கைகளுக்கு அருகிலிருந்து வானத்தைப் பிடித்து
விளையாடினார்கள் குழந்தைகள்
விண்மீன்களைப் பூக்களாய்ப்
பறித்து வீசி எறிந்தார்கள்
நிலாவைப் பந்தடித்தார்கள்
சூரியச் சுடர் கொளுத்தி
மத்தாப்பாய் மகிழ்ந்தார்கள்
அவர்கள் முதல் பொய் சொன்ன போது
வானம் தலைக்கு மேல் போனது
முதல் கோள் மூட்டல் நிகழ்ந்த போது
பனை மர உயரத்துக்குப் போனது
மனிதர்களாய் வளர்ந்து முதல் முறையாகத்
திட்டிக் கொண்ட போது
மலையளவு உயரத்துக்குப் போனது
முதல் முறையாக ரத்தம் வடியும் அளவுக்கு
அடித்துக் கொண்ட போது
பயந்து போய் பல மைல் தூரம் ஓடிப் போனது
அப்புறம் அரிவாள், வேல்கம்பு, துப்பாக்கி, அணுகுண்டு
என ஆன பிறகு
எட்டாத உயரத்துக்குப் போய்க் கொண்டே இருக்கிறது வானம்
-விகடபாரதி
0 Comments