Tamil Sanjikai

தமக்குப் பிறக்கப் போவது
கோமகனா ? கோமாளியா?
கொற்றவையா ? கொடுங்கோலியா ?
என்றறியாது தன் முதுகில் கைகொடுத்து
உப்பிய வயிற்றை முன்தள்ளி
மழலையாய்த் தவழ்ந்து,
சாம்பல் தின்று, மண்ணுண்டு
ஊன் வருத்தி , உறக்கம் வெறுத்து
ஆசை தவிர்த்து, அலைந்து திரிவாள் அவள்...
தத்தம் காதலின் கருசுமந்து, முகம் வீங்கி
உதடு தடித்து, உருப்பெருத்து
ஒற்றை உதட்டுக்கடியில்
ஒட்டுமொத்த உடல்வலியை உணர்த்தி
ஒடுங்கிக் கிடக்கும் தன்பாதியின்
சுகவீனமறிந்து தேம்புவான்...
தங்களின் காதல் நிமித்தம் நீந்தும் தம் சிசுவின்
தொடு உணர்வு நாடி யவள் வயிறு தடவி,
அவள்தம் பனிக்குடம் தாண்டியும்
தம் விரல் நீட்டி, தனக்கு சமிக்ஞை செய்யும்
தன் மிச்சத்தின் ஸ்பரிசத்தை சுவாசித்து
தன்னிலை மறந்து அலைவான்...
பிரசவ அறைவாசலில் தன்காதலியின்
முதல் அழுகுரலில் கலங்கித் தங்கள்
காதலின் வெளிப்பாட்டின் இரண்டாவது
அழுகுரலில் உயிர்த்தெழுந்து
மூன்றாம் முறையாகப் பிறப்பானவன்
அன்பைத்தவிர தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாத
தகப்பன்கள் என்றுமே சாமிகள்தாம்...

-பிரபு தர்மராஜ்

 

0 Comments

Write A Comment