ஐ-போன்தான் பெரியது,
ஆண்ட்ராய்டு போன்தான் பெரியது,
நாங்கள்தான் உயர்ந்த குலமென்று,
எங்கள் கடவுள் பெரியவர் என்று,
எங்கள் சாதிதான் பெரிதென்று,
எங்கள் மொழிதான் பெரிதென்று,
எங்கள் நாடுதான் பெரிதென்று,
எங்கள் நிறமே சிறந்ததென்று
எங்கள் கழிவுகள் வாசனை வீசுமென்று,
எங்கள், நாங்கள் என்று பீற்றிக் கொள்ளுங்கள்!
மனசாட்சியோடு சுழல்கிறது பூமி!
ஆணவமின்றி வந்து போகிறது
சூரியனும், நிலவும்!
எல்லார்க்கும் பெய்கிறது மாரி!
பாரபட்சமின்றி நாசிக்குள் நுழைந்து
வெளியேறுகிறது பிராணவாயு!
நீங்கள் வீழ்ந்து எழுவதற்குக் காரணம்
புவியீர்ப்பு விசை!
நீங்கள் யாதொருவரும்
இரவையும், பகலையும் உண்டாக்கவில்லை
குளிரையும், வெப்பத்தையும் உருவாக்கவில்லை
பிறப்பையும், இறப்பையும் தீர்மானிக்கவில்லை
மலைகள் வீட்டின் அஸ்திவாரமாகின்றன
மண் சுவரோடு பூசப்பட்டிருக்கிறது!
மரங்கள் கதவுகளும் ஜன்னல்களுமாகின்றன!
நிலம் நீரை உள்வாங்க மறுக்கிறது!
ஒருநாள் பூமி தான் அச்சிலிருந்து
மூன்றங்குலம் விலகி நின்று
பெருமூச்சு வாங்கும்!
மீண்டும் சுற்றத் துவங்கும்!
கப்பல்கள் வானில் பறக்கும்!
விமானம் கடலில் மிதக்கும்!
மனிதர்களுக்கு இறக்கை முளைக்கும்!
புவியின் பழைய நினைவுகள் அழிக்கப்பட்டு
புதிய பூமியே பிறக்கும்!
ஆதாம் பிறப்பான்!
அவனது விலா எலும்பு திருடு போகும்!
ஏவாள் பிறப்பாள்!
சர்ப்பம் தடை செய்யப்பட்ட கனியைச் சுமந்து வரும்!
ஏவாள் வாங்கிக் கடிப்பாள்!
மிச்சத்தை ஆதாமிடம் தருவாள்!
பாதியை விழுங்கி ஆண்வர்க்கத்தின்
குரல் வளையை நெறிப்பான்!
நிர்வாண மெய்
ஆடையெனும் பொய்யால் மறையும்!
பிருஷ்டத்தில் மிதிவாங்கி
ஏதேனில் இருந்து வெளியேறுவார்கள்
ஆதாமும் ஏவாளும் !
இயேசு பிறப்பார்!
அவரை சிலுவையில் அறைவார்கள்
ஆதாமின் சந்ததியினர்!
செத்துப் போனார் இயேசு!
உயிர்த்தெழுந்தார் இயேசு!
மாறிமாறி அடித்துக் கொள்வார்கள்!
ஸ்டீவ் ஜாப்ஸ் பிறப்பார்!
ஏவாள் கடித்த மிச்ச ஆப்பிளைக்
கொண்டு லோகோ டிசைன் செய்வார்!
லேட்டஸ்ட் ஐ-போனில்
பிட்டுப் படம் பார்க்கலாம்!
பாராளுமன்றத்தில் அமர்ந்து கொண்டு....
புதிய இந்தியா பிறக்கும்!
- பிரபு தர்மராஜ்
0 Comments