Tamil Sanjikai

தாயாய் உங்களைப் பெற்றெடுக்கிறாள் !
தாய்ப் பாலூட்டுகிறாள் !
தாலாட்டித் தூங்க வைக்கிறாள் !
குளிப்பாட்டுகிறாள் !
சோறாக்கிப் போடுகிறாள் !
வீட்டை பெருக்கி சுத்தம் செய்கிறாள் !
உங்கள் தகப்பனுக்குப் பணிவிடைகள் செய்கிறாள் !
மனைவியாய் தன்னுடைய உடலைப் பகிர்கிறாள் !
பத்துமாதம் கருவைச் சுமக்கிறாள் !
பிரசவ வலி தாங்குகிறாள் !
உங்கள் சந்ததியை விருத்தி செய்கிறாள் !
குழந்தைக்குப் பாலூட்டுகிறாள் !
அதைத் தாலாட்டித் தூங்க வைக்கிறாள்
உங்கள் அன்னை உங்களுக்குச் செய்ததை
அவள் உங்கள் குடும்பத்துக்குச் செய்கிறாள் !
குழந்தை வளர்க்கிறாள்...
உங்கள் அடக்குமுறைகளை எதிர்க்கவில்லை !
உங்களிடம் கேள்வி கேட்பதில்லை !
மேற்கூறிய பணிகள் அனைத்தும் அவளுக்கானதென்று
நீங்கள் திணிப்பதை அவள் எதிர்க்கவில்லை !
அவளை நோக்கி நீளும் உங்கள் குறிகளை
அவள் வெட்டியெறியவில்லை !
உங்களைச் செருப்பால் அடிக்கவில்லை !
எட்டி உதைப்பதில்லை !
உங்கள் கனவுகளை அவர்கள் எதிர்ப்பதில்லை !
கூப்பிட்டநேரம் படுப்பாள் !
குழந்தை பெற்றுத் தருவாள் !
உங்கள் காமப் பார்வைகளை
அவள் எளிதாகக் கடப்பாள் !
உங்கள் மயிர்க்கொப்பான கட்டுப்பாடுகளை
அவள் மதிக்கிறாள் - அதனால்தானே
கொண்டாடுகிறீர்கள் பெண்கள் தினத்தை ?
யார் கேட்டது கொண்டாட்டங்களை ?
பாரதி கண்ட புதுமைப்பெண்களை
விவாகரத்து செய்து விடுவீர்கள் !
இல்லையெனில் வேசி என்பீர்கள் !
அவர்களை நிம்மதியாக வாழவிடுங்கள் !
தாம் ஏன் பிறந்தோம் என்றே தெரியாமல்
அவள் வாழ்ந்து செத்துப் போவதைவிட
ஒரு சொட்டு கள்ளிப்பாலை அவள்
நேசித்திருக்கக் கூடும்!
கொண்டாட வேண்டுமானால்
வருடம் முழுக்கக் கொண்டாட வேண்டியவள் பெண் !
அன்னையாய் ! துணையாய்!
சகோதரியாய் ! தோழியாய் !
காதலியாய் ! மகளாய் !
பிறப்புறுப்பை நேசிப்பதை விட்டுவிட்டு - அவள்தம்
பிறப்பின் உரிமையை அவளுக்குக் கொடுப்போம் !
அதன்பின் கொண்டாடுவோம் பெண்கள் தினத்தை !
உலகிலுள்ள அனைத்துப் பெண்களுக்கும்
உங்கள் தின வாழ்த்துகள் !

- பிரபு தர்மராஜ்

 

0 Comments

Write A Comment