Tamil Sanjikai

மொய்தீயாப்பா! இந்த கதய கொஞ்சோல செவி குடுத்துக் கேளுமா!

சொல்லு ஐதுரூசு மோன...

நாங்'கப்பல்ல இருந்தாக்குல ஒரு காரியஞ் சொல்லீருக்கே... ஓர்ம இருக்குவா?

தொண்ணுறாமத்த வயிசு நடக்கு... நானே உடுத்த துணி ஓர்மயில்லாம கெடக்கேன்... உம்மா செத்தாக்குல கூடவே நானும் மையத்தாயிருந்தம்னா இன்ன நாளு பத்தாமத்த ஆண்டு தெவச்சிருக்கலாமாயிருந்து... அல்லா!!!

இறைவன் எடுக்கும்போது போய்த்தானே ஆவணும் வாப்பா! இங்கன கெடந்து சடஞ்சி மாயாங்க மொய்தியாப்பா! நல்ல ரசமாயிட்டி ஒரு கத இரிக்கி... செத்த காத குடுங்கோ...

சொல்லு மக்கழே!

எம்பத்தொம்பதுல இப்டித்தான் ஒருநா வெள்ளன... பசிபிக் கடலுல போய்ட்டிருந்தோ...

வள்ளத்துலயா மோன?

செல்லியத கேளுங்கோ வாப்பா! பெரிய மெர்ச்சன் நேவி கப்பலுல... எண்ண கொண்டுட்டு சிங்கப்பூரு போனோம்...

யாம்மக்கா இந்த சிங்கப்பூருல எண்ண கெடச்சாதோ... அதான் இந்த சீனாக்காரப் பெயலுவ தலையெல்லாம் பரட்ட மாதிரி இரிக்கி.... இல்லியா மோன...?

எடைல பேசாத வாப்பா! எண்ணையின்னா நம்ம வீவீடி எண்ண கெடையாது... கச்சா எண்ண... அதுல இருந்துதா பெட்ரோலு, மத்தது, மறச்சது எல்லாம் எடுக்கியாங்கோ!

நீ சொல்லு மோன... கத நல்ல ரெசமா இரிக்கி...

ஆங்... எங்க வுட்டேன்...

மத்தது, மறச்சது......

அந்தாக்குல... அந்தாத் தண்டி கப்பலு... நீந்திப் போயிட்டேயிருந்தாக்குல... நல்ல கடலடி இருந்து... கப்பலு லெம்பிலெம்பிப் போகு... நா மேல டெக்குல வந்து ஒரு சுருட்டப் பத்த வச்சேங் கேட்டியளா?

எல தா...ளிமோன நீ சுருட்டெல்லாம் வலிப்பேல்லியாடே!

அது அப்பம் வாப்பா... இப்ப வுட்டுட்டம்லா? அந்தால கதயக் கேளும் வாப்பா... கடல்ல தூரத்துல ஒரு வெளிச்சம்... புகுபுகுன்னி எரியி...

எவனாது கரையில மீனு சுட்டு தின்னிருப்பான் ... இல்லியா மோன....

குறுக்க பூராம பூரா கதயயுஞ் சொல்ல வுடாம் மொய்துட்டி இபிலீசு...

சொல்லு மோன... நா இனி அனக்கங் காட்டேயில...

வெளிச்சந்தெரிஞ்ச எடத்த கூர்ந்து பாத்தே... என்னானு பாத்தா ஏதேந்தோட்டம்... வெளீல கேரூபின்கள் எல்லாருஞ் சேந்து ரெண்டு கையிலயும் வீசிக் கொண்டிருக்கும் சுடரொளிப் பட்டயத்த ஏந்திக் கிட்டு நின்னுகிட்டிரிந்தாங்கோ... அந்தப் பக்கத்துல மனுச நடமாட்டமே இருக்கியாதாம்... கிட்டப் போனா பொசுங்கிச் சாவதுக்குத்தான் இந்த ஏற்பாடு...

நல்ல ருசியான கததான்... சொல்லு கேக்கட்டு...

இந்த பெர்முடா முக்கோணந் தெரிமா வாப்பா!

இந்த குடும்பக் கட்டுப்பாடு முக்கோணந்தாந்தான் தெரியும்... அதுகூட அம்பது வருசத்துக்கு முன்னால தெரிஞ்சிருந்தா ஒனக்க ஹலிமா லாத்தாவோட நிறுத்திருப்பேன்... இந்தச் செத்த கதையள கேக்க வேண்டிய நெலம வந்துருக்காது...

நீங்க என்னய நம்பலியா வாப்பா?

நீ சொல்லு மோன... நல்ல ரசமாயிட்டுண்டுல்லா...

அந்தாக்குல வாப்பா... நா எனக்க கேப்டன விளிச்சி வருத்தி அத காணிச்சேன்...

கப்பல்லேர்ந்து ஒன்னய எறக்கி வுட்டுருப்பானே?

இல்லல்லா.... வந்து பாத்துட்டு வாயப் பொளந்துட்டான்... நாந்தா அவங்கிட்ட பூரா கதையையுஞ் சொன்னே...

அதுக்கு என்ன சொன்னான் மோன?

'இட்ஸ் இண்ட்ரஸ்டிங்'னு சொன்னான்...

அவெ எந்தூருக்காரன் மோன.... கிறிஸ்டியானியா...?

அவன் அமரிக்காக் காரன்... கிறிஸ்டீனு!

பாத்தியா நீ சொன்ன கத அவனுக்கே ரசமாயிருந்துருக்கு... அப்புறம் என்னாச்சி?

அதுக்கப்புறந்தான் நா கப்பல வுட்டுட்டு வந்துட்டம்லா...

அட மண்டப்பெயலே... இன்னுங் கொஞ்ச நாளு கப்பல்ல இருந்திருந்தீன்னா... இந்த நேதாஜி சுபாசு சந்தர போச கண்டுபுடிச்சிருக்கலாம்லா மோன...

ஐதுரூஸ் எழுந்து திருவிதாங்கூர் ஜங்சனுக்கு டீ குடிக்க வந்தார்.

-பிரபு தர்மராஜ்

0 Comments

Write A Comment