மதிய சாப்பாட்டுக்கான நூறு ரூபாயை
அணியாத தலைக்கவசம் தின்று ஏப்பம் விட்டது...
தலையை விட வயிறு பெரிதென - இந்த
கண்களற்ற சட்டத்துக்கு யார் சொல்வார்?
சட்டங்களெப்போதும் ஏழைகளின் பசியை
சட்டத்துக்குள் மாட்டி விட்டத்தில் எறிபவை...
சாலையெங்கும் விண்கற்கள் விழுந்து
ஆய்வுக்குள்ளாகியபடியே பயணிக்கின்றன...
ராட்சத லாரிகள் நகருக்குள் நுழையும்முன்பே
முதலாளிகளின் பணப்பெட்டி வந்துவிடும்..
பாதாள சாக்கடைத் திட்டங்கள்
பரணில் கிடந்து பல்லிளிக்கின்றன...
சாக்கடைகள் பாதாளத்துக்குள்
மூழ்கிக் கொண்டு முத்தெடுக்கின்றன ...
நான் கட்டிய வரியனைத்தும்
அணில் முதுகில் ராமன் போட்ட கோடுகளைப் போல,
லத்தியின் கோடுகளாய் என் முதுகில்
கிடக்கிறது வரிவரியாய்...
உங்கள் பிள்ளைகள் காரில் செல்ல
நான் கப்பம் கட்ட வேண்டுமா?
நீங்கள் வயிறுபுடைக்க உண்பதற்கு
நான் பட்டினி கிடப்பதா?
என் பிள்ளையின் ஆபரணத்தைக் கழற்றி
அடகுக் கடையிலிட்டு
உங்கள் பிள்ளைகளின் கழுத்தில்
நீங்கள் அணிவிப்பது
ஆபரணமல்ல ! கோவணம்!
இளைப்பாற மரமில்லை- அவை
உங்கள் வீட்டு கதவாய் மாறி மூடித் திறந்தபடி இருக்கின்றன...
சட்டமியற்றுங்கள் நான் சுவாசிக்க...
சட்டமியற்றுங்கள் நான் நடமாட...
சட்டமியற்றுங்கள் உங்களைக் கழுவிலேற்ற...
சட்டமியற்றுங்கள் சட்டங்களைத் தூர்க்க...
நான் தலைக்கவசம் அணியவில்லை...
என்னை விட்டுவிடுங்கள்...
இன்று மதியம் என் வயிறு பசித்திருக்கும்...
புசியாதிருத்தலும் என் தலைக்கு ஆபத்து!
- பிரபு தர்மராஜ்.
0 Comments