Tamil Sanjikai

காலம் ஒரு காட்டுமிராண்டி
கையில் கிடைத்ததையெல்லாம் கடத்திப் போடுகிறது ...
காலன் வரும்வரை காத்துக்கிடந்து
காலாவதியான பின்பும் நீண்ட இந்த இருத்தல்
வெறுப்புகளைத் தூவிக் கொண்டேயிருக்கிறது.
நூறாண்டு வாழ்க எனும் சாபம் பலித்து
தனிமை தினம்தினம் வாழ்த்திக் கொண்டிருக்கிறது...
வாழ்வாங்கு வாழெனச் சபித்தவர் மரித்தார்....
அவரது தோற்றம் மறைவை
நாளிதழில் குறிப்பிட்டிருந்தார்கள்
இனிமேல் மரிக்கப்போகிறவர்கள் ...
இடைப்பட்ட காலத்தில் அவர் விட்ட சாபங்கள்
குறித்த குறிப்புகளை காலம் அழித்துப்போட்டிருக்கிறது...
சாதியின் பெருமைகளாய் வாழ்ந்தவர்களை
மனித சாதிகளின் தனித்தன்மைகள் தனிமைப் படுத்தி,
ஒரு சின்னஞ்சிறு அறைக்குள் முடக்கிவிட்டிருக்கிறது ...
சாதியின் பெருமைகள் ஒருபோதும் அந்திமத்தின்
ஊன்றுகோலாய் உபயோகப்பட்டதில்லை...
அவை வாலிபத்தின் மதர்ப்பில் வெறிகொண்ட
இரும்புத்தடிகளாய் மட்டுமே
மாயவாழ்க்கை வாழ்ந்திருக்கின்றன...
இன்னமும் என் படுக்கையில் கிடக்கும் கழிவை
ஒரு தோட்டிதான் அள்ளிச் செல்கிறான்...
எனக்கும் அவனது பெயரைக் கேட்கவே ஆசை...
காலாவதியான என் வாயும், காதுகளும்
அந்தத் தோட்டி மீதான எனது கேள்வியையும்,
அதன் பின்பான அவனது பதிலையும்
நிரந்தரமாகவே முடக்கிப் போட்டிருக்கிறது...
தனது மூக்கை நிரந்தரமாக முடக்கிப் போட்ட
அவன்தான் எத்தனை உயர்ந்தவன் ?
அவனது வாளிக்குள் கிடக்கும்
மனிதக்கழிவுகளிடையே எந்த பேதமுமில்லை...
காலம் மிகப்பெரியதொரு அவாந்திரவெளி!
கையில் கிடைத்ததையெல்லாம்
தன்னுள் புதைத்துக் கொண்டே நீண்டு கிடக்கிறது ...

-    பிரபு தர்மராஜ்

0 Comments

Write A Comment