Tamil Sanjikai

சொரிமுத்து பாட்டாவிற்கு நடு முதுகு “குறு குறுவென” அரித்தது. அரசமர மூட்டில் இருந்து “வாய்”ப்பார்த்துக் கொண்டிருந்தவருக்கு தீடிரென இந்த அரிப்பு வந்து விட்டது. தோளில் கிடந்த குத்தாலந்துண்டை எடுத்து, இரு கைகளால் முறுக்கி, பின் புறமாய் முதுகில் வைத்து தேய்த்துப் பார்த்தார். அழுக்கு தேய்க்காத கருப்பு முதுகில், துண்டால் சொரிந்ததால் வெள்ளை கோடுகள் ஏற்பட்டதேயன்றி, அரிப்பு குறைந்த பாடில்லை. அரிப்பின் குறுகுறுப்பில் நெளிந்தார். சட்டை போடாத உடம்பை அப்படியே சாய்த்து, மரத்தோடு மரமாய் பொருத்தி, தஞ்சாவூர் பொம்மை ஆடுவதைப் போல் தேய்த்துப் பார்த்தார். கொஞ்சம் தேவலாம் போல இருந்தது. இருந்தாலும் முதுகு தண்டு ஓடையில் அரிப்பு இருந்து கொண்டே இருந்தது. கூடவே எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன மனைவி சிவகாமியின் ஞாபகமும் வந்தது. மனைவி முதுகு சொரிந்த போது உடலில் ஏற்பட்டச் சுகமும், புல்லரிப்பும் மூளை பதிவேட்டிலிருந்து ஒருசேர வெளிப்பட்டது.

முதுகுச் சொரிய மனைவி இல்லையேன்னு சிறிதாக வருத்தப்பட்டார். நீளமான விரல்களில், கூர்மையான நகமுடைய எந்த பெண்ணாவது வந்து “நறுக், நறுக்”-கென்று என்று சொரிய மாட்டார்களாவென எண்ணித் திளைத்தார். ஏதோ யோசனையில் அப்படியேத் திரும்பிப் பார்த்தார் சொரிமுத்துப்பாட்டா. அரமரத்தடியில் அம்போவென இருந்தது “பிள்ளையார் சிலை”. அது எழுந்து வந்து முதுகைச் சொரிந்து விடுமா-வென யோசித்தார். பின்பு வைத்தக் கண் வாங்காமல் பிள்ளையார் சிலையைப் பார்த்துக் கொண்டே பேசினார்.

“எப்படியாங்கும் இதுல, இருந்த இருப்பிலேயே... இருக்கேரு... மனுஷனுக்கு முதுகு கடி உயிரு போகு” – என்று கூறிச் சலித்துக் கொண்டார்.

பிள்ளையார் எதுவும் பேசவில்லை. சொரிமுத்து பாட்டாவிடம் பேசி ஜெயிப்பது இயலாத காரியமென்பது, பிள்ளையாருக்கும் தெரியும். எனவே எப்போதும் போல் இடது கையில் உள்ள மோதக மணத்தை உறிஞ்சிக்கொண்டே, கண்ணை மூடிக்கொண்டு தியானத்திலேயே இருந்தார் பிள்ளையார். முதுகு அரிப்பு மீண்டும் முதுகெங்கும் தலையெடுக்க, மரத்தின் தடித்தப் பொருக்குகளை குறிபார்த்து, மீண்டும் தஞ்சாவூர் பொம்மையானார் சொரிமுத்துப்பாட்டா.

சித்திரை மாத கோடை மழையை எதிர்பார்த்துக் காத்திருந்தது மொத்த நிலமும். அரச மரம் பழைய இலைகளை உதிர்த்து, புத்தாடையென, சிவப்பும் பச்சையும் கலந்த இலைகளால் நிரம்பப்பட்டிருந்தது. காய்ந்த இலைகளும், அரச மரப்பழங்களும் அவ்விடமெங்கும் நிரம்பிக்கிடந்தன. நடையில் “நடனம்” காட்டும் “கடுத்துவா” எறும்புகள், மரமெங்கும் அணி அணியாய் ஓடிக்கொண்டிருந்தது. வயல்களில் காய்ந்த “தாள்” பொறுக்கும் பணியும், சில வயல்களில் “உளுந்து பறிப்பும்” நடந்துக் கொண்டிருந்தது. பழையாற்றில் நீர் வற்றி இருந்தது. முங்கி குளிக்க ஆசைப்பட்டு, ஆற்றுக்கு சென்றவர்கள், தண்ணீர் இல்லாதால் “உருண்டு குளித்து” மனதை தேற்றிக் கொண்டனர்.

காற்றில் வெக்கையின் அளவு சற்றுக் கூடுதலாக இருந்தது. ரோடுகளின் காட்சி விளிம்பில் “கானல் நீர்” தோன்றி, அருகே செல்லும் போது மறைந்தது. வெயில் தாக்கம் கூடிய, முன்பகல் மற்றும் மத்தியான நேரங்களில், உப்பு போட்ட “பழஞ்சி தண்ணீர்” அல்லது இஞ்சியும், பச்சை மிளகும், உப்பும் இடித்து போட்ட “தண்ணிமோர்” குடிப்பது தொண்டைகளுக்கு தேவாமிர்த சுகானுபவத்தை தந்தது. இம்மாதியான மாதங்களில் கிராமத்து மனிதர்களுக்கு வேலைக் குறைவென்பதால், வெட்டிப் பேச்சுப் பேச “அரசமரமூடு” ஆகச் சிறந்த இடமாக இருந்தது. வெயில் தாழ்ந்ததும், மதியம் மூன்று, நாலு மணிக்கு கூடும் கூட்டம் இரவு பத்து பதினோரு மணிவரைத் தொடரும்.

பேச்சுக்களின் சாராம்சத்தை உற்று நோக்கினால், பெரும்பாலும் கிண்டல் பேச்சுக்கள். அரசியல் ஆவேசங்கள், வரைமுறைத் தாண்டிய காமத் தமாசுகள், நடிகர்களின் ரசிகர் சண்டைகள், நடிகைகளின் மாரளவு, தொடையளவு சர்ச்சைகள், இளவட்டங்களின் காதல் தொடர்ச்சிகள், கட்டில் பணிச் சிறப்பதற்கான கருத்துருவங்கள், திருவிழாத் திட்டமிடல்கள், புது மாப்பிளை செய்ய வேண்டுமெனச் சொல்லப்படும் அந்தரங்க ஆலோசனைகள், ஊர் பெருசுகளின் சின்ன வீட்டுச் சமாச்சாரங்கள், இளமையின் இரவில் தான் செய்த மன்மதச் சாகசங்கள், வேசிக்கதைகள் - என இளமைக்கு தீனி போடும் அனைத்து விசயங்களும், அங்கு ஆர அமர விவாதிக்கப்படும்.

விவாதிக்கப்படும் நபர்கள் அல்லது அவரின் உறவினர்கள் இருக்கும் போது, இலைமறைக் காயாய் அத்தனையும் அலசப்படும். அரச மூட்டில் ஆள்கூட்டம் இல்லையென்றால், ஆட்கள், ஆற்றுக்குக் குளிக்கப் போயிருப்பதாய் அல்லது வீட்டிற்குச் சாப்பிடப் போயிருப்பதாய் அர்த்தம். பின்பு ஒவ்வொருவாராய் மீண்டும் கூடிப் பேச்சுக்கள் தொடரும். அத்தனை அபத்தங்களையும் கேட்டுக் கொண்டும், மனதிற்குள் சிரித்துக் கொண்டும், மோதக வாசனையில் ஊர் மக்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருந்தார் அரசடி வெற்றி விநாயகர்...

துட்டி வீடு

பெரும்பாலான நேரங்களில், மொத்தக் கூட்டத்திற்கும் நடு, நாயகமாய் அமர்ந்து கதையளந்துக் கொண்டிருப்பது சொரிமுத்துப்பாட்டாத்தான். ஊர்க்கோவிலில் குடும்பச் சகிதமாய் கொலுவீற்றிருக்கும் ராகவேஸ்வரர் உடனுறை உலகநாயகியை விட, ரோட்டோரத்தில் தனியாக அமர்ந்திருக்கும் அரசமரத்தடி வெற்றி விநாயகர் மீது அளவற்றப் "பக்தி" கொண்டவர். என்று சொல்வதை விட ஒரு மாதிரியான "அதிகார அன்பு” கொண்டவர்.

அறுபத்திரெண்டு வயது வைரம் பாய்ந்த கட்டை. கருப்பட்டி நிற உடம்பெங்கும், வெள்ளிக் கம்பியென நரைத்த முடிகள். இரத்தம் குடித்த மாட்டுண்ணிப் போன்ற மார்புக் காம்புகள். நெடு நெடுவென உயரமும், ஒட்ட வெட்டிய முடியும், பூனைக் கண்ணுமாய் ஒரு கிழவனுக்குரிய அனைத்து அத்யாவசியங்களுடன், கூட்டத்தின் நடுவில் அம்சமாய் அமர்ந்திருப்பார் சொரிமுத்துப்பாட்டா.

பேச்சு சாதுர்யத்தின் உச்சம், அவர் வார்த்தை எங்கும் வெளிப்படும். எப்பேர் பட்ட ஊச்சாளியையும் பேச்சில் மடக்கி விடுவார். அரசமூட்டில் சிரிப்பு சத்தம் கூடுகிறது என்றால், சொரிமுத்துப்பாட்டா அங்கிருப்பதாக அர்த்தம். அன்று அப்படித்தான்.. கூட்டத்திற்கு நடுவே பம்பாயில் வேலை பார்க்கும் “மாதேயும் பிள்ள” என்ற மகாதேவன் பிள்ளை மாட்டிக் கொண்டான். மொத்த கூட்டமும் ஆவலாக இருக்க, நைசாகப் பேச்சுக் கொடுத்தார் சொரிமுத்துப்பாட்டா.

“மக்கா.. மாதேயும் பிள்ள.. என்னா... நேத்துதான் வந்தியா?” – நுனியில் புழுவைக் குத்தி தூண்டிலைப் போட்டார் சொரிமுத்துப்பாட்டா.

“ஆமா பாட்டா.. மூணு வாரம் லீவு.. அதான்..” - மாதேயும் பிள்ளை பதில் சொன்னான்.

“ஆளு... ஒரு கெதி இல்லையேடே.. உருகிட்டே போற.. என்ன விஷயம் பம்பாயில...

“அப்படியா பட்டா... என்ன செய்ய.. என்ன சாப்பிட்டாலும்.. உடம்பு ஏறவே மாட்டேங்குது...”

“வேற ஒரு ஒடம்ப பார்த்து.... ஏறுனா... இந்த உடம்பு ஏறிட்டு போகு... என்றார் சொரிமுத்துப்பாட்டா.

சட்டென்று மொத்த இளவட்டங்களும் சிரிக்க, சரியான அர்த்தம் புரியாமல் குழம்பினான் மகாதேவன் பிள்ளை.

பின்பு அவனின் மேலும் கீழும் பார்த்து “ஆளுதான் சல்லியா இருக்கான்..மத்தபடி ஆளை உருக்கி ஆயுதமா வச்சிருக்கான் டே” என்றார்.

இளவட்டங்கள் மேலும் பொங்கிச் சிரித்தது. சொரிமுத்துப்பாட்டா மேலும் தொடர்ந்தார்.

“அங்க.. எப்டி டே.... மத்ததுல்லாம்?”

“மத்ததுன்னா? – ஒரு மாதிரி ஆச்சர்யம் காட்டிப் பேசினான் மகாதேவன் பிள்ளை.

“அதான் டே... தெரியாத மாறி கேக்காத.. மத்ததுடே..” – என்று நமட்டுச் சிரிப்பு சிரித்தார்.

மகாதேவன் பிள்ளையும் சிரித்தான்.

“சொல்லுடே.. வெக்கப் படாத... நான் யான் உங்கப்பன்டயா சொல்ல போறேன்”.

“அதில்ல பாட்டா..”- ஏதேதோ சொல்லி சமாளிக்கப் பார்த்தான் மகாதேவன் பிள்ளை.

“யேய்.. சொல்லுடே..உங்க அப்பனுக்கு நான் கொடுத்த ஆலோசனையில பொறந்தவந்தான் நீ... சும்ம.... வெக்கப் படாம சொல்லு டே..” – சொரிமுத்துப்பாட்டா விடுவதாக இல்லை.

மகாதேவன் பிள்ளை வெக்கத்தோடு சொன்னான்.

“எல்லாம் உண்டு பாட்டா.. அதுக்குன்னு தனி இடமே உண்டு...”

“அது சரி.. நம்ம ஊர்ல மாடு சேக்கதுக்கு இடம் இருக்குல்லா.. அது மாறி…. மனுஷன் சேரதுக்கு...... கொள்ளாம்....... போயிருக்கியா நீ...”

“சீச்... சீ... இல்ல பாட்டா..நாம அங்கெல்லாம் போக மாட்டோம்...”

“அங்கெல்லாம் போக மாட்டோமுன்னா... இருக்க இடத்துக்கே பசுவு வந்திரும்மா?”

“சீச்.. சீ... இல்ல பாட்டா..”

“சும்ம... கதை அடிக்காதடேய்.. பசுல ஏறுன கிடாரிய, எங்களுக்குப் பார்த்தா தெரியாதுல்லா... சும்ம... சொல்லு டே..”

கடைசியில் தயங்கி தயங்கி சொன்னான் மகாதேவன் பிள்ளை.

“.......அது வந்து பக்கத்து வீட்ல ஒரு மார்வாடி அக்கா உண்டு...”

“மார்வாடி அக்காவாம்... நாசமா போச்சு... மயினின்னு சொல்லு டே... அக்காவாம்... “– சொரிமுத்துப்பாட்டா சிரிக்க, மொத்த கூட்டமும் கூடச் சிரித்தது.

“மயினிதான்... மயினிதான்.. மார்வாடி மயினி.” -. வார்த்தைக் குளறி, வெக்கத்தில் ஆவேசப்பட்டான் மகாதேவன் பிள்ளை.

“சொல்லு.. சொல்லு.... ஆவேசப்படாத..”.

“இல்ல.. பட்டா... அவங்கதான்...”

“அவளா.... சரிதான்.......” “அப்ப பசுதான் தான் கிடாரிய புடிச்சு... ஏறியிருக்கு..” – என்று சொரிமுத்துப்பாட்டா கூற, வடசேரி சந்தை இரைச்சல் போல.. மொத்த கூட்டமும் சிரித்து உருண்டது...

“உங்க அப்பன் எப்படி... அவன் வயசுல அவன் புழங்காத இடமே இல்லை.. திணைய விதைச்சா பனையா முளைக்கும்?” - என்று கேள்விஎழுப்பிச் சிரித்தார் சொரிமுத்துப்பாட்டா. அப்பாவின் பராக்கிரமங்களை நினைத்தோ என்னவோ மகாதேவன் பிள்ளையும் சிரித்துக் கொண்டிருந்தான்.

கூடத்திலிருந்து சிரித்து களைத்த வெடி முருகேசனுக்கு, வயிற்றை கலக்கி “வெளிக்கி” போக வேண்டும் போல இருந்தது. இருந்தாலும் பேச்சு சுவாரஸ்யத்தில் அடக்கிக் கொண்டான். மேலும் பேச்சை வளர்க்கும் பொருட்டு, உரையாடலை நீட்டினான்.

“நீரு... எந்த காலத்துல வேய்... இருக்கேரு... இப்பெல்லாம் வாட்ஸ் அப்ல பொண்ணப் பார்த்து பேசி, பேஸ்புக்ல லைவ்ல கல்யாணத்தை முடிக்கானுகோ.. கல்யாணமே இப்படினா.. மத்த விசயத்தை கேக்கவா செய்யணும்... ... எல்லாம் “அறிவியல் வளர்ச்சி?”

சட்டென்று கோபத்தில் பேச ஆரம்பித்தார் சொரிமுத்துப்பாட்டா.

“மயிறு வளர்ச்சி...... பிள்ளையாவது வயித்துலேர்ந்து எடுப்பேளா... இல்லன்னா மாப்பிளைக்கும், பொண்டாட்டிக்கும்.... போனு ரெண்டையும் சேர்த்து வச்சு குலுக்குனா... பிள்ளை கிழே விழுமா?.. திரியேள.... திரிச்சீலையை கொளுத்திக்கிட்டு..”

“வேய்... நீரு என்ட... ஏன் கோபப் படுகீரு... நான் நாட்டு நிலைமையைதான்... சொன்னேன்...”

“பின்ன என்னடே செய்ய சொல்லுக... ஏய்... மனுஷ உடம்பிற்கும், மனசுக்கும் நல்லது செய்கது எதுவோ... அதுதான் கண்டுபிடிப்புடே... அதுக்கில்லாம உக்காந்து தின்னுகிட்டு, புதுசு, புதுசா வர நோய்க்கு மருந்து கண்டிபிடிக்கதுல்லாம்... ஒரு பொழப்பா டே....இதுல மயிரு வளர்ச்சின்னு வேற சொல்லுக..

“புரியலையே பட்டா....”

“ஆமா... உனக்கு இதெல்லாம் புரியாத... இருட்டு அறையில் முரட்டு குத்துல... எத்ர தடவை.. சீலை விலகுசுன்னு கேட்டா கரெக்டா பதில் சொல்லுவா...”

வெடி முருகேசன் சிரித்தான்.

“கோவப் பாடாதீயும்... கொஞ்சம் வெளக்கமா சொல்லும் வேய்...”

“சொல்லுகேன் கேளு.. இந்த சக்கரை நோயை எடுத்துக்கோ... எல்லாவனுக்கும் இருக்கும்கான்... முந்தாநாளு நம்ம மிலிட்ரி ராஜன்.. தலைசுத்துகுனு ஆசுத்ரிக்கி போயிருக்கான்.. அவனுக்கும் இருக்காம்.. இவ்வளவு மாத்திரை கொடுத்து.. திங்க சொல்லிருக்கானுவோ... அவன் டாட்டர்ட கேட்டிருக்கான்.. எத்ர நாளைக்கி திங்கணும்னு.... அவரு சாகுற வரைக்கும்..திங்க வேண்டியதுதான்... சொல்லிருக்காரு... உடனே... அப்ப சாகக் கூடிய அண்ணைக்கும் மாத்திரை திங்கனுமானு... கேட்டிருக்கான்.. டாட்டரு தலைசுத்தி கீழே விழுத்திருக்கேரு...

வெடி முருகேசன்.. சிரித்து குலுங்கினான்.

“உமக்கு சுகர் இல்லையா”

“நமக்கு அது ஒண்ணும் இல்லடே... எங்க அப்பனுக்கும், தாத்தனுக்கும் வரவா... செய்து... எல்லாம் அப்படி ஒரு வாழ்க்கை முறை டே... காட்டுல ஆடி ஓடி திரிஞ்ச பயக்க தானே... நம்ம முப்பாட்டனுக எல்லாரும்...”

“அப்ப.. எல்லாரையும் இவ்வளவு நாகரீகத்திற்கு அப்புறமும்... காட்டுக்குள்ள.. போகச் சொல்லுகீரா?”

“நல்ல ஆரோக்கியமா வாழனும்னா... காட்டுக்குள்ள என்ன... கடலுக்குள்ளனாலும்.. போகணும்ங்கேன்.... சாவுக்கு பயந்துதானேடே... சாயங்காலம், வடக்கையும், தெக்கையும் நடக்கியோ... அதுக்கு பதிலா.. மம்பட்டிய புடிச்சு.... மண்ணை கிண்டுனா... விவசாயமும் ஆச்சு... உடம்புக்கு ஒரு கெட்ச்சாப்பும் ஆச்சுல்லா...”

“நடக்க கூடியத பேசும்... சும்ம “கிறுக்கு” மாறி என்னவாவது உளராதையும்..."

“நான் கிறுக்கா இருக்க போயிதான்... எழுபத்திரண்டு வயசிலையும்... சொந்தமா எழும்பி... வெளிக்கி போயிட்டு வந்து படுக்கேன்... உனக்குல்லாம் என் வயசுலா... குண்டிக்கடியில..

“டப்பா” வச்சுதான் புடிக்கணும்..”

சில பேர்கள் எழும்பி வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தனர். சிலபேர்கள் சிரித்ததில், கண்களிலிருந்து கண்ணீர் வந்திருந்தது.

வெடிகுண்டு முருகேசனுக்கு “வெளிக்கி”போகும் ஆசையே போயிருந்தது.

இப்படியே உரையாடல் முடியாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும். அது உண்மையோ பொய்யோ.. அதிலிருக்கும் மொழி பிரயோகத்திற்கும், நகைச்சுவைக்கும் ஆசைப்பட்டு, அதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் மொத்த கூட்டமும் ஆர்வமாய் கேட்டுக்கொண்டிருக்கும். அப்படி மொத்த இளைஞர்களையும் ஒருவித “பேச்சு மெஸ்மரிஸத்தில்” வசப்படுத்தியிருந்தார் சொரிமுத்துப்பாட்டா.

வெட்டிப் பேச்சுச் சாகசங்கள் முடிந்த பின்பு, வீடு வந்து சேர்கையில் ஒன்பது, ஒன்போதரை ஆகிவிடும். வீட்டின் முன்புறத்தில் மகன் புது வீடு கட்டி, அதில் தாமசிக்க, பின்புறப் பழைய வீட்டில் சொரிமுத்துப்பாட்டாவின் ராஜ்ஜியம். கைச்செலவிற்கு தோப்பிலிருந்து வரும், தேங்காய், மாங்காய், பாக்கு வித்த காசுகள். பூதோறும் நெல் அறுவடையில் வரும் பைசாவென, கைப்பிடித்தம் இல்லாத வாழ்க்கை. அரசாங்கத்தில் வேலை பார்க்கும் மகனுக்கு, அப்பாவிடம் பாசம் இருந்தாலும், அவர்கள் அதிகமாகப் பேசிக்கொள்வதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. மூன்று நேரச் சாப்பாடும், மகன் வீட்டிலிருந்து வரும். சொந்த மருமகள் தான். அதனால் வயிற்று பாட்டுக்கும் பிரச்சனை இல்லை. யாருக்கும், எதற்கும், எப்போதும், தொந்தரவு இல்லா வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருந்தார் சொரிமுத்துப் பாட்டா.

அடிக்கடி மனைவி சிவகாமியின் நினைப்பு வருவதுண்டு. அந்த நாளின் இரவின் கனவில், அவர்கள் பேசிக் கொள்வதும், இணைவதும் உண்டு. எனவே தான் இரவின் வெந்நீர்க்குளியல் என்பது சொரிமுத்துப்பாட்டாவின் தனிப்பெருஞ்சுகம். வைத்தியசாலை ஐயரின் எண்ணெயைச், சித்து சூட்டிற்கு சூடாக்கி, உள்ளங்கையில் குழித்து ஊற்றி, உச்சியில் ஆரம்பித்து, உடம்பெங்கும் தேய்த்து, ஒரு அரை மணிநேரம் ஊற விடுவார். உடம்பெங்கும் எண்ணை இறங்கும் நேரத்தில், கல்லடுப்பில் கதம்பை அடுக்கி, வெந்நீர் வைத்து, உச்சிச் தொட்டு உள்ளங்கால் வரை சூடு பொறுக்க, பொறுக்க வெந்நீர் விடுவதில் அவருக்குப் பேரானந்தம். குளியல் சுகம் முடித்து, நெற்றியெங்கும் திருநீறு பரப்பி, வெற்றிவிநாயகரை கும்பிட்டு, உணவுக்காக அமர்கையில் மணிப் பத்து பத்தரை ஆகிவிடும். இரவு பத்து மணிக்கெல்லாம் மருமகள் கொடுத்தனுப்பிய தோசையோ, இட்லியோ, கொழுக்கட்டையோ, ஓட்ஸ் கஞ்சியோ, வீட்டுப் படுப்பரையில் காத்திருக்கும். உள்ளதைத் தின்று விட்டு, படுக்கையில் சாய்கையில், நேர் எதிரே உள்ள போட்டோவில் சிவகாமி, மாலையோடு சிரிப்பதாய் தோன்றும். பின்பு மெதுவாக நினைவு மயங்கி தூக்கத்தில் விழுவார் சொரிமுத்துப் பாட்டா.

விவசாயிகளின் வேண்டுதலுக்கிணங்க பின் வந்த வாரங்களில், கோடை மழை சிறப்பாகப் பெய்ந்திருந்தது. ஊரெங்கும் மழை பெய்த மண்ணின் வாசம். வெக்கை காற்று மாறி ஊரெங்கும் குளிரும் வாடைக்காற்று. வெக்கையால் சில காலம் “தாம்பத்யம்” மறந்த குறிகள், வாடைக் காற்றுப் பட்டு சிலிர்த்தெழுந்து, ஆண்மையை உயிர்ப்பிக்க, துணைத் தேடி இளவட்டங்கள் சீக்கிரமாகவே வீட்டுக்குள் அடைந்திருந்தனர். குழந்தை உள்ளவர்கள், அவர்கள் தூங்குவதற்காகக் காத்துக் கிடந்தனர்.

அரசமர மூட்டில் ஆட்கள் இல்லாதால் சற்று நேரமே வீட்டுக்கு வந்திருந்தார் சொரிமுத்துப்பாட்டா. அன்றைய இரவில் குளிப்பதற்கு ஆயத்தமாய் , உடம்பெங்கும் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருக்கும் போதே வெடி முருகேசன் வீட்டு வாசலில் தெரிந்தார். வெடிமுருகேசன் என்ன வெடி வைக்கப் போகிறாரோ? என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டே, அவரைப் பார்த்து, சிறிதாகப் புன்னகைத்தார் சொரிமுத்துப்பாட்டா.

வெடிமுருகேசன் சற்று வேகத்தோடு வீட்டுக்குள் நுழைந்துப் படாரென்று “அந்தச் செய்தியைச்” சொன்னார்.

“வேய்... உங்க அண்ணாச்சி செத்து போனாரு......பார்த்துக்கிடும்..”.–ன்னு வெடிமுருகேசன் சொன்னதும், கொஞ்சம் அதிர்ச்சியானார் சொரிமுத்துப்பாட்டா.

பின்ன இருக்காதா... என்னதான் சொத்து சண்டைனாலும் கூடப் பிறப்பல்லவா. கொஞ்சம் வருத்தப்பட்டார். ஏதும் பேசாமல் சிறிது நேரம் அமைதியாய் இருந்தார். வெடி முருகேசன் அவர் மௌனத்தைக் கலைத்தார்.

“சட்டையை எடுத்து போட்டுட்டு... வாரும்.. பழச நெனைச்சிட்டு வராம இருந்துராதையும்”.

“நீ போ.. முருகேசா.. நான் வாரேன்..” – சற்று சோகத்தோடு பதில் சொன்னார் சொரிமுத்துப்பாட்டா.

“நீரு வாரும்.. சேர்ந்ததே போவோம்..”

சொரிமுத்துப்பாட்டா சற்று எரிச்சலுடன் சத்தமாகச் சொன்னார்.

“நீ போடே.. நான் வாரம்னா... வருவேன்.... நீ உன் சோலிய பார்த்திட்டு போன்னு...”

அவர் சொல்லில் இருந்த கோபம் முருகேசனை ஊதாசீனப்படுத்தினாலும், கூடவே இருந்த உறுதி.. முருகேசனை நம்ப வைத்தது. முருகேசன் அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் கிளம்பினார்.

துட்டி வீடு

சொரிமுத்துப்பாட்டா ஒன்றும் பேசாமல், விட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். தலையில் தேய்த்த எண்ணெய் காதின் கிருதா வழிக் கழுத்திற்கு இறங்கியது. இறந்து போன அண்ணன் அணைஞ்சபெருமாள் பிள்ளையை நினைத்துப் பார்த்தார். சொத்தின் பொருட்டு நடந்த சண்டைகள், இருவரின் அத்துமீறிய பேசினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள், கோர்டில் நடந்த வழக்கு, அதற்குப் பிறகு நடந்த பாகப்பிரிவினை, அவர் பிள்ளைகளுக்கு இவர் இல்லாமல் நடந்த திருமண காரியங்கள், இவர் பையனின் கல்யாணத்திற்கு நேரில் சென்று அழைத்தும், கடைசி வரை வராத அவரின் “அந்த வெட்டி வீராப்பு”, என அத்தனையும் மனக்கண்ணில் வந்தது. அழுகை மட்டும் வரவே இல்லை.

சொத்தின் பொருட்டு சொந்தத் தம்பியை ஏமாற்ற நினைத்த அண்ணனை நினைத்து யாருக்குத்தான், அழுகை வரும். ஆனால் ஒரு வெறுமை இருந்தது. அதைத் தொடர்ந்து அண்ணன் போன கவலை, அவர் மனமெங்கும் படர்ந்தது. அன்று “வெந்நீர் குளியல்” வெறும் “தண்ணீர் குளியலாகவே” இருந்தது. புரண்டு, புரண்டு படுத்தும் தூக்கமும் வாய்க்காமலிருந்தது. அமைதியில்லா மனம் அங்குமிங்கும் அலை பாய்ந்தது. “என்னதான் இருந்தாலும் அண்ணன்லா.. நாளைக்கு போய்... தலையை காட்டிரணும்” – மனதிற்குள் கூறிக்கொண்டார் சொரிமுத்துப்பாட்டா.

மறுநாள் காலையில் “துட்டி வீட்டிற்கு” சொரிமுத்துப்பாட்டா போகும் போது எல்லாரும் அவரை ஆச்சர்யமாகப் பார்த்தனர்.

“என்னதான் இருந்தாலும், தம்பில்லா.. எப்படி வராம இருப்பாரு... வந்திட்டாரு பாரு..– என்று வெடிமுருகேசன் யாரிடமோ மெதுவாகச் சொல்லிக்கொண்டிருந்தான்.

எல்லோரும் வைத்தக் கண் வைக்காமல் சொரிமுத்துப்பாட்டாவையே பார்த்துக் கொண்டிருந்தனர். குடும்ப பகையை மறந்து அண்ணனின் இறப்பிற்கு வந்த சொரிமுத்துப்பாட்டாவை நினைத்து பலபேரும் சோகப் பரவசம் கொண்டனர். காட்சியின் சோகத்தில், சில பெண்கள் “ஓ”-வென கூப்பாடு போட்டு அழுது தீர்த்தனர். வீட்டு முற்றத்தில் நுழையும் போதே அண்ணனின் மகள் “சித்தப்பானு” கதறி வந்து கட்டிப் பிடித்து அழுதாள். கட்டிப்பிடிக்கையில் கையிலிருந்த கண்ணாடி வளையல் உடைந்து, சின்னஞ்சிறிய சில்லொன்று சொரிமுத்துப்பாட்டாவின் கண்களுக்குள் விழுந்தது. அதை யாரும் கவனிக்க வில்லை. மகளை சமாதானம் செய்து விட்டு, அங்கணத்தை சுற்றிப் படர்ந்த, முல்லை பந்தல் மூட்டில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தார் சொரிமுத்துப்பாட்டா. சிறிது நேரத்திற்கெல்லாம் கண்ணுக்குள் விழுந்த கண்ணாடி சில் உறுத்தியது. கண்களெங்கும் கண்ணீர். மேல்துண்டை எடுத்து கண்களில் ஒற்றித் துடைத்தார்.

பின்புறமிருந்த வெடிமுருகேசன் மெதுவாகப்பேசினார்.

“வே.. நீரே.. இப்படி சின்ன புள்ளையோ மாறி அழுதா எப்படி...மனச தேத்திகிடும்”

சொரிமுத்துப்பாட்டா தலையை நிமிர்ந்தார்.

கண்ணாடி சில் உருத்தி, கண்கள் சிவந்து கண்ணீரும், கம்பலையுமாய் இருந்தது.

வெடி முருகேசன் சொரிமுத்துப்பாட்டாவின் முதுகைத் தடவிக்கொடுத்தான்.

சொரிமுத்துப்பாட்டாவிற்கு கோபமாக வந்தது.

“நீ உன் சோலி குன்..........ய பாருலேன்னு”- சொல்லலாம் போல இருந்தது. ஆனால் சாவு வீடாகையால், பேசாமல் இருந்தார்.

கண்ணுக்குள் விழுந்த சில் இம்சையோடு உறுத்தியது. துண்டை எடுத்து மீண்டும் கண்களில் ஒன்றினார். மீண்டும் முருகேசன் பச்சாதாபத்தில் பேசினான்.

“வேய்.. அழதாவேய்... வயசான அண்ணன் போனதுக்கு இப்படி அழுகேரு..”

உண்மையிலேயே சொரிமுத்துப்பாட்டாக்கு அவன் பேச்சை கேட்டு, கோபம் வந்தது. “பூமாலைக்கு” போய் வந்திருந்த அண்ணனின் மகன் குடத்தோடு வருவதைக் கண்டு, கோபத்தை அடக்கிக் கொண்டார். கண் எரிந்ததோடு, ஏராளமாக கண்ணீரும் வந்தது.

சிவந்த கண்களோடு, கண்ணீரோடு இருந்த சொரிமுத்துப்பாட்டாவைப் பார்த்து “சித்தப்பா”வென அலறி அவர் மேல் விழுந்தான் அண்ணன் மகன். சொந்த பந்தங்கள் சமாதானப்படுத்தி அவனை அழைத்து சென்றனர்.

சொரிமுத்துப்பாட்டாவுக்கு கொஞ்சம் எரிச்சலாக வந்தது. கண் வலி வேற உயிர் போனது.

“ஒத்தேல நான் கிடக்கும் போது ஒரு பயக்கோ பார்க்க வரல... இப்ப, பெத்தஅப்பன் போனதும்.. சித்தாப்பானு...... பலவறவோழிக்கவில்லையோ” – மனதிற்குள் திட்டிக் கொண்டார்.

மொத்த சொந்தங்களும், பலவருடங்களாக அண்ணன் வீட்டுக்குள் வராத சொரிமுத்துப்பாட்டா, அண்ணனை நினைத்து கண்ணீரும் கம்பலையுமாய் இருப்பதாய் நினைத்து ஆச்சர்யப் பட்டனர். சொரிமுத்துப்பாட்டா அழுது கொண்டிருப்பதாய் நினைத்து பலபேரும் ஆறுதல் கூறினர். அவருக்கோ கண் வலி உயிர் போனது.

“சவத்த சட்டுன்னு தூக்குங்கடே” – என்று மனதிற்குள் கூறிக் கொண்டார் சொரிமுத்துப்பாட்டா.

கால் மடக்கி, தெற்கே தலை வைத்துப் படுக்க வைக்கப்பட்டிருந்த “அணைஞ்ச பெருமாள்” பிள்ளைக்குச் செய்ய வேண்டிய சாவுச் சடங்குகளைச் செய்து, ஊர் கூடிச் சவத்தை வழியனுப்பி வைத்தது.

ஓட்டமும் நடையுமாய் வீட்டுக்கு வந்த சொரிமுத்துப்பாட்டா, எதிரே வந்த பம்பாய் மகாதேவன் பிள்ளையிடம் கேட்டார்.

“மக்கா.. லேய்..நம்ம ஊர்ல யாராவது இப்ப பிள்ளை பெத்திருக்காளா.. கொஞ்சம் தாய்ப்பால் வேணும்.., பார்த்துக்கோ...”

சாவு வீட்டிலிருந்து, வந்ததும், வராததுமாய் சொரிமுத்துப்பாட்டா இப்படிக் கேட்டது மகாதேவன் பிள்ளைக்குச் சிரிப்பை வரவழைத்தது.

“எதுக்கு பட்டா குடிக்கதுக்கா..”- அவர் நிலையறியாது, வலியறியாது தமாசு அடித்தான் மாதேயும் பிள்ளை.

சொரிமுத்துப்பாட்டாவிற்கு கண் உருத்தியது. கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டார். சற்று சாந்தமாக,

“லேய்... கண்ணுல ஏதோ விழுந்திட்டு...டேய்..;; அதான்.”–ன்னு சொல்லிக் கண்ணை காண்பித்தார் சொரிமுத்துப்பாட்டா.

மகாதேவன் பிள்ளையோ நகைச்சுவையின் உச்சதிலிருந்தான்.

“இப்பம் தாய்பால்லாம் யாரு கொடுக்கா.... பாட்டா?.. டின் மாவுதான். கொஞ்சம் மாவெடுத்து கண்ணுல வேணா போடச் சொல்லட்டா. – என்று கேட்டுச் சிரித்தான் மகாதேவன் பிள்ளை.

“உங்க அப்பனுக்கு மத்ததுல போடுலேன்னு...” - சொல்லி கோபத்தில் வீட்டுக்குள் சென்று குப்புறப்படுத்தார் சொரிமுத்துப்பாட்டா.

-தெரிசை சிவா

 

1 Comments

Write A Comment