Tamil Sanjikai

நீ கொண்டுவரும் கொழுப்பற்ற மீன்களை
வடுப்படாமல் உண்டு கொழுத்தேன் நான் !
ஆழக்கடலின் கரையதன் கண்களையறிவாய் நீ !
உப்புக்காற்றில் உன் கண்ணீர் கரைவதையறியேன் நான் !
போவது தெரியும் ! வருவதையறியாய் நீ !
கடலை அன்னை என்பாய் நீ !
அன்னையின் மார்பில் துவர்க்குகளால் கிழித்து
எல்லையிட்டு வைத்தோம் !
நீரில் தடமறியாமல் வந்த உன்னை
தோட்டாக்களால் வழியனுப்பி வைப்போம் !
உன் வலையில் வந்து ஏறும் மீன்களறியும்
என் நாவுகளின் சுவையரும்புகள் குறித்து...
நீ பிடிக்கும் மீன்களிடம் உன் சக மனிதனான
என்னைக் குறித்து எதுவும் சொல்லாதே !
நன்றி கெட்டவனுக்கா என்னைப் படைக்கிறாய்?
என்று மீன்கள் உனக்குப் பதிலளிக்கும் ...
என் அம்மாவின் கைப்பக்குவத்தில்
உன் வியர்வைதானே உப்பு !
உன் வீட்டு நடை மிதித்தால்
என் கை நனையாமல் அனுப்ப மாட்டாய்...
உன் கடனிலும் என் பசி போக்கும்
உண்மையான உள்ளத்தோன் நீ !
நீ அனுதினம் பிடித்த மீனின் பிள்ளைகளுக்கு
உன்னை உண்ணக் கொடுத்து ஓராண்டாகிறது !
உன் பிள்ளைகளுக்கு சொல்ல
எந்த ஆறுதல்களும் என்னிடமில்லை...
எனக்கான வசவு ஏதேனும் உன்னிடம் உண்டெனில்
என்னைத் திட்டித் தீர்த்து விடு!
யார்க்குக் கொண்டாட வேண்டும் தினங்களை ?
வஞ்சமில்லா உள்ளம் படைத்த உனக்கல்லோ ????
இதோ உன்பிள்ளை என்னை மன்னித்து
மகிழ்வோடு கடந்து செல்கிறான்....
குற்ற உணர்ச்சியில் சொல்லிக் கொள்கிறேன்
உலக மீனவர் தின வாழ்த்துகள்...

- பிரபு தர்மராஜ்

0 Comments

Write A Comment