Tamil Sanjikai

கிறிஸ்துமஸ் இரவுகளும், குடிசூடிய பஜனைப்பாடல்களும் ....
---------------------------------------------------------------------------------------------------------
கோடை காலத்தில் கூட ஒரு முழுக்குப்பியை முழுவதுமாக வயிற்றுக்குள் விட்டுவிட்டு, நடுச்சாலையில் பூவைப்போல மலர்தல் ( மல்லாந்து கிடத்தல் ) என்பது தமிழர்களுக்கே உரிய தனிச்சிறப்பு. பானத்திற்கென்றொரு பருவநிலை உண்டென்றால் அது கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களே ஆகும்.

'பானமருந்துதல்' என்பது குளிர்காலத்து ஊசிப்பனியினைக் கூட உடைத்துப்போட்டு விடும் என்பதை அறிந்தவர்கள் அநேகமாக அண்டார்டிகாவில் மட்டுமல்ல புதுக்குணத்தான்புரத்திலும் வசித்தார்கள்.

மார்கழி மாதமென்றாலே பஜனைகளுக்கும், கீர்த்தனைப் பாடல்களுக்கும் பஞ்சமில்லை. அது ஒவ்வொரு கடவுள்களுக்குத் தகுந்தவாறு முன்னிரவு , பின்னிரவு மற்றும் அதிகாலை என மாறுபட்டிருந்தது. அதற்கும் , குடிக்கும் என்ன சம்பந்தம் உண்டென்று கேட்டால் அதற்கான விடை உங்களிடம் இல்லையென்றாலும் கூட புதுக்குணத்தான்புரத்துவாசிகளிடத்தில் உண்டு.

புதுக்குணத்தான்புரம் ஓர் அழகான கிராமம். அங்கு சுமார் ஐம்பது குடும்பங்கள் வசித்தன.

புதுக்குணத்தான்புரத்து தேவாலயத்துக்கென்று தனிச் சிறப்புகள் பல உண்டென்றாலும் எண்பது வருடப் பாரம்பரியமுள்ள அந்தச் சபையை ஸ்தாபித்த வெள்ளைக்கார சாண்டர்சன் ஐயரை அந்த ஊர்க்காரர்கள் அடித்து விரட்டிய சம்பவம் மிக முக்கியமானது,

அப்போது பாதிரியார்களை ஐயர் , நாட்டையர் என்றுதான் அழைத்தார்கள். அவர் தம் வேதாகமத்தைத் திறந்து, அவ்வூரில் குடி கொண்டிருந்த வேதாளங்களை விரட்ட முற்பட்ட போதெல்லாம், பின் வரிசையில் அமர்ந்து பீடிபுகைத்துக் கொண்டிருக்கும் அத்தனை வேதாளங்களும் வெளிநடப்பு செய்வதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தன.

அவர்தம் விவிலியத்தை விரித்து ‘ மதுபானப் பிரியனுக்கு அய்யோ’ ! என்று அவர் கனைத்து, உரைத்த போதெல்லாம், அவ்வூரின் மாம்பட்டைக்கடைக்காரர்களும், உற்சாக பானப்பிரியர்களும் கலங்கித்தான் போனார்கள்.

சிலபேர் பாதிரியார் மற்றும் கடவுளின் கண்ணைத் தப்பி, ஆற்றோரமாய் உள்ள புதர்களுக்குள் ஒளிந்து நின்று குடித்து விட்டு, வாயில் கொய்யா இலையைப் போட்டு சவைத்த வாயோடு ஆலயத்தின் பின்பக்கமாய் வீடு வந்து சேர்ந்தார்கள்.

இப்படியாக நன்மை தீமைகளை அவர்தம் ஊர் மக்களுக்கு விதைத்துக் கொண்டிருக்கும்போதுதான் சாராய வியாபாரி கந்தப்பன் ரூபத்தில் சாத்தானானவன் ஊருக்குள் குடிபுகுந்தான்.

எல்லாரையும் குடிக்கப்புடாது’ன்னு சொல்லிட்டு நீரு மட்டும் குடிக்கீரே'னு சொல்லி, பாதிரியார் ராப்போசனத்துக்கு வாங்கி வைத்திருந்த திராட்சை ரசத்தை கந்தப்பன் தூக்கிக் காட்டவே ஊர்மக்கள் அதிர்ந்தார்கள். அதற்கு பாதிரியார் கூறிய பதில் அவரை புதுக்குணத்தான்புரத்து மக்களால் விரட்டியடிக்க ஏதுவாய் அமைந்தது.

பாதிரியார், அடக் கடவுலே ! அடு ஏஷு க்றிஷ்த்துவின் மெய்யான ரெற்றம்! (அது ஏசுக்கிறிஸ்துவின் மெய்யான ரத்தம் ) என்று கூற , இயேசுவையே கொலை செய்து, ரத்தத்தைக் குப்பியில் அடைத்துக் கொண்டு வந்ததாகக் கருதப்பட்டார். மேலும் இப்படி ஒருகொலைகாரனை நம்பி மோசம் போக இருந்தோமே! என்று சொல்லி நான்கு நாட்களுக்கு முன்பு கோயில் பிள்ளையாக நியமிக்கப் பட்டிருந்த ஏசுவடியான் , கோயில் மணியை இசைக்க உதவும் கொட்டாம்புளியைத் தூக்கி, பாதிரியாரின் மூக்காமண்டையில் வீசினான்.

வாயில் வழிந்த ரத்தத்தைத் துடைத்துக் கொண்டே பாதிரியார் இப்படி சொன்னார்.

ஜீசஸ் ! '' இண்ட புடுக்குநாதபுரத்து குடிக்கார ‘பதர்’களை மன்னியும் '' என்று வேண்டவே,

என்னது ? பொதரா ? நாம புதருக்குள்ள ஒளிஞ்சி நின்னு குடிச்சது இவுருக்கு தெரிஞ்சிருக்குன்னா இவுரு லேசுப்பட்ட ஆளு இல்லை ! கூட்டத்தின் கடைசியில் நின்று பாதிரியாரின் வார்த்தைகளைக் கேட்ட மாசிலாமணி அதிர்ந்தான்.

பக்கத்தில் நின்றிருந்த அய்யாப்பிள்ளை , வேய் ! எங்க தாத்தா புதுக்குணத்தானையா புடுக்கு! கிடுக்கு’னு பேசுகீரு’ன்னு சொல்லி அவரை அடித்து விரட்டினார்கள்.

சராமாரியாக அடிவாங்கிய வெள்ளைக்காரப் பாதிரியார் இறுதியாக,

இண்ட ஊர்க்கார்கள் பூப்பார்கல், காய்ப்பார்கல், கனிகொட்க்க மாட்டார்கல் ! என்று சாபமிட்டார். ( இந்த ஊர்க்காரர்கள் பூப்பார்கள் , காய்ப்பார்கள் , கனி கொடுக்க மாட்டார்கள் )

அதற்கு சிவராமன், '' பூக்கவும் வேண்டாம் , காச்சித் தொங்காண்டாம்.... நீரு வெளிய போவே மொதல்ல! என்று விரட்டினான்.

அப்படியாக, வெள்ளையனே வெளியேறு! என்று முழங்கி, அன்று அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் வேலாண்டி.

நாட்கள் ஓடின... நல்லபடியாக நடந்த உற்சாக பான வியாபாரத்தை முன்னிட்டு சாராய வியாபாரி கந்தப்பன் புது வில்வண்டி ஒன்றை வாங்கியிருந்தான். பானத்தின் எல்லையற்ற உபயோகம் காரணமாக ஆட்களும் வேகவேகமாக மரித்தார்கள்.

தேவாலயம் பானம் அருந்தும் கூடமாக மாறியிருந்தது. ஒரேநாளில் நான்கு பேர் வரை மரித்ததில் சுடுகாட்டில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முக்கியமாக பாதிரியாரை விரட்டியவர்கள் பரமண்டலத்தைத் தொட்டார்கள். இந்தத் தொடர்சாவுகளுக்குக் கூட சாராயம் காரணம் காட்டப்படவில்லை. மாறாக பாதிரியாரின் சாபம்தான் காரணம் என்று மாசிலாமணி ஊர்மக்களுக்கு எடுத்துரைத்தான்.


பாவமும், சாபமும் ஊரைப் பிடித்து ஆட்டுவதாக ஊர்மக்கள் பயந்தார்கள். உடனடியாக ஊர்த்தலைவர் அற்புதராஜ் தலைமையில் செமினேறிக்கு சென்று விண்ணப்பம் கொடுத்ததில், புதிதாக இறையியல் கல்வி முடித்த தேவநேசன் புதுக்குணத்தான்புரத்துக்கு புதிய நாட்டையராகப் பதவியேற்றார்.

அவரது விவிலிய உபதேசத்தாலும், சாராய வியாபாரி கந்தப்பன் எருமை மாடு முட்டியதில் காலமானதாலும், சாவு கொஞ்சம் குறைந்திருந்தது.

சாவு எண்ணிக்கைக் குறைந்ததற்கும் கூட சாராயம் ஒழிந்ததுதான் காரணம் என்று காட்டப்படவில்லை என்பதுதான் விந்தை. மாறாக, தேவநேசனின் வருகையும் , கடவுளின் கிருபையுமே காரணம் என்று கூறி ஊருக்குள் பானம் தடை செய்யப் பட்டது.

அதற்குப்பின் முப்பது வருடங்கள் கழித்துதான் ஊரிலுள்ள இளைஞர்களை உற்சாக பானத்தின் கரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வளைக்கத் தொடங்கியிருந்தன.

அப்போது, வெளிநாட்டு மதுபானங்கள் ஊருக்குள் வந்த காலம்.

வடசேரி மேட்டில் தற்போதுள்ள யூனியன் வங்கிதான் அப்போதைய ஒயின்ஷாப்.

''அயல்நாட்டு மதுபானக் கடை'' என்ற பெயரைத் தாங்கி தமிழ்நாட்டில் கால்வைத்திருந்தது. அதற்கு முன்பு வரை தற்போது வடசேரி பேருந்து நிலையத்துக்கு மேற்கிலுள்ள ஞானதாசன் பாலிடெக்னிக் இருக்குமிடத்தில்தான் அப்போதைய ‘அரசாங்க அரக்கு வடிப்பு சாலை’ அமைந்திருந்தது. அங்குதான் சாராயம் வடித்தார்கள்.

அந்த சாலை இன்று வரை ‘டிஸ்லரி சாலை’ என்றுதான் அழைக்கப் படுகிறது.

அப்போதைய முதல் மந்திரி பயங்கரமான தந்திரி. அரசாங்கமே அரக்கு காய்ச்சி, குடிமக்களின் வாயில் ஊற்றிவிட்டு, சாலையில் நடந்து செல்லும் போது வாயில் ஊதவைத்து , சாராய நெடி வந்தால் பானமுற்றோரை அல்லையிலே நாலு போட்டு, ஆக்கிரமித்துக் கொண்டு செல்லும் ஊதிப் பிடித்தல் முறையைக் கையாண்டார்.

இன்றுவரை தமிழ்நாடு அதே நிலையில் இருப்பதை மதுமக்கள் அனைவரும் ஒப்புக் கொள்வார்கள்.


டிசம்பர் மாதத் தொடக்கத்திலேயே ஒருவித மயக்கம் குடிகொள்ளும். விடியற்காலைகள் அத்தனை அற்புதமாக இருக்கும். வருடத்தின் இடைப்பட்ட காலங்கள் இன்னலாக இருந்தாலும் கூட ஆண்டின் முடிவும், துவக்கமும் மிகவும் குளிர்ச்சியானது, சூடானதும் கூட! அதுதான் பானம் அருந்துதல் தரும்
இதமான சூடு.

பனிக்காலங்கள்தான் அந்த ஆண்டுக்கே அழகு, ஒரு அளவோடு அருந்துவதை நிறுத்தாவிட்டால் , காலையில் விடியலைக் காண கண்கள் தயங்கும் அல்லது அரைமணிநேரங்கள் எடுத்துக் கொள்ளும். ஊரைப் பனி சூழ்ந்து இருக்குமோ ? என்று நினைத்தால் அது தவறு, அவர்களின் கண்களை பானம் சூழ்ந்து இருக்கும் என்பதே உண்மை.

அரையாண்டு பரீட்சைகளின் ஆரம்பமும், முடிவும், விடுமுறையும் என பள்ளிப் பிள்ளைகள் தொடங்கி வெளியூர் மற்றும் வெளிநாட்டுவாசிகள் ஊர் திரும்பும் உன்னத காலம் அது. 25 ஆம் தேதி பிறக்கவிருக்கும் இயேசுகிறிஸ்துவை டிசம்பர் முதல் வாரத்திலேயே வரவேற்கத் தொடங்கி, வீடுகள் தோறும் நட்சத்திரங்களும், குடில்களும், குடியமர்வுகளுமாக அமர்க்களப் பட்டுவிடும்.

அதிகாலைப் புல்வெளிப் பனித்துளியை, வயலில் மேயும் மாடு குடிக்கிறதோ இல்லையோ, தேவாலயத்தின் பின்னால் உள்ள வயலில், கம்பளி விரித்துப் படுத்துக் கிடக்கும் கிருபைமுத்து குடித்து விடுவார்.

அதுதான் பானம் செய்யும் மாயம்.


கிருபைமுத்துதான் கோயில்பிள்ளை (Sexton). கோயிலைக் கூட்டி சுத்தம் செய்வது, பண்டிகைக் காலங்களில் ஆலய அலங்காரம், ஞாயிற்றுக் கிழமை கூட்டத்துக்கு மணி அடிப்பது தொடங்கி , மரிப்புக்கு ஒற்றை மணி அடிப்பது வரை எல்லாமே கிருபைமுத்துவின் கிருபைகள்தான். மாலையில் ரெண்டு குப்பிகளை வாங்கினாரென்றால் இரண்டு நாட்களுக்கு போதும்.

டிசம்பர் முதல் வாரத்திலிருந்தே மாலைநேரத்து பஜனை உலா தொடங்கி விடும். சிறுவர்கள் முதல் இளைஞர்கள், முதியோர் , பானமுற்றோர் என்று பலதரப்பினரும் கலந்து கொள்வார்கள். மாலை ஆறு மணியானால் ஆலயத்துக்கு வெளியே கிருபைமுத்துவை குப்பியும் கையுமாகக் காணலாம். மண்ணெண்ணைக்குப்பி....

ஜெர்மனி நாட்டு பெட்ரோமாக்ஸ் லைட்டின் முன் அமர்ந்து கொண்டு அதை ஒளிர வைக்க ஆயத்தமாவார். ஒரு இளமங்கை, தன் கையில் மருதாணி வைக்கும் லாவகத்தோடு மேண்டிலை அதன்மேல் பொருத்தி, ''புசுக் புசுக்'' என அவர் பம்ப் அடிக்கும் அழகைக் காணவே போட்டி நடக்கும்.

சிறிதுநேரத்தில் லைட்டானது புஸ்ஸ்ஸ்.... என்ற சத்தத்தோடு எரியத் துவங்கும். அப்போது ஒரு பெருமிதத்தை அவர்முகத்தில் காணமுடியும். எழுந்து போய் ஒரு கட்டிங் போட்டு விட்டு, பஜனைக்கான முதல் மணியை அடித்துவிடுவார் ,

பின்பு ஆலய வளாகத்தில் சிறிய அளவில் தீமூட்டி, பஜனைக்குத் தேவையான இசைக் கருவிகளை ஆயத்தப் படுத்துவார்.

சிங்கிள் டிரம் எனப்படும் தோள்களில் மாட்டி இசைக்கும் தோல் கருவியை எடுத்து நெருப்பில் காட்டி முருக்கேற்றுவார். இடையிடையில் அதைத் தட்டி ஓசையின் அடர்த்தியை மெருகேற்றி விட்டு, டாம்பரின் எனப்படும் கையில் வைத்து இசைக்கும் சிறிய வட்ட வடிவ இசைக் கருவியும் தீயில் வாட்டப் படும். சிறிது சிறிதாக ஆட்கள் வரத் துவங்குவார்கள். கெப்பாஸ் எனப்படும் கையில் வைத்து உருட்டும் இசைக்கருவிகளில் இருக்கும் பாசிகளை உருட்டி அதைத் தயார் செய்வார்.

இரண்டாவது மணி அடிக்கும் போது நாட்டையர் தன் அங்கியை அணிந்து கொண்டு வெளியில் வந்து நிற்பார்.

மூன்றாவது மணி அடிக்கும் போது பஜனை உலா துவங்கும், பெட்ரோமாக்ஸ் லைட்டைத் தன் தலைமேல் தாங்கி இருள் விலக்கும் பணி கிருபைமுத்துவுக்கும், சிங்கிள் டிரம் குணசேகரனுக்கும், டாம்பரின் கனகமணிக்கும் வழங்கப்படும். கெப்பாஸ் கிருபைமுத்துவின் மனம் சூழ்ந்த ஏதாவதொரு யுவதியின் கையில் இருக்கும்.

துதிப் பாடல்கள் பாடுவதில் கனகமணிக்கு நிகர் கிருபை முத்துதான் . தலையில் பெட்ரோமாக்ஸ் சகிதம் பாடத் தொடங்கினால், தலையில் மண்ணெண்ணெய் சிந்தி கிருபைமுத்து தீக்குளிக்க நேரிடும் என்பதால் அவர் வாயே திறப்பதில்லை என்றாலும் அவர் லைட் சுமப்பதில் ஒரு காரணம் உண்டு.

கோரஸ் பாடும் இளம்பெண்களுக்கு பாட்டுப் புஸ்தகத்தைப் பார்க்க வெளிச்சம் தேவைப் பட்டதால் அவர்கள் கிருபைமுத்துவை சுற்றி வந்தாக வேண்டிய சூழல் இருந்ததால், அவர்தம் பாடல் துறந்து, அழகான இளம்பெண்களுக்காக ஒளி சுமந்தார்.

பஜனை முதல் தெருவைக் கடக்கும் போது கிருபை இரண்டாவது கட்டிங்கைக் கடந்து விடுவதுண்டு.

குணசேகரன் வாசிப்பில் தோல் பறைகளோடு சேர்ந்து செவிப்பறையும் கிழிந்து விடுமோ? என்று தோன்றும்.

'' குளிரும் பனியும் தொட்டினிலே , கோமகனும் கொட்டிலிலே '' என்று கனகமணி பெருங்குரலெடுத்துப் பாடத் தொடங்கும் போது 25 தேதி பிறக்கவிருக்கும் இயேசு நாதர் அப்போதே பிறந்து விடுவாரோ ? என்ற ஐயம் எழுந்து விடும். அப்படி ஒரு குரல் வளம்.

கிருபைமுத்து, வழி நெடுக பெட்ரோமாக்சை இறக்கி வைத்து வேஷ்டியை அவிழ்த்துக் கட்டும் பாவனையில், ஒவ்வொரு கட்டிங்' கை உள்ளே தள்ளிவிடுவார்.

அப்படியே ஆறு தெருவையும் கடந்து ஆலயத்துக்குத் திரும்பும் போது கடிகாரம் பத்து மணியையும் , கிருபைமுத்து ஆறாவது ரவுண்டையும் கடந்து விடுவதுண்டு. இப்படிதான் தினமும் கழியும்.

எல்லா சபைகளிலும் ஒரு நீக்கம்பு பிடித்த ஆசனவாய்க் காஞ்சான் ஒருவர் இருப்பார். அதே மாதிரியானவர்தான் ஏசுநாதன். அவர் வந்தாலே கூட்டத்தில் ஒரு எரிச்சல் மூண்டு விடும்.

இளைஞர்களின் காதல் கணைகளிலிருந்து கன்னியர்களைக் காக்கும் பொறுப்பை அவர் தானாகவே எடுத்துக் கொண்டார். ஒரு ஆணும், பெண்ணும் பேசினாலே அவருக்குப் பற்றி கொண்டு வரும்.

உடனடியாக சம்பந்தப் பட்டவர்களின் வீடுகளில் சென்று, ஓய் மச்சான் கேட்டுக்காரும் ! ஒம்ம மொவளுக்க போக்கு சரியில்ல! கொஞ்சம் வெலக்கி வையும், அந்த ஜெபராஜிக்க மொவங்கூட இளிச்சி இளிச்சி பேசிட்டு திரியா ! என்று எடுத்துரைத்து, அந்த பிள்ளைகளுக்கு அறையும் வாங்கிக் கொடுத்து, அவர்கள்தம் காதல் பயிரை முளையிலேயே கிள்ளும் அளவுக்கு நல்மனம் கொண்ட எளிய மனிதர் ஏசுநாதன்.

சில இடங்களில் இப்படி தகவல் சொல்லப் போய், எம்மொவள பத்தி எனக்குத் தெரியும்லே ! ஓங் ...... மூடிட்டு போலே! என்று அறை வாங்கிய சம்பவங்களும் நடந்திருந்தன.

இப்படித்தான் ஒருநாள் இரவு நல்ல பனிப்பொழிவு. ஆனாலும் பஜனையில் கூட்டம் அதிகமாக இருந்தது.

ஏசுநாதனால் பாதிக்கப்பட்ட ஒரு பிரகஸ்பதி, ஏசுநாதன் வீட்டு வாசல் படியில் போஸ்டர் ஒட்ட பயன்படும் கிழங்குப் பசையை ஊற்றி வைக்க , காணிக்கை இட வெளியே வந்த ஏசுநாதனின் தாய் சுவிசேஷத்தம்மாள், இருளில் கிழங்குப் பசையைக் கவனிக்காமல், கால் வைத்து வழுக்கி, திண்ணையில் இருந்து குட்டிக் கரணம் அடித்தாள்.

யம்மோ! யய்யோ!

இந்த சத்தம் கேட்டு பின்னால் ஓடி வந்த ஏசுநாதனின் மனையாள் சாலோமி, மிச்ச பசையின் உபயத்தால் அடுத்த கரணத்தை அடித்து தெருவில் உருண்டாள்.

வீட்டுக்குள் எதிரும் புதிருமாகத் திரியும் மாமியாரும் , மருமகளும் தெருவில் ஒருவர் மீது ஒருவர் கிடந்ததை அந்த பஜனைக் குழு கண்டது. இப்படியாக அன்றைய பஜனை முடிவுக்கு வந்து இரண்டு பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டார்கள்.

வீட்டுப் பெண்கள் இரண்டு பேரும் மருத்துவமனையில் கிடந்ததால் ஏசுநாதனுக்கு, புத்தேரி முக்கிலிருந்த ஹோட்டல் கலாவதியில் தயாரான காலாவதியான உணவுப் பண்டங்களே கதியானது.

பத்து நாட்கள் பஜனையும் பாட்டுக்களுமாய் ஓடியதில் கிறிஸ்துமஸ் விழாவும் வந்துவிட்டது. ஆலய ஆராதனை முடியும் தருவாயில் கிருபைமுத்து உட்பட முப்பது பேர் பண்டிகைக்காலக் குடிக்கு ஆளாகி ஆலயத்தின் வெளியே தவழ்ந்து கொண்டிருந்தனர்.

உள்ளே உட்கார இடமில்லாமல் ஆலயத்தின் வெளியே அமர்ந்திருந்த சபையோருக்கு வாழ்த்துக்கள் சொல்ல வந்த நாட்டையரின் கண்கள் விதவிதமான கண்களைக் கண்டன.

அரை உறக்கத்தில் ஒருசில ஜோடிக் கண்களும், மயக்கத்தில் சில ஜோடிக்கண்களும், குறுக்கும் நெடுக்குமாய் ஒருசில ஜோடிக்கண்களும், குடிக்காதது போல் நடிக்க முயன்ற சில ஜோடிக் கண்களுமாய் அமர்ந்திருந்த பானமுற்றோரின் கசங்கிய கண்களுக்கு மத்தியில் கிருபைமுத்துவின் கண்கள் மட்டும் கிறிஸ்து பிறப்பன்று மரித்துப் போயிருந்தது. கோயில் பிள்ளையை ஒரு ஆஃப் பாயில் கண்ணனாய்க் கண்டதில் நாட்டையர் கடும் கோபத்துக்காளானார்.

நல்ல நாளும் பொழுதுமா எதைக் குடித்தீர்கள்? என்று ஆத்திரப் பட்டார்.

அப்போது, '' எல்லாம் வல்ல இறைவனை அறிந்த உமக்கு நாங்கள் எதைப் பருகினோம் என்பது தெரியாதா ஐயா ''? என்ற குரல் கூட்டத்திலிருந்து ஏடாம்பாக கேட்டது.

அதிர்ந்த நாட்டையர் திரும்பி கூட்டத்தில் தேடினார். அந்த குரல் முப்பது வருடங்களுக்கு முன் ஒலித்த புரட்சியாளர் சிவராமனின் மகள் வயித்து பேரன் சிலுவைராஜனுடையது. பானமுற்றிருந்தமையால் இந்த பதில் அவனுக்கு சுலபமாய் கிடைத்தது.

கோபமடைந்த நாட்டையர் வீட்டிற்கு செல்ல ஆயத்தமானார்.

அப்போ பஜனைக்கி போவாண்டாமா? என்று கேட்டவர்களிடம், நான் வரலை ! என்ற பதிலைக் கூறிவிட்டு நாட்டையர் சென்று விட்டார்.

அவரது இந்த அலட்சியமான பதிலானது , பானமுற்றிருந்த உற்சாக பான விரும்பிகளைக் கோபத்துக்குள்ளாக்கியது.

அவுரு வரலன்னா என்ன , பஜன நடக்காதோ ? என்று கூறிக்கொண்டே திடீரென்று விழித்த கிருபைமுத்து, அதுவரை நடந்த சம்பாஷனை தெரியாமல் பெட்ரோமாக்ஸ் லைட்டை எடுக்க கோயிலுக்குள் நுழைந்தார்.....

உடனே, பெண்களும் குழந்தைகளும் நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் வீட்டிற்கு செல்ல ஆயத்தமாயினர்.

பெட்ரோமாக்ஸ் கொளுத்தப்பட்டு, ட்ரம்மும், டாம்பரீனும் பெட்ரோமாக்ஸ் லைட்டின் சூட்டிலேயே டியூன் செய்யப் பட்டன.

அருள்ராஜன் ஓடிப் போய் இரண்டு தலையணையும், தன் மனைவியின் சிகப்பு வர்ண பாவாடையையும், ஜாக்கெட்டையும் ,தனது சிகப்பு சட்டை ஒன்றையும் எடுத்து வந்தான்.

நர்சு மரியம்மாளின் வீட்டிலிருந்து ஒரு சுத்து பஞ்சுப் பொதியும் கொண்டு வரப் பட்டது. அருள்ராஜன் தன் வயிற்றில் இரண்டு தலையணைகளைக் கட்டி, பாவாடையை நெஞ்சில் கட்டிக்கொண்டு, சட்டையை அதன் மேலணிந்து, ஜாக்கெட்டின் கைகள் வெட்டப் பட்டு, அதன் ஒரு துவாரத்தைச் சுருக்கிக் கட்டி அதன் முனையில் ஒரு பஞ்சுப்பந்து அணிந்து தலையில் அணிந்து, முகத்தில் முகமூடி அணிந்து ஒரு கிறிஸ்துமஸ் தாத்தாவாய் உருமாற்றம் அடைந்தான்.

ஏசுநாதன் பலமுறை தடுத்தும் பஜனை கிளம்பத் தயாரானது,

வழக்கமாக பஜனை முடியும் தருணத்தில் பாட வேண்டிய ' சீரேசு நாதனுக்கு ஜெயமங்களம் ' என்ற மங்களப் பாடலைப் பாடி பஜனையைத் தொடங்கினார் அதிசயராஜ்.

வெளியூரில் படித்துக் கொண்டிருந்த பேரின்பமணியின் மகன் தாவீதின்
உபயத்தில் ஒரு கிட்டார் வாசிக்கப் பட்டது.

எல்லாருமே பானமுற்றிருந்ததால், பஜனை வழக்கமான பாதையில் செல்லாமல், ஊரைவிட்டு வெளியே திரும்பியது.

ஏசுநாதன் கத்திக் கொண்டே பின்னால் ஓடியதில், டிரம் இசைக்கும் கம்பால் மண்டையில் இசைக்கப்பட்டார்.

ஆனாலும் பாடல் நின்று விடவில்லை.

மங்களப் பாட்டு முடிந்து, ' பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே ' என்ற பாடலுக்கு தாளம் சடாரென மாறியதில் கிறிஸ்துமஸ் தாத்தா அருள்ராஜன் ஆடத் துவங்கினான்.

வழியில் பானம் அருந்தத் தொடங்கினார்கள்.

கிட்டத் தட்ட மூன்று குப்பிகள் ஒரே பாடலில் தீர்ந்து போகவே, அனைவரின் கண்களுக்கும் தூரத்தில் தெரிந்த வால்நட்சத்திரம் கிறிஸ்துவின் பிறப்பை அறிவித்தது.

அது வால் நட்சத்திரம் இல்லை எனவும், அது ராக்கம்மாளின் சாராயக் கடையில் தெரிந்த விளக்கு வெளிச்சம்தான் என்பதை குறைவாகக் குடித்திருந்த தாவீது புரிந்து கொண்டான் .

கிட்டார் இசைத்துக் கொண்டிருந்த கைகளோடு, தாளத்திற்கு தகுந்தவாறு அசைந்த கால்கள், சாராயக் கடையை நோக்கி சென்றன.

ஜிஞ்சக்கு ! சக்குசக்கு ! ஜிஞ்சக்கு ! சக்குசக்கு ! ணிங் ! ணிங் !


தீரத் தீர அருந்தியதில் எல்லாக் குப்பிகளும் தீர்ந்து போனது. பஜனைக் குழுவைக் கண்ட ராக்கம்மா காணிக்கை போட காசு எடுத்து வைத்தாள்.

அப்போதுதான் அது நடந்தது, கடையின் முன் சென்று, லெண்டு குப்பி சாளாயம் குளு ழாக்காம்மா ! என்ற கிருபைமுத்துவை அங்கிருந்த ஏனைய பானமுற்றோரும், ராக்கம்மாவும் விநோதமாகப் பார்த்தனர்.

பாடல் குழு மொத்தமும், பானத்தின் நிமித்தம் பாடப்பட்டிருந்ததை அங்கிருந்தோர் உணர்ந்து கொண்டார்கள்.

அப்போதுதான் அந்த சம்பவம் தாவீதுக்கு பிடிகிட்டியது. பஜனையின் ஆரம்பத்தில் இருபது பேர் கொண்ட குழு கொஞ்சம் மெலிந்து போனதை அறிந்து அதிர்ந்து போனான்.

கிறிஸ்துமஸ் தாத்தாவோடு சேர்ந்து மொத்தம் 5 பேர் காணாமல் போயிருந்தார்கள். அப்போதும் பாடல் நின்று போய் விடவில்லை.

' ரா...ஜ ராஜ பிதா... மைந்தன் யேசு லாவு சதா.....’ என்ற அவர்களது பாடல் பெத்லகேம் முதற்கொண்டு பரலோகம் வரை ஒலித்தது.

அந்தப் பாட்டோடு சேர்ந்து இரண்டு குப்பிகளும் நிறைவடைந்ததால், அடுத்தப் பாடலைத் தேட பாட்டுப் புத்தகம் திறக்கப்பட்டு ஒரு பாடல் பாடப்பட்டது.

''பூமியின் 'குடி'களே எல்லோரும் கெம்பீரித்துப் பாடுங்கள் '' என்ற அந்தப் பாடலைக் கேட்ட அங்கிருந்த அத்தனைக் 'குடி' மக்களும் தங்களுக்குத் தெரிந்த பாடலை ஆளாளுக்கு பாடத் துவங்கினார்கள்.

அந்த பிரதேசம் முழுவதும் வெவ்வேறு விதமான இசை நாண்களால் நிரம்பி வழிந்தது.

அந்தவேளையில்தான் அதீத சுதிமீட்டலின் காரணமாக, தாவீதுடைய கிட்டாரின் 'E' STRING துண்டாகி, பக்கத்தில் பாடிக் கொண்டிருந்த தேவமணியின் வலது கண்ணில் ராகம் இசைத்தது.

ஓ'வென்று கதறிய தேவமணியுடைய அலறல் சத்தம், பாடிக் கொண்டிருந்த பானமுற்றோரின் காதுகளுக்கு ஒரு ஒத்துப் பாடலாகவே (Hormony or chorus) தோன்றியது.

வலியோடு மயங்கியவனை போதையில் தகர்ந்து விட்டதாகக் கருதி கடையினுள் தூக்கிச் சென்று படுக்க வைத்தார்கள்.


ஒரு சரல் (string ) காணாமல் போனதை அறிந்த தாவீது கூடவே டிரம் சத்தமும் கேட்காததை அறிந்த போது, டிரம் வாசிக்கும் குணசேகரன், தன் அதீத தாளத்தின் வல்லமையால் , செத்துபோன பின்னும் டிரம்மின் தயவால் உயிர்வாழ்ந்த, மூன்று தலைமுறைக்கு முன்னர் வாழ்ந்து மரித்த ஒரு பசுமாட்டின் தோலைக் கிழித்து அதை முழுவதுமாகப் பரலோகத்துக்கு அனுப்பி வைத்து விட்டு வெறும் இரும்புச் சட்டத்தை மாலையாய் அணிந்து கொண்டு கடைக்குப் பின்புறம் படுத்துக் கிடந்தான். அதாவது டிரம்மை கிழித்து, உடைத்துப் போட்டிருந்தான்.

இறுதியாய், மிச்சம் ஐந்து சரல்கள் (strings) கொண்ட கிட்டாரோடு தாவீதும், தன் வெளிச்சத்தின் உதவியோடு வந்த இந்தியர்களின் கண்கள் இருள் சூழ வீழ்ந்து கிடந்தாலும், இன்னமும் அணையாத ஜெர்மனி நாட்டுப் பெட்ரோமாக்சோடு கிருபையும் ஊர் வந்து சேர்ந்தார்கள்.

ஆலய வளாகத்தில் வைக்கப் பட்டிருந்த கிறிஸ்துமஸ் குடிலின் அருகில் தவழ்ந்து சென்று படுத்த கிருபைமுத்து, உறக்கத்தில் தட்டி விட்டதில் பெட்ரோமாக்ஸ் லைட்டானது குழந்தை ஏசுவின் குடிசைக்குத் தீவைத்தது.

ஆலய வளாகத்தில் தீப்பிடித்ததில் ஊரே அல்லோகலப் பட்டது. பானமுற்ற பஜனைக் குழுவால் பற்றியெரிந்த அந்த பண்டிகை நாள் கிருபை முத்துவுக்கு இன்னொரு பெயரை சூட்டியது.

''தீப்பாஞ்சான்''.......

மறுநாள் காலையில் ஊரின் தெற்கிலுள்ள அணைக்கட்டின் சுவரில் சிகப்புப் பாவாடையும், முகமூடியுமாய் கிடந்த கிறிஸ்துமஸ் தாத்தா கண்டுபிடிக்கப்பட்டு ஊர்வந்து சேர்ந்தார்.

போதையில், போகும் வழியில் திக்குத் தெரியாமல், பூக்காரன் மன்னாருவின் வீட்டுக்குள் நுழைந்த சிலுவைராஜன், மன்னாரின் மகள் முனியம்மாளின் அருகில் படுத்துக் கிடந்து, காலையில் பிடிபட்டு , அவசரத் திருமணம் முடிக்கப்பட்டு, தம்பதி சமேதராய் மணக்கோலத்தில் ஊருக்குள் நுழைந்தார்கள்.

டிரம்மின் தோலைக் கிழித்த குணசேகரன் ஒன்பது மணியாகியும் துயில் கலையாமல் தோப்புக்குள் கிடந்தான்.

தாவீதால் தம் கண்களில் கிட்டார் இசைக்கப் பட்டு சாராயக்கடைக்குள் கண்கள் வீங்கப் படுத்துக்கிடந்த தேவமணி, கண்ணில் கரிச்சை( ஒருவித விஷவண்டு ) விழுந்துவிட்டதாகக் கருதப் பட்டு, சாராயக் கடையிலிருந்து நேராக கண்ணாஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டான்.

அதிசயராஜ் மற்றும் ஏனையோர் சாராயக் கடையின் வெளியே ஆங்காங்கே படுத்துறங்கி விட்டு, உடல் முழுக்க புழுதியோடு ஊருக்குள் நுழைந்து, எரிந்து கிடந்த கிறிஸ்மஸ் குடிலையும், கிருபை முத்துவின் கிழிந்து போன கிறிஸ்துமஸ் கோடித் துணியையும் கண்டார்கள்.

ராத்திரி பஜனை உலாவின்போது பாடிக் களைத்துப் போய், வழியில் கண்ட ஏணியில் ஏறி, மேலே கிடந்த வைக்கோல் போரில் கதகதப்பாய்ப் படுத்துறங்கிய லாசர், அந்தோணி, மரியப்பன் ஆகிய மூன்று பேரும் ஊர் வந்து சேர எப்படியும் இரண்டு வாரங்கள் ஆகலாம்.

ஏனென்றால் அவர்கள் ஏறிப் படுத்தது ஒரு வைக்கோல் பாரம் ஏற்றிய லாரியில்.... அது அவர்களைச் சுமந்து கொண்டு எர்ணாகுளம் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது. அப்போதும் அவர்கள் விழித்திருக்கவில்லை. லாரியின் அசைவில் ஒரு உல்லாச ஊஞ்சலின் தாலாட்டில் துயில் கொண்டிருந்தார்கள்.

இப்படியாக நடந்து முடிந்த புதுக்குணத்தான்புரத்து கலவர கிறிஸ்து பிறப்பையும், பாழான இசைக் கருவிகளையும் , பானமுற்ற தங்களது வாரிசுகளான அடுத்த தலைமுறைப் பாவிகளையும், ஏற்கனவே அவ்வூரில் கடைசிக் காலம் வரை வாழ்ந்து கடவுச் சீட்டு வாங்கி கடவுளிடம் சென்று சேர்ந்த சாராய வியாபாரி கந்தப்பன், முன்னாள் கோயில் பிள்ளை ஏசுவடியான், அய்யாப்பிள்ளை, புதுக்குணத்தான்புரத்தின் பெயர்க்காரணியான புதுக்குணத்தான், தீர்க்கதரிசி மாசிலாமணி , சிவராமன், போராட்டக் குழுவிற்கு தலைமை தாங்கிய வேலாண்டி, முன்னாள் ஊர்த்தலைவர் அற்புதராஜ் ஆகியோரின் ஆவிகளோடு கடவுளும் சேர்ந்து கன்னத்தில் கைவைத்துக் கொண்டு, கண்ணீர் மல்க பரமண்டலங்களில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பக்க வாட்டில் நின்று கொண்டிருந்த சாண்டர்சன் ஐயரின் ஆவி மட்டும் எகத்தாளத்தில் பல்லிளித்துக் கொண்டிருந்தது.

- பிரபு தர்மராஜ்

1 Comments

  1. சிரிச்சி செத்துட்டேன்.... யம்மாடி..... கிளைமாக்ஸ் டக்கர்.... அத்தனை பேரும் அந்த ராத்திரி பிரிஞ்சி போய் காலைல ஒன்னு சேர்றதுதான் எபிக்....

Write A Comment