Tamil Sanjikai

பொங்கி எழும்பும், அடர் பச்சை நிற சுனாமி பேரலையென "அந்த ஆலமரம்" சுடுகாட்டுத் தோப்பில் படர்ந்திருந்தது. இரத்த சிவப்பு நிற ஆலம்பழங்கள் சுடுகாட்டுப் படுப்புரையை அடுத்த நிலமெங்கும் பரவிக்கிடந்தது. காற்றடிக்கும் போதெல்லாம் மேலும் பழங்கள் விழுந்துக் கொண்டேயிருந்தன. விழுந்த பழங்கள் வெடித்து, சிதறிப் பொன்னிற வித்துக்களை பூமியெங்கும் வாரியிறைத்துக் கொண்டேயிருந்தது. உடைந்த பழங்களை “கைகொடுத்து” தூக்குவதைப்போல், ஆலமர விழுதுகள் பூமியை நோக்கி, விரல் நீட்டிக் கொண்டிருந்தது. மரம் முழுதும் செழிப்பான பச்சை இலைகள், சூரிய ஒளியை உள்ளுக்குள் விடாமல் தடுத்திருந்தது.

காற்றில் முழுவதும் “சுடுகாட்டுமல்லியின்” வாசம். அதென்ன சுடுகாட்டு மல்லி? எரிந்த “சிதை” சாம்பலில் மட்டும் பூக்கும் ஒருவித மல்லிப்பூ. அதன் மணமும், ஆலம் பழங்களின் மணமும், கலந்து அவ்விடமெங்கும் ஒரு வித “மந்தகாச” வாசனை வீசியது.

கோவில் உட்பிரகாரத்தில் வடக்கே பார்த்து கம்பீரமாக நின்றிருந்த சுடலையின் கழுத்தில் வாடிப்போன வாடாமல்லி ஆரம் “அதர” பழையதாய் தெரிந்தது. பக்கத்திலிருந்த இசக்கி அம்மனின் முகத்தில், அப்பிப் பூசிக் காய்ந்த “மஞ்சணையின்” வெடிப்புகள். எதிரே இருந்த தனிப்பீடத்தில் தலையில்லா முண்டன் சாமி. எப்போதோ படுக்கை வைத்தபோது சாத்தப்பட்ட நெய்வு வேட்டி, பருவ நிலைகளால் முருகி, சருகாகியிருந்தது.

கடைசியாக “சுடலைக்கொடை” கழித்து, நாலைந்து வருடமிருக்கும். சாவுச்சாமியாகையால் பெரிதான “ஆராட்டெதுவும்” சுடலைக்கு இல்லை. தினமும் தீபாராதனை இல்லை. நெய் வேத்தியம் இல்லை. சாம்பிராணி புகை இல்லை. சாவு ஏதேனும் விழுந்தால், கால் இடுக்கில் வைத்து, ஒரு சூடம் கொளுத்தப்படும். அதில் பற்றி எழும் நெருப்பு, உடுத்தியிருக்கும் காய்ந்த, ஒற்றை வேஷ்டியில் பட்டுவிடுமோவென்ற பயம் “சுடலைக்கே” உண்டு. “சாமியாப் பொறந்தா “வைணவச்” சாமியா பொறக்கணும்” என்ற பொறாமை எண்ணம், சுடலையின் மனதிற்குள் வந்து ஆறேழு ஆண்டுகளாகிவிட்டது. அதுவும் திருப்பதி வெங்கடாச்சலபதியா பொறக்கணும் – என்ற ஆசைக் கிடந்து அடிமனதைப் புரட்டியது.

பின்ன இருக்காதா? ஒருநாளைக்கு எவ்வளவு மக்கள் கூட்டம், எத்ர தீபாராதனை, என்னென்ன படையல்கள். சுடலையா பொறந்து, ஆலமூட்டுல கால் குத்தி நின்னதுல இருந்து, “சுகமா இருக்கியா சுடலைன்னு” கேட்க ஒரு ஆள் உண்டா? நல்ல படையல்கள் உண்டா? “நாலஞ்சு வருசத்துக்கு ஒருமுறை, ஒரு கொடைவிழா”. அதுவும் ஏனோ... தானோன்னு. “சாவுக் கடவுள்”ன்னா, எல்லாவனுகளுக்குமொரு இளக்காரமாகப் போய் விட்டது. “சினம் கொண்ட சுடலையாக, விரைப்பாக, வெயிலுக்கும், மழைக்கும் நெஞ்ச நிமிர்த்தி நின்னதுல “மூட்டுவலி” வந்ததுதான் மிச்சம்.”- என்பது மாதிரியான எண்ணவோட்டம், சுடலையின் அடிமனதில் இருந்தது.

சன்னமான ஒரு நடையில் கோயிலை வந்தடைந்திருந்தான் “முடியன்”. மெதுவான நடையிலேயே வந்ததால், கொழுத்து செழித்திருந்த உடம்பில் தளர்வேதுமில்லை. ஆனால் முகமெங்கும் சோம்பலின் “களைப்பு”. உடம்பெங்கும் அருகம்புல்லென பற்றிப் படர்ந்த முடியை “சிலிர்த்துக்” கொண்டான். உடல்சுரப்பி “குளோரோசனை”யிலிருந்து பீறீட்டெழும் வாசம், அவ்விடத்தில் ஏற்கனவே இருந்த வாசனைகளோடு சேர்ந்து கொள்ள, விழுந்து கிடந்த இலைச் சருகளில் ஒன்றிரண்டை கடித்து ருசிப்பார்த்தான் “முடியன்”.

ஆட்டின் புத்தி... ஆட்டின் புத்திதான். இலைத்தழைகளை கண்டவுடன் ஒன்றிரண்டை கடித்துப் பார்த்து விட வேண்டும். மத மதவென பொங்கிய உடம்புடன், பிடறி குலுங்க நடக்கும் “கிடா ஆட்டைப்” பற்றிதான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். காட்டுப் புதரென வளர்ந்து, செழித்த முடியால், “முடியன்” என்று பெயர் பெற்ற, அந்த “கருத்த கிடாவிற்கு” நான்கு வயது. பிறந்த அன்றே சுடலைக்கு நேர்ந்து விட்டபடியாலும், கழிந்த வருடங்களில் ஆங்காங்கே கேட்டு புரிந்து கொண்ட சுடலைக் கோவிலின் பலிகளாலும், “சாவு பயம்” இல்லாத ஆண்மகன் கிடா நம்ம “முடியன்”. கோவில் ஆடாகையால் எங்கு சென்றாலும் ஒரு மரியாதை உண்டு. ஊர் சிற்றுண்டி கடை, கணபதி கபே -க்கு சென்றால் வாழை இலையில் வைத்து மூன்று தோசையும், ரசவடையும் எந்நாளுமுண்டு. காய்கறிக் கடைகளில் வெள்ளரிகள், கேரட்டுகள், பலாக்கொட்டைகள், பழக்கடைகளில் பழங்கள், பழத்தொலிகள், மளிகைக் கடையில் கருப்பட்டிகள், பச்சரிசிகள் என வயிற்றுக்கு வாட்டமில்லாத வாழ்க்கை.

இவைத்தவிர சுடலை மீது பற்றுள்ள, பயமுள்ள மனிதர்கள் கொண்டுதரும் இலைத்தழைகள், கோரைப்புற்கள், கொழும்பு வெற்றிலைகள் இவையெல்லாம் “தீவனத்தின்” தனிக்கணக்குகள். என்னதான் தின்னக் கொடுத்தாலும் “பலியாடு” தானே, இருப்பதைத் தின்னக் கொடுத்துவிட்டு, கோவில் பலிவிருந்தில் தின்னப் போகும், தன் உடல் தசையை வெறித்து பார்த்து, எச்சில் ஊற்றும் “பக்தர்களை” பார்க்கும் போது, ஒரு அசாத்திய கோபம், முடியனின் முகமெங்கும் பீறிட்டெழும். அடக்கிக் கொள்வான்.

பாவம் இவர்கள் என்ன செய்வார்கள். “பலி” கேட்கும் சுடலைக்கு கொடுக்க வேண்டும் “உதை”. உதைக்க முடியாவிட்டாலும் நாக்கை புடுங்குற மாதிரி நாலு கேள்வியாவது கேட்டுவிடமென்ற முடிவில், கோவிலுக்கு வந்திருந்தான் “முடியன்”. இசக்கி அம்மனும், முண்டனும் “சக்குளத்துக் காவு” திருவிழா காண, கேரளா சென்றிருந்தனர். முடியனின் “கோபம்” தெரிந்ததலோ என்னவோ, அவன் வந்ததை கண்டும், காணாமல் கண்களை இறுக்கமாக முடியிருந்தார் சுடலை.

“ஆனா... உண்மையில... நீரு நடிப்புல “சிவாஜியை” தோக்கடிச்சிருவேரு”

சுடலைக்கு சுருக்கென்றிருந்தது. கண்களைத் திறந்தார்.

“ஏ.. முடியா... நல்லா இருக்கியா... நல்ல காத்து பார்த்தியா? கொஞ்சம் கண் அசந்திட்டேன்.”

முடியன், “அசருவேரு... அசருவேரு.... உமக்கு சாகப் போற என்னப் பார்த்தா “ஒரு இளக்காரம் தான்”

சுடலை, “ஏய்... அப்டிலாம் இல்ல டே, எல்லாரும் ஒரு நாளு சாகப் போறதுதாலா”

முடியன்,“ஆனா... உம்ம முன்னாடி வந்து... உசத்தி புடிக்கிற குழைய கடிக்கும் போது, “பட்டுன்னு கழுத்துல வெட்டுப் பட்டு” சாகுற சீரழிவு எனக்கு மட்டும் தான்.”

சுடலை, “சீரழிவா.... ஏய்....சுடலைக்கு பலின்னு சொன்னா “கொடுப்பினை” டே”

முடியன், “அந்த கொடுப்பினை எனக்கொண்ணும் வேண்டாம்.. எல்லாரும் மாறி பொறந்து, சாகக்கூடிய நாளு தெரியாம வளர்ந்து, விதிவசத்துல, எதிர்பாராம சாகுற “சராசரி வாழ்க்கை” எனக்குப் போதும். திங்க சாப்பாட்டை கொடுத்துட்டு, என்னையே பிச்சி, பிச்சி திங்க பாக்குற, இந்த “அற்பமான பலி வாழ்க்கை” எனக்கு வேண்டாம்”

சுடலைக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“முடியா... நானே என் பொறப்ப நினைச்சி புழுங்கிட்டு இருக்கேன். இதுல நீ வேற இப்படி சொன்னா... நான் என்ன செய்ய”

முடியன், “ஏன்... உமக்கென்ன..... “கல்லு குந்தம்” மாறி ஜம்முனு.. நிக்கதானே செய்யேரு”

சுடலை, “ஆமா.. நிக்கேன்... வருஷம்.. வருசமா.... “காலு வலி” எனக்குத்தான் தெரியும்”

முடியன், “காலுவலி பத்தி சொல்லுகேற நீரு..... கழுத்துல ஓங்கி வெட்டும் “அருவாவலி” எப்படி இருக்கும் தெரியுமா உமக்கு.”

சுடலை, “ஏய்... இப்ப என்னதான்... செய்ய சொல்லுக”

முடியன், “பலி வேண்டாம்னு சொல்லும்”

சுடலை,“யாருட்ட சொல்ல...”

முடியன், “பூசாரிக்கு கனவுல போய் சொல்லும்”

சுடலை,“முடியா... நான் சொன்ன கேக்கவா போரானுகோ... பலிகொடுத்து, கறிவச்சு... மணக்க, மணக்க.... என் கண் முன்ன காட்டுகதோட சரி... ருசித்து திங்கது எல்லாம் அவனுகதான். நாலு பாளையங்கோட்டை பழமும், மூணு வெத்தலையும்தான் எனக்கு மிச்சம்’ ”

முடியன், “அதில்லாம் எனக்கு தெரியாது... நான் பலியாக கூடாது... வேணும்னா... சிங்கமோ, புலியோ , யானையோ ... உம்ம சவுரியம் போல... பூசாரிக்கு கனவுல போய் கேட்டுக்கிடும்”

சுடலைக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பதிலேதும் சொல்லாமல் மலங்க, மலங்க விழித்துக் கொண்டிருந்தார்.

“முடியா... வேணும்னா ஒரு காரியம் செய்... பலி கொடுக்கதுக்கு முன்ன, தலயில மஞ்ச தண்ணி ஊத்தும் போது, எக்காரணம் கொண்டு தலையசைக்காத...... “கல்லு சிலைமாதிரி” அசையாம நின்னா போதும்... சாமிக்குத்தம்’னு பலிக்கொடுக்க மாட்டானுகோ”

முடியன், “அப்பம் உம்ம மாதிரி ‘கல்லாய்” நிக்க சொல்லுகேரு”

சுடலை,“ஆமா... அதே தான்... கல்லு சிலை மாதிரி நிக்கணும்”

முடியன்,“உம்ம நிக்கவச்சு, காதுகுள்ள... குடம் குடமா தண்ணி ஊத்துனா, தலையசைக்காம இருப்பேரா?”

சுடலைமாடன் யோசித்துப் பார்த்தார்.

“கொஞ்சம் கஷ்டம் தான்”

முடியன், “கொஞ்சமில்ல.... ரெம்பக் கஷ்டம்... வேற ஏதாவது யோசனை சொல்லும்”

சுடலைக்குப் பரிதவிப்பாய் இருந்தது. இசக்கியம்மனும், முண்டனும் இருந்திருந்தால் தேவலாம் போலத் தோன்றியது. தீவிர யோசனைக்குப் பின் ஒரு மறுபதில் கூறினார்.

“முடியா... பலியாடு உடம்பில ஏதாவது குறை இருந்தா... பலி கொடுக்க மாட்டனுகோ பார்த்துக்கோ... பேசாம என்னவாவது செய்து... உடம்புல ஒரு குறைய உண்டாக்கு... அப்புறம் உன்னை பலிகொடுக்க மாட்டானுகோ”

முடியனுக்கு அது நல்ல யோசனையாய் தோன்றியது. கனமான சிந்தனையோடு அங்கிருந்து நகர்ந்தது “ஆட்டுக் கிடா”. ஏதாவது சின்ன குறையை உடம்பில் ஏற்படுத்தலாம் என முடிவு செய்தது.

மறுநாளே ரோட்டில் வந்து கொண்டிருந்த தண்ணிலாரியில் மிகக் கவனமாக மோதி, முன்னங்காலை ஒடித்துக் கொண்டது. ஆறு நாட்கள் படுக்கையாய் கிடந்து, பின்வந்த நாட்களில் மூன்று கால்களோடு நொண்டி, நொண்டி நடமாட ஆரம்பித்தது.

கிண்டி, கிண்டி நடக்கும் “கிடாவிற்கு” இப்போது மக்கள் மத்தியில் அன்பு இல்லை, மரியாதை இல்லை. உணவு இல்லை. வெள்ளம் இல்லை. தண்ணி இல்லை. இலைதழைகள் இல்லை. அன்றாட வாழ்கையே பெரும் சுமையாக இருந்தது. நாலைந்து மாதங்களுக்குள் ஒட்டிய வயிறும், வற்றிய தோலுமாய் இளைத்திருந்தது.

மனமெங்கும் ஊர் மக்களின் உதாசீனத்தால் ஏற்பட்ட ஆதங்கம். மரியாதையற்ற புறக்கணிப்பால் ஏற்ப்பட்ட “மனக்காயங்கள்”. “எப்படி இருந்தோம்... இப்படி ஆயிட்டமேங்குற” - தாழ்வுணர்ச்சி மனப்பதட்டம். நேராக மயானக் கோவிலுக்குச் சென்று சுடலையிடம் முறையிட்டது.

“வேய்... பேசாம... நீரே கையில உள்ள அருவாவ வச்சி என்னைக் கொன்னுரும்.” – என்று கண்களில் நீர் வடிய மன்றாடியது. “நேர்த்தி பலியாடு” இல்லாததால், இன்னும் மூன்று வருடங்களுக்கு “சுடலைகொடை” இல்லை, என்ற மக்களின் ஒருமித்த முடிவால் பெருந்துயரத்தில் இருந்த சுடலைக்கு, முடியனை பார்க்கையில் இரக்கமும், கோபமும் ஒரு சேர வந்தது. “சாமியாப் பொறந்தா “வைணவச்” சாமியா....அதுவும் திருப்பதி வெங்கடாச்சலபதியா பொறக்கணும்” - என்ற அந்த “பழைய ஆற்றாமை”, சுடலையின் மனதிற்குள் மீண்டும் நிலைக்கொண்டு வருத்தமளித்தது.

- தெரிசை சிவா

0 Comments

Write A Comment