Tamil Sanjikai

மழைவேண்டி திருமணம் செய்த கழுதைகள்
குழந்தை பெற்றுக் கொள்வதில்லை.
கோயிலுக்கு நேர்ந்த ஆட்டை வெட்டி உண்ணாமல்
வெறுமனே மண்ணில் புதைத்ததில்லை.
பலியில் வெட்டுப்பட மறுத்த கோழிகள்
பூசாரியின் கையைக் கீறி ரத்தம் தெளிக்கின்றன.
நேர்ச்சையின் மொட்டைக்குப் பின்னும்
மயிர்கள் வளர்ந்த வண்ணம் இருக்கின்றன.
அலகிலிருந்த வேல் பிடுங்கப்பட்ட பின்னும்
நாவுகள் பாயாசம் குடிக்கின்றன.
நேற்று கண்ணீர் வடித்த மாதாசிலை மீது
இன்று ஈக்கள் மொய்க்கிறது.
உழுதவனுக்கும், அறுத்தவனுக்கும் முந்திக்கொண்டு
உண்ணாதவனுக்கு படைக்கப்படுகின்றன நெல்மணிகள்.
யோவானின் வயலில் மேய்ந்த
கோயில்காளைகள் மாத்திரம் துரத்தப்படுகின்றன.
இப்ராஹீம் பாய் கறிக்கடையில் மட்டும்
பன்றிக் கறி கிடைப்பதில்லை.
பார்த்தசாரதி வீட்டின் முன்வாசலை
இதுவரை கண்டதில்லை குளத்தங்கரை சுடலை.
வாயில்லாதவனுக்கு படையலிட
வாயில்லாதவைகளையே தெரிவு செய்கிறேன்.
தீட்டும், நேர்ச்சையும் மாறிப் போகும்
ஆட்களையும், கற்களையும் பொறுத்து...
யாருக்காகவும் இதுவரை நேர்ந்ததில்லை
என்னை நானாகிய நான்.

- பிரபு தர்மராஜ்

0 Comments

Write A Comment