Tamil Sanjikai

கொழுந்தியார் ஐரோப்பாவிலிருந்து வந்து போன் செய்தாள்.

அத்தான்! வேயழ் ஆழ் ஈயவ் ? ( Where are you வைத்தான் இப்படி கசக்கிப் பிழிந்திருந்தாள் )

நான், என்னம்மோ தமிழ் மறந்துட்டா ? யாம்ணா கொப்பன் இங்க்லீசுகாரந்தானே ? ஒழுங்கா தமிழ்ல பேசாம்ட்டி ! ( சற்றே சுதாரித்தவளாக )

எத்தான் ! எங்க இருக்க ? நேத்தி சாயந்திரம் வந்தேன்.

நான் அவளிடம் கேட்டேன். தம்பி வரலியாடே ? ( அவளது கணவன் )

அவள், ம்க்கும் ! அந்த வட்டனுக்கு லீவு இல்ல ! செவம் லண்டன்ல கெடக்கு !
( பொடதியிலே ரெண்டண்ணம் போட்டுத்தான் ஃபிளைட் ஏத்தி விட்ருக்கான். வாய வச்சிக்கிட்டு சும்மா கெடந்தாத்தானே ? பயபுள்ள ஏடாம்பு பேசியிருக்கு ! அவன் சொல்லித்தான் தெரியும் )

நான் பொத்தாம்பொதுவாக கேட்டு வைத்தேன். என்ன விசேசம் ? திடீர் விஜயம் ?

அதற்கு அவள், பாட்டிக்கி வருசம் வருகுல்லா ! அதான் வந்தேன். யா வரக்குடாதா ?

எனக்கு பொறி தட்டியது. இவ பாட்டி ஒண்ணும் பெரிய மகாத்துமா கெடயாதே ? உயிரோட கெடக்கும் போதே அத்தன பேரோட சீவன வாங்கிட்டு திரிஞ்ச பன்னாடை ! அவளுக்கு ஆண்டு கழிக்க எங்க மாமன் ஒண்ணும் அவ்ளோ பெரிய நீண்ட கையன் கெடயாது. வெட்டுன கைக்கு சுண்ணாம்பு வைக்காத காஞ்சான் ஆச்சே ! இதுல எதோ விவகாரம் இருக்கு! கவனமா இருடா கைப்புள்ள! என்று உள்மனம் கதறியது.

மறுபடியும் சும்மானாச்சுக்கும் கேட்டு வைத்தேன்.

எளா! சானல்ல தண்ணி போகுதா ? இல்லியா ?

அதற்கு அவள் சொன்னாள், ஆமா ! தண்ணி போனாலும் சாடிச்சாடி குளிச்சி பொளந்துருவாரு! ஒமக்கு நீச்சல் தெரியுமா ஓய்? கழுத வயசாகு ! அவ்ளோ தூரத்துல இருந்து வந்துருக்கேன். சானல்ல தண்ணி போகா ? சாக்கடைல பண்ணி கெடக்கான்னு கேக்கானே மனுசன்! அக்காளையும் , புள்ளையும் கூட்டிகிட்டு மரியாதையா வீட்டுக்கு வாரும் ! ஒம்ம சாவடிச்சிருவேன்... காட்டுக் கோந்தான் !

ஃபோனை வைத்தாள்.

இந்த நாயோட ஒபத்திரவம் இருக்கப் புடாதுன்னுதானே இந்தியாவுல இருந்து லண்டன்ல கெட்டி குடுத்துருக்கு ? லண்டன்ல என்ன எழவ இழுத்துகிட்டு இங்க வந்து தொல்ல குடுக்குதோ மூதேவி ! என்று நினைத்த படியே இருந்தேன்.

ஒமக்கு நீச்சல் தெரியுமா ? என்ற அவளது எகத்தாள வார்த்தைகள் காதுக்குள் வந்து கடித்து வைத்தன. நான் ஏன் நீச்சல் படிக்கவில்லை? மனம் பின்னோக்கி ஓடியது.

படித்துறை பலவேசமும், பரலோகப் பாதையும்

1988 ஆம் ஆண்டு. பிறந்து வளர்ந்தது நெல்லை மாவட்டம் பாபநாசம். வீட்டின் பின்னால் தாமிரபரணி ஆறு. சுற்றிச் சுற்றி வயல்வெளியும் , ஆறுகளுமாய் அற்புதமாக இருக்கும். குளிக்கப் போன இடத்தில் ஒருநாள் அக்கா ஆற்றோடு போய்விட்டாள். அம்மாதான் கஷ்டப் பட்டு காப்பாற்றினாள். அன்றிலிருந்து அம்மா எங்களை வீட்டை விட்டு, வெளியே விட மாட்டாள்.

அப்புறம் 1989 ல் சொந்த ஊரான நாகர்கோவிலுக்குக் குடி பெயர்ந்தோம். சித்தியின் முதல் மகன் 1990- ல் பிறந்தான். அம்மா , பாட்டி என்று எல்லாரும் ஆஸ்பத்தியில் இருந்தார்கள். இரவு மருத்துவமனையில் தங்கி விட்டு, காலையில் நான் என்னுடைய ஒரு தாத்தாவோடு சேர்ந்து வீட்டுக்கு வந்தேன். அவரது இயற்பெயர் பலவேசமுத்து.

ஆற்றுக்கு அவர் குளிக்கப் போனபோது அவரோடு நானும் சேர்ந்து கொண்டேன். எனக்கு நீச்சல் தெரியாது என்பது அவருக்குத் தெரியாது. ஒரு பெரிய படித்துறையும், ஒரு பெரிய சப்பாத்தும் கொண்ட பழையாற்றின் கரையோரம் நின்று கொண்டிருந்தோம். சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் நின்று குளிப்பதும் , துவைப்பதுமாய் இருந்தார்கள். காலையில் என்பதால்தான் அவ்வளவு கூட்டம்.

படித்துறைக்கும், சப்பாத்துக்கும் இடையில் ஒரு மூன்று அடி உயர மதில் சுவர். ஏனென்றால் படித்துறை பெண்கள் மட்டுமே குளிக்கும் பகுதி. வாய்நோக்கிகளுக்கு மறைவாக இருந்த அந்த சுவரை, பெர்லின் சுவர் அளவுக்கு கிளுகிளு பிரகஸ்பதிகள் வெறுத்து வந்தார்கள். அதில் தாத்தாவும் ஒருவர் என்பது எனக்கு அப்போது தெரியாது. அப்போதெல்லாம் தாத்தாமார்களுக்கு இரண்டு, மூன்று பாட்டிமார்கள் இருந்தார்கள். ஒரு வீட்டில் ஒரு ஊரே குடியிருக்கும். அப்போது இந்திய நீதிமன்ற சட்டங்கள் திறந்து கிடந்ததைப் போலவே சுவற்றுச் சட்டங்களும் ( சன்னல்கள் ) திறந்து கிடந்ததால் தாத்தாக்கள் ரொம்பவே குதித்து விளையாடி இருக்கிறார்கள். கள்ளக்காதலையும் சட்டப்படி குற்றமில்லை என்று உச்சநீதி மன்றங்களின் வாயால் சொல்ல வைக்க அந்த தாத்தாக்களின் பேரப்பிள்ளைகளாகிய வாய்பொளந்தான்களுக்கு) ஐம்பது ஆண்டுகள் தேவைப் பட்டிருக்கிறது. தொட்டிப் பயல்கள்!

சரி போகட்டும் ! தாத்தா அந்த பெர்லின் சுவற்றில், படித்துறைப் பக்கம் பார்த்து நின்று கொண்டு துணி துவைத்துக் கொண்டிருந்தார். அங்கே நிறைய பெண்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

நான் அந்த சப்பாத்தின் ஒரு ஓரத்தில் நின்று கொண்டு, கையில் சிறிய பக்கெட் ஒன்றை வைத்து மொண்டு குளித்ததைப் பார்த்து ஆறே சிரித்தது. சித்தப்பாக்களின் பிள்ளைகள் வேறு பல்லை இளித்தார்கள். நான் அவர்களைக் கண்டு கொள்ளவில்லை.

நடு ஆற்றில் நின்று கொண்டிருந்த என்னுடைய மாமா ஒருவர் என்னிடம், என்னடே ! பாவனாசத்துல இருந்துகிட்டு நீச்சலடிக்கத் தெரியாம கோம்பையன் மாதிரி வந்துருக்க !

என்னுடைய வயதையொத்த சித்தப்பா மகன் ஒருவன் நடு ஆற்றில் நெஞ்சளவு நீரில் நின்று கொண்டு என்னைக் கூப்பிட்டான். குதிடே மக்கா ! ஆழமில்ல !

அப்போதுதான் கவனித்தேன். என்னுடைய உயரம்தான் அவனும் ... நெஞ்சளவு நீர்தான் ஆழமில்லை. இந்தக் கேவலத்தை நீக்க வேண்டுமானால் ஆற்றில் குதிக்க வேண்டும். வேறு வழியே இல்லை! ஆற்றுக்குள் நின்று கொண்டு பயல்களும் கூச்சலிட்டார்கள்!

சாடுலே ! சாடு ! சாடி இங்க வந்துரு ! வா...............................

குதித்து விட்டேன். அப்போதுதான் அது நடந்தது. சப்பாத்திலிருந்து ஆழத்தில் இறங்கி ஒரு பெரிய பள்ளம். அதன் பின்புதான் மேடு... அந்தப் பள்ளத்தை நீந்திக் கடந்தால்தான் அது சாத்தியம். அத்தனை ஆழம் கொண்ட அந்த ஆற்றில் என்ன தைரியத்தில், எப்படி குதித்தேன் ?

பெண்கள் படித்துறையில் படுத்துக்கிடந்த பலவேசத்தின் கண்கள்

ஆற்றுடைய நீர்ப்போக்கின் காரணமாகவும், மணல் திருடும் போக்கிரிகளாலும் ஆற்றின் தரைப்பகுதியானது ஹெச்.ராஜா வகையறாவின் பேச்சைப் போல அவ்வப்போது கொடூரமாய் மாறிக் கொண்டேயிருக்கும்.

இருபது அடி ஆழம் வரை கீழே போய் மேலே வந்து பார்த்தேன். தாத்தாவின் கண்கள், பெண்கள் படித்துறையில் தவறி விழுந்து கிடந்து உருண்டது. படித்துறையில் ஒரு பெண்மணியின் முதுகுக்கு பலவேசம் தாத்தா கண்களால் சோப்பு போட்டுவிட்டார். மீண்டும் கீழே போனேன்....

மூச்சு விட முடியவில்லை, ஆனாலும் தண்ணீர் குடிக்கவில்லை. மீண்டும் மேலே வந்தேன். சப்பாத்திலிருந்து ஒரு இருபது அடி தூரம் வந்திருந்தேன். என் மாமா என்னை நோக்கி பதறியடித்த படி நீந்தி வந்தது தெரிந்தது. மீண்டும் மூழ்கினேன். பலவேசம் தாத்தா இங்கு நடந்த எந்தக் அக்லேபரமும் தெரியாமல் கருமமே கண்ணாயிருந்தார். இப்போது என்னால் சுவாசிக்க முடியவில்லை. ஆறு கொஞ்சம் கொஞ்சமாய் என்னை விழுங்கத் துவங்கியது. சாகப் போகிறோம்.

ஐயோ! அம்மா என்னைத் தேடுவாளே! பாவமில்லையா அவள் ! எத்தனை முறை சொல்லியிருக்கிறாள்? ஆற்றுப் பக்கம் போகாதே !!!!!!!!!!!! அம்ம்ம்ம்ம்மா ! கண்களில் நீர் வழிந்து ஆற்றோடு கலந்து போனது. மூக்கினுள் நீர் புகுந்து நுரையீரலுக்குள் சென்றது.

மீண்டும் நீர் மட்டத்துக்கு கைகால்களை உதைத்தேன், என்னால் முடியவில்லை. அப்போதுதான் இரண்டு கைகள் என்னை வந்து இழுத்தன. மாமா என்னைப் பிடித்துத் தூக்கினார். அவருக்கும் தண்ணீர் நிலைக்காது சுமார் இருபது அடி ஆழம். நான் நீர் மட்டத்திலிருந்து வெளிய வந்து பார்த்தேன். பயத்தில் மாமாவின் தோள்களை அழுத்தினேன். அவர் நீருக்குள் மூழ்கினார். நான்கைந்து பேர் ஆற்றில் குதித்தார்கள். மாமா தண்ணீர் குடித்தார், நான் அவரின் தோளின் மீது உட்கார்ந்திருந்தேன்.

எங்கள் இருவரையும் தூக்கி வந்து சப்பாத்தில் கிடத்தினார்கள். அப்போதும் தாத்தா கடமை தவறாமல் துணி துவைத்துக் கொண்டே படித்துறையில் குளித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம், என்னம்மோ நீலா ! நீ உடுத்தியிருக்கது ஒம்மாப்ப்ளைக்க சாரமா? ( லுங்கி ) பின்னால கிழிஞ்சிருக்கு ? எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.

என்னை தரையில் படுக்க வைத்து வயிற்றைப் பிடித்து அழுத்தினார்கள். நான் கத்தினேன்.

வலிக்குது வுட்ருங்க ! நா தண்ணி குடிக்கலை!

மாமன் அசைவற்றுக் கிடந்தார். அவரது வயிற்றை அழுத்தவும் அவர் வாயிலிருந்து கொஞ்சம் சகதியும், கொஞ்சம் ஷாம்பூ பாக்கெட்டுகளும் வந்து விழுந்தன. மாமாவை நீருக்குள் தலைகீழாக இழுத்து வந்ததில் இத்தனை குப்பைகளையும் மாமா விழுங்கியிருந்தார்.

அப்போதுதான் தாத்தா திரும்பிப் பார்த்து மாமனிடம் கேட்டார்.

என்னடே ! தண்ணிக்க தாந்துட்டானா ? ( தண்ணீருக்குள் தாழ்ந்து விட்டானா ? )

மாமா கண்விழித்து தாத்தாவைப் பார்த்து கேட்ட முதல் வார்த்தை... நீலாவுக்க சாரத்துல கெடந்த ஓட்டை கண்ணுக்கு தெரிஞ்சிருக்கு... கூட கூட்டிட்டு வந்த பய தண்ணிக்குள்ள கொக்கு புடிச்சது ஒமக்கு தெரில ! சாவப் போற காலத்துல கண்ணு நீலம் பாஞ்சி கெடக்கா ஓய் ஒமக்கு ?

தாத்தா திகைத்தார். என்னடே ஆச்சி ? தண்ணில எப்போ வுழுந்த?

அதற்கு மாமா, பரமேஸ்வரி முதுகுல சோப்பு போட்டால்லா ? அப்பத்தான் வுழுந்தான் ! ( கூட்டம் சிரித்தது ) சடாரென மாமா என்னிடம் திரும்பி, ஆனா நீ இருக்கியே ! எமனக் கெடந்தவம்ல! என்னைய எதுக்குல தண்ணில முக்குன?

அதற்கு நான் சொன்னேன், ஆமா நீரு மட்டும் எம்முடியப் புடிச்சி இழுக்கலாமா ?

தாத்தா மறுபடியும் திகைத்தார்.

ஆட்கள் பலவாறு பேசிக் கொண்டார்கள்.

இந்தக் கெழவன எனக்குத் தெரியும்ட்டி ! ஆளு பயங்கரமான கோழி ! ஒரு பொம்பளைய வுட மாட்டான் ! பொம்பளக் கோசான் !

யாரு ? அந்த தாத்தாவா ? பாத்தா அப்புடி தெரிலயே ? ஆளு பவ்வியமாத்தானே இருக்கான் ?

அந்தப் புட்டாந்தானே ? அவன் இதுவுஞ் செய்வான் ! இதுக்கு மேலயுஞ் செய்வான் ! கூதற மூதி !

இவம்பேரு பலவேசமா ? பலவட்டறையா? த்தூ !

நான் செத்துப் பிழைத்ததை விடவும், தாத்தாவின் கண்கள், பெண்கள் படித்துறையில் நீராடிய சம்பவமே பேசு பொருளானது....

தாத்தாவின் கண்களில் நீர் பழையாறைப் போல பாய்ந்து, வழிந்து ஓடி கன்னியாகுமரி கடலில் கலந்தன. ஒருவேளை நான் செத்துப் போயிருந்தால் என் பெற்றோருக்கு என்ன பதில் சொல்லுவாரோ? என்று எண்ணியிருக்கலாம். பின்னொரு நாளில் அவரது கண்ணீர் குறித்த உண்மையை மாமா எனக்கு சொன்னார்.

அது ஒண்ணுமில்லடே! பலவேசம் கெழவன் யா அழுதாந் தெரிமா ? சப்பாத்துல சல்லியம் ( பஞ்சாயத்து ) நடந்துட்டுருக்கும்போது கீழத்தெரு சீத்தாலெச்சுமி குளிச்சி, சோப்பு போட்டுட்டு, கரையேறி போயிட்டா ! அந்த கண் கொள்ளா காட்சிய பாக்க முடியலையே’ன்னு ஒங்க தாத்தனுக்கு வேவலாதி ( ஆற்றாமை ) அதான் அந்த நாயி நீலிக் கண்ணீர் வடிச்சிருக்கு !

எனக்கு வியப்பு மேலிட்டது. மாமாவின் பெரியப்பாதான் பலவேசம் தாத்தா... இவ்ளோ டீட்டெய்ல் சொல்லுதே பயவுள்ளை ? பொம்பளைங்க குளிக்கிறத இந்த ஆளு எதுக்கு பாக்கணும் ? மேலும் இந்த சீதாலக்ஷ்மி குளியல் விவகாரம் மாமாவுக்கு எப்படித் தெரியும்’னு கேஸ் ஸ்டடி செய்து பார்த்தால் மாமாவும் ஒரு மிகப் பெரிய கள்ளக்கோழி! ஒரு தலைமுறையவே குளியல் காட்சி மோகம் ஆட்டிப் படைத்து, நாகரீகம் வளர்ந்த ஆற்றங்கரையில் அலைந்து திரிய வைத்திருக்கிறது. சோ! திஸ் கேஸ் இஸ் இன்ஃபினிட்டி!

அதற்கு அப்புறம் எனக்கு ஆற்றின்கரை பக்கம் நடமாட அனுமதி மறுக்கப்பட்டு வீட்டு சிறைதான். அதனால்தான் நான் நீச்சல் கற்றுக் கொள்ளவில்லை. பெருவெள்ள காலங்களில் கூட இடர் மீட்பு குழுக்களால் சிறுசிறு படகுகளில்தான் மீட்கப்பட்டேன். இன்றும் கூட நான்கு அடி ஆழ நீச்சல் குளங்களில் மட்டுமே தலை நனைப்பதுண்டு !

கொழுந்தியாள் இல்ல எழுந்தருளல்.

சரி இந்த பயபுள்ள வேற வீட்டுக்கு வர சொல்லிச்சே ! ரெண்டு எட்டு போய்ப் பாத்துட்டு வரலாம்! என்று அவளது வீட்டுக்கு போனேன். வீட்டுக்குள் நுழைந்தால் அங்கே ஒரு உருவம் ஊசிக்காட்டு சுடலை மாதிரி கிறீச்ன்னு உட்கார்ந்திருந்தது. பிள்ளையார் சதுர்த்திக்கு பிடித்துவைத்த கருப்பட்டி கொழுக்கட்டை மாதிரி இருந்தது அந்த துருப்பிடித்த பாடி. வேற யாரு மாம்ஸ்தான்.

நான் அவரிடம், என்னவோய் மாமா ! சாணில உளுந்த ஓந்தான் மாதிரி உக்காந்திருக்கீரு? போலீஸ்கிட்ட அடிவாங்கிட்டீரா ?

அவர் நாக்கு குழற என்னிடம், வாழ மக்கழே ! ஷாப்புளுகியா? நா டீவீழ்ழா பாத்துட்டு இளுந்தன். ( வாலே மக்களே ! சாப்புடிறியா நா டீ.வி லா பாத்துகிட்டிருந்தேன்... நாக்கு கிடந்து கூப்பாடு போட்டது )

நான் சுற்றி முற்றி பார்த்தேன். டீவி ஆஃப் செய்யப் பட்டிருந்தது. சரிதான்! நாய் குடிச்சிட்டு உக்காந்துருக்கு ! சோஃபாவின் கீழ் ஒரு ஜேக் தானியேல் குப்பி உட்கார்ந்திருந்தது. அது எனக்கு வாங்கி வரப்பட்ட விஸ்கி என்பதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை. சாவ நாளத்துத் திரியான் செவத்துப் பயல் ! என்று எனக்குக் கடும் கோபம் வந்து விட்டது.

சத்தம் கேட்டு உள்ளறையில் இருந்து முகத்தில் சுண்ணாம்பு பூசிய பூதம் ஒன்று வந்தது. கொழுந்தியாளேதான் !

இது என்னடி கோலம் ?

அவள் என்னிடம், இங்க டூ கோல்டா இருக்கு அத்தான்! ரேஷஸ் வந்துரப்புடாது இல்லியா ? அதான் மாயிஸ்ட்ரைசர் போட்டுருக்கேன்.
கடுப்பாகி விட்டது.

ஆமா கொப்பன் கும்பி முட்ட குடிச்சிட்டு கோவணம் இல்லாம உக்காந்துருக்கான் ! நீ என்னன்னா மூஞ்சில மொசைக் போட்டுட்டு வந்து நிக்க? ஆமா இந்த நாயி எனக்கு வாங்கிட்டு வந்த விஸ்கியத்தானே குடிச்சிட்டு நிக்கு ?

மாமன் சடாரென என்னிடம், ஏம்மாப்புழ ! அதா சேழ் இருக்குல்லா ! அப்பொழம் எதுக்கு பாயி ?

நான் நாய் என்று சொன்னது அவருக்கு பாய் என்று கேட்டிருக்கிறது. முழு குப்பி விஸ்கிய ஒத்தையில குடிச்சா ?

தலையிலடித்துக் கொண்டேன்.

அத விடு அத்தான்! உனக்கு நான் மங்கி ஷோல்டர் விஸ்கி வாங்கியாந்துருக்கேன். எத்தான் ! ஒரு சின்ன பிரச்சினை ! கொழுந்தியாள் ஆரம்பித்தாள்.

என்ன சொல்லித் தொலை ! உங்கப்பன குழி வெட்டி மூடணுமா ?

அதெல்லாம் ஒண்ணுமில்லை... எனக்கும் ஒம்ம தம்பிக்கும் ஒரு சின்ன பிரச்சினை. நா அவன டைவர்ஸ் பண்ணப் போறேன்.
எனக்கு திக்கென்றது. என்னடி சொல்லுக ?

ஆமா அத்தான்! நாஞ் சொல்லுறத ஒண்ணையும் கேக்க மாட்டேக்கான். அதான் அவன்கிட்ட சண்ட போட்டுட்டு வந்துட்டேன்.

எனக்கு சிரிப்பு வந்தது. அவள் எனக்கு ஒரு தூரத்து உறவு மாமன்மகள். சிறுவயதிலிருந்தே அன்பாய் இருப்பவள். அவளோடு கூடப் பிறந்தவர்கள் மூன்று பேர். ஒரு அக்கா, ஒரு தங்கை, ஒரு தம்பி. மாமா வெளிநாட்டில் வேலை செய்தவர். அத்தை ஒரு அடங்காப்பிடாரி. அக்காவுக்கு திருமணம் முடிந்து வளைகுடாவில் செட்டில் ஆகிவிட்டாள். தங்கையும், தம்பியும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். கொளுந்தியாளின் கணவன்தான் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறான்.

கொளுந்தியாரைத் திருமணம் செய்திருப்பவன் எனக்கு ஒரு தம்பி முறைதான். அவனுக்கு அப்பா கிடையாது. இரண்டு சகோதரிகள். கஷ்டப்பட்டுப் படித்து, லண்டனில் வேலைக்குப் போய், இரண்டு தங்கைகளுக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்டு, மூன்றாவதாக திருமணம் செய்தவன். கொளுந்தியார் படித்திருந்தாலும் கூட அவளை வேலைக்கு விடாமல் லண்டனுக்குக் கூட்டிப் போய் வாழ்ந்து வருகிறான். சொந்தமாய் இப்போதுதான் ஒரு வீட்டைக் கட்டி, தன் தாயை அந்த வீட்டில் அமர்த்தியிருக்கிறான். அவனது அம்மாவும் பாவம், நல்ல மனதுடைய பெண்மணி.

இப்போது என்ன பிரச்சினை என்றால், அந்த வீட்டை இவளது பெயருக்கு மாற்றிக் கொடுக்க வேண்டுமாம். அவன், அந்த வீடு நமக்குத்தான்... எங்க அம்மா உயிரோடு இருக்குற வரைக்கும் வீடு என் அம்மாவுக்கே சொந்தம் என்று வாதாடியிருக்கிறான். இவள் அவனிடம் ஓயாமல் சண்டை போட்டதில் அவன் இங்கு துரத்தி விட்டிருக்கிறான்.

கொளுந்தியாளின் தாய்மாமன் ஒரு உருப்படாத நாய். அந்த நாய்தான் இவளுக்கு இந்த விபரீத ஐடியாவைக் கொடுத்திருக்கிறது. மேலும் இப்போது இந்திய சட்டத்தில், வரதட்சணைக் கொடுமை என்று வாய்திறந்தாலே மணமகன் வீட்டிலுள்ள ஆட்டுக்குட்டி முதற்கொண்டு ஜெயிலுக்குப் போய்விடும் அபாயம் இருப்பதை இவர்களுக்கு சாதகமாகப் பிரயோகிக்க ஆயத்தப் பட்டிருக்கிறார்கள்.
நான் உடனே வாட்சாப்பில் அவனை தகவல் கொடுத்து அழைக்கச் சொன்னேன். அவன் மறுபடி என்னை அழைத்து கதறி விட்டான்.

நா அவள எப்படி வச்சிருந்தேன்னு யாருக்குமே தெரியாதுணே ! லண்டன்ல எவ்ளோ செலவாகும்னு உங்களுக்குத் தெரியும்தானே ? இப்போ கூட அவ இல்லாம வீடு வெறிச்சோடிக் கெடக்கு அண்ணே ! இவதான் இப்படின்னா இவ அம்மா வேற ஃபோனப் போட்டு சொல்லத் தகாத வார்த்தைகளால என்னோட அம்மாவைத் திட்டுதுண்ணே ! உங்களுக்குத் தெரியும்லாண்ணே ! எங்க அம்மா ஒவ்வொரு வீடா பாத்திரம் தேய்ச்சிதாம்ணே எங்க மூணு பேரையும் வளத்துச்சி ! அது ஒருவேளை நிம்மதியா சாப்ட்டு கூட நாங்க பாத்ததில்லண்ணே.... அந்த வீடு யாருக்குணே ? இவளுக்கும் தானே ? இவ பேருல வீட்ட நா எழுதிக் குடுத்துருவேன் ...எங்க அம்மா என்னண்ணே நினைக்கும் ? நீங்களே சொல்லுங்கண்ணே ? போவும்போது எங்கம்மா அந்த வீட்ட எடுத்துட்டா போகப் போவுது ? இவளுக்கு யாம்ணே இது புரியலை ? அழுது கொண்டே ஃபோனை வைத்தான்.

எனக்குக் கண்ணீர் தேங்கி விட்டது. ஃபோனைக் கட் பண்ணி விட்டேன். கொளுந்தியாளின் அம்மாவையும், தாய்மாமனையும் அழைத்தேன். என் அத்தைக்கு என்னைக் கண்டால் கொஞ்சம் பயம். சின்ன வயதில் ஒருநாள் என்னை ஏதோ சொன்னாள் என்று சொல்லி பித்தளை சொம்பை எடுத்து அவளது மண்டையில் எறிந்து விட்டேன்.

அவள், அவளது அம்மா, அவளது மாமன் என மூன்று பேரும் என் முன்பாக அமர்ந்திருந்தார்கள். மாமன் மட்டையாகி இருந்தான்.

நான் அவளது மாமாவிடம் கேட்டேன்.

இது எங்கள் குடும்ப விவகாரம்! நீ தலையிடாதே! என்று நீங்கள் யாராவது ஒருவர் பேசுவீர்களானால் நான் என்னுடைய தம்பியின் இடத்தில் இருந்து பேச வேண்டியிருக்கும். ஜாக்கிரதையாக பதில் சொல்ல கடமைப் பட்டிருக்கிறீர்கள்.

உங்களுடைய சொந்த அக்காளின் மகள் இவள். உங்களுடைய அத்தான் நாளைக்கே செத்துப் போனான்’னா உங்களுடைய அக்காவையே உங்கள் வீட்டில் உங்களால் சேர்த்துக் கொள்ள முடியாது என்னும் போது நீங்கள் இந்த யோசனையை உங்களுடைய அக்காவின் மகளுக்கு சொன்னது என்ன நியாயம் ? ( செத்துப் போவாம்’னு சொன்னவுடனே மூலையில் கிடந்த மாமனின் கண்கள் உருளத் துவங்கியிருந்தது )

நீங்கள் பெற்ற மகளாய் இருந்திருந்தால் இந்த முடிவைத்தான் அவளை எடுக்கச் சொல்வீர்கள் என்றால் நீங்கள் ஒரு நல்ல தகப்பனும் கிடையாது, மனிதனும் கிடையாது.

நாளைக்கே இவளுக்கு டைவர்ஸ் ஆனால் நீங்கள் இவளது எதிர்காலத்துக்காக என்னென்ன செய்வீர்கள் என்று ஒரு பட்டியலைத் தயார் செய்து இவளிடம் கொடுங்கள். மேலும் இரண்டு பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து நீங்கள் படிக்க வைப்பீர்களா ?
அவன் பதிலே சொல்லவில்லை.

நான் அவளது அம்மாவிடம் கேட்டேன். நீங்கள் இன்னும் எத்தனை வருடங்கள் உயிரோடு இருப்பீர்கள்? நாளைக்கே செத்துப் போனால் இவளின் நிலைமை என்னவாகும் ? என்று கேட்டேன். ( மூலையில் கிடந்த மாமனின் பாடி சிரிப்பில் குலுங்கியது )

அவளும் பதிலே சொல்லவில்லை.

இப்படி ஒரு முட்டாளைப் பெற்று அந்த பாவப்பட்ட பையனுக்குக் கட்டிக் குடுத்து அந்தப் பையனை அழ வச்சிட்டீங்களே ? நாளைக்கு உங்களது மகனின் மனைவி இந்த வேலையைச் செய்தால் அவளை நீங்கள் என்ன செய்வீர்கள் ? மகளைக் கட்டிக் கொடுப்பதோடு நின்று கொள்ளுங்கள். அவளது படுக்கையறையில் சென்று படுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். ஒரு நொடியில் முடிந்து போவதுதான் வாழ்க்கை. நீங்கள் வாழாவிட்டாலும் உங்கள் பிள்ளைகளை வாழ விடுங்கள். இதையும் மீறி அந்தப் பையனை நீங்கள் இம்சித்தால் , என்னை உங்கள் முதன்மை எதிரியாக காவல் நிலையத்திலும், நீதிமன்றத்திலும் காண்பீர்கள். உங்கள் யாரையும் சும்மா விட மாட்டேன்! என்று சொல்லிவிட்டு எழுந்து நின்றேன்.

மூலையில் கிடந்த மாமன் என்னிடம், ஒழு காப்பியாது குழிச்சிட்டு போடே மக்கழே ( காப்பி குடிக்கணுமாம் )

நீரு என்னிக்கி ஆம்பளையா எழுந்து நிக்கீறோ அன்னிக்கி காப்பி என்ன ? நீரு வெசத்த குடுத்தாலும் குடிக்கிறேன்! என்று சொல்லி விட்டு வெளியே வந்தேன்.

மாமன்கள் மண்டையன்களாய் இருப்பது அத்தைகளால்தான் என்பது நிரூபணமானது.

கொழுந்தியார் என்னிடம், அத்தான் ஒங்களுக்கு வாங்கிட்டு வந்த திங்க்ஸ்....?

நான் அவளிடம் மறுத்து , இப்போதைக்கு உங்கையால எத வாங்குனாலும் எனக்குப் பாவம் புடிக்கும். எனக்கு தண்ணீலதான் நீச்சல் அடிக்கத் தெரியல ! உனக்கு தரையிலயே நீச்சலடிக்கத் தெரியில ! வாழ்க்கைய தொலைக்கிறதுக்கு திரியிற ! உங்க அப்பன் சதாகாலமும் தண்ணியில வாழுற ஜீவன்... அவனுக்குத் தரையில வாழுறவங்களப் பத்திக் கவலை கிடையாது. அதனாலதான் உங்கம்மையும் படம் எடுத்து ஆடுறா ! டைவர்ஸ்னா சும்மா நிசாரம்னு நினைச்சியா ?

உன்னோட நிலைமைதான் ஆபத்துல இருக்கு ! பாத்து பத்திரமா நடந்துக்கோ ! பெண் பாவம் பொல்லாததுன்னா , ஆண் பாவம் அத விடப் பொல்லாதது ! எல்லாரும் நம்மள மாதிரிதான்... எல்லாத்துக்கும் ஒரு நியாயம் இருக்கும்... நாளைக்கு உன் தம்பிக்காரனுக்கு கல்யாணமாகி உன்னோட நாத்தனார் இந்த வீட்டை அவ பேருக்கு எழுதிக் கேட்டா நீ குடுப்பியா ?

மனுஷங்கள மனுஷங்களா மதிக்கலைன்னா உயிர் வாழுறதுல அர்த்தமே இல்லை... பாத்தியா! உங்கம்மாக்கு அம்பத்தி அஞ்சி வயசாச்சி ! உங்க அப்பங் கூடத்தானே இருக்கா ? உங்கப்பன விட்டா அவளுக்கு வேற போக்கிடம் இல்லைன்னு அவளுக்குத் தெரியும்... நீ கேவலம் ஒரு வீட்டுக்காக டைவர்ஸ் வேணும்னு கேக்கிறியே வெக்கமா இல்ல ? அவன வுட்டுட்டீன்னா தெருவுல எறங்கி பிச்சைதான் எடுக்கணும் ! மரியாதையா லண்டனுக்கு கெளம்பி போ ! புத்தியா பொழைச்சிக்கோ ! ஓம்மாமன் ஒரு வெளங்காத பன்னாட நாயி ! அவன வீட்டு நடையில ஏத்தாதீங்க ! என்று சொல்லி அவளைப் பார்த்தேன்.

கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்தாள்.

கிளம்பினேன். என்றுமில்லாமல் அன்று வெயில் உக்கிரமாக இருந்தது.

மாமன்கள் நல்லவர்கள்தான். அவர்கள் அன்பு செலுத்த வேண்டுமானால் அத்தைகளின் ஒத்துழைப்பு மிக முக்கியம். உயிரைக் காப்பாற்றும் மாமன்களும் உண்டு ! குடும்பத்தைக் குலைத்துப் போடும் மாமன்களும் உண்டு, ஆனாலும் அவர்களின் செயல்களில் அத்தைகளின் பங்கீடுதான் வேறுபடும். ஏனெனில் மாமன்மார்கள் மண்டன்மார்கள்!

- பிரபு தர்மராஜ்

0 Comments

Write A Comment