Tamil Sanjikai

பெற்றோரை அன்பு இல்லத்தில்-அவர்கள்தம்
கண்கள் கலங்க பேரக்குழந்தைகளைக் காணாமல் தவிக்க விடுவோம்!
வீட்டையும், சுற்றத்தையும் கற்கவேண்டிய வயதில்,
தாத்தா தெரியாது ! பாட்டி தெரியாது !
முசுமுசுவென அழும் இரண்டு வயதுக்குழந்தையை
ஆட்டோவில் ஏற்றி பிளே ஸ்கூலுக்கு அனுப்பிவிடுவோம் !
பிறப்புறுப்பில் கத்தி சொருகப்பட்டு, விழிபிதுங்க செத்துக் கிடக்கும்
குழந்தைகளின் படத்தோடு செய்திகளைப் பகிர்வோம் !
குழந்தைத் தொழிலாளர்களை எகத்தாளப் பார்வையில்
ஒருநாயைப் போல சாலையில் கடந்து செல்வோம் !
நடைபாதையில் யாசகம் கேட்கும் குழந்தைகளிடம்
எரிந்து விழுந்துகொண்டே பரிதாபப் பாசாங்கு காட்டுவோம்!
அவனோடு , அவளோடு சேராதே! என்று
பிள்ளைகளுக்கு சாதியைப் பயிற்றுவிப்போம் !
சட்டையில் ஒற்றை ரோஜா வைத்த காரணத்திற்காக
ஜவகர்லால் நேருவைக் கொண்டாடுகிறீர்களே ?
யார் நேசிப்பதில்லை குழந்தைகளை ?
உங்கள் நேசம் உங்கள் ரத்தபந்தக் குழந்தைகளுக்கு மட்டும்தானே ?
யாரோ ஈன்ற இன்னொரு பெண்ணுயிர் உங்களுக்கு
போகப் பொருளாய் மட்டும்தானே பரிச்சயம் ?
ரோஜாவைத் தூக்கியெறிந்துவிட்டு,
குழந்தைகளின் அடையாளமாய்
முட்களை வைத்துக் கொள்ளுங்கள் !
இன்னொரு கரிநாள் ஒன்றில்
கொண்டாடலாம் சிறார் தினத்தை.....

-பிரபு தர்மராஜ்

0 Comments

Write A Comment