் அடிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தன. 'கொன்றால் பாவம் தின்றால் போகும்' என்ற வழக்கு காட்டில் திரியும் கரடிக்குத் தெரியுமா? நிறைய பேர் கரடியிடம் குத்துக்களை வாங்கிக் கொண்டு திரிந்தனர். 

முப்பிடாதி ஆசானின் தந்தை 'இரண்டடிப் பெருமாள்' ஒரு அசாத்தியமான வைத்தியர். அவரிடம் மருந்து வாங்கிக் குடித்து விட்டு, எழுந்து இரண்டடி வைக்குமுன் நோயாளி பிழைப்பான் என்னும் அளவில் அவர் பிரசித்திப் பெற்ற நாட்டு வைத்தியர். அடிமுறை ஆசானும் கூட. வர்மானியங்கள் அத்துப்படி. ஆனால் அவரது மகன் முப்பிடாதியோ ஏழரை.

எந்த இடத்துக்குப் போனாலும் அங்கே ஒரு இளமங்கையின் மனதை தன்னுடைய நெஞ்சோடு கொய்து கொண்டு வரும் காதல் சூரன். ஆசானுடைய சுருண்டு நீண்ட கரிய முடியும், வாளிப்பான உடற்கட்டும் இளம்பெண்களுக்கு வாகாக அமைந்ததில் முப்பிடாதியின் இதயம் கொள்ளாத அளவுக்கு நெஞ்சுப் பகுதியில் இடநெருக்கடி இருந்து வந்தது.

அப்படியொரு நாள், கரடி ஒன்று ஊருக்குள் நுழைந்து, அங்குமிங்குமாக ஓடி ரகளை செய்தது. ஒரு மொந்தை நிறைய பனங்கள்ளை ஒரே மடக்கில் குடித்து விட்டு, கண்கள் தெளிவில்லாமல் வந்து கொண்டிருந்த முப்புடாதிக்கு அந்தக் கரடியானது, கருத்த உருவத்தையுடைய ஒரு ஆணைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.

இது அந்த திட்டுவெளக்கார நாயி சொக்கலிங்கந்தான்.... இன்னிக்கி அவனா...? இல்ல நானா'ன்னு ஒரு கையி பாக்கட்டு... லே தம்மக்கார நாய...! என்று கதறிய படியே களத்தில் குதித்தார் இருபத்தைந்து வயதே ஆன முப்புடாதி...

முப்புடாதியின் கண்கள் நிலை கொள்ளவேயில்லை. அப்போதுதான் கவனித்தான். சொக்கலிங்கம் உடை எதுவும் அணிந்திருக்கவில்லை. முப்புடாதிக்குக் கோபம் பொத்துக் கொண்டு  வந்தது. 

எங்க ஊருக்குள்ள வந்ததுமில்லாம, எங்க ஆளுவளுக்க முன்னால சீலயில்லாம மணியடிச்சிட்டு கெடக்க? பொம்பளையளு வெளிய நடமாடாண்டாமா ? செத்தக் கூய்மோன! ஒன்னைய இன்னிக்கி என்னெ செய்யம்'னு பாருலே? என்றவாறே கரடியின் மீது பாய்ந்தார். கரடி விலகி விட்டது. தலைகுப்புற ஓடைக்குள் பாய்ந்தார் முப்பிடாதி.

அப்போது சுற்றியிருந்த வீடுகளுக்குள்ளிருந்து குரல்கள் கேட்டன.

முப்புடாதி ஓடீரு........... கரெடி...

மக்கா! அன்னா கிட்ட வருகு... இங்க ஓடியாந்துரு...

தம்பி ஓடிருடே... கரடீ...

கரண்டியெல்லாம் வேண்டாம்! என்னோட கையே போரும்! இவன... இன்னிக்கி... தாயளி!  முப்புடாதி ஓடைக்குள் படுத்துக்கொண்டே சூளுரைத்தார்.

அத்தான்ன்ன்ன் ஓடிருங்க.....க....ர....டீ.... ( நம்தன! நம்தன! நம்தன! நம்தன! ) ஓடையைச் சுற்றிலும் தேவதைகள் பறந்தார்கள்.

முப்பிடாதி ஓடையில் இருந்து எழுந்து அமர்ந்தார். கடைசியாய் ஒலித்த அந்தத் தேன் குரல் வந்த திசையை நோக்கிப் பார்க்கும் போதே சொக்கலிங்கம் அருகில் வந்து விட்டான்.

பன்னப் பலவட்டற பெயெல ! நீ போவலியா இன்னும்? என்னயவா புடிச்சி ஓடையில வீசுன? இன்னக்கி ஒன்னைய... ங்கொம்மையோ..........வ்வ்வ்வ்... 

சண்டை நீடித்தது. கொஞ்ச நேரம் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டார்கள்.

ஹிர்ர்ர்ர்ர்ர்ர்ர்... குஸ்தியின் இறுதியில் சொக்கலிங்கம் முப்பிடாதியின் நெஞ்சில் பிறாண்டி விட்டான். ஏராளமான கனவுக்கன்னிகள் குடியிருந்த பிரதேசத்தில் ரத்தம் பீறிட்டது.

முப்பிடாதிக்கு ஆத்திரங்கள் அதிகமானது.

யம்மா ! கெடும (ஆயுதம்) வச்சிருந்துருக்கானே? சரிதான்.... கையில கத்தி கொண்டு வந்துருக்காம்'னா அவன் லேசான நெனப்போட வரல... நம்மள தீத்துக் கட்டிருவாம்'னு நெனைக்கேன். நெஞ்சம் எரிந்தது.

முப்பிடாதி யோசிக்கவே இல்லை. சொக்கலிங்கத்தின் மீது தடாலெனப்  பாய்ந்து, அவனது இரண்டு செவிகளையும் முறுக்கித் தூக்கி தரையில் ஒரே அடி. சொக்கலிங்கத்தின் அடிவயிற்றில் ஒரு எத்து.

அது ஒரு ஆண் கரடி. மர்ம உறுப்பு தகர்ந்து, வாயைப் பிளந்து விட்டது.

சொக்கலிங்கத்தின் மீது கசகசவென முடி இருந்ததை முப்பிடாதி அப்போதுதான் கவனித்தார். மேலும் சொக்கலிங்கத்திடமிருந்து வீசிய மொச்சை வாடை வேறு வயிற்றைப் புரட்டியது.

கொன்னப் பய! ஆளு அடையாளந் தெரியாம இருக்கணும்'னுகிட்டு ஆட்டுத் தோலைப் போத்திட்டு வந்துருக்காம் பாத்தீளா? என்று சொல்லி விட்டு சொக்கலிங்கத்தை அப்போதுதான் குளோசப்பில் பார்த்தார். அது ஒரு கரடி... யம்மா கரட்டீ..... ! அய்யோ அம்..........மா...

மீண்டும் ஆசான் கண் விழிக்கும்போது ஃபாரஸ்ட் ஆபீசில் கிடந்தார். கரடியைக் கொன்றதாக வழக்கு. இரண்டு வருட சிறை மற்றும் அபராதம்.

சிறையில் சகலத்தையும் மூடிக் கொண்டு இருந்ததால் ஒன்றரை வருடத்தில் முப்புடாதி விடுதலையானார். ஒரு பெரிய கரடியைத் தன்னுடைய கையால் அடித்துக் கொன்றதால் ஊருக்குள் அவர் 'கரடி ஆசான்' என்று அழைக்கப்பட்டார். 'கரடி' என்ற உபரிச்சொல் அவரை எகத்தாளம் செய்வதைப் போல ஆசான் உணர்ந்ததால், 'கரடி ஆசான்' என்று அவரை அழைத்த பிரகஸ்பதிகள் கொஞ்சம்பேர் கடுமையாக வெளுக்கப்பட்டார்கள். அதன்பின்பு முப்புடாதி வெறும் ‘ஆசான்’ என்று மட்டுமே அழைக்கப்பட்டார்.

ஒருகாலத்தில் ஊரே தன்னைக் கண்டு அஞ்சிய நிலை மறைந்து, தன்னுடைய மனைவிகளுக்கு தாம் அஞ்சும் தன்னுடைய தற்போதைய நிலை கண்டு ஆசான் கண்கலங்கினார்.

வீட்டின் வெளியே எட்டிப்பார்த்தார். அரசாயி போய்விட்டாள். அவளது தலை மறைந்ததும், காலை சிற்றுண்டிக்கு முன்னர் தனக்குக் கிடைக்கப் போகும் ஒரு முழு குப்பி அவர் கண்முன்னே நாட்டியமாடிற்று. விளக்கின் கீழே இருந்த காசை எடுத்துக் கொண்டு பரபரவென சாராயக் கடைமுன் தோன்றி ஒரு முழுக் குப்பியைக் கொள்முதல் செய்தார்.

அந்த முழுக்குப்பி முடிவுறும் போது ஆசானின் கண்கள் இரண்டும் மணிமேடை சந்திப்பிலிருந்த கடிகாரத்தின் பெண்டுலங்களைப் போல ஆடுவதைக் கடையிலிருந்த சக பானமுற்றோர் கண்டனர்.

உடனடியாக ஆசான், தாம் அன்றைய தினம் செய்ய வேண்டிய கடமைகளை ஆராய்ந்ததில், அவரது மனைவி  அரசாயி சொல்லி விட்டுப்  போன மண்ணெண்ணைக் கொள்முதல் நினைவுக்கு வந்தது.

யம்மாடி ! பயமொவ! இன்னிக்கி மட்டும் நாம ரேசங்கடக்கி போவலியோ... எனக்கு அம்மங்கொடதான் இன்னிக்கி! என்று நினைத்துக் கொண்டே ஒரு சைக்கிளை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு மிதிக்கத் துவங்கினார். சைக்கிள் சக்கரங்கள் முன்னோக்கியும், நினைவுகள் பின்னோக்கியும் சுழன்றன.

ஒரு மனைவியைக் கட்டி மேய்ப்பதே செய்வினைக்கு ஆளாவது மாதிரிதான் எனும்போது, ரெண்டு மனைவிகள் என்பதெல்லாம் தற்கொலைக்குச் சமம் என்பது ஆசானுக்கும் தெரியாமலில்லை. என்ன செய்ய? எல்லாம் விதி!

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மரம் ஒன்றை வெட்டுவதற்காக ஆசானும், அவரது சிஷ்யகோடிகளும் ஆரல்வாய்மொழிக்குச் சென்றார்கள். அரைபாடி லாரியில் சென்றிருந்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் வெட்டுவதற்காகச் சென்ற அரச மரங்கள் அங்கே வெட்டப்பட்டு, நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன. ஆசானை மரம் வெட்டுவதற்காக அழைத்த நாள் பதிமூன்றாம் தேதி. ஆசான் &கோ சென்றது பதினெட்டாம் தேதி. டிம்பர் டிப்போகாரன் உள்ளூர் மரவெட்டிகளை வைத்து மரத்தை வெட்டி விட்டிருந்தான்.

என்ன செய்ய? என்று ஆசான் கையைப் பிசைந்து கொண்டிருந்த போது அந்த காட்சியை ஆசான் கண்டார். அங்கு ஒரு அழகிய யுவதி விறகு பொறுக்கிக் கொண்டிருந்தாள்.

ஆஹா! என்ன அழகு? ஆரல்வாய்மொழியின் காய்ந்த காட்டில் இப்படி ஒரு தேவதையா? ஆசானின் நாவு பணக்குடி வரை நீண்டது. ஊரில் தனக்காக அனேகம் ஊசி மூஞ்சி கன்னியர்கள் காத்துக் கிடந்த  காலத்தில், ஆசான் ஆரல்வாய்மொழியில் இருந்து ஒரு வாளிப்பான அப்சரஸைத் தன்னுடைய எதிர்காலமாக தெரிவு செய்தார்.

அவள்தான் அரசாயி.

ஆரல்வாய்மொழிக்கு அரசமரம் வெட்டச்சென்ற ஆசான் அரசாயிக்குத் தன் மனதை வெட்டக் கொடுத்தார்.

தன்னைக் குறுகுறுவெனப் பார்த்த ஆசானைக் கண்டு முறைத்துவிட்டு, ‘ம்க்கும்’ என்று கழுத்தை வெட்டிக்கொண்டு நின்றாலும் கூட தன்னுடைய கண்கள், தன்னை மறந்து ஆசானை நோக்கிப் போனதைக் கண்டு அரசாயி குமைந்து போனாள். ஆசானின் கரியநிறத்து வசீகரம் அப்படி... தன்னோடு விறகு பொறுக்கிக் கொண்டிருந்த சகதோழியரின் வார்த்தைகளையும் மீறி ஆசானின் மீது மையல் கொண்டாள்.

ஆசானின் அரைநொடிப் பார்வையில் அவரோடு அரைபாடி வண்டியில் ஏறினாள் அரசாயி. இதைக்கண்டு திகைத்த அரசாயியின் தோழிகளிடம் ஆசான் சொல்லச் சொன்ன குறளானது,

"ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றது என்நெஞ்சு"

அரசாயி சொன்ன குறளைக் கேட்டு வாயைப்பிளந்தவாறே தோழிகள் நிற்க லாரி ஒரு புள்ளியாய் மறைந்து போனது.

பழைய நினைவுகளும், சைக்கிள் பெடல் கொடுத்த நெருக்கடியும் சேர்ந்து மூச்சிறைக்கவே மெதுவாக மிதித்து ரேசன் கடையை எட்டினார் ஆசான்.

வேய் கோவாலு! மண்ணெண்ணய ஊத்தும்... என்றவாறே சற்று முன்னர் அருந்திய பானத்தின் காலிக் குப்பியை நீட்டினார் .

ஆசானை மேலும் கீழும் பார்த்த நியாயவிலைக் கடையின் ஊழியர் கோபால், இன்னிக்கி அரிசிதாங் குடுத்துகிட்டிருக்கு... மண்ணெண்ண அடுத்தவாரந்தாங் குடுப்பம்! என்றவாறே சிறிது மண்ணெண்ணையை ஆசானின் குப்பியில் ஊற்றி நிறைத்தார்.

அதற்கு ஆசான், ஹ்ம்ம்... பேருதான் ஞியாய வெலக் கட...செய்யது பூரா காவாலித்தனம்... இருக்கவம் ஒழுங்கா இருந்தா, செரைக்கவம் ஒழுங்காச் செரைப்பானாம். காலரா வந்த பெயலுவ! இதத்தான் அன்னைக்கே வள்ளுவஞ் சொல்லிட்டாம்லா! அது என்ன கொரளு??? ஆங்...

"வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி"

இந்த செவத்த குடிக்கவும் முடியாதே? என்று மண்ணெண்ணைய்க் குப்பியை வருத்தத்தோடே பார்த்துக் கொண்டு,  அரசின் அடக்குமுறைகளை ஓரிரு குறள்களின் வாயிலாக எடுத்தியம்பி விட்டு, சைக்கிளை உருட்டி மீண்டும் பானக் கடைக்கே வந்து சேர்ந்தார் ஆசான். இவரது மீள் விஜயம் கடைக்கார ராசாவை கேள்வி கேட்க வைத்தது.

என்ன ஓய்! கையில நல்ல சக்கரம் நடமாடுகு போலிருக்கே? காலைல ஒண்ணு! மத்தியானம் ஒண்ணு! குப்பி குதிக்கி... பயங்கர வெளையாட்டாருக்கே? என்ன காரியொம்?

அதற்கு ஆசான், த்தூ காவக்கார நாய! பெரிய்ய்ய சீமையில வித்த கடய நடத்துகான்... மனுசனுக்க கையில சக்கரம் இருக்கும்போது ஒரு பேச்சி...  இல்லாத நேரத்துல ஒரு பேச்சி... சக்கரம் எங்க இருந்து வந்தா ஒனக்கு என்ன மயிறுடே! கிளாஸ்ல ஊத்துறதோட ஒஞ்சோலி கவுட்டைய மூடிக்கா... இந்த ஊம்பித்தனத்த வேற யாருகிட்டயாது வச்சிக்கிடணும்... என்ன வெளங்கிச்சா? இதுக்குத்தான் வள்ளுவே அன்னைக்கே சொன்னாரு! என்றவாறே,

''திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்''

இதெல்லாம் ஒனக்கு எங்க வௌங்கப் போவுது... சாராயம் விக்கிற செத்த பெயலுக்கு பெறந்தயலுக்கு... பூரா வெசம்! என்று கூறி சாராயக் கடை அதிபர் ராசாவின் நீலநிற இதழ்களை மூடி வைத்தார் ஆசான்.

கடுமையான பானத்தின் முடிவில் வாடகை சைக்கிளானது கைத்தடியாக மாறி ஆசானை வீட்டிற்கு வழிநடத்தி வந்து கொண்டிருந்தது. வயலாங்கரை வழியாக வரும்போது புத்தேரி பெரிய பத்தின் ( வயல்வெளி ) ஒரு வயலில், ஐந்து பெண்கள் களை பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு பெண்ணின் குரல் ஆசானை உரக்க அழைத்தது.

ஓய்... முண்டப்பாதி கோசான்! ஓய்... நில்லும் வோய்...

ஆசான் திரும்பிப் பார்த்தார். அங்கே வயலுக்குள் பத்து பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் அலை அலையாய் நெளிந்து கொண்டு ஒரு மாதிரியாக நின்றதைக் கண்டு ஆசான் வியந்து கண்களைத் துடைத்தார். கூர்ந்து பார்த்ததில் இரண்டு பரமாயிகள் நின்று கொண்டிருந்தார்கள்.

ஆசானுக்கு கால்கள் வேர்த்து விட்டது.

இந்த ஊழி முண்டையா நிக்கா ? யம்மா! எதுக்குக் கூப்புடுகாளோ தெரியலையே ? செவத்த இப்ப என்ன செய்யதுக்கு?????

மறுபடியும் பரமாயி கத்தினாள்.

ஓஓஓஓய்ய்யய்ய்ய்யி... அக்கா அரி வாங்கச் சொன்னாளே?  கையில என்ன குப்பி மயிறு? சைக்கிளு யாது ஓய்? எங்க களவாண்டீரு...? இந்தா கெடக்க ரேசங்கடைக்கி ஒம்ம குண்டி சைக்கிளுல ஒக்காந்துதான் போவுமோ? அரிசிய எங்கவோய்?

ஆசான் சொன்னார். பொறத்தால லாரீல வருகுட்டீ! வயிலுக்குள்ள கெடந்துகிட்டு ‘வ்வோவா’ வச்சன்னா குறுக்குல சமுட்டிப் புடுவேன். கோம்பப்பெயலோளி...

பரமாயி திரும்பக் கத்தினாள். லாரீலன்னா! எப்பிடி? எங்கக்காவக் கொண்டாந்தது மாதிரியா? வூட்டுக்கு போ கருமத்த மாடே ! இன்னைக்கி ஒனக்கு வெளுப்பும், தொவைப்பும் இருக்கு... நல்லா நெஞ்சில எண்ணை போட்டு வச்சிக்காரும்!

ஆசானுக்கு வியர்த்தது. கனவுக் கன்னிகள் குடியிருந்த நெஞ்சில் மீண்டும் எண்ணை போடும் சூழல் உருவாகி விடுமா? என்ற அச்சம் அவரை ஆட்டிப் படைத்தது.

அப்போதுதான் பரமாயியை அவர்தம் இதயத்தில் செலுத்திய கதை நினைவுக்கு வந்தது. பரமாயி வேறு யாருமல்ல, அரசாயியின் உடன்பிறந்த தங்கை.

ஆரல்வாய்மொழியிலிருந்து அரசாயியை ஆசான் கூட்டி வந்த அன்று ஆசானின் தந்தை இரண்டடிப் பெருமாள், ஆசானையும், அரசாயியையும் வீட்டை விட்டுத் துரத்தி விட்டார்.

எங்கயிருந்தோ ஓட்டிகிட்டு வந்த தெருநாயை எல்லாம் வீட்டுக்குள்ள ஏத்த முடியாது... போலே வெளிய! சாதி கெட்ட சண்டாளப் பெயலே! என்று சொல்லி அவர்களை விரட்டி விட்டு, வீட்டின் புழக்கடைக்குப் போனவர் கொள்ளு! கொள்ளு என்று இருமிக்கொண்டே, தான் தயாரித்த இருமல் மருந்தை எடுத்து குடித்து விட்டு இரண்டு அடிகள் எடுத்து வைத்தவர் கால்தடுக்கி கிணற்றுக்குள் தலைகீழாகப் பாய்ந்து புகைப்படமானார்.

அதன்பின்னர் ஆசானே தன்னுடைய தகப்பனாரின் வைத்தியசாலைக்கு அதிபரானார். தந்தை எழுதி வைத்திருந்த மருந்து வடிப்புக் குறிப்புகளில் ஆசான் விரும்பித் தேர்ந்தெடுத்தது அரிஸ்டத் தயாரிப்புக் கலவை முறை. அதன் பிறகு ஆசானுக்கு சாராயக்கடைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. வீட்டிலேயே வடித்துக் குடித்தார்.

அரசாயியின் கூடப் பிறந்தது பதிமூன்று பெண்பிள்ளைகள். அந்த காலங்களில் மனிதர்களின் பொழுதுபோக்கே வள்ளுவரின் காமத்துப்பால்தான் என்பதால் பெண்டிர் ஒரே வருடத்தில் இரண்டு முறை மகப்பேறு அடையும் பேறு பெற்றார்கள். அரசாயியின் அப்பா தாண்டவக்கோன். விடாமல் தாண்டவம் ஆடியதில் அரசாயியின் தாய் பொன்னுத்தாயியை வருசத்துக்கொரு முறை பிள்ளைத்தாச்சியாக்கினார். அவளும் விடாமல் பிள்ளை பெறும் இயந்திரமாக மாறி பெற்றுப்பெற்று வீசியதில் மொத்தம் பதினான்கு பெண்பிள்ளைகள்.

தினமும் வீட்டில் அட்டெண்டன்ஸ் எடுக்காத குறை. தன் பிள்ளைகளில் எட்டாவதாக காணாமல் போன மகள் அரசாயியைத் தாண்டவக்கோன் மோப்பம் பிடித்து ஆசானின் வீட்டுக்கு வந்தார். வரும்போது தன்னோடு கூட ஒன்பதாவது மகள் பரமாயியையும் கூட்டி வந்தார். தன் மகள் அரசாயி அரிஸ்டத்தின் செழிப்பில் அதிர்ஷ்டமாக வாழ்வது கண்டு மகிழ்ந்து போனார்.

அரசாயியின் தங்கை பரமாயியின் வனப்பில் தன் மனதைப் பறிகொடுத்த ஆசான் ஒருநாள் இரவு புரண்டு படுத்து காலையில் கையும் காதலுமாகப் பிடிபட்டதில் பரமாயி, ஆசானின் கவிதைத் தொகுப்பில் இரண்டாவது பூவாய் மலர்ந்தாள். அக்காவும் தங்கையும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்து , ஒரேவீட்டில் ரெண்டு பேரும் சேர்ந்துகொண்டு ஆசானை வெளுக்கத் துவங்கினார்கள். ஆசானின் நிம்மதி பறிபோனது. அதன்பின்பெல்லாம் ஆசானுக்கு வீட்டின் வெளித்திண்ணையில்தான் உறக்கம்.

கழுத்துவரை குடித்து விட்டு ஆசான் திண்ணையில் படுத்தாரானால் காலையில் ஆசானின் வேட்டி பக்கத்து வீட்டுத் திண்ணையில் கிடக்கும். ஆசானின் கருத்தப் பிருஷ்டத்தை, இரவின் நிலவொளியில்  கண்ட கீழத்தெரு முத்தையனுக்குத்தான் ஒருமுறை வேப்பிலை அடிக்க வேண்டி வந்தது. பரமாயி குறித்த ஆரம்பகால நினைவுகளை அசைபோட்டபடியே நடந்த ஆசானை வாடகை சைக்கிள் வீடு கொண்டு வந்து சேர்த்தது.

வேலைக்கு சென்று வீடு திரும்பிய அரசாயி, ஆசானை வீட்டின் புழக்கடையிலுள்ள, பாத்திரம் கழுவும் இடத்தில் கண்டாள். பாத்திரம் துலக்கும் உமிக்கரி ஆசானுக்கு மதிய உணவாய் மாறியிருந்தது. கழிவுநீர் ஓடையில் தலைவைத்துப் படுத்தவாறே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

என்னட்டி! சோறு கருப்பா கரகரன்னு இருக்கு? எழவு... உப்புமில்ல ஒறப்புமில்ல! குண்டிய குண்டிய லாத்தீட்டு நடந்தா மட்டும் போறாது... ஒழுங்கா சோறு பொங்கத் தெரியணும்... சந்தையில கெடைக்காத கெண்டையின்னு ஆராமுழியில இருந்து இந்த செத்த முண்டைய கெட்டிகிட்டு வந்த என்னையத்தானே பிஞ்ச வாரியல்ல அடிக்கணும். சூனியம் புடிச்ச சூவ முண்ட!

அரிசியும் வாங்காமல் மண்ணெண்ணெய் குப்பி சகிதம் புழக்கடையில் வீற்றிருந்தபடியே ஏடாம்பு பேசிய ஆசானைக் கண்டு ஆத்திரமடைந்த அரசாயி, ஆப்பைக் கணையை எடுத்து வெளுத்து விட்டாள். அடி பொறுக்க முடியாத ஆசான் கொல்லியாண்டோ! குட்டியப்பா'வென ஊளையிட்டுக் கொண்டே வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்தார்.

அடிவாங்கிய வியாகுலத்தில் ஆசான், தன் கையிலிருந்த மண்ணெண்ணெய்க் குப்பியை, சற்று நேரத்திற்கு முன்புவரை தன்னைச் சுமந்து, தனக்கு ஊன்று கோலாக விளங்கிய வாடகை சைக்கிள் மீது ஊற்றி சொக்கப்பனை கொளுத்தினார். கொளுத்திய பின்புதான் தாம் செய்த செய்கையின் மூலம் வள்ளுவருக்கு துரோகம் இழைத்து விட்டதை உணர்ந்தார். ஆசானுக்கு ஒரு குறள் நினைவுக்கு வந்தது.

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு"

சைக்கிள் எரிந்து கிடந்தது. தூரத்தில் தீவண்டி ஒலி கேட்டது. அப்போதெல்லாம் ரயிலை பொகவண்டி,  தீவண்டி, நெட்டவண்டி, கரிச்சான், கரிவண்டி, குட்சு, ரெயின் என்றெல்லாம் அழைத்தார்கள். தனக்குப் பின்னால் கையில் துடைப்பக்கட்டையோடு அரசாயி துரத்துவதைக் கண்ட ஆசான் அதிர்ச்சியடைந்தார்.

ரயில் மீண்டும் சங்கு ஊதுவதைக் கேட்ட ஆசானுக்குக் கோபம் வந்து, அவரது கோபம் தீவண்டி மீது திரும்பியது.

எவம்புல என்னையப் பாத்து ஊளை போட்டு சிரிக்கது? இந்தா வாரம்ல... கொப்பனக் கெடந்தவன் ! என்று அலறியவாறே, தன்னை விரட்டி வந்த அரசாயியிடம் இருந்து தப்பிக்க நினைத்தவர் ஊருக்கு தெற்கால் ஓடினார்.

மிச்சமிருந்த மண்ணெண்ணையால் அந்தத் தீவண்டியை நான் எரிப்பேன்! என்று சபதமிட்டுக் கொண்டு ரயிலை நோக்கி ஓடத் தொடங்கினார். அப்போதுதான் ஸ்டேஷனில் பயணிகளை இறக்கி விட்டுவிட்டு புறப்படத் தயாரானது ரயில்வண்டி.

ரயிலை நோக்கி தண்டவாளத்தின் மீது கையில் குப்பியோடு ஒரு கோசான் ஓடிவருவதைக் கண்ட ரயில்வண்டி ஓட்டுநர் ரயிலைக் கிளப்பவில்லை. எக்ஸ்பிரஸ் வேகத்தில் வந்த ஆசான் நின்று கொண்டிருந்த ரயில் மீது மோதினார். முன் மண்டை ரயிலின் முன்பக்கத்திலும், பின்மண்டை தண்டவாளத்திலுள்ள சரளைக் கற்களிலும் மோதியதில் ஆசான் அவ்விடத்திலேயே தன்னுடைய ஜீவ ஓட்டத்தை நிறுத்திவிட்டு, சிவன்பாதம் சேர்ந்தார்.

அவரது இறுதி மூச்சுக் காற்றானது, பழங்கஞ்சி முருகேசனின் மகன் குணசேகரனின் நற்பெயர் கெட்டொழிந்து, அலைந்த வளி மண்டலத்துக்குள் கலந்தது. அவரது ஆத்துமா பழையாற்றின் படித்துறையில் ஆசானால் துவைக்கப்பட்டு உயிர் நீத்த மணியின் ஆத்துமாவை நிரந்தரமாகச் சென்றடைந்தது.

அவரது முதல் மனைவி அரசாயி இருநூறு ரூபாயை வாடகை சைக்கிள் கடைக்காரனுக்கும், இரண்டாவது மனைவி பரமாயி முன்னூறு ரூபாயை தென்னக ரெயில்வேக்கும் செலுத்தித் தங்களது கணவனின் பூத உடலைப் பெற்று எரித்தார்கள்.

''எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்''

அதாவது ‘குடி’மக்களே! யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு இவ்வுலகில் எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்? என்று இந்தக் குறளுக்கு விடை தேடினால்... அது என்னவோ தண்டவாளத்தில் ஆசானால் விட்டுச் செல்லப்பட்ட அந்த மண்ணெண்ணைக் குப்பியும், எரிந்து போன வாடகை சைக்கிளும், தன்னை இடித்துக் கொன்ற தீவண்டியும், அரசாயி, பாரமாயி சகோதரிகளும்தான் என்று நீங்கள் கருதினால் அதுவே நீங்கள் வான்புகழ் தந்த வள்ளுவனுக்குச் சொல்லும் நன்றியாக இருக்கும்.

- பிரபு தர்மராஜ்

 

0 Comments

Write A Comment