Tamil Sanjikai

கதைகள் அசாத்தியமானவைகள் !
அதன் வேர்கள் பால்யத்திலிருந்து முளைத்திருக்கின்றன ....
ஆதியிலிருந்து கதைசொல்லிகள் பெண்களாக இருப்பதில்
ஆச்சர்யங்கள் இருக்கின்றன...
அரைஞாண்கயிறு வயதில் ஆச்சி சொன்ன
புளியமரத்துப் பேய்க்கதைகளின் பயம்
இன்னும் மீந்திருக்கிறது ....
அது நீல இரவு நிலவொளியில்
ஒற்றையாய் நிற்கும் கரிய மரங்களின் அடியில்
அனிச்சையாய் ஒளிந்திருக்கிறது...
உணவூட்டிய அம்மா சொன்ன கதைகள் அனைத்தும்
பொய்யில் தோய்த்து நெய்யில்
வார்த்த சோற்றுக்கவளங்களாய் இருந்தன
அந்த ஒவ்வொரு உருண்டையிலும் இருந்த அவளது
சுயநலம்தான் உலகத்தின் அழகானது...
அக்கா சொன்ன கதைகள் அலுத்தாலும்
கதையின் முடிவில் அவள்தரும் பொட்டுக்கடலைகள்
ஆர்வமானதொரு முகத்தை தோற்றுவிக்கும் ....
தங்கை சொல்ல முயற்சிக்கும் கதைகள்
சலிப்பை தருவதால் அவளது குறைந்த வயதைக் காட்டி
நிராகரிக்க எடுக்கும் முயற்சிகள் அனைத்தும்
அப்பாவின் பிரம்புக்கு பயந்து
காதுகளை அவள் காலடியில் வைக்கும் ...
பக்கத்துக்கு வீட்டு பெண்கள் சொல்லும்
கதைகளில் சுவாரஸ்யம் இருந்தாலும்
பிறர் குடியைக்கெடுக்கும் எண்ணம்
நமக்கு இல்லாமல் போவதாலும்
கேட்டபின் அதிர்ச்சியையும் ஆச்சர்யங்களையும்
ஒருங்கே தோற்றுவிக்கும் ....
கூட விளையாடிய சக பெண் தோழிகள்
சொல்லிய கதைகள் அவர்களின் பூப்புக்குப்பின் முற்றுப்பெறும் ..
அதன் பின்னான அவர்களோடு கதை கேட்கும் ஆர்வம்
நல்லதொரு நாளில் முதுகுத்தோலுரிப்பிற்குப்பின்
கதறலோடு முற்றுப்பெறும் ....
இவையாவும் கடந்த கால கதைகள் என்றாலும்கூட
நிகழ்கால கதைகள் என்பவை
காதலிகள் என்ற பெயரில் வரும் ஏதிலிகளால்
தோற்றுவிக்கப்படுகின்றன ....
அவர்களும், அவர்களின் கதைகளும்
நம் எதிர்காலத்தைக் கதைகளாக்கி
ஏதோவொரு கிழவியின் வாய்க்குள்
திணிக்கும் வல்லமை படைத்தவை... ஏனெனில்
கதைகள் அசாத்தியமானவைகள் !

- பிரபு தர்மராஜ்

0 Comments

Write A Comment