எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த வேளையில் எனக்கொரு மாமா முறையில் மூத்தமாமா ஒருவர் வாழ்ந்து வந்தார். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற அவர் ஒரு சிறிய அளவிலான “கோழி”. கொடியில் காயப் போட்டிருக்கும் சேலையைக் கூட அரைமணிநேரம் வைத்த கண் வாங்காமல் பார்க்கும் வழக்கம் அவருக்கு இருந்தது.
‘காஷ்மீர் அருகிலிருக்கும் பாராமுல்லா என்ற இடத்தில் அவர் பணிபுரிந்ததாகவும், அந்த இடம் மிகவும் அழகாக இருக்குமென்றும், அதைவிட அங்குள்ள பெண்கள் ஆப்பிள் மாதிரி இருப்பார்கள்’ என்றும் அவர் பல கதைகளை எங்களிடம் அடித்துவிடுவதுண்டு. நாங்களும் கூட ‘அங்குள்ள பெண்கள் ஆப்பிள் போலவே உருண்டையாக இருப்பார்களோ’ என்றெண்ணி நகர்ந்து விடுவோம்.
இந்தக் கதைகளின் நிமித்தம் நாங்கள் அவரை ‘பாரமுல்லா மாமா’ என்று பட்டப்பெயர் வைத்து அழைத்து வந்தோம். அவரும் சற்று பெருமையடைந்தார்.
அவரது மகன் விடுமுறை நாட்களில் எங்களோடுதான் ஊர் சுற்றுவான். தோப்பிலுள்ள கிணற்றிலிருந்து பத்து குடம் தண்ணீர் இறைத்துத் தந்தால் எங்களுக்கு அம்மா பத்து ரூபாய் பரிசாகத் தருவது வழக்கம். நாங்களும் அந்தக் காசைக் கொண்டு போய் முத்து தியேட்டரில் ஆங்கிலப் படங்களைக் காணுவது வழக்கம். மூன்றாம் வகுப்பு டிக்கெட் ரூ 2.15 பைசாக்கள்.
அப்போது ‘கோஸ்ட்- தி எரோடிக் ஸ்டோரி’ என்றொரு படம் திரையிடவிருப்பதாகவும், அது ஒரு பயங்கரமான பேய்ப்படம் என்றும் சொல்லிக் கொண்டார்கள். நான் வீட்டில் போய் அம்மாவிடம் ‘’கெணத்துல இருந்து தண்ணி எடுக்காண்டாமா?’’ என்று கேட்டதும், ‘என்ன சோக்கேடு?’ என்பது அம்மாவுக்கு புரிந்து விட்டது. எல்லா அண்டாவும் நெறஞ்சிட்டு! ரெண்டு நாளு கழிச்சி கோருனாப் போதும்! என்று சொல்லி விட்டாள்.
பாட்டி ஒருத்தி பரலோகத்துக்கு பாஸ்போர்ட் எடுத்துவிட்டதால் அன்று ஊருக்குள் துஷ்டி வீடு.
நிவர்த்தியே இல்லை! படம் பார்க்கணும்! பைசா வேணும்! என்ன செய்யலாம் ?
என்று யோசித்ததில் மாமா நியாபகத்திற்கு வந்தார். அவரது மகனிடம் சொல்லி அவரது பாக்கெட்டுக்குத் தீவைத்து அமவுண்ட் தேற்றியதில் முதல் ஆளாய் தியேட்டரில் போய் நின்றாகி விட்டது.
டிக்கெட் எடுத்து உள்ளே போனால் டிக்கெட் கிழிக்கும் தாத்தா சொன்னார், லேய் சின்னப் பயக்கள்’லாம் இந்தப்படத்த பாக்கப்புடாது!
நாங்கல்லாம் பயப்புட மாட்டோம் பாட்டா ! நீரு டிக்கெட்ட மட்டுங் கிழிச்சா மதி!
என்று சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தால் அங்கே இருந்தவர்கள் எல்லாரும் முப்பது வயதுக்கு மேலுள்ளவர்கள். படம் போட்டார்கள். பேய்கள் கும்பலாய் வந்து மாற்றி மாற்றி அடித்துக் கொண்டன. ஒரு உள்ளாடை வாங்கக் கூட இயலாமல் மிகுந்த வறுமையில் வாடுகின்றன என்று நினைக்குமளவுக்கு இருந்தன அந்தப் பேய்கள். உடைகளை வெறுத்தாலும் கூட அழகான பேய்களாக அவைகள் இருந்த பட்சத்தில் எங்களுக்குப் பய உணர்வு வரவில்லை, மாறாக மட்டற்ற மகிழ்ச்சி மாத்திரமே எழுந்தது.
இடைவேளை விட்டார்கள்.
அப்போதுதான் நான் அவரைக்கண்டேன். அவர்தான் எங்கள் பாஸ்டர். கையில் பைபிள் வைத்திருக்கும் சூட்கேஸ் மற்றும் அங்கி அணிந்தவாறே எழுந்து வெளியில் சென்றார்.
கிழவியின் அடக்க ஆராதனையை முடித்து , கிழவியை குழிக்குள் கிடத்திவிட்டு, நேராகப் பாய்ந்து வந்து தியேட்டருக்குள் குதித்திருப்பார் என்று எண்ணுமளவுக்கு தன்னுடைய பிரசங்க அங்கியோடும், சாவுக்கு மட்டும் அணியும் கருப்பு கழுத்துப் பட்டையும் அணிந்த வண்ணம் வந்திருந்தார்.
இது ஒற்றைக்கண் பேய்கள் நடமாடும் படம் எனத்தெரியாமல் உண்மையான பேய்ப்படம் என்று நினைத்து வந்திருப்பாரோ என்று பேசிக்கொண்டோம். ‘யாரும் பார்த்து விடக்கூடாதே’ என்ற எண்ணத்தில் இடைவேளையில் நாங்கள் யாரும் வெளியே போகவில்லை.
‘படம் அற்புதமாக இருக்கிறதே!’ என்று வருந்தி பாஸ்டர் வீட்டுக்குப் போயிருக்கக்கூடும்’ என்று நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே பாஸ்டர் உள்ளுக்குள் நுழைந்தார். கக்கூசுக்குள் வைத்து அங்கியைக் கழற்றி விட்டு சிவில் டிரெஸ்ஸில், கையில் ஒரு கோல்ட் ஸ்பாட் குப்பியோடு வந்தமர்ந்தார்.
எங்களுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. விதி யாரை விட்டது? படம் துவங்கியதுதான் தாமதம், நாங்கள் கீச்சுக்குரலில் விளிக்க ஆரம்பித்தோம்,
ஓய் நாட்டையர் மாமோவ் !
ஓய் பரலோகமணி !
அங்கிய எங்கவோய் ?
கெழவிய பொதச்சேளே ! கெழவி என்ன சொன்னா ?
எங்கள் சத்தத்தைக் கேட்டு பக்கத்திலிருந்த ஆடியன்சுகள் கோபித்துக் கொண்டார்கள்.
எலே... நீங்க இப்புடி கூவுனா ஆளுவ படம் பாக்காண்டாமாடே? புரிய மாட்டேங்குல்லா ? என்றான் ஒருவன்.
எண்ணே ! ஒங்களுக்கு சைனீஸ் மொழிலாம் தெரிமா?
என்று நான் கேட்டதுதான் தாமதம் ஒருவன் அடிக்க வந்துவிட்டான். நாங்கள் பொத்திக் கொண்டு படம் பார்த்ததில் பாஸ்டர் தப்பினார். படம் முடியுமுன்னரே வெளியில் எழுந்தும் போய்விட்டார். படம் கொடுத்த கிளுகிளுப்பில் நாங்கள்தான் அவர் வெளிநடப்பு செய்ததைக் கவனிக்கவில்லை.
நாங்கள் படம் முடிந்து வந்தவுடன் பாராமுல்லா மாமா அவரது மகனைத் தூக்கிப் போட்டுத் துவைத்துவிட்டு, எங்களோடு சேர அவனுக்குத் தடை விதித்து விட்டார்.
பத்து ரூவா எடுத்தது ஒரு குத்தமாடே? நம்மளயும் கேவலப்படுத்திட்டானே இந்த மாமா கொச்சங்கா மண்டையன்? அடேய் பாரமுல்லா ! இனி நாந்தாண்டா ஒனக்கு பாரம் ! என்று கங்கணம் கட்டிக் கொண்டேன்.
தினமும் ரெண்டு ஷோ’க்கள் விகிதத்தில் அந்த கோஸ்ட் படத்தை பத்துமுறை பாராமுல்லா பார்த்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரித்தால் அது பொய்யான தகவல் என்பதும், சோத்துப் பொட்டலத்தோடு தியேட்டர்வாசலில் படுத்துக் கிடந்து, ஒருநாளில் நான்கு ‘ஷோ’க்கள் வீதம் ஆறு நாட்களில் 24 காட்சிகள் பார்த்திருக்கிறார் என்று தெரிந்தது.
இதை அவரது மனைவியிடம் போய் சொன்னால் கூட ‘அவள் என்ன தியேட்டரில் போய் பார்க்கவா போகிறாள்? என்று விட்டுவிட்டோம். அதுமட்டுமல்ல பாரமுல்லாவின் மனைவி ஒரு காந்தாரி. வாய் வடசேரி வரைக்கும் நீளம். பாரமுல்லாவின் ஆகப்பெரிய பாரமும் அவள்தான். இந்தப் பாரமுல்லாவை வஞ்சம் தீர்க்க பிரபஞ்சம் வேறு வழியில் எங்களுக்கு அருளியது.
ஒருநாள் பாரமுல்லா குடும்பத்தோடு டவுனுக்கு போயிருந்த நேரத்தில் போஸ்ட்மேன் அவரது வீட்டின்முன் வந்து தேடவே ரெஜிஸ்டர் போஸ்ட் ஒன்றை எங்களிடம் தந்து அவரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டார். நான் வாங்கிப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன்.
பாரமுல்லா வீடுதிரும்பியதை அறிந்து கொண்ட நான் அவரது வீட்டின் வாசலில் நின்று கொண்டு அவரைக் கூப்பிட்டேன். அவரது மனைவி வந்து கேட்டாள்.
என்னடே காரியம்?
மாமாக்கு லெட்டர் வந்துருக்கு!
எங்கிட்ட கொண்டா ! நாங் குடுத்துக்கிடுதேன் !
மாமாகிட்டதான் குடுக்கணுமாம்! ரகசியம் ! மிலிட்டிரிகிட்ட இருந்து ரிஜிஸ்டர் போஸ்டுல வந்துருக்கு!
என்னைப் பார்த்துக் கொண்டே வீட்டுக்குள் பார்த்து குரல் கொடுத்தாள், எப்பா இந்த பயல் என்னவோ ராணுவ ரகசியமாம் ! ஒம்மகிட்டதான் தருவானாம்!
உள்ளேயிருந்து உருமிக் கொண்டே வெளியில் வந்தார் பாராமுல்லா.
என்னல விசியம் ? மொண்ணப் பயல் !
நான் சொன்னேன், இந்த லெட்டர ஒம்மகிட்ட ரெகசியமா குடுக்கணும்னு போஸ்ட் மென் சொன்னாரு !
‘கொண்டா பாப்பம்’ என்றவாறே லெட்டரை வாங்கிப் பார்த்தவரின் முகத்தில் குழப்ப ரேகை. என்னிடம் சொன்னார், எலேய் நீதான் நல்லா இங்கிலீசு வாசிப்பல்லா ! இந்த செவத்த படிச்சி சொல்லு ! எழவுல இந்தின்னாக்கூட நாம் படிச்சிருவேன் ! என்றார்.
என் மண்டைக்குள் காத்திருந்த நரி கடிதத்தைப் படிக்கத் துவங்கியது.
அதாவது, “திரு.பாரமுல்லா அவர்களே ! உங்கள் மகன் இங்கு மிகவும் கஷ்டத்தில் உழல்கிறான். அவன் சொல்லச் சொல்ல நான் எழுதும் மடலாவது, அப்பா ! நீங்கள் ரிட்டயர்டு ஆகிப் போனபிற்பாடு காஷ்மீர் எங்களுக்கு கவலையின் நகரமாக மாறிப் போயிருக்கிறது. அம்மாவின் முகம் ஆப்பிள் போலவே வாடிப் போய் விட்டது. எங்கள் மூத்த தாயையும், சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு காஷ்மீருக்கே வந்துவிடுங்கள் அன்புத் தகப்பனே ! இப்படிக்கு, வி.பி.சிங்”
என்று நான் முடிக்கவும் பாரமுல்லா பரண்மீது தொங்கிக் கொண்டிருந்தார். முற்றத்தில் காயப்போட்டிருந்த விறகுக்கட்டை சத்தமாக அடிமழை பொளிந்து கொண்டிருந்தது.
சாவு தா....ளி ! நான் வீட்டுக்கு வந்துவிட்டேன்.
மேலெங்கும் வழிந்த ஒத்தட எண்ணையோடு வேறு ஒரு மொழிபெயர்ப்பாளரின் உதவியோடு மொழிபெயர்க்கப்பட்டு உண்மை தெரிந்திருக்கிறது.
அந்தக் கடிதமானது இந்திய ராணுவத்தில் இருந்து பென்சன் விஷயமாக பாரமுல்லாவின் உயிர்த்திருப்பு குறித்த உறுதிக்காக தற்காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு குடும்ப போட்டோ அனுப்புமாறு வந்திருந்தது. வருடாவருடம் அதுமாதிரி வரக்கூடியதுதான் என்றாலும், இந்த ஆண்டு அதிசயமாக ஆங்கிலம் படித்து வைத்திருந்த சப்பாத்தி ஒருவன் பாரமுல்லா மாமாவை ஒரு பெரிய மேதாவி என்று எண்ணி ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறான்.
பாரமுல்லா நேராக எங்கள் வீட்டின் முன்வரவே அப்பா செடிக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டு நிற்பதைப் பார்த்து ,
ஓய் மச்சான் ! ஒம்ம மொவன் பாத்த வேலை தெரியுமா உமக்கு ?
பாரமுல்லாவின் கோலத்தைக் கண்ட எங்கள் அப்பா அவரிடம், என்னவோய் ! லாரீல அடிபட்டுட்டீரா ? என்று கேட்கவே பாரமுல்லாவுக்குக் கண்ணீர் கட்டிவிட்டதில் கதை வெளியில் வந்தது. அப்பாவும் சிரித்துக் கொண்டே, சின்னப் பயல்கிட்ட லட்டர் குடுத்தாம்லா ! அந்த போஸ்ட்மேன் மண்டப்பயல்’கிட்டப் போயி கேளும் ! என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.
அப்பா நேராக என்னிடம் வந்து, அந்த பாரமுல்லாவா யாம்டே தண்டவாளத்துல படுக்க வச்சிருக்க ! செவம் ஒனக்கு வேற வேலையே கெடையாதா ? என்று சலித்துக் கொண்டார்.
நான் ராணி காமிக்ஸில் டெக்ஸ்வில்லரின் “பாதாளத்தில் ஒரு படுக்கையறை“ படித்துக் கொண்டிருந்தேன்.
அடுத்தநாள் பாரமுல்லாவும், அவரது மனைவியும் போஸ்ட் ஆபீஸில் போய் போஸ்ட்மேனிடம் சண்டை இழுக்கவே, போஸ்ட்மேன் இப்படிச் சொல்லியிருக்கிறார்.
எண்ணே ! நா ஒங்ககிட்டதான் லெட்டர தரணும்னு நெனச்சிருந்தேன். நா அன்னிக்கி வரும்போது நீங்க அந்த பரிமளாக்கா’கிட்ட ரொம்ப ரகசியமா பேசிக்கிட்டிருந்தீய ! நாந்தான் எதுக்கு இடைஞ்சல் பண்ணணும்னு திரும்பி வந்துட்டேன். அடுத்த நாள் வரம்போ ஒங்க வீடு பூட்டிக் கெடெந்திச்சி.... முக்கியமான லெட்டர்லா ! அதான் கொடுத்தனுப்புனேன்.... போட்டுமாண்ணே ! என்று கேட்டுவிட்டு நடையைக் கட்டியிருக்கிறார்.
பரிமளாதான் அந்த ஊரின் தாகம் தீர்க்கும் தண்ணீர்க்குடம் ! இனிமேலும் பாரமுல்லாவின் பரிதாபத்தைக் கேளீரோ மாக்காள் !
-பிரபு தர்மராஜ்
0 Comments