Tamil Sanjikai

இத்தனை பேன்களை எந்த இழவில் ஓட்டிக்கொண்டு வந்தாளோ கிழவி! சொதும்பச் சொதும்பத் தேங்கெண்ணெய் தேய்த்துப் பேன் சீப்பை வைத்து அழுந்தச் சீவினால் கொட்டைமுத்து கணக்காய்ப் பேன்கள் உப்பாய் உதிர்ந்தன. “அடக் கெரவத்த” என்று ஈர்கோலியைப் போட்டு ஈத்தி நசுக்கினால் 'சடிப்படிச் சடிப்புடி' என்று பட்டாசு வெடிப்பதைப் போல அத்தனை சத்தம். மூன்று நாட்களாக ஈத்தியதில் அன்றைக்குப் பேன்கள் தட்டுப்படவில்லை. முடியை இரு கரைகளாக வகிர்ந்து வகிர்ந்து ஈர்களையும் குஞ்சுகளையும் இருகைப் பெருவிரல் நகங்களுக்கிடையிலும் வைத்துக் கொள்ளுப் பட்டாசுகளாய் வெடித்துக் கொண்டிருந்தேன். அமத்தாளுக்குத் தூக்கம் சொக்கிவிட்டது. நான் ஈரை நசுக்கும்போதெல்லாம் தலையைக் கண்டபடி அலையவிட்டாள். சரி ஏதாவதும் சுவாரசியமாகப் பேச வைத்து அவளைத் தூங்காமல் பார்த்துக்கொள்வோம் என நினைத்து “தேனமத்தா… அமத்தோவ்… ரண்டாவது ஒலகப் போரு நடக்கையில ஜெர்மனிக்காரங் குண்டுபோட வந்தானாமா ஒனக்குத் தெரீமா?” என்றேன். அந்த வாரத்தில் எம்டன் கப்பல் சென்னையின் மீது குண்டு வீச வந்ததை எனது வரலாற்றாசிரியர் விளக்கோ விளக்கு என விளக்கியிருந்தார். பத்திப் போட்டதும் பக்கெனப் பற்றிக்கொள்ளும் சீமெண்ணெய் தெளித்த விறகைப் போலத்

“தெரியாத என்ன கண்ணு? அப்ப உம்பட பெரீப்பெ நாலு மாசொ வவுத்துல”

என்றாள். அமத்தா என்றால் எனது அமத்தாவின் அம்மா. எனது அம்மாவும் சித்திகளும் அமத்தா எனக் கூப்பிடுவதைப் பின்பற்றி நாங்களும் அமத்தா என்றே கூப்பிட்டுப் பழக்கப்பட்டுவிட்டோம். குழப்பம் வராமலிருக்க அமத்தாவை அம்மாயி எனக் கூப்பிடுமாறு எங்களைப் பழக்கியிருந்தார்கள்.

கோழித்தூக்கம் போட்டுக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து எனக்கு வாகாய்த் தலையைச் சாய்த்து விட்டுத் தொண்டையைச் செருமினாள். கயிற்றுக் கட்டிலில் கோவணத்தைத் தளர்த்திக்கொண்டு படுத்திருந்த ஐயன் புரண்டு படுத்தது. அதன் முதுகில் கட்டில் கயிறுகளின் அழுத்தம் நிறைந்துகிடந்தது.

“அந்தன்னக்கிச் சாமீ… நம்பு கீகாட்டுல கல்லக்கா பொறிச்சூட்டிருந்தோ. திடீர்ன்னு மோடம் போட மண்டக்கட்டுக்குள்ள ஒரே வேக்காடு. பொடணியெல்லா தலக்கித் தண்ணியூத்துனாப்பல ஒரே ஈரொ. மண்டக்கட்ட அவுத்துப் போட்டு மிந்தாணிச் சீலைல தலையத் தொவட்டீட்டிருக்கொறொ மானத்துல சடச்சடார்னு வேட்டுப் போட்டாப்பல ஒரு சத்தம். மானந்தா எடறுமாட்டொன்னு அன்னாந்து பாத்தாக் கண்ணப் பளீர்ங்குது”

“மின்னலா அமத்தா?”

“அட ஆண்டவனெ! அப்புடித்தாஞ் சாமீ நாங்களூ நெனச்சொ. ஆனா மின்னலில்லெ. ஏராக்கப்பலு!”

“ஏராக்கப்பலா?!”

“ஆமா சாமீ. வெள்ளி மீனாட்டொ மானத்துல இருந்து கீள பாயுதா!”

“அடச் சீரளுவே?!”

“ஒரு நிமசொ தென்னன்னு சுதாரிக்கறதுக்குள்ள குடீர்ன்னு குண்டத் தூக்கிப் போட்டுட்டான்”

“குண்டா!”

“ஆமாஞ் சாமீ… குண்டுன்னாக் குண்டு அத்தச் சோடு. நல்லா நாலு கோசப்பளத்து ஒரப்பு! பொவையக் கக்கீட்டு அப்புடியே எங்கு தலக்கி மேல வருதா…!”

“ஐயோ அப்பறொ என்னாச்சு?!”

“அள மாரியாயீ கோட்டமீனீப்பான்னு மையம் பறந்தூட்டுத் திக்காலுக்கொன்னா ஓடறொ”

“பாவத்த!”

“இப்பக் கோடக் கொலையெல்லா நடுங்குது சாமீ. கூ கொலேன்னு ஒரே சத்தொ. ஆளாளுக்குப் பதட்டத்துல உளுந்துங்கட்டி ஓடீட்டிருக்கறொ. குண்டுச் சத்தொங் காதடைக்கிது. என்னமோ ஒரு எண்ணொ. ஓட்டத்த நிறுத்திப் போட்டு நின்னவொ தலக்கி மேல கையெடுத்துச் சாமி சாமியா இருப்பீடாப்பா எங்களய உட்ருங்கோ. பொண்டு புள்ளீகொ மேலயா குண்டப்போடுவீங்கொ? ன்னு கத்தறெ”

“!”

“எம்பட சத்தொ ஏராக்கப்பல்ல இருக்கறவுனுக்குக் கேட்டே கேட்ருச்சா!”

“உம்பட சத்தந்தா ஊரையே தூக்கீருமெ”

“முத்தாத சுளுக்கானிக் கதுரு மசுத்துக்காரனொருத்தெ எட்டிப் பாக்கறா. அப்பத்தேங் கண்டுபுடிச்செ அவெ வெள்ளக்காரன்னு. அடச் சண்டாளப்பாவீ… ன்னு வாயில வந்துச்சு. ஆனா அடக்கிப்போட்டு அடச் சாமி தொரமாரே எங்களயக் கொன்னுபோடாதீடாப்பா. சாமி சாமியா இருப்பீன்னு கெஞ்சிப்போட்ணெ”

“ஐயோ தப்பறொ தென்னாச்சமத்தா?”

“என்ன நெனச்சானொ மவராசெ. சொரவாணமாட்டொ ஏராக்கப்பல எறக்குனே. உளுந்தூட்டிருந்த குண்டுக்கு நேரா நிறுத்தி ஒரு கைய வெளிய நீட்டிப் பந்தப் புடிக்கறாப்பல ரவக் குன்னு குண்டப் புடிச்சு ஏராக்கப்பல்ல போட்டூட்டுக் களுவாட்டப் பறந்து போய்ட்டான்!”

கயிற்றுக் கட்டில் முறிவதைப் போலச் சத்தங்கேட்டது. வெடுக்கென்று எழுந்து உட்கார்ந்த ஐயன் மசை நாயைப் போல மூஞ்சியை வைத்துக்கொண்டு அமத்தாளைப் பார்த்துக் கேட்டது.
“ஏளெ புரடையடிக்கறதுக்கூம் ஒரு கணக்கில்லையாளே?”

“ஆர்றா புரடையடுச்சாங்கொ? கெளுட்டுத் தாயோளி”

அமத்தாளும் வெடுக்கெனக் கையூன்றி எழுந்துகொண்டது. தொண்டுப்பட்டிப் பந்தக்காலில் சாய்ந்திருந்த நான் தான் தடுமாறிப் போனேன்.

“நானுல்லொடா அந்தன்னக்கி அத்தன பேர்த்தீங் காப்பாத்துனவொ”

“அப்புடியே வெச்சுக்குவும்லெ கெளுட்டு முண்ட. அப்பொ அந்தன்னக்கி நானெங்களே போயிருந்தனாமா?”

“உம்பட கூத்தியோட்டுக்கடா தெள்ளவேரி”

ஐயன் அதற்கப்புறம் வாயைத் திறக்கவே இல்லை
.…….

அது எங்கள் நடு மாமன் பொண்டாட்டி பொழைக்க மாட்டேன் எனச் சூளுரைத்துவிட்டுப் பிறந்தவீட்டுக்குப் போன நாலாவது மாசம். எந்தப் பஞ்சாயத்திற்கும் அவள் அசரவில்லை. என்ன காரணம் எனவும் சொல்ல மறுத்து “எனக்குப் புடிக்கில. வெட்டியுட்ருங்கொ” என அடம்பிடித்தாள். டாக்குட்டருக்குப் படித்த தனது அதிசயப் புத்திரன் பிழைப்பு இப்படி ஆகிவிட்டதே என மருகிய எனது அம்மாயி அப்பச்சியை நச்சு நச்சென்று நச்சி அம்பாசிடரைக் கிளப்ப வைத்து விட்டாள்.

ஆசாரத்தில் தென்னந் தடுக்குகளை வைத்து மறைத்து அறை உண்டாக்கி நடுவில் பலகையிட்டுச் சம்மணம் போட்டு அமர்ந்திருந்தார் ஜோசியர். அவருக்கும் முன்பாக அவர் நெஞ்சளவுக்கு ஒரு சிறிய எழுத்து மேசை. குனிந்து குனிந்து எழுதிச் சற்றுக் கூன் விழுந்திருந்தது. வண்டிச் சத்தம் கேட்டதுமே தனது கொடாப்பிலிருந்து எட்டிப் பார்த்தவர் நாங்கள் உள்ளே நுழைகையில் “வாங்க வணக்கம்” எனக் கையெடுத்தார். கெட்டிச் சரக்கு செட்டி முறுக்கு என்பார்களே அப்படியொரு முறுக்கு அவரிடத்தில். அவரைக்கூட ஏதோ ஒரு அரைச் செட்டி என்று சொல்லியிருந்தாள் அம்மாயி. தோரணையுடன் ஒரு வணக்கத்தைப் போட்ட அப்பச்சி அவருக்கு அல்லையில் உட்கார்ந்து கொண்டது. வழக்கம் போல நான் அதன் அருகில் உட்கார்ந்து கொண்டேன். அம்மாயி அவருக்கு நேராகச் சம்மணம் போட்டு அமர்ந்துகொண்டாள்.

மாமன் சாதகத்தையும் அத்தை சாதகத்தையும் பார்த்து மெல்லிய ரீங்காரம் போலத் தனக்குள்ளேயே பாடியபடி ஏதேதோ குறிப்புகளையும் கட்டங்களையும் எழுதிக்கொண்டிருந்த அவர் தனது தடித்த கண்ணாடியைக் கழற்றியவாறு ஒரு கனைப்புக் கனைத்துவிட்டு

“அநியாயமா அந்தம்மாளக் கொன்னுபோட்டானுக பாத்தீங்களா?” என்றார் அப்பச்சி பக்கமாய்த் திரும்பி. அப்பச்சி ஏதோ சொல்ல வாயெடுத்தது. அதற்குள்

“வேலியே பயர மேயும்ன்னு செலவாந்தரஞ் சொல்றது செரியாத்தானுங்க போச்சு?”

எனச் சொல்லி முடித்திருந்தாள் அம்மாயி.

நெகு நெகு என்று சீவிக் கொண்டை வலையிட்டு முடித்திருந்த அவள் குடுமயும் அதன் மீது ஜம்மென்று உட்கார்ந்திருந்த இரண்டு கண்ணி மல்லிகைப் பூக்களும் தேய்த்துக் கவனமாக மடிப்பெடுத்துப் புறங்கொசுவம் வைத்துக் கட்டியிருந்த கோவைக் காட்டன் புடவையும் மேட்சிங் ப்ளௌசும் மஞ்சள் முகமும் நெற்றித் திருநீறும் சிவந்த குங்குமமும் அம்மாயிக்கு எப்போதுமே ஒரு கம்பீரமான தோற்றத்தைத் தந்துவிடுமென்றாலும் அவற்றையெல்லாம் மிஞ்சிவிடும் அவளது எடுப்பான பேச்சு.

“ஏனுங்கம்மா நீங்க ரேடியா நூஸெல்லாங் கேக்கறதுண்டுங்ளா?” ஜோசியர் அம்மாயி பக்கம் தலையைத் திருப்பிக் கொண்டார்.

“நீங்க வேற. அவனென்னத்தீங்கொ சேதீல சொல்றது? அந்தம்மாளச் சுட்ட சத்தந்தே அப்புடி எங்கு கலுங்கு வரைக்கீஞ் செலையோடுச்சே”

“செலையோடுச்சே” என்ற வார்த்தை எனக்குப் புரியவில்லை. சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு பறப்பதுபோன்ற அனுமனின் ஓவியம் வரைந்த ஏபிடி பார்சல் சர்வீஸ் வண்டிகளை நினைத்துக் கொண்டேன்.

“என்னம்மா சொல்றீங்கொ? நெசமாலுங்ளா?”

“இதுல பொய்யச் சொல்லொ என்னிருக்குதுங்கொ? கெணத்தடியில வட்டச் சொம்பு வெளக்கீட்டிருந்தவொ வேட்டுச் சத்தங் கேட்டதீம் போசீக் கீள போட்டுப் போட்டு வாசலுக்கு ஓடிப்போனெ. செத்த நேரத்துல இந்தரா காந்தியச் சுட்டுப் போட்டானுகொன்னு நூஸு வந்துட்டுது”

ஜோசியர் குறு குறுவென அம்மாயியையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“மூனு தடவ டுவாய்க்கிச் சத்தம் கேட்டுச்சுங்கொ” என்றவள் ஜாக்கெட்டுக்குள் கையை விட்டுப் பர்சை எடுத்து எதற்காகவோ திறந்தாள். நூறு ரூவாய் நோட்டுக்களாகத் தென்பட்டன.

“அட ஆமாங்கொ. இங்கயீந்தானுங் சத்தங் கேட்டுச்சு” என்றார் புருவத்தை உயர்த்தியபடி. நெற்றிச் சுருக்கத்தால் காய்ந்திருந்த திருநூறு லேசாக உதிர்ந்தது.

அப்பச்சி ஒன்றும் பேசாமல் எழுந்து வாசலுக்குப் போய் நின்றுகொண்டது. பீடி குடிக்கத் தீப்பெட்டியை உரசும் சத்தம் கேட்டது. ஜோசியர் என் பக்கமாகத் திரும்பிப் “பாப்பா நல்லாக் குனுப்பமா நாயங் கேக்குதுங்ளே!” என்றார்.

“அவ நாயங்கேக்கறதுல மன்னங் குட்டீங்கொ. என்னயாட்டொ” முகத்திலும் பெருமை பொங்கியது அம்மாயிக்கு.

“அதானுங்க. மொவத்துல ஒரு சரஸ்வதி அமுசந் தெம்படுதுங்ளே”

ம்க்கூம். பள்ளிக்கூடமே போகமாட்டேன் என அழுது அடம்பிடித்து இந்த வருடம் தான் நின்றிருந்தேன். “ஊட்டு வேலைக்கீமாவுல காட்டு வேலக்கீமாவுல” எனத் தினமும் எங்கம்மாள் எனக்குச் சீவக்கட்டையாலேயே பூசை போட நான் அம்மாயி வீட்டிற்குச் சீராடிக்கொண்டு வந்து இன்றோடு பத்து நாட்களாகிறது.

“அட முருகா! நானபண்டிதா!! சென்னியாண்டவா!!! பெரீவியோ பெரீவீ தானுங்கொ. கரைக்டாச் சொல்லிப் போட்டீங்கொ”

ஜோசியருக்குப் புளகாங்கிதம் தாங்க முடியவில்லை.

“கேக்கறனேன்னு ஆயா தப்பா நெனைக்கப்படாதுங்க. நம்புளுக்கு முருக பத்தி சாஸ்திங்களா?”

இப்போது அம்மாயி புளகாங்கிதத்தின் உச்சத்திற்குப் போய்விட்டாள்.

“பூசத்துக்கூ உத்தரத்துக்கூ பளுனீல தானுங்கொ இருப்பெ. ஒவ்வொரு கிருத்துகீக்கிஞ் சென்னிமலக்கிப் போயிட்டு வந்து நா விரதமுடையில ராத்திரி மணி பத்தாயிருமுன்னாப் பாத்துக்கங்களே!” புருவங்களை உயர்த்தி மேலுதட்டால் கீழுதட்டை அழுத்தி வளைத்தாள்.

“அதானுங்க. அதானுங்க. உங்களப் பாத்ததீமெ அந்தக் கே வி சுந்தராம்பாளவீளாட்டொ ஒரு அமுசம் தெருஞ்சுதுங்கொ. இப்ப ருசுவாயிப் போச்சுது”

பட்டென்று இருகைகளையும் தலைக்கு மேல் கூப்பியவள் “முத்தித் திரு பத்தித் திரு நவெ அத்தைக்கொரு புத்திக் கிருதவ சத்திக்கொரு பத்துத் திருநவை வடிவேலாஆஆஆஆ” எனக் கண்ணை மூடிக்கொண்டு பாடி நிறுத்தினாள்.

“முருகா… முருகா… அப்புடியே அந்தக் கேவீஎஸ் அம்மாளாட்டவே பாடறீங்க”

அம்மாயி அப்படியே மகிழ்ச்சியில் குளிர்ந்து போனாள்.

“படிச்ச பெரீவீ சொல்றீங்கொ. பொய்யாவா இருக்கு? அத்தனையீ முருவம் போட்ட பிச்சீங்கொ. உத்தரத்தன்னக்கிச் சம்முவ நதீலிருந்து கோயப் போறவரக்கீ நாம் பாடற பாட்டக்கேட்டு அத்தனோதி சனங் கூடீருமுங்க” என்றவள் அத்துடன் நிறுத்தி இருக்கலாம். கொஞ்சம் குரலைத் தாழ்த்தி

“ஒரு சலக்கா அறவதாம் படீல பாடீட்டிருக்கறெ! முருவனுங்கொ!! என்னப்பெம் பழுனிமல மொட்டையாண்டி!!! கோமணத்தோட சச்சுருவா வந்து வேல வீசி வீசித் தாண்டவமாடறானுங்கொ. மயிலு வேற ஒருபக்கந் தோவைய விருச்சூட்டு ஆடாடுன்னு ஆடுதுங்கொ!”

“முருகா முருகா” இப்போது ஜோசியர் தலைக்குமேல் கைகளைக் குவித்துக்கொண்டிருந்தார்.

சிடுக்குப் பிடித்த பலத்த இருமலுடன் உள்ளே எட்டிப் பார்த்தது அப்பிச்சி. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது.

“எத்தன நேரந்தா நானூம் பொறுத்துக்கறது? ஏளே புளுவி. புளுத்த கண்டாரோளி. உன்ற புளுவலுக்கொரு அளவே இல்லையாளே?” மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.

“தேன்டா தெள்ளவேரி. புளுத்த கள்ட்டுக் கள்ட்டோனுமாடா கட்டீத் திண்ணி? மேல பேசுனீன்னாச் சோத்துல வெசத்த வெச்சுருவம் பாத்துக்கொ” அம்மாயியின் முகத்துக்கு அந்த அந்தியூர்ப் பத்திரகாளியே குடி வந்திருந்தாள்.

அதற்கப்புறம் அப்பச்சி வாயைத் திறக்கவே இல்லை.
…………………………………..

“தேங் கண்ணு. உன்னையொன்னு கேட்டாத் தப்பா நெனச்சுக்கொ மாண்டீல்லொ?”

“கேட்டுத் தொலைம்மா” கண்ணுக்குள் இறங்கியிருந்த சீயக்காய் உறுத்திக் கொண்டிருந்தது.

“எங்கிட்ட ஒளுவு மறவில்லாம சொல்லோணும்…” இழுத்தாள்.

“இன்னொ உங்கிட்ட மறைக்கறதுக்கு என்னத்தப் பாக்கியிருக்குது?”

ஐந்தாவது மாசத்திலேயே கட்டுச் சோறு கட்டிக் கூட்டி வந்திருந்தார்கள். ஈருசுருகாரி ஈருசுகாரி என எனது அம்மா என்னைத் தாங்கு தாங்கென்று தாங்கிக் கொண்டிருந்தாள். இப்போது கூடச் சுருக்கென்று வெந்தண்ணி வைத்து ஒட்டுத் துணி இல்லாத எனது உடல் முழுவதும் நீவு நீவென்று நீவித் தண்ணி வார்த்து விட்டுக் கொண்டிருக்கிறாள்.

‘களுக்’ கென வெட்கத்துடன் ஒரு சிறு சிரிப்பை உதிர்த்தவள்

“கேக்கட்டுமுல்லொ?” என்றாள்.

“கருமத்தக். கேட்டுத் தொலை” என்றேன்.

“இல்ல… நம்பு பண்ணாடிக்கி மூனு வெதுரு தானொ?”

எனக்கு ஒரு நொடி எதுவும் புரியவில்லை. காதுக்குள் இறங்கிய தண்ணீர் வேறு குறுகுறுத்துக் கொண்டிருந்தது.

“எந்தப் பண்ணாடி எருது?” என்றேன்.

“அளெ எருதில்ல. உம்பட பண்ணாடிக்கி மூனு வெதக்கொட்டை தானொ? ன்னு கேட்டெ”

எனக்கு ஒரு நிமிடம் தூக்கிவாரிப்போட்டது. இதென்ன கேள்வி? எதற்காக இப்படிக் கேட்டுக் கொண்டிருக்கிறாள் என ஒன்றும் புரியவில்லை. கண்களை அழுந்தத் துடைத்துக்கொண்டு திறந்தேன். பல்லுப் பதினாறும் தெரிய அம்மா சிரித்தாள்.

“எதுக்கு இப்பிடிக் கேக்கற?” என்று வெடித்தேன்.

“பின்ன உன்னயக் கேக்காம ஆரக் கேக்கறதாமா?”

ஒரு முறைப்பு விட்டேன்.

“எதுக்கு எம்புரசனுக்கு மூனு கொட்டையிருக்கோனு?”

“அளச் சண்டாளீ!” நெஞ்சின் மீது கையை அறைந்துகொண்டாள். முகத்தில் அத்தனை ஏமாற்றக்களை!

“அப்பொ ஏமாந்து போனனா?”

கடுப்பான கடுப்பு எனக்கு.

“புரீறமாதிரிதாஞ் சொல்லித் தொலையேன்”

“இல்லளே. கராத்தாப் பளவறவீளுக்கு மூனு வெதுரு இருக்குமுன்னு தானொ வசதி கம்மியா இருந்தாலும் பரவால்லீன்னு ங்கொப்பங்காரங்கிட்ட ஓரியாட்டங்கட்டி உன்னையக் கட்டிக் குடுத்தெ? ஆனா இப்பொ ரண்டு தாங்கறயே!”

எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

“எம்பிரசெங் கராத்தாப் பளவுனவந்தே. ஆனா மூனு கொட்டையெல்லாங் கெடையாது”

“அப்பப் புருசுலிக்கு மட்டூ எப்புடீளெ மூனு கொட்டையிருக்குது?”

“அதென்னொ அவுனுக்கு மட்டூ மூனு? ஆமா அதெப்பொ நீ பாத்த?”

“அளெ நீ வேற! மூனு கொட்டக் காரனுகதா தடிவெரசெ கராத்தாவல்லாம் பளவுவானுகளாமா! அமத்தா சொல்லியிருக்குது. ங்கொப்பங்காரன நச்சி ஈரோட்டுக்குப் போயி எத்தன புருசுலி படம் பாத்திருக்கறெ! எண்டர் த ட்ராவன்ல கோட அவெ வில்லம்மேல லாயயிலெ தெருஞ்சுதே!”

“நெசமேலுமா?”

“ஐயோ. அத நம்பித்தானொ நீயாவது நல்லாருக்கோனுமுன்னு இந்த மாப்பளக்கி உன்னயக் கட்டிவெச்செ”

வாத்துரூமுக்கு வெளியே இருந்து அப்பனின் குரல் உரத்துக் கேட்டது.

“ஏளெ எச்சக்கலை முண்ட. பிள்ளகிட்ட என்னென்னத்தப் பேசறதுன்னு ஒரு வெவஸ்தையே இல்லையாளெ ஒனக்கு? கெழுட்டு மூதேவி. பொய்யாப் புளுவீட்டிருக்கறா”

ஒரு நொடி கூடத் தாமதிக்கவில்லை அம்மா.

“மேல பேசுனீன்னாப் புடுக்க அறுத்துப் போடுவன்டா கேனக்கூதி. பொம்பளீக நாயத்த வேற ஒட்டுக் கேக்கறயாடா மாதரச்சோர்”

அதற்கப்புறம் அப்பன் குரல் கேட்கவில்லை.
…………..

சரஹாவில் ஒரு கேள்வி.

“எப்படித் தோழீ இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள்? சிறு வயது முதலே உங்களைக் கண்டு பிரமித்து வந்திருக்கிறேன். மிகையாகச் சொல்கிறேன் என எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களைப் பற்றி நான் அறிவேன். முகஸ்துதிகளை வெறுப்பவர் நீங்கள். இருப்பினும் உண்மையைப் பேசித்தானே ஆகவேண்டும்? அறிவில் மட்டுமல்ல. அன்பிலும் ஆற்றலிலும் கூட நீங்கள் இமயம் தான். வளரும் இளந் தலைமுறையினருக்கு உங்கள் அனுபவப் பதிவுகள் மூலம் வழி காட்டலாமே?”

இதை ஸ்கிரீன் ஷாட் எடுத்துப் போட்டதற்கே எண்ணூற்றி இருபத்தாறு லைக்ஸ். நூற்றி ஐம்பத்தொரு ஷேர்ஸ். எப்போதுமே இன்பாக்ஸ் நோட்டிபிகேஷன்ஸ் ஐந்து இலக்கத்தில் தான் இருக்கும் . கமெண்டுகளின் நீளத்தை மொத்தமாக அளந்தால் ஒரு இருநூறு கிலோமீட்டராவதும் வரும். அத்தனை கமெண்டுகளும் தங்களுக்கு வழிகாட்டப்போகும் எனது அனுபவப் பதிவுகளைக் கேட்டுக் கெஞ்சிக் கதறின.

மகள் திருமணமாகிக் கணவனோடு கனடாவில் செட்டிலாகிவிட்டாள். மகன் இலண்டனில் சாப்ட்வேர் எஞ்ஜினியராக இருக்கிறான். ப்ளைட் ஏறுவதற்கும் முன் எனக்கொரு லேப்டாப் பரிசளித்திருந்தான். இந்த நாற்பத்தி எட்டு வயதில் வேலைவெட்டி இல்லாமல் தனியாக ஒருத்தி என்னதான் செய்வதாம்? என்னைக் கட்டிக்கொண்ட தடிமாடும் வீடு தங்குவதில்லை. தனது கிழட்டு நண்பர்களுடன் கோவில் கோவிலாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது. பொழுது போகவேண்டாமா? அதனால் பேஸ்புக்கில் எனக்கென ஒரு தேசம் எனக்கென ஒரு மக்கள் கூட்டம் என்று பிஸியாக இருந்தேன். தொண்ணூறு சதவிகிதம் பேக் ஐடிக்களாக இருந்தாலும் பதினெட்டாயிரத்து ஐந்நூற்றி எண்பத்தேழு பாலோயர்ஸ் அரைமணி நேரத்திற்கு முன்புவரை.

எனக்கோ இளகிய மனது.

“அன்பு நட்பூஸ்… உங்களுடைய கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இனிமேல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உங்களுக்கு மங்களகரமாக விடியப்போகிறது. வாரமொரு அனுபவப் பதிவு அணிவகுக்கப் போகிறது. உங்களை ஏமாற்றக் கூடாதே என்று இந்த வாரமே எனது யானைத் தந்தச் சரும அழகைப் பற்றிய குறிப்புகளை எழுதப்போகிறேன். அந்த வெள்ளிக்கிழமை நாளை என்பதை நினைத்ததுமே உங்கள் இதயங்கள் பறக்க ஆரம்பித்திருக்குமே!”

பதிவைப் போட்டதுதான் தாமதம். அரைமணி நேரத்தில் ஹார்ட்டீன்கள் மட்டும் அறுநூற்றி நான்கு. கமெண்டுகள் ஈரோட்டுக்கும் பேரோட்டுக்கும் இழுத்தன.

படுக்கையில் குப்புறப் படுத்தபடி புளகாங்கிதத்துடன் ஒவ்வொரு கமெண்டுக்கும் ஹார்ட்டீனையும் நன்றியையும் தட்டிவிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது தான் இந்தக் கமெண்ட் வந்து விழுந்தது.

“ஏன்டீ குண்டுக் கருவாச்சீ இதெல்லா ஒரு பொழப்பாடி? பேக் ஐடீல நீயே உன்னையக் கேள்வி கேட்டுட்டு அதுக்குப் பதில் வேற எழுதிக்குவியா? இந்தக் கருமாந்தரத்தப் படிக்கச் சள்ளொளுக்கீட்டுத் திரியற APUஸ் கூட்டம் வேற. மொதல்ல தின்னு தின்னு தூங்கம்போட்டு வீங்கிப்போன ஒடம்பக் கொறைக்கிற வழியப் பாருடி களியுரண்டை”

அப்படியே ஆத்திரம் பொங்கிவிட்டது. அந்தக் கமெண்டை டெலீட் செய்ய நான் முடிவெடுப்பதற்குள் அந்தக் கமெண்டுக்குக் கோப ஸ்மைலியைப் போட்டிருந்தார்கள் நாற்பத்திரண்டு பேர். திடீரென எனது இன்பாக்ஸ் அதன் அபாய எல்லைகளைத் தாண்டி வீங்கி எனக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தது. அந்தக் கமெண்டை வன்மையாகக் கண்டித்தும் வண்டை வண்டையாகத் திட்டியும் போடப்பட்ட கமெண்டுகள் வள்ளவட்டமாய் நீண்டுகொண்டே இருந்தன. அதிலொரு கமெண்ட் இப்படி.

“நீ யார்ன்னு எனக்குத் தெரியும்டா டோமரு. எச்ச பாடு. மரியாதையா எங்க மேடம்கிட்ட மன்னிப்புக் கேளு. இல்லன்னா உன்ன வீடு பூந்து அடிப்பேன்டா லவடா”

அதற்கொரு லைக்கை மட்டும் தட்டிவிட்டு

“அவரளவுக்கு நாமும் தரம் தாழ வேண்டாமே நட்பூஸ்” என மென்மை காட்டினேன்.

“இந்த உங்க நல்ல மனசால தான் தோழி இவனை மாதிரி ஆட்களெல்லாம் இப்படிப் பேசுகிறார்கள். இவனையெல்லாம் சும்மா விடக்கூடாது தோழி. சைபர் க்ரைம்ல உள்ள தள்ளணும்”

அதற்குமொரு ஹார்டீனைத் தட்டிவிட்டவள்

“பாவம் நட்பூஸ். பிழைத்துப் போகட்டும். இன்னா செய்தாரை ஒறுத்தல்… இப்போதைக்கு அந்த நபரது ஐடியை மட்டும் முடக்குவோம்”

அவ்வளவுதான். பிராது கொடுக்க மார்க்குவீட்டுக் கதவைத் தட்டக் கூடிவிட்டது எனது நட்பு வட்டம்.

“காசீல இருந்து ஊட்டுக்கு வாடா தாயோளி. உன்னயச் சுருட்டி மைக்ரோவேவுல வெச்சுப் பொசுக்கிக் கும்பந் தாளிக்காத உட்றதில்ல” என்று சபதமெடுத்துக் கொண்டேன் நான்.

-சத்தியப்பெருமாள் பாலுசாமி

 

0 Comments

Write A Comment