Tamil Sanjikai
 

ஆயி இத கித பாத்தீங்களா?

நேத்து காலம்பற வெளி கெளம்புன ஆளு விடிஞ்சும் புடிச்சி இன்னும் வூடு வந்து சேர்ல.

வயிசான செறுக்கி ஒருத்தி கெடக்குறாளேங்குற ஒனக்க மசுறு யில்ல...

நாலஞ்சி அண்ணந் தம்பிகூட பொறந்துருந்தா கேழ்வி கேக்க ஆளு இருக்குன்னு அக்கற கிக்கற இருக்கும்.

நாலாஞ்சாதி கம்னேட்டிதான நானு....

தம்பியோவ் இத கித பாத்தீயா...

விடியங்காட்டியம் தேடிட்டு வர்ற ராத்திரி வூட்டுக்கு வர்லயா பெரிம்மா...

நேத்து காலம்பற கெளம்புன ஆம்பள எங்க போறன்னுஞ் சொல்லுல வூட்டுக்கும் வர்ல.

செகநாதன் வர்றாரு அவர கேளுங்க

அவராகவே செல்லபாங்கியை பார்த்துக் கேட்டார்.

மூஞ்சாம் மாமனையாத் தேட்றீங்க

எங்க நிக்கிது ஆயி...

கள்ளாங்கொளத்துல குளிச்சிகிட்டு இருந்தாரு இப்பதான் வெளியவாச போயிட்டு வரும்போது பாத்தேன்.

வர்ட்டும் இன்னக்கி வூட்டுக்குதான வர்னும்.என்னிக்கும் இல்லாம புதுசா வூடு வராம எங்க போயிருக்கும் இந்த ஆம்பள.

முணகிக்கொண்டே நடந்து வீடு வந்துவிட்டாள்.

தமுருக்கார்ரு மொவன செத்த இந்த பெலாப்பழத்த அறத்துக்குடான்...

காலைலியே மரம் ஏறச் சொல்றீயே கை கால்லாம் வலிக்கும் ஆயா...

எலே தாத்தா ராத்திரி வூட்டுக்கே வர்ல. செரி அதுதான் வர்லியேன்னு சோறுங் ஆக்குல.கள்ளாங் கொளத்துல குளிச்சிகிட்டு இருக்காம் வந்துடும்.பசி தாங்காது சோறாக்குற செத்த நாழி இத தின்னுட்டு இருந்தா ஆக்கிப்புடுவேன்.ஏறிப் பறிடான்னா வருசாங்கம்லாம் வச்சிகிற...

இந்தா ரெண்டு சொளன்னு திங்க தருவ பாரு ஒனக்கு ஒடனே பறிச்சி குடுக்கனும்னு ஏறினான் தமுருக்காரர் மகன்.

கெழக்கால பக்கம் போற கெளயில பெருத்துருக்கு பாரு அத பறி.கீழ போட்றாத வக்கெல அள்ளிப்போட்றன் அதுல போடு.

நல்லா பழுத்துருக்கு ஆயா கீழ போட்டா ஒடஞ்சிடும்.கயிறு கியிறு இருந்தா குடு கட்டி எறக்கி வுட்டர்றன்.

செத்த ரெண்டா பொளந்து குடு ரெண்டு சொள எடுத்துட்டு போ.ஒண்ணம் மொவளுவோ திம்பாளுவோ....

ஆயா தாத்தா வர்றாரு....

எவுங்களாவது எங்கியாவது வர்றாங்க.எனக்கென்ன சனமா சாதியா நாஞ் செத்தா நாய் சீந்துமா.

பேசிக்கிட்டே ஒவ்வொரு சொளையா எடுத்து தட்டுல வச்சி திண்ணைல வச்சிட்டு உள்ள போயிட்டாங்க செல்லபாங்கி.

வயிசு 55 ஆவுது ச்சீன்னு சொல்லிருப்பனா. புள்ள இல்லாதவளாச்சேன்னு ஊருவாயி மேறி பேசிருப்பனா.ரா செத்த நாழி வூட்டுக்கு வர்லனு என்னென்ன சூராப்பு காட்ற நீ...

நான் என்ன சூராப்பு காட்டி என்னா ஆவப்போவுது.

இந்த பய உளியம் மொவன் வெள்நாடு போனவன் வந்தான்னு எதையோ கொண்டாந்து குடுத்தான். வக்காழி மொவன் வூட்டுத்து எழுந்திரிக்க வுடுல.

இந்த மூத்தரத்தயும் குடிக்க ஆரம்பிச்சாச்ச ஒடம்புல இருக்குற தெம்புக்கு கீழ கீழ வுழுந்தா என்னா ஆவ்ருத்து.

தெனைக்கும் வாயில வச்ச ஒன்னேவா இருக்கேன்னு.... பலாக்கொட்டைகளை தட்டின் ஓரமாக வைத்துக்கொண்டிருந்தார் மூஞ்சான்.

இந்த பெலாக்கொட்டைவோல போட்டு புளிக்கொழம்பு வையி நான் வடக்குவெளி பக்க போய்ட்டு வர்றன்.நாலு நண்டு கிண்டு கெடச்சா ராத்திரிக்கு புட்டு போட்டு கொழம்பு வச்சிக்கிலாம்.

எங்கியாவது எவனாவது அத தரான் இத தரான்னு மோந்துட்டு வராத.போனமா சோலிய பாத்தம்மா வந்தம்மான்னு இருக்கனும்.

எறவானத்தில் செறுகியிருந்த கிளிக்காட்டியையும் மஞ்சப் பையொன்றையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.

வெயில் காலம் நெருங்கும் தருவாயில் குளங்களில் நீர் வற்ற ஆரம்பிக்கும்.கரையோரத்தில் ஊமச்சிகள் கிடக்கும் பொறுக்கி எடுத்து வந்து தண்ணியில் ஊற வைத்தால் மண்ணை கக்கிவிடும்.பிறகு வேகவைத்து ஊமச்சியின் சூத்துப் பகுதியை ஒரு கடி கடித்து துப்பி உறிஞ்சி இழுத்தால் அவிக்கும்போது போட்ட உப்பின் சுவையோடு சர்ரென கொஞ்சம் கரி வாய்க்குள் நுழையும்.வெற்று ஓடுகளை சின்ன ஓட்டைகளிட்டு கம்பியில் கோர்த்து முழங்கையளவு மூங்கில் குச்சியில் கட்டி வைத்திருப்பர்.இரண்டு சாண் அளவு கொக்கியுள்ள மூங்கில் குச்சியிரண்டு நண்டை வெளியில் இழுக்க வைத்திருப்பர்.கிளு கிளுவென சத்தம் கேட்கும் தண்ணீரைப் போன்று....

(இரை தேடச் சென்றுவிடும் தாய் நண்டு.வளையில் உள்ள நண்டுகளை கிளிக்காட்டி வைத்து ஆட்டி பிடித்து விடுவர்.இரையோடு வந்த தாய் நண்டு வெற்று வளையை துழாவி துழாவி பார்க்கும்.நண்டு குஞ்சுகள் எங்கோவோர் மனிதர்க்கு இரையாகிக் கொண்டிருக்கும்.)

மூஞ்சான் கிலிக்காட்டியை எடுத்தால் நண்டு இல்லாமல் வீடு வரமாட்டார்.

ஓமம்,சீரகமெல்லாம் அரைத்து தயாராயிருந்தது.நண்டு வந்தால் ஆய்ந்து போடுவதுதான் மிச்சம்.

செல்லபாங்கி....ஓ...செல்லபாங்கி

என்னாத...

இந்தா இத புடி நாங் குளிச்சிட்டு வந்தர்றன்.கொழம்ப அடுப்புல போட்டுட்டு குளி.

இந்த மனுசன் குளிக்க போறவரு போவண்டிதான என்ன யாங் குளிக்க சொல்றாரு.

குளிச்சிட்டு இரு கடத்தெருவு போய்ட்டு வர்றன்...

வரும்போதே வாங்கிட்டு வந்தா என்னா காலு வலிக்கில ஒனக்கு நடந்து...நடந்து...

பூ மொழம் எவளோங்க

அஞ்சிரூவா

ரெண்டு மொழங் குடுங்க

நண்டு குழம்பு அடுப்பிலிருந்து இறக்கி வைக்கப்பட்டிருந்தது.

செல்லபாங்கி......செல்லபாங்கி

என்னா....யாங் கத்துற

குளிச்சியா இல்லியா

துணி மாத்துறுத்து கண்ணு தெரில.

என்னக்கி நீ துணி மாத்துருத்த காட்டியிருக்க எனக்கு தெரிய

ஆளயும் மூஞ்சயும் பாராங்..இதுக்குதான் குளிக்க சொன்னியே...கைல என்னா பூவாட்டம் இருக்குது.

பூவுதான்...பூவுதான்

என்னா....இன்னக்கி மைனரு மங்களம் கொண்டாடுது.

தல தாண்டி நர; ஆளுக்கொன்னும் ஆவுல.சோத்த போடு நண்டள்ளி கொட்டு.

க்கேவ்.....க்கேவ்.....கொழம்புனா கொழம்புதாண்டி ஒன்னாட்டம் ஆளுயில்ல நண்டு கொழம்பு வக்கெ.

இந்தாரு பூவ வச்சிக்கிட்டேன்.நீ ரொம்ப அளக்காத....கொழம்பாங் கொழம்பு நீ என்னாத்துக்கு அடி போட்றன்னு தெரியாது.

சாப்பாட்டுக்குப் பின் இரண்டுமுறை வெற்றிலை பாக்கு போட்டு துப்பியாயிற்று.

நேரம் ஆவுது ஆள தூக்குற காத்தா அடிக்கிது உள்ள வந்து படு.

பின்ன வடக்குவெளிய சுத்தி அலஞ்சி நண்டு புடிச்சிட்டு வந்துது வெளில தூங்கவா.

மரக்கதவின் இருப்புத் தாழ்ப்பாள்கள் கோர்த்துக்கொண்டன.சிமிட்டி சிமிட்டி யெரியும் விளக்கும் காற்றில் அணைந்தது.கோரைப் பாய்களின் தேய்மானம் தவிர்க்க இயலாதவை.

செல்லபாங்கி......செல்லபாங்கி எம்மோந் நேரம் தூங்குவ சாணி கீணி போடுல.

நரைத்த முடிகளுக்குள் சிக்குண்ட பூவை எடுத்து வீசிவிட்டு வாசல் தெளித்தாள் செல்லபாங்கி.

யக்கோவ்.....ஒங்க வூட்டுக்கார்ரு சின்னாயி மொவன் இருக்குல்ல அவுரு மொவ் வயித்து புள்ள ஒன்னு 4 வயிசு இருக்கும் நேத்தி கொண்டாந்து வுட்டுட்டு போனாங்க.ஒங்க வூட்டுக்கார்த்து தம்பிதான் பாத்துக்குது என்னான்னு தெரில.
அங்க எதாச்சும் சண்ட சள்ளா இருக்குமா?

எனக்கு என்னாத்த தெரியும்.இதுக்கு சின்னாயி மொவன் இருக்குர்த்தே மூணு வர்சத்துக்கு மின்னேடி இவுங்க பங்காளி வூட்டு எழவுலதான் தெரியும்.நம்மகிட்டயா சொல்றாங்க என்னா ஏதுன்னு....

செல்லபாங்கி......செல்லபாங்கி

யாந் தம்பி இருக்கான்ல சின்னதொர அவன் மொவ் வயித்து புள்ள ஒரு பய ஒருத்தன் இருக்கான்.அவன் ஆத்தாளுக்கு ஏதோ நோவாம்.பெட்டுல சேத்துருக்காங்களாம்.நான் புள்ளிய போயி ஆசுபத்திரில பாக்குனும் பயல அழச்சிட்டு போயி அண்ணியாள்ட்ட வுடுன்னாங்.ஒரு வாத்த ஓங்கிட்டயும் கேட்டுட்டு வருவோம்னு...இருடா அவளையும் அழச்சிட்டு வர்றன்னு வந்துட்டேன்.

அந்த பாலவன் இருக்குர்த்துல எனக்கு என்னா...ஒரு கையி சேத்து ஆக்கப் போறன் யாங்கிட்ட வேற கேக்குனும.

சின்னதொர....ஓ...சின்னதொர புள்ளய தூக்கிட்டு வரச் சொன்னா ஒண்ணி.நீ போயி இவன் ஆத்தாள பாரு.

செரி பின்ன பயல பத்தரமா பாத்துக்க ரா செத்த நாழி இருந்துட்டு காலம்பற ஒடியந்தர்றன்.

போடா கெடக்கு எங்குளுக்கு தெரியாது புள்ளிவோல பாத்துக்க. பய பேரு என்னாடா....

அது என்னுமோ பேரு வாயிலியே நொழைல.

செரி பாத்து போய்ட்டு வா...

செல்லபாங்கி.....அட்டியேய்....

என்னாவாம் யாங் கத்துற

பயல பாரு

அடி யாங் தங்கமே...செல்ல மணியாரே....

கண்ணீர் முட்டக் கொஞ்சுகிறாள் செல்லபாங்கி...

மூஞ்சான் தோட்டத்து பக்கம் சென்று கண்களை துடைக்கிறார்.செல்லபாங்கிக்குத் தெரியாமல்.

கோனையமூட்ல பாலு வாங்கிட்டு வா...அஞ்சஞ்சு ரூவாய்க்கு பாலு குடுத்துற சொல்லிடு.சேங்கணம் போயி நாலு சட்டி துணி எடுத்துட்டு வா.

யாண்டி நீ பாட்டுக்கு அளக்குற.அவந் தாத்தன் காலம்பற வந்து தூக்கிட்டு பூடுவான்.

செல்லபாங்கிக்கு முகம் சுருங்கியது.

இருந்தா என்னா...ஒன்னும் வாங்கியா தரக்கூடாது.

செரி நான் சேங்கணம் போறன்.கோனையன்ட்ட சொல்லிட்டு போறன்.பால காச்சி குடு.கஞ்சி கிஞ்சி குடு.

யக்கோவ்....யக்கோவ்....

ஆர்ரீ....

இந்த பய அம்மா செத்துட்டாளாம்.நோவு முத்திரிச்சு ஒன்னும் வேலக்கி ஆவாதுன்னுட்டாங்களாம்.பாடி ஒடச்சிதான் வருமாம்.

அடித்து முட்டிக்கொண்டு அழுகிறாள் செல்லபாங்கி.

இவளழுவதைப் பார்த்து வீறிட்டழுகிறான் வாயில் நுழையாத பெயர்க்காரன்.......

எறவானத்தில் செறுகியிருந்த கிலிக்காட்டியை எடுத்து ஆட்டி அழுகையை ஓச்ச முயல்கிறாள் செல்லபாங்கி.....

கிலிக்காட்டியின் ஊமச்சி ஓடுகள் ஒவ்வொன்றாய் சிதறியதறியாமல் உறைந்து உட்கார்ந்திருந்தாள்.

-வினையன்

 

 

1 Comments

Write A Comment