Tamil Sanjikai

‘டொங்’ என்ற சப்தத்தோடே உடைந்தது அந்த சீக்கோ வாட்ச்...
கண்ணாடி கீறிய கைகளிலிருந்து ரத்தம் பாய்ந்தது...
அதிர்ந்து போய் வெளியில் வந்து பார்த்த தாத்தா
மருந்து எடுக்க வீட்டிற்குள் ஓடினார்,
கடிகாரம் தன் ஓட்டத்தை நிறுத்தியிருந்தது.
அழகான அதன் வைரக்கற்களை எடுக்க ஆசைப்பட்ட நான்
சுத்தியலும், ரத்தமுமாக நின்றிருந்தேன்.
அம்மா அடி வெளுத்தாள் ! அப்பாவும் அவர் பங்குக்கு....
பெர்சியாவிலிருந்து மாமா கொண்டு வந்ததாம் ! பாட்டி சொன்னாள்.
தாத்தா மிகவும் நேசித்த பொருட்களில் ஒன்று! என்றாள் சித்தி.
சத்தமாக அழுதேன்.... கை வலித்துக் கொண்டேயிருந்தது...
தாத்தா சமாதானப் படுத்தினார்... ஒண்ணுமில்ல மக்கா !
ஆம்புளப் புள்ளல்லாடே ! அழலாமா ! வாட்சு மயிராச்சி !
எல்லாம் அப்பா வச்சிக்குடுக்குற இடம்....
இப்புடி செல்லங்குடுத்து... ஒரு பேச்ச கேக்க மாட்டேங்கான் !
தாத்தாவைக் கடிந்துகொண்டாள் அம்மா...
சின்னப் புள்ளல்லா மக்கா ! என்ன தெரியும் அதுகளுக்கு ?
வேற வாட்சு வாங்கிட்டா போச்சி ! தாத்தா சொன்னார்...
தாத்தாவின் மடியில் தூங்கிப் போனேன்.
நா பெரிய புள்ளையானதும் வேலக்கிப் போயி
உனக்கொரு வாட்ச் வாங்கித் தாரேன் தாத்தா ! நீ கவலைப்படாத என்னா !
கண்விழித்ததும் தாத்தாவிடம் சொன்னேன்.
விலைமதிப்பு மிக்க வாட்சை நான் உடைத்த வருத்தமின்றி
அத்தனைப் பெருமிதம் அவர் கண்களில்.....
இருபதாண்டு காலம் ஓடிவிட்டன... டாலர்களில் சம்பாத்தியம்...
அடுத்த வாரம் ஊருக்குப் போகிறேன்...
தாத்தாவுக்கான சீக்கோ வாட்ச் பெட்டியில் இருக்கிறது.
விலை ஒரு லட்சத்து சொச்சம் !
அம்மா அழைத்தாள்.... மக்கா தாத்தா மரிச்சிட்டாரு...
காலத்தயே தூக்கத்துல உயிர் போயிட்டு !
அவள் குரல் உடைந்து போயிருந்தது...
உடனே புறப்பட்டு வரமுடியுமா ? அப்பா கேட்டார்.
அமெரிக்காவிலிருந்து இந்தியா செல்ல இருபது மணிநேரம் ஆகும்...
காலம்தான் எத்தனை வேகமான விலங்கு ?
முட்கள் சூழ ஓடித் தீர்த்து ஆயுளை நகர்த்தும் கைக்கடிகாரங்கள்
ஆறறிவு மாக்களின் ஆசைகள் குறித்து
ஒரு போதும் அறிவதில்லை....
பேட்டரி செல்களைத் தின்றுசெரித்து ஏப்பம் விட்டவாறே
ஆசாபாசங்களைக் கொன்று சிதையிலிட்டுக்
கொள்ளி வைக்கின்றன...
நிற்காமல் ஓடும் காலம்தான் காலனா ?
அன்றந்தக் கடிகாரத்தை நான் உடைத்தது நியாயம்தானோ ?
துக்கம் தொண்டையை அடைத்தது.
கடிகாரத்தைப் பார்த்தேன்... மணி இரவு பத்து !
இந்தியாவில் காலை எட்டே முக்கால்....
நேற்று கூட தாத்தா பேசினாரே ?
சீக்கோ வாட்ச்சும், உல்லன் ஸ்வெட்டரும்
உனக்காய்க் காத்துக் கிடக்கிறது தாத்தா ! என்றேன்.
இந்த பிராயத்துல எனக்கெதுக்குடே வாட்சு ?
நீ பத்திரமா ஊரு வந்து சேரணும் மக்கா ! அது போதும்....
அவர் பேசிய கடைசி வார்த்தைகள் அவை .....
அப்போது அவருக்கு இரவு ! எனக்குக் காலை !
காலம் எங்களை இப்படிப் பிரித்து வைத்திருக்கிறது....
தாத்தாவின் கடைசி இரவாய் அது இருந்திருக்கிறது....
தாத்தா அதிகாலையில் தன்னுடைய ஓட்டத்தை நிறுத்திக் கொண்டார்....
ஓடிப்போய் பெட்டியைத் திறந்து பார்த்தேன்....
கொடூரமாய் ஓடிக்கொண்டிருந்தது
அந்த ஒரு லட்சத்து சொச்ச ரூபாய் மிருகம்....
சத்தமாக அழத் துவங்கினேன்......

- பிரபு தர்மராஜ்

0 Comments

Write A Comment