Tamil Sanjikai

கால்கள் கட்டப்பட்ட ஒரு புறாவைக் கண்டேன்
அது தன் பறத்தலை மறந்திருந்தது...
நூலின் அகலத்துற்கேற்ப தன் காலடிகளை
மெதுவாய் வைத்து நடந்து கொண்டிருந்தது.
இயல்பை தொலைக்கத் தொடங்கியிருந்த அதன்முகம்
அடிவாரம் காணாத மலைமுகடு போல மழுங்கியிருந்தது...
விரிந்து நாளான அதன் வெண் இறக்கைகள்
பழுப்பு நிறத்தை பரீட்சித்திருந்தன...
தன்னிரையைத் தேட இயலாமல்
தேடினவைகளைத் தேடிக்கொண்டிருக்கிறது...
தரையில் கிடக்கும் ஆட்டுப் புழுக்கைகளை அது
ஒருபோதும் கண்டதில்லை - ஆனால் அவைகள்
தன் காலை இடறுவதைக்கண்டு வேதனை கொள்கிறது ...
முனிவன் தாடி அவன்தன் சுமை போல்
தன் சிறகுகள் தனக்கு சுமையென்பதை
புதியதாய் உணர்ந்து கொண்டிருந்தது...
சீற முயலாத அது, கேள்விகளின் வடிவத்தை
நோக்கி பயணிக்கத் தொடங்கியது ...
யார் கட்டியது இந்த சிறிய கயிற்றை ...
உன் கொம்புகளை நீயே சீவிக்கொள் மானிடனே...
என் நெஞ்சை நிமிர்த்திப் பிடித்துக் கொள்கிறேன்..
உன் சமாதானத்தை நீ அறிவிக்கும் நாளில்
என் கட்டுகளை நீயே அவிழ்ப்பாய்...
அப்போது பறப்பேன் ஓர் மிருகமாய்....

-பிரபு தர்மராஜ்

0 Comments

Write A Comment