1985 – ல் 100.00 ரூபாய்கள் கொடுத்து சைக்கிள் ஒன்றை வாங்கியிருந்தார் கோலப்பன் மாமா. அப்போதெல்லாம் ஒரு சைக்கிள் வாங்குவது என்பது பக்கத்து வீட்டுக்காரனின் ஆசனவாயிலில் ஒரு வெடியைப் பற்ற வைப்பதற்கொப்பானது என்பது கோலப்பனுக்குத் தெரிந்திருந்தாலும் கூட இதற்கு முன்பாக தான் கேட்டு சைக்கிள் தர மறுத்தவர்களின் முன்பாக ‘ஷைன்’ செய்ய வேண்டும் அல்லது சீன் போட வேண்டும் என்று எண்ணி ஒரு மத்தியான வேளையில் ஊருக்குள் உலா வந்தார்.
அவரது கேட்ட நேரமோ என்னவோ ஊருக்குள் ஒரு பயபுள்ளையும் சிக்கவில்லை, இவர் சைக்கிள் ஓட்டுவதைக் காண ஒரு நாய் மட்டுமே தெருவில் நின்றிருக்கிறது. ஊர்ச்சந்தியில் உட்கார்ந்து பார்த்திருக்கிறார், படுத்துப் பார்த்திருக்கிறார், நின்று பார்த்திருக்கிறார், ம்ஹூம் ! ஒரு பயல் வரவில்லை.
எல்லா செறுக்கியுள்ளையளும் செத்துட்டானுவளா? ஒரு மூதியையும் காங்கலியே ? என்றவாறே கோலப்பனுக்கு சங்கடம் தொற்றிக் கொண்டு விட்டிருக்கிறது. தூரத்தில் யாரோ வருவது கண்ட கோலப்பனுக்கு உற்சாகம் வந்து விட்டது.
‘நாம கவனிக்காதது போல உக்காந்துக்கலாம்’ என்று திரும்பி உட்கார்ந்து கொண்டிருந்திருக்கிறார். சிறிது வினாடிகளில் ஒரு கீச்சுக்குரல் கேட்டது,
எப்போ கோலப்பனா அது ? கண்ணு மயிரும் தெரிய மாட்டேங்கு ?
ஆமா !கோலப்பந்தான் என்ன வி...சி...ய....ம் ? என்று திரும்பிய கோலப்பனின் மண்டையில் இடி விழுந்திருக்கிறது, அங்கே நின்று கொண்டிருந்தது ‘கரிங்கண்ணி வள்ளியம்மைக் கிழவி’
யம்மா சூவை’லா நிக்கி! இவ கண்ணுல வுழுந்தா வெளங்குகதுக்கா ? என்று பதறிப்போனார் கோலப்பன்.
என்ன பெரியம்ம ? இந்த உச்சி வெயில்ல எங்க கெடந்து லாத்திக்கிட்டு கெடக்க ? ஊடடங்கி இருக்க மாட்டா ? என்று கேட்டார்.
மாடங்கோயில்லா கொடைலா ! அங்கதாம் போயிட்டு வாரேன் ! என்ற கிழவியிடம், நீயா மாடனுக்கு ஆடுக ? என்று கேட்ட கோலப்பனிடம் கிழவி கடுப்பானாள்,
இந்த எக்காள மயிருல எங்கிட்ட பேசப்புடாது ஆமா !
சரி பெரியம்ம ! கோவப்பட்டு செத்துப் போயிறாத ! படையல் சோறு நல்லா நாக்க நீட்டி நீட்டி வுழுங்கியிருப்பியே ?
நாந்திங்கது கெடக்கட்டும் ! இது யாது செத்தபெயலுக்க வண்டி ! நடுத் தெருவுல கொண்டாந்து நிப்பாட்டிருக்காம் ? ஆளுக நடமாடாண்டாம் ! சைக்கிள தூக்கி கெழக்க மாற (சுடுகாடு) கொண்டு போக வேண்டி வந்துறாம ? என்று கிழவி சொல்லக் கேட்டு கோலப்பன் கோணலாகி கீழே சாய்ந்தார்.
புது சைக்கிள வாங்கிக் கொண்டோயி வீட்டுல நிப்பாட்டாம இப்புடி இந்த கருங்கண்ணிக்க வாயில வுழுந்துட்டனே இறைவா ? என்று அவரது மனம் கிடந்து அடித்துக் கொண்டது.
மறுநாள் காலையில் வெளிக்கி இருக்க சைக்கிளில் குளத்துக்குப் போன கோலப்பனை நாய் துரத்தியதில் சைக்கிளோடு குளத்துக்குள் இறங்கிக் குளித்தார். ஈரத் துணியோடு வந்த கோலப்பனை வழியில் நிறுத்தி,
என்ன கோலப்பா ! கையில சக்கரம் கெடந்து கொளிக்கி போலருக்கு? புது சைக்கிளுதான் ! காரியந்தான் ! ஒரே பொளிப்பு ! ஆமா கால ஏன் பாந்திப் பாந்தி வைக்க ? அடி பட்டுருக்கா ? இல்லையின்னா புது சைக்கிளு கால கடிச்சிட்டா ? கிகிக்கிகிக்கி! என்று பல்லிளித்த பரமேஸ்வரனிடம் கோலப்பன் பதிலே சொல்லவில்லை. குளத்தில் சைக்கிளோடு குதித்து படித்துறைப் படிக்கட்டு காலைப் பதம் பார்த்ததைச் சொன்னால் இன்னும் கூடுதலாக இளிப்பான் ! எதுக்கு வம்பு ? என்று நினைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டார்.
கொஞ்ச காலம் கழித்து கோலப்பன் ஒரு மொஃபா வண்டி வாங்கினார். அதன் சத்தமும், லாவகமும் ஊரிலிருந்த கொஞ்சம் பேரின் கண்களை உறுத்தியது. இவனுக்கு ஏதுடே இவ்வளவு பைசா? நோட்டடிக்கானோ ? களவாங்குகானோ? கடவுளுக்குதான் வெளிச்சம் என்று பெருமூச்செறிந்தார்கள். அவர்களின் கண் விழுந்ததோ என்னவோ மொஃபா வண்டி மீது மாட்டு வண்டி ஏறி இறங்கி விட்டுப் போனது.
கொஞ்ச காலம் கழித்து ஒரு பஜாஜ் எம் 80 வாங்கினார். அது வாங்கிய இரண்டு வாரங்களில் என்ஜின் சீஸ் ஆகிப்போனது. பஜாஜ் கம்பெனிக்கு இவ்வாறு கடிதம் ஒன்றை எழுதினார்,
தங்களுடைய வாகனங்கள் சாமானியர்களுக்கு ஏற்றதல்ல! என்னுடைய புதிய வண்டி மண்ணும் மணலுமாய் ஆகிப்போனதே ஐய்யோ ! நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றப் புறப்பட்டிருக்கிறீர்கள்! உங்கள் குடும்பம் விளங்காமல் போவதாக... ஆமென் !
இப்படிக்கு,
கோலப்பன்.
சரியாக ஆறுநாட்களில் பூனாவிலிருந்து இரண்டு இஞ்சினியர்கள் வந்து கோலப்பனின் வீட்டு முன்பாக நின்றார்கள். கடிதம் கையில் கிடைத்தவுடன் விமானமேறி அனுப்பி வைக்கப் பட்டிருக்க வேண்டும்.
“எங்கள் தயாரிப்பு அப்படி குறைபாடோடு இருந்தது குறித்து வருந்துகிறோம், ஆனாலும் புது என்ஜின் சீஸ் ஆகாதே? எப்படி நடந்தது ? என்று கேள்வியெழுப்ப கோலப்பனுக்குக் கோவம் வந்து விட்டது.
இந்தா கெடக்குலா? வண்டி மயிரு! கண்ணு என்ன பொடதிலயா இருக்கு ?
ஒரு என்ஜீனியர் கேட்டார், நீங்கள் தினமும் எங்கெல்லாம் போவீர்கள்?
கோலப்பன், நாங்காலையில எந்திச்சி கக்கூசுக்கு இருந்துட்டு, வண்டிய எடுத்துட்டுப் போயி தோட்டத்துல இருந்து மண்ணெடுத்துட்டு வந்து வூட்டுக்குப் பின்னால தட்டிக்கிட்டு, அடுத்த லோடு அடிக்கப் போயிருவேன்.
என்ஜீனியர் அதிர்ச்சியில், மண்ணு லோடா!
ஆமா! மூணு சாக்கு மண்ண ஒரே அடியில வச்சி கொண்டாந்துருவம்லா? கோலப்பனின் பேச்சில் ஒரு பெருமிதம் இருந்தது.
என்ஜீனியர்கள் மயங்கப் போனார்கள், மூணு சாக்கு மண்ணா ? எப்பூடி பாத்தாலும் முன்னூறு கிலோ வரும்!
ஒரு என்ஜீனியர் சொன்னார், “ஐய்யா ! உங்கள் மீதுதான் தப்பு! இன்ஜின் சீட்டிங்க் ஆகுற வரைக்கும் அவ்ளோ லோடு அடிச்சா இன்ஜின் எப்பூடி தாங்கும் ? நியாயமா நாங்க இங்க வரைக்கும் வந்து போன செலவு வரைக்கும் நீங்கதான் தர வேண்டி இருந்திருக்கும்! அப்பாவியா இருக்கீங்களே’ன்னு சொல்லி நாங்க உங்கள விடுறோம்” என்று சொல்லிவிட்டு, பஜாஜ் ஷோரூமில் கோலப்பனுக்கு புது வாகனம் ஒன்றை வழங்கப் பரிந்துரை செய்து விட்டுப் போனார்கள். அது கொஞ்ச காலம் ஓடியது. லாரிக்காரன் ஒருவன் பார்த்த பார்வை, இடது பக்கமாக ஓவர்டேக் செய்த கோலப்பன் லாரியின் அடியில் குத்த வைத்து அமர்ந்து உயிர் தப்பினார். லாரியின் சக்கரங்கள் வண்டியின் மீது ஒரு வேகத்தடையில் ஏறி செல்லும் லாவகத்தோடு கடந்து சென்றது.
அதன்பின் கோலப்பன் நெற்கதிரடிக்கும் எந்திரம் ஒன்றை வாங்கி, ஓட்டுனர் ஒருவரை அமர்த்தி இரண்டு காளைமாடுகளின் வாயிலாகக் கட்டி இழுத்த படியே பிரயாணம் செய்ய ஆரம்பித்தார். வருமானத்துக்கு வருமானம், பெட்ரோல் செலவு மிச்சம். வண்டியின் மேல்பகுதியில் ஏறி படுத்து வருவார். அப்படியொருநாள் வரும்போது ஒருவன் சொன்னான்,
கோலப்பன கண்டீரா ஓய் ! இனி இந்த வண்டியும் கெணத்துக்குள்ள வுழுந்துட்டுன்னு வையும் ! அப்பொரம் ரோடு ரோலர்தான் கதி!
கோலப்பன் கண்டு கொள்ளவில்லை, எதுக்கு வம்பு?
நெற்கதிரடிக்கும் எந்திரத்தில் அமர்ந்து திருமணம், சடங்கு போன்ற விசேஷ வீடுகளுக்குப் போக முடியவில்லை என்று சொல்லி கவாசகி பைக் ஒன்றை வாங்கினார். அது சீறிப்பாய்ந்த படியே இருந்தது. ஒருநாள் பக்கத்து வீட்டு சாமியின் மகன் வந்து கோலப்பனிடம், ‘சந்தைக்குப் போக வண்டி வேண்டும்’ என்று கேட்டிருக்கிறான். தங்கள் வீட்டுக்கும் சேர்த்து காய்கறிகள் வாங்கிவருமாறு கோலப்பன் சொல்லவே அவன் கோலப்பனிடமிருந்து இருநூறு ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு நேராக செட்டிக் குளத்திற்குப் போய் வியாபாரி ஒருவரிடம் வண்டியை விற்றுவிட்டு கோட்டாரிலிருந்து ரயிலேறினான்.
சந்தைக்குப் போனவன் இரண்டு நாட்களாக வராதது குறித்து கோலப்பன் கவலையடைந்தார். இதுகுறித்து சாமியிடம் கேட்கவே, சாமி, அவ்வள தூரம் பைக்குலயா போனான் ?
என்னது தூரமா ? கோலப்பன் குழம்பினார். என்னவே சொல்லுகீரு?
‘பம்பாய்க்கு போணும் துட்டுக் குடு’ன்னு கேட்டான், ஆப்பக்கணைய எடுத்து ஒண்ணு குடுத்தேன்... எவனாவது சிக்குவாம்னு சொல்லிக்கிட்டே போனான். அதுதான் நான் அவனக் கடைசியா பாத்தது ! என்று தன்னுடைய மகன் குறித்து வாக்குமூலம் கொடுத்தார் சாமி. கோலப்பனுக்கு வாழ்க்கையே வெறுத்துப் போனது.
கொஞ்ச நாட்கள் கழித்து கோலப்பன் ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் ஒன்றை வாங்கினார். ஒருநாள் பானக்கடையில் சென்று ஒரு கட்டிங் போட்டு விட்டு வெளியே வந்து பார்த்தால் வண்டியைக் காணவில்லை. அய்யோ போச்சே ! வண்டிய களவாண்டுட்டனுவளே ? என்ன செய்யதுக்கு ? என்று குழம்பி நிற்கும் போது அதன் எதிர்த்திசையில் ஒருவன் காற்றைக் கிழித்துக் கொண்டு பார்வதிபுரத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோதுதான் அந்த வண்டியில் சைடு மிரர்கள் திருடு போயிருந்ததைக் கண்டு பிடித்தான். சைட் மிரர் போக டேங்க் கவரும் திருடு போயிருந்ததைக் கண்டு ஆத்திரம் வந்து விட்டது.
தா...ளியுள்ளையோ ! எத்துவாளிப்பயல்களா ! இன்னிக்கி எவம்னு நாங்கண்டுபுடிக்கேனா இல்லியான்னு பாப்போம்’னு நினைக்கும்போதுதான் வண்டியைக் கவனித்தான். கறுப்பும் ஆரஞ்சுமான வண்டிதான் என்றாலும் கூட பதிவெண் வேறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ‘இப்போது நான்தான் திருடன்’ என்னும் உண்மை உறைத்தபோது உயிர் கையில் இல்லை. இவனது வண்டி பானக்கடையின் முன்பு நிற்கிறது. “இதைக் கொண்டு விட்டுவிட்டு எப்படி அதை எடுப்பது” என்ற அச்சத்தில் மீண்டும் கடைக்கு வந்த போது கடையின் முன்பு போலீஸ் நின்று கொண்டிருந்தது. கோலப்பன் தன்னுடைய வண்டியைக் கண்டவுடன் கூச்சல் போட்டார்.
இவனும் மரியாதையாக வண்டியைக் கொடுத்துவிட்டு நடந்த கதையைச் சொல்லி உங்களுடைய வண்டி என்னுடைய சாவியைப் போட்டாலும் திறக்கிறது, ஆகையால் நீங்கள் பூட்டை மாற்ற வேண்டிய தருணத்தில் இருக்கிறீர்கள் என்ற அறிவுரையைக் கோலப்பனுக்கு வழங்கவே, போலீஸ்காரர்கள் இரண்டு பேர் மீதும் ‘டிரங்கன் டிரைவிங்’ வழக்கு போட்டு வண்டிகளைக் கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு போனார்கள்.
இப்போதெல்லாம் கோலப்பன் வீட்டை விட்டு வெளியே வருவதேயில்லை! என்ன மயித்துக்கு வெளிய வந்து ?
- பிரபு தர்மராஜ்
1 Comments
மாப்ள அழகு...