Tamil Sanjikai

சித்ரோசுல ( சித்திரை விசு ) வாங்குன கண்ணாடிய போட்டுக்கிட்டு செய்துபீடிக் கடக்கிட்ட வந்துக்கிட்ருந்தான் சாமி. அஞ்சரைக்கும் ஆறுக்கும் எடயில இருக்கும் அவென் வளத்தி. ஆனா அவென் நேரம் எப்போதும் ஏழ்ரதான். துட்டுள்ள பாட்ச்சியா இருந்தாலும் கழுத இந்த லவ்வு மட்டும் அவனுக்கு ஒப்பேருனதேயில்ல. சாலப்பூரு, கோயில்த்தூருன்னு ஊரச்சுத்தி உள்ள எல்லா ஊர்லயும் போயி லவ் பண்ணிப் பாத்துட்டான். ஒருத்தியும் ஏத்துப்பாக்கல. இவ்ளத்துக்கும் ஆளுலாம் நல்லாத்தான் இருப்பான். அது என்ன நேரமோ தெரியல பூராப் பொட்டப்பிள்ளயளும் இவென மொட்டப் பயலாவே தான் அலைய உடுதுவ. இப்ப இவென் செய்து பீடிக்கடக்கிட்ட வாரது கூட தெக்கூர்ல இருந்து பீடிக்கணக்குப்போட வார ஒரு பிள்ளைட்ட லவ்வ சொல்லத்தான். அய்யாட்ட சண்ட போட்டு ஒரு செம்பரியாட்ட வித்து சித்ரோசுக்கு பானாசம் போனான்.

இந்த வருசத்துல எப்டியாவது லவ் செட்டாயிரணும்பான்னு ஆத்துல முங்கி சாமி கும்முட்டுக்கிட்டு, கோயில் பக்கத்துலே ஒரு கண்ணாடிய வாங்கிட்டு, அந்தால அம்பை வந்து அங்க ஒரு நாலு சூட்டு சட்டயை எடுத்துக்கிட்டு வந்தான். இன்னைக்கி காலையில அதலாம் மாட்டிக்கிட்டு “எப்டியா இருக்கு”ன்னு அவிய அய்யாட்ட காட்டுனான். “யா ஆடுதானல இப்டி ஆளா வந்து நிக்கி. கோமாளிப்பயல”ன்னாரு. “ஹும்”னுட்டு வந்துட்டான். வைசு இருவத்தாறாயிட்டு. பொண்ணு தர நூறுவேரு ரெடியாதான் இருக்கான்வ. இவெனுக்கு ஒரே கெதக்கம் எவளையாவது நம்மள நெனச்சி கனவு காணவச்சிரணுங்கது தான்.

கணக்குப்போட்டுட்டு வந்த தெக்கூரு பிள்ள எதுர்ல போய் நின்னுக்கிட்டு, “பீடி சுத்த தூளு முக்கியம். சோடியா சுத்த ஆளு முக்கியம். இனும யா ஆளு நீதான்”ன்னு எதோ சொன்னான். அந்தப்பிள்ள பதுலுக்கு ஒண்ணும் சொல்லல. ஆனா சிரிச்சிட்டு. அன்னைக்கி நைட்டே பாண்டியக்கூப்டு பால்பண்ண சுக்காப்பி கடையில மீட்டீங்கப் போட்டான், “மாப்ள இதுவரைக்கும் நம்மள நெறயா பிள்ள விரும்பிருக்குவ. ஆனா நமக்கு இந்த தெக்கூரு காரிதான் சரியா வருவான்னு நெனக்கேன். ஏன்னா அவா சிரிப்புல ஒரு பாசம் இருக்கு பாத்துக்க”. அவென் சொன்னதும் பாண்டிக்கி சிரிப்பு வந்துட்டு. ஏன்னா இவென எந்தப்பிள்ளயும் ஏறெடுக்கலங்கது உள்ளூர்ல இடுப்புல உள்ள பிள்ளைக்கி கூட தெரியும். ஆனா இத சாமிக்கிட்ட காட்டிக்க முடியாது. அதுக்கு ரெண்டு காரணம் இருக்கு. ஒண்ணு சுக்காப்பியும் சீரெட்டும் சாமி வாங்கிக்குடுத்தது. இன்னொண்ணு, சாமி தான் கௌரவம் கொறஞ்சிப்போச்சிங்கத ஒத்துக்கே மாட்டான். பாண்டி கிண்டலா சிரிக்கமாதி சிரிச்சிட்டு, “மாப்ள இந்தமாதி அவா சிரிக்கலல்லா?”ன்னு கேட்டான்.

“இது என்னல சிரிப்பு வெறும் ஆட்டுப்புழுக்க மாதி. அவா சிரிப்பு சும்மா எரும மாட்டுப்பாலு மாதி எவ்ளோ தெம்ப குடுத்துது.”ன்னதும், பாண்டி, “இன்னைக்கி நைட்டு ஆலாங்கொளம் போயி ஒரு படத்தப்பாத்துட்டு ஒரு முடிவ எடுப்போம்ல”ன்னான். ஆடு வித்த துட்டு கொஞ்சம் மிச்சம் இருந்த ஒன்னே சாமியும் சரின்னான். படம் முடிஞ்சி வெளிய
வரும்போது பாண்டி சொன்னான், “பொம்பள சிரிச்சா அதுல ஆயிரம் சங்கதி இருக்கும். எதுக்கும் நாளைக்கி நீ வேற எதாவது ஒரு வார்த்தய சொல்லு. அப்ப அவா சிரிக்கத நான் பாக்கேன். அப்புறம் அவா சிரிப்புல லவ்வு இருக்கா என்னன்னு பாப்போம்”. இதக்கேட்டதும் சாமி யோசிச்சான். “என்னல யோசிக்க?” பாண்டி கேக்கயும், “நாளைக்கி என்ன வார்த்த சொல்லலாம்”னு தான் யோசிக்கேன்னுட்டு வீட்டுல வந்தும் யோசிச்சான். விடியக்காலைல அஞ்சி மணிக்கி சாமி அய்யா வந்து அவென எழுப்புனாரு. “சந்தைக்கி நாம்லாம் போவல”ன்னு வழக்கமா சொல்லுத பதுல சொன்னான். “எந்திரில ஒன்னத்தேடி தெக்கூர்ரு பயல்வ வந்துருக்கான்வ”ன்னு அவென் மூடிருந்த போர்வையில தண்ணிய ஊத்திட்டுப் போனாரு. தெக்கூர் பயல்வ எதுக்கு நம்மள தேடுதான்வன்னுட்டு கொஞ்சம் கொழம்புனான். வந்த நாலு பயல்வள்ல ஒருத்தன் மட்டும் அவென் கிட்ட வந்து அவென் சட்டயப்பிடிச்சான். “ஏலேய் யாரவந்து சட்டயப்பிடிக்க”ன்னு சாமி கத்துனான்.

“சத்தம் போடாம வடக்கனிக்கி வா. சத்தம் போட்டன்னா சங்கறுத்துப்புடுவேன்”னு இன்னொருத்தன் சொல்லயும் சைலன்டா ஆயிட்டான். வடக்க புளியமரத்துல சும்மா இவென சாத்திவச்சி கேட்டான்வ. “நேத்து அந்தப்பிள்ளட்ட பீடிக்கடக்கிட்ட வச்சி என்னல சொன்ன.” சாமி, “எந்தப்பிள்ள”ன்னு கேக்கயும் மூஞ்சில ஒண்ணு விட்டான் ஒருத்தன். அடுத்த நிமிசமே, “நான் எதோ சும்மா ஒரு காமெடி சொன்னேம்ல. அதுக்கு அவா சிரிச்சா. வேற ஒண்ணும் கெடையாது”ன்னான் சாமி. “இங்கபார்ல. ஓங்கூட தான் அவா கடைசியா பேசிருக்கா. அதுக்குப் பெறவுதான் அவா ஓடிப்போனா. அஞ்சலாங்கட்ட காரன்கூட. அதனால அவிய எங்கருக்காவன்னு ஒனக்குத்தான் தெரியும்”னு நாலுவேரும் சாமியப் போட்டு அடிச்சான்வ. சாமிக்கி அவன்வ அடிச்சத விட அவா அஞ்சாங்கட்டளக்காரன் கூட ஓடிப்பேட்டாங்கது தான் ரெம்ப வலிச்சிது. “சொல்லுல’’ன்னு அவன்வ அடிச்சிக்கிட்டே இருந்ததும், “என்னத்தல சொல்லச்சொல்லுதிய. அவாதான் பீடிக்கடக்கிட்ட வா. எனக்கு ஒன்ன பாக்கணும் போலருக்குன்னா.

சாலப்பூருப்பிள்ள என்ன ஒன்சைடா விரும்புனமாதி, இவளும் என்ன ஒன்சைடா விரும்புனா. நான் அதான், பொட்டபிள்ள மனசுல இந்த வயசுல சலனம் வரத்தான் செய்யும். இப்ப சலனப்பட்டு பெறவு சலப்பட்றக்கூடாது”ன்னு புத்தி சொன்னேன். ஆனா அவா சிரிச்சிட்டு பேட்டா” வாயில இந்த அடி வாங்கியும் சாமி, அவென் கௌரவத்த விட்டுக்குடுக்காம பேசுனான். இதக்கேட்ட ஒடனே வந்த நாலுவேர்ல, ஒருத்தன் ஓ,ன்னு அழுதான். பெறவு கூட இருக்க ஒருத்தன், “விடுல. அவா ஒன் மனசுல மட்டும் ஆசய வளக்கல. ஊர்ல மீச மொளச்ச அவ்ளவேரையும் பாத்து பல்லக்காட்டிருக்கா. அதனால நீ தப்பிச்ச. கவலப்பட வேண்டியது நீ இல்ல. அஞ்சலாங்கட்டக் காரன் தான்”. அழுதவன கூட்டிட்டு நாலுவேருமா போய்ட்டாங்க. அவங்களப்பாத்து சாமி, “அப்ப இவெனையும் அவா காதலிச்சாளா”ன்னு சத்தம் போட்டுக்கேட்டான். அவன்வ ஒண்ணும் சொல்லாம போய்ட்டான்வ.

அன்னைக்கி நைட்டு சாமி ரொம்ப தீவரமா யோசிச்சான். பாண்டியும் கூட இருந்தான். “நீ யா மாப்ள டல்லா இருக்க. ஒனக்குத்தான் ஒலகம் பூரா ரசிகைவ இருக்காள்வல. பெறவென்ன’’ன்னு பாண்டி சுக்காப்பி குடிக்கதுக்காண்டி ஒரு பிட்டப்போட்டான். சாமி மனசுல இன்னும் இந்த ஊரு நம்மள நம்மத்தான் செய்யுதுன்னு லேசா பெருமப்பட்டான். இருந்தாலும் இப்டியே எவ்ள நாளைக்கித் தான் ஓட்டமுடியும். வயசான பெறவு வயசுப்பிள்ளிய எதும் நம்மள பாக்காதுவ. அதுக்கப்புறம் ஒரு பிள்ளயையாவது காதலிக்க வச்சிரணுங்க நம்ம கனவு நெறவேறாமலே பேரும்.

அதனால இவென் ஒருத்தன்ட்டையாவது உண்மையை சொல்லிருவோம்னு நெனச்சான். இவென் யோசன தெரியாத பாண்டி, “பேசாம சினேகா மாதி இருக்க அந்த சாலப்பூரு பிள்ளைக்கி ஓக்கே சொல்லிருல”ன்னான். அதுக்குமேலயும் சாமியால பொறுக்க முடியல. “மாப்ள ஒன்கிட்ட ஒரு உண்மைய சொல்லிருதம்ல. என்ன இதுவரைக்கும் ஒரு பிள்ளகூட லவ் பண்ணலல. இதச்சொன்னா நீங்களாம் சிரிப்பியன்னு தாம்ல பெருமைக்கி மாரடிச்சிக்கிட்டு இருக்கேன்”ன்னு ஆத்தாமயோட சொன்னான். பாண்டி இதான் சமயம்னு, “ஊர்ல நெறயாவேருக்கு இது தெரியும்ல. ஒன்கிட்ட சொன்னா நீ எதும் பீல் பண்ணுவன்னு தான் இதலாம் ஒன்கிட்ட சொல்லல. ஊர்ல அவ்ளவேரும் ஒன்ன சிரிக்கதாம்ல செய்தான்வ. அதனால நீ சீக்கிரம் ஒரு கல்யாணத்தப் பண்ணிரு”. பாண்டி அக்கறையா சொன்னான். ஆனா அதுக்குப்பெறவு தான் சாமிக்கி ரொம்ப ரோசம் வந்துது. “இல்லல.

இதுக்கு மேல நான் வீட்ல பாக்க பொண்ண கல்யாணம் பண்ணுனேன்னு வையி, யா லட்சியத்தோட நாக்க நானே வெட்டுனமாதி ஆயிரும். அதனால இனும நான் கல்யாணம் பண்ணுனா அது காதல் கல்யாணம் தான். நீ என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது. எனக்கு லவ்வு செட்டாவ ஒருவழி சொல்லு” அண்ணாமல ரசினி மாதி ப்ளோவா அடிச்சிவிட்டான் சாமி. பாண்டி தீவரமா யோசிச்சான். ரெண்டுவேரும் ஒடனே ஆலாங்கொளம் தேட்ருக்கு படம் பாக்க போனாங்க. அன்னைக்கி காதல் படம் போட்ருந்தான். தேட்ரவிட்டு வெளில வந்த உடனே பாண்டி சொன்னான்.

“மாப்ள இனும சடங்காவுன பிள்ளிய ஒண்ணும் ஒன்ன பாக்காதுவ. ஏன்னா எல்லாபிள்ளியளுக்கும் ஒன்னப்பத்தி தெரிஞ்சிப்போச்சி. அதனால சடங்காவாத பிள்ளய நீ லவ் பண்ணு.” சாமிக்கு பக்குன்னு ஆயிப்போச்சு. “ஏல ஒனக்கு என்ன கிறுக்கு எதும் பிடிச்சிப்போச்சா எப்டில”ன்னான். ஒடனே பாண்டி, “பதறாதல. சடங்காவாத பிள்ளியன்னா பச்சப்பிள்ளியள பாக்கச்சொல்லல. இந்தக்காதல் படத்துல வாற சந்தியா மாதி சடங்காவுத பருவத்துல இருக்கும் பாத்தியா. அதுல ஒரு பிள்ளயப்பாத்து மூஞ்சிக்கி நேரே லுக்கு விட்டன்னா. அது சடங்கானதும் மனசுல ஒன்னத்தான் மொதல்ல நெனைக்கும்.

அது மட்டுமில்ல. அந்தப்பிள்ள சடங்கன்னைக்கி அவா வீட்ல சாப்டவும் செய்யணும். அது ரெம்ப முக்கியம். அப்பிடி நீ சாப்டுட்டன்னா பெறவு கடவுளே நெனச்சாலும் அவா ஒன்ன நெனக்கத மாத்த முடியாது. இது சத்தியம்ல” பாண்டி இவளத்தையும் சொன்னதும் சாமி அமேதியா இருந்தான். சைக்கிளு ஆலாங்கொளத்தத் தாண்டி வட்டாலுர் வழியா காட்டுவழியோடு வரும்போது சாமி பேச ஆரம்பிச்சான். “நீ சொல்லுதது நல்லாதான் இருக்கு. ஆனா நம்ம ஊர்ல சடங்காவுத பருவத்துல இருக்க பிள்ளியள எங்கபோயில தேட.” சாமி சொல்லி முடிக்குமுன்ன, “கையில வெண்ணெய வச்சிக்கிட்டு ஏம்ல நெய்க்கி அலையணும். அதான் ஒங்க தெருவுலே ஒண்ணு சும்மா வெள்ளாட்டங்குட்டி மாதி சூப்பரா இருக்க. அத உசார் பண்ணு”ன்னான் பாண்டி. பாண்டி எந்தப்பிள்ளயச் சொன்னாங்கது சாமிக்கு யாவத்துல வந்ததும், “ஏல அந்தப்பிள்ளைக்கிம் எனக்கும் பதிமூனு வைசு வித்தியாசம்ல” சாமி சொல்லயும், “அடப்பயித்தாரப்பயல. ஒங்கம்மைக்கும் ஒங்கப்பாவுக்கும் பதினைஞ்சு வைசு வித்தியாசம்ல. லவ்வுக்கு வைச விட சைசு தான் முக்கியம். அந்தப்பிள்ள இன்னும் ஒரு ரெண்டுமாசத்துல சடங்காயிரும். பெறவு ஒனக்கு ஈக்கோலா டான்னு வந்துரும் பாரு.”

பாண்டிச்சொன்ன காரணம் சாமிக்கிப்பிடிச்சப் போவயும் மறுநாளே காதல்ல எறங்குனான் சாமி. லேசா மனசு உறுத்துனாலும், நமக்கு இதுதான் கடைசி சான்ஸ் நம்ம எப்பிடியும் ஏமாத்தப்போறதுல்ல. அதனால இது தப்புல்லன்னு மனச தேத்திக்கிட்டான். ஒருவாரமா வசீகரா படத்துல வாற “நெஞ்சம் ஒருமுறை நீ என்றது” பாட்ட பாடிக்கிட்டே அலைஞ்சான். அந்தப்பிள்ளைக்கி இவென் எதுக்கு நம்ம பின்னால அலையுதான்னே தெரியுல.

ஒருநாளு அது பள்ளிக்கூடம் பேய்ட்டு வரும் போது, “ஒருதடைவை சொல்வாயா” ன்னு வசீகரா பாட்ட மறுபடி பாடுனான். அவளுக்கு லேசா வெசயம் புரிஞ்சி அவிய அக்காட்டயும் அம்மைட்டயும் சொல்லிட்டா. அம்மையும் மவளும் சேந்து முண்டசாமி கோயில் கிட்ட வச்சி, சாமிய “நாறப்பயல, அந்தப்பயல இந்தப்பயலன்னு கிழிகிழின்னு கிழிச்சிட்டாவ. அன்னைக்கி நைட்டு சுக்காப்பி கடைல வச்சி பாண்டிட்ட சொல்லி ரெம்ப பீல் பண்ணான்.
“பொம்பளைக்கி வலி வந்தா தான் பிள்ள பெறக்கும். அதமாதி ஆம்பளைக்கும் வலிவந்தா தான் பிள்ள கெடைக்கும்”னு பாண்டி சொன்னான். அவென் சொல்லிக்கிட்ருக்கும் போதே அந்தப்பிள்ள சடங்காயிட்டுங்க தகவல், ரேடியாசெட்டு கட்டுதவன் வழியா கிடைச்சிது. சாமிக்கி பட்டவலிக்கெல்லாம் ஒருவழி பெறக்கப்போதுன்னு நிம்மதியா ஆயிட்டு. “மாப்ள மொதல்ல கௌம்பு. சடங்கு வீட்ல எல்லா வேலையையும் இழுத்துப்போட்டு செய்யி. ஏன்னா அப்பதான் அவா மனசுலா ஆழமா பதிவ. மறக்காம அங்க எல போட்டு சாப்ட்ரு”. அவசரமா பாண்டி இதச்சொன்னான். சாமிக்கு லேசா தயக்கம். “ஏல சடங்கு கழிக்கன்னைத்தான் ஆம்பளைவ போவாங்க சாப்டுவாங்க. இன்னைக்கி தண்ணிவூத்துத நாளுதானல. இன்னைக்கே நான்போனா அவ்ளவேரும் சிரிப்பான மாப்ள.” ன்னான். “அடுத்தவன் சிரிக்கவான்வங்கது முக்கியமில்லல. அவா நம்மள சீண்டணுங்கதுதான் முக்கியம்.” பாண்டி சொல்லயும் சாமி, “அதுமட்டுமில்லல. இன்னைக்கி தான் அவா அம்மயும் அக்காவும் என்ன நாறக்கிழிகிழிச்சாள்வ. நான் இப்பமமே போய் நின்னா என்னல நெனப்பாள்வ”. பாண்டி அதுக்கும் பதுலு வச்சிருந்தான். “ஏல அவா யாரு. ஒனக்கு பக்கத்து வீட்டுக்காரி. இன்னைக்கி அங்க ஒங்கம்ம தான் எல்லா வேலயும் இழுத்துப்போட்டுச்செஞ்சிக்கிட்டு கெடப்பாவ. அதனால துப்புனதிலாம் தொடச்சிட்டு, போயி சடங்கு வேலயப்பாரு. அப்பதான் ஒன் கனவு நெறவேரும்.”

பாண்டி தெம்பு குடுக்கயும் சாமி கௌம்புனான். ரேடியாசெட்டுல, “அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே”ன்னு பாடிக்கிட்டு இருந்துது. அந்தப்பிள்ளையோட கலருக்கும் அவா மூஞ்சில உள்ள களைக்கும் ரெம்ப பொருத்தமான பாட்டு அது. பாட்டுக்கு யாத்தமாதியே சாமியோட அம்ம அந்தப்பிள்ளைக்கி சேலக்கட்டி மஞ்சள் பூசி அழகா தலவாரி உட்ருந்தாவ. அதப்பாக்கயும் சாமிக்கு மனசுக்குள்ள என்னலாமோ ஓட ஆரம்பிச்சிது.

சடங்கு வீட்ல எல்லா வேலையையும் இழுத்துப்போட்டுச் செஞ்சான் சாமி. இதப்பாத்ததும், “ச்சே இவெனப்போயி நம்ம அம்மைட்ட மாட்டிவுட்டுட்டமேன்னு அந்தப்பிள்ள நெனச்சா. அதேமாதி அந்தப்பிள்ளயோட அக்காக்காரியும் அம்மையும் இவெனப் போயி வைதுப் புட்டமன்னு பீலு பண்ணுனாவ. இவிய மூணுவேரு மூஞ்சயும் கவனிச்ச சாமி ரெம்ப தெம்பா வேலப்பாத்தான். கரெக்டா சாப்டுத டைமு வந்ததும், “பிள்ள இன்னைக்கி எவ்ள வேல பாத்துருக்கான் நீ சாப்டுயா”ன்னு ஒரு கெழவி சொல்லயும் சாமி சாப்ட உக்காந்தான். “அங்க சாப்டுதது ரெம்ப முக்கியம்ல. அதமாதி பந்தில உள்ள ஒன்னயும் விட்டுவைக்காம சாப்டுரணும்.

இதுவந்து சும்மா ஒண்ணும் சொல்லல. இதுல ஒரு ரகசியமே இருக்கு. எனக்கு இதப்பத்தி ஒரு சாமியாடி சொன்னாரு”ன்னு பாண்டி சொன்னது நெனப்புல வந்துது. பந்தில பறுமாறினது எல்லாமே சாமி எலைக்கி வந்துது. ஆனா பாயாசம் மட்டும் வரல.

அவென் பாயாசத்துக்காண்டி காத்துட்ருக்கும் போதுதான் சடங்குக்காரி வந்தா. வந்து சாரி நான் உங்களப்புரிஞ்சிக்காம விட்டுட்டேன். எங்க அம்மையும் அக்காவும் ஒங்கள வைததுக்கு மன்னிச்சோங்க”ன்னு அவா சொன்னதும் சாமிக்கி சாப்டுமுன்னே விக்கலு எடுத்துது. அங்கருந்து இதக்கவனிச்சி அக்காக்காரி தண்ணியோட வந்தா. அவா வந்ததும் இந்தப்பிள்ள தூரப்பேட்டு. தண்ணிய அவென் கைல குடுத்துட்டு அவா அக்கா சொன்னா, “சொல்லுதேன்னு தப்பா நெனக்காத. யாந்தங்கச்சி சின்னப்பிள்ள.

அவா மனசுல நீ இப்டி ஆசய வளக்கது தப்புல்லா. அதனால தான் நாங்க ஒன்ன வைதோம். இனும அந்த நெனப்ப விட்ரு. இனும ஒனக்கு நெனக்கதுக்கு வேற ஒருத்தி இருக்கா.” அவா இதச்சொல்லயும் சாமி கொழப்பத்தோட அவளையே பாத்தான். அவா லேசா சிரிச்சா. அவென் அவா சிரிக்கத பாத்துக்கிட்டே அவா தங்கச்சியப்பாத்தான். பெறவு ரெண்டுவேரையும் பாத்தான். ஒடனே அவா சொன்னா.

“நான் சொன்னேம்லா. அவா சின்னப்பிள்ள. பந்தில பாயாசம் கெடைக்கலியேன்னு நெனைக்காத. சாப்ட எடம் கெடச்சிதே நென”. சாமிக்கும் அது சரின்னு பட்டுது. பெறவு பாண்டி இல்லாம இவிய ரெண்டுவேரும் ஆலாங்கொளம் தேட்ருக்கு படம் பாக்கப்போனாவ. அன்னைக்கி சூர்யவம்சம் போட்ருந்தான்.

- மு.ஜெகன்சேட்

1 Comments

Write A Comment