Tamil Sanjikai

Photo Courtesy: Wallpapers Wide

நடுநிசியில் அவன் ஊருக்குள் செல்லும் பொது அவனுக்கே பல இடங்கள் அடையாளம் தெரியாமலிருந்தது. சொந்த ஊரையே அடையாளம் தெரியாத அளவிற்கு, ஊருக்குள் “எத்தனை மாற்றங்கள்”. ஊர் குளத்தருகே இருந்த வேப்பமரம் முறிக்கப்பட்டு, புதிதாய் ஒரு பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டிருந்தது. “டீக்கடை” வேலாயுதம் அண்ணன் தனது கடைக்கு மரப்பலகை கதவை மாற்றி, கிரில் கதவு போட்டிருந்தான். ஒட்டுப்புரை கட்டிடங்களாய் இருந்த ஊர் பள்ளிக்கூடம், மேக் அப் செய்த சினிமா நடிகை போன்று வண்ணங்கள் அடித்த கான்க்ரீட் கட்டிடங்களாய் மாறியிருந்தது. ஊர்கோவில் கோபுரச்சிலைகள் பெயிண்ட் வண்ணங்களோடு ஜொலிக்கிறது. “கும்பாபிஷேகம்” கழிந்திருக்கலாம். அவன் வீட்டு தெருவிலும், இரண்டு மூன்று ஓட்டு வீடுகள், கான்கிரிட் வீடுகளாக பதவி உயர்வு அடைந்திருந்தது. அவன் வீட்டை ஒட்டி இருந்த சாக்கடை முழுதும், சிமெண்ட் சிலாப்புகளால் மூடப்பட்டிருந்தது. இதற்காக எத்தனை முறை பஞ்சாயத்து தலைவரிடம் மனு கொடுத்திருப்போம் என எண்ணினான் அவன். எப்படியோ வேலை நடந்து விட்டது என சமாதானமும் அடைந்தான். வெளிநாட்டில் அடிமை வேலைபார்த்து, சில ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்குள் வரும் “அயல்வாசியின்” மன நிலைமையிலிருந்தான் அவன்.

ஊரைவிட்டு போய் ஒரு இரண்டரை வருடங்கள் இருக்குமா? ஆமாம். சரியாக கணக்கு பார்த்தல் ஊரைவிட்டு, இந்த உலகத்தை விட்டு போய் இரண்டு வருடம், ஏழு மாதங்கள் ஆகிறது. காஷ்மீரில் குண்டடி பட்டு, இறந்ததில் தொடங்கி, ராணுவ துப்பாக்கிகள் முழங்க, தேசியக் கொடி போர்த்தி மரியாதை செய்ததது, மனைவிக்கும் மகனுக்கும் “பரம்வீர் சக்கரா” பதக்கங்கள் கொடுத்து கௌரவித்தது, சவமாய் பெட்டிக்குள் விழுந்து, ஹெலிகாப்டரில் பறந்து, சொந்த ஊரில் சொந்த பந்தங்கள் உட்பட பலபேர் அழுகைக்கு நடுவில் சிதையில் எரிந்து சாம்பலானது -என எல்லாம் அவன் நினைவுக்கு வந்தது. மிலிட்டரிகாரனின் வாழ்க்கை இப்படித்தான். “வீரமரணம்”-னா சும்மாவா? “நாட்டுக்காக உயிரையும் கொடுப்பேன்னு” – எல்லாரும் சொல்லலாம். ஆனால் உண்மையிலேயே உயிரை கொடுத்து வீரமரணம் எய்துவது எவ்வளவு பெரிய விஷயம். அந்த பாக்கியம் அவனுக்கு கிடைத்திருந்தது. இறந்து விண்ணுலகம் சென்ற அவன், எமனிடம் ஸ்பெஷல் அனுமதி பெற்று, குடும்பம், சுற்றத்தாரை காணும் ஆவலில், இரண்டரை ஆண்டுகள் கழித்து, இந்த பின்னிரவின் மூன்றாம் ஜாமத்தில் சொந்த ஊரை அடைந்திருந்தான்.

மனித உடலை கடந்த “ஆத்மா”வாகையால், பூட்டியிருந்த தன் வீட்டுக் கதவை தாண்டி அவனால் உள்ளே வர முடிந்தது. ஆவியாக இருந்தாலும் அவன் வீட்டுக்குள் வரும் போதெல்லாம் உணரும் “அந்த வீட்டின் வாசத்தை” அவனால் உணர முடிந்தது. இதுவரை மாற்றியிராத அம்மா, அப்பாவின் செருப்புகள், மனைவின் செருப்புகள், அளவில் சிறிய மகனின் செருப்புகளை பார்த்ததும் கண்ணீர் முட்டியது. தான் உபயோகித்த செருப்புகளும், ஷுக்களும் எங்கே? என்று நினைத்தான். வெளியே எறிந்திருப்பார்கள் அல்லது யாருக்காவது பயன்படுத்த கொடுத்திருப்பார்கள். இறந்தவர்கள் பயன்படுத்திய உடைமைகளை வெளியே எறிவதுதானே “மரபு” என்றெண்ணி சமாதானம் அடைந்து கொண்டான்.

உருட்டி வைத்த “நீளமான சாக்கு மூட்டையைப்”- போல், முன்புற ஹாலிலிருந்த இரட்டை பெஞ்சில் கம்பளிப் போர்வைக்குள் அப்பா தூங்கிக் கொண்டிருந்தார். ஆழ்ந்த தூக்கத்திற்கு அடையாளமாய் நிதானமான “குறட்டை” சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. கிழே பாயில் ஒருக்களித்து படுத்து அம்மா தூங்கிக் கொண்டிருந்தாள். ஆவியாக இருந்தாலும் மனிதன் தானே. பாச உணர்வு இருக்காதா, என்ன? உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பரிதவிப்புடன் இருந்தான் அவன். முன்புற ஹாலில் எந்த மாற்றமும் இல்லை. தோற்றம், மறைவு தேதிகளுடன், சந்தன மாலை தொங்க, இராணுவ சீருடையுடன் கூடிய அவன் போட்டோ மட்டும் புதியதாய் இருந்தது. கண்ணாடித் தொட்டிக்குள் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும், இவன் வாங்கி விட்ட “மீன் தொட்டிமீன்கள்” முன்பை விட வளர்ந்திருந்தது.

அத்தனையும் கனத்த மனதுடன் கடந்து, படுக்கை அறைக்குள் நுழைந்தான். மனைவியையும், மகளையும் காணப் போகும் உணர்ச்சி துடிப்பை அவனால் அடக்க முடியவில்லை. சதையில்லா, எலும்பில்லா “ஆவிஉடம்பு” பாசப்பிணைப்பால் பரிதவித்தது. கட்டிலில் வாடிய பூப்பந்தாய் உறங்கிக் கிடந்த மனைவி மிருளாயிணியையும், அவள் மீது காலிட்டு படுத்திருக்கும் மகன் பத்மனையும் கண்டான். இரண்டரை வருடத்தில் இவர்களுக்குள் எத்தனை மாற்றங்கள்.

மிருளாயிணியை “மிரு” என்றே அழைப்பான் அவன். கொஞ்சமாய் குண்டாகியிருந்தாள். முடி அங்கும் இங்கும் கலைந்திருக்க, பொட்டில்லாத நெற்றி, பாலைவன நிலம் போல பரந்திருந்தது. “மிரு”வுக்கு அழகே அவள் சிரிப்புதான். அவள் சிரிக்கும் போதெல்லாம், “ஆயுள் முழுவதும் அதில் விழுந்து கிடக்கலாம்” -என்ற அளவிற்கு, பென்சில் நுனி வடிவில் கன்னத்தில் “ஒரு குழி” தோன்றும். கல்யாணமான நாள் தொட்டு, அதனை காண்பதற்காகவே அவளை ஏதாவது செய்து, சிரிக்க வைத்துக் கொண்டிருப்பான் அவன். எட்டு வருட திருமண வாழ்க்கையில், அவளோடு அன்பில் கலந்து, ரசித்து, சிரித்த பொழுதுகளை எண்ணிப் பார்த்தான். அவளோடு காஷ்மீரில் கழித்த ஒன்றரை வருட “புதுத் தம்பதிகள்” வாழ்க்கை, சுற்றித் திரிந்த இடங்கள், கட்டியணைத்த பொழுதுகள், முத்தமிட்ட விநாடிகள், “உடல் சுகம்” சுகித்த நிமிடங்கள், பெற்றோர் ஆன காலங்கள் என அனைத்தும் காட்சிகளாய், கண் முன்னே விரிந்தது. அற்ப ஆயுளில் இறந்த அவனை நினைத்து, அவனுக்கே பாவமாய் இருந்தது.

தன் அம்மா பத்மாவதியின் பெயரையே, மகனுக்கு “பத்மன்” என சூட்டியிருந்தான் அவன். தன் அச்சு அசலான முகச்சாயலுடன் மகன் பிறந்த நாளில் அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆசை மகன் “அப்பாவென” அழைத்த நாளில், ஆனந்த எல்லையின் வரைமுறையை தாண்டிய மகிழ்ச்சியிலிருந்தான் அவன். அத்தனையும் மொத்தமாக பொசுக்கிய ஆண்டவன் மீது கோபம் வந்தது. “எல்லாம் விதி” என்ற மேம்போக்கான எண்ணவோட்டத்திற்கு அவனால் வர இயலவில்லை. கைவிட்டுப் போன வாழ்க்கையை நினைத்து, கட்டுக்கடங்காத கவலையும், கண்ணீரும், வருத்தமும் நெஞ்சமெங்கும் எதிரொலித்தது. மனிதனாக இருந்தால் அழுது தீர்க்கலாம். ஆவியாக இருக்கும் “அவன்” என்ன செய்வான்? படுக்கையறையின் ஓரத்திலிருந்து துக்கம் மேலிட பொருமிக்கொண்டிருந்தான்.

சேவல் விசிலடிக்க, கதிரவன் லைட்டடிக்க பொழுது புலர்ந்தது. வழக்கம் போல் அப்பா முதலாய் எழுந்திருந்தார். சிறிது நேரத்தில் அம்மாவும் எழுந்து சமையலறைக்கு சென்றாள். ஆறரை மணி கடிகார ஆலார ஒலியில் மிருவும் எழுந்து சோம்பல் முறித்தாள். அவள் உடுத்தியிருந்த அரக்கு நிற நைட்டி அவனுக்கு புதியதாய் இருந்தது. அவனுக்கு அவளை அப்படியே சென்று கட்டியணைக்க வேண்டுமென்று இருந்தது. கணவன் மனைவியின், எவ்வளவு பெரிய குடும்ப சண்டையையும், “காலைநேர கட்டியணைப்பு” தீர்த்து விடும் -என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவன் அவன். அவர்களுக்குள் சண்டை ஏதும் இல்லாமல் இருந்தாலும், அவளோடு இருந்த நாட்களில் அவர்களுடைய “காலைநேர கட்டியணைப்பு” எந்நாளும் தவறாது. ஆனால் இன்று உணர்வோடு, உடம்பில்லாமல் வெதும்பி புழுங்குகிறான்.

வழக்கமான வீட்டு நிகழ்வுகள், அந்த வீட்டுக்குள்ளும் அடுத்தடுத்து அரங்கேற, நேரம் கடந்து போய் கொண்டிருந்தது. எல்லாவற்றையும் ஆர்வம் மேலிட கவனித்துக் கொண்டிருந்தான் அவன். அம்மா சமையலறை வேலைகளில் பரபரப்பாக இருந்தாள். அப்பா வேலைக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். மிரு குளித்து முடித்து, பத்மனை பள்ளிக்கு அனுப்ப தயார் செய்து கொண்டிருந்தாள். பத்மனின் ஆடை எடுக்கும் போது பிரோவுக்குள் கவனித்தான் அவன். அவன் உடைகள் ஏதும் இல்லை. அவன் விரும்பி படிக்கும் புத்தகங்களில் ஒட்டடை பிடித்திருந்தது. அலங்கார மேஜையில் அவன் பயன்படுத்தும் உருண்ட சுருள்முடிச் சீப்பு இல்லை. சுருக்கமாகச் சொன்னால் அந்த வீட்டில் அவன் இருந்ததிற்கான அடையாளமே அழிக்கப்பட்டிருந்தது. யாரும், எதற்காகவும் அவனை நினைத்துப் பார்த்ததாக தெரியவில்லை. செத்த ஆட்களை எந்நேரமுமா? நினைத்துக் கொண்டிருப்பார்கள். “இறந்தவர்கள் வரப்போவதில்லை” என்ற நியதியை உணர்ந்தவர்கள், போனவர்களை நினைத்துப் பார்க்க வேண்டுமென்பது கட்டாயமா? என்ன? இருந்தாலும் நான் இவர்கள் மீது எத்தனை பாசம் வைத்திருந்தேன்.

மிரு மீது,
பத்மன் மீது,
அம்மா மீது,
அப்பா மீது....

எத்தனை பாசம் வைத்திருந்தேன். எப்போதும் வேண்டாம். ஒரு சில வினாடிகளாவது என்னை நினைக்கலாமே- என்பது மாதிரியான எண்ணவோட்டத்திலிருந்தான் அவன். வருத்தமாக இருந்தது அவனுக்கு.

பத்மனை பள்ளிகூடத்தில் விட்டு விட்டு, அப்பா வேலைக்கு செல்வார் போலும். இருவரும் ஒன்றாக பைக்கில் கிளம்பினார்கள். அப்போதுதான் கவனித்தான், அவன் பைக்கில் முன்புறத்திலும், பின்புறத்திலும் எழுதியிருந்த “INDIAN ARMY” என்ற வாசகம் அழிக்கப்பட்டிருந்தது.

அவன் உயிரோடு இருந்த நாளில், கலவி முடிந்த ஒரு பொழுதில், படுக்கையில் மிருளாயினி உதிர்த்த வார்த்தைகள் அவன் நினைவுக்கு வந்தது.

“நீங்க இல்லன்னா... நான் செத்துருவேங்க”

ஏதோ ஒரு உணர்ச்சி பெருக்கில் அவள்தான் சொன்னாள்.

“நீங்க இல்லன்னா... நான் செத்துருவேங்க”

ஆனால் இப்போது அவள் முகத்தை மீண்டும் கவனித்தான். அம்மாவும் அவளும் உட்கார்ந்து ஏதோ ஒரு “டிவி சீரியல்” பார்த்துக் சிரித்துக் கொண்டிருந்தனர். பின்பு ஊர்க்கதைகளை பேசி, சமையலறை பணிகளை செய்து கொண்டிருந்தனர். அவன் மன உறுத்தலோடு, ஆவியாக அத்தனையும் கவனித்துக் கொண்டிருந்தான்.

சாயங்காலம் அப்பாவும், பத்மனும் வந்தார்கள். மிரு எல்லோருக்கும் காப்பி கொடுத்தாள்.

அம்மா பத்மனிடம் கொஞ்சினாள்.

“குட்டா... ஆச்சி.... உனக்கு என்ன செய்து வச்சிருக்கேன் சொல்லு”

பத்மன் ஆச்சர்யம் காட்டி, கண்களை உருட்டினான்.

“என்னது ஆச்சி... சொல்லு...சொல்லு.. என்று துள்ளிக் குதித்தான்.

மிரு அவனைப் பார்த்து சிறிதாக புன்னகை காட்டினாள்.

“அம்மா... நீயாவது சொல்லுமா... என்னதுமா? என்றான் பத்மன்.

அம்மா சமையலறைக்கு சென்று ஒரு பாத்திரம் நிறைய “பால் பணியாரம்” எடுத்து வந்தாள். பால் பணியாரத்தைப் பார்த்து ஆர்வத்தில் துள்ளிக் குதித்தான் பத்மன். அவன் அம்மாவின் பணியாரச் சுவை தெரிந்ததால், ஆவியாக இருந்த அவனுக்கும் நாக்கில் எச்சில் ஊறுவதுபோலிருந்தது.

பத்மன் குஷியாக,
பண்ணியாரம்...!
பண்ணியாரம்...!
பண்ணியாரம்...!
பண்ணியாரம்...!

-என்று ஆர்வதோடு சப்தமிட்டு, இரண்டு மூன்றை அள்ளி வாயினுள் திணித்தான்.

“லேய்.. மெதுவா தின்னுல... நாசில ஏறிராமே” என்று பதட்டப்பட்டார் அப்பா. அவரும் ஒன்றை எடுத்து தின்ன எண்ணினார்.

பத்மன் தின்னுவதைப் பார்த்து,

“அவ அப்பனும் இப்படித்தானே... பால் பண்ணியாரம்னா செத்துருவான்னு”- சொல்லி, வார்த்தை கமறி, கண் கலங்கினாள் அம்மா.

அப்பா தின்ன வாய் வரைக்கும் கொண்டு போனதை கிழே வைத்து விட்டார்.

அம்மா சொன்னதை கேட்டு முகம் மாறிய மிருளாயினி, கண்கலங்கி சட்டென்று படுக்கையறைக்கு ஓடினாள். யாருக்கும் தெரியாமல், அவள் கைப்பட தைத்த, அவன் அழுக்கு சட்டைகளால் செய்யப்பட்ட “தலையணையில்” முகம் புதைத்து, அழுதாள்.

பத்மன் சாப்பிட்டது போக “மீதிப் பணியாரங்கள்” அப்படியே கிடந்தது.

ஆவியாகிய “அவனுக்கு” அங்கு நிற்கவே பிடிக்க வில்லை.

-தெரிசை சிவா

0 Comments

Write A Comment