Tamil Sanjikai

எனையீன்ற தாய்தானென் அண்ணனையுமீன்றாள்!
அவன் கையில் ஏதேதோ வைத்திருக்கிறான்...
காதுகளில் நூல் போன்ற கருவிகள் அவனது தலையை ஆட்டுவிக்கின்றன...
குளிப்பாட்டும் பலகை போன்றவொன்றைக் கையில் வைத்திருக்கிறான்....
எதற்கோ சிரிக்கிறான்! எதற்கோ கோபிக்கிறான்!
அவன்முகத்தின் அத்தனைத் தசைகளும் பணிபுரின்றன!
என் காதிலும் ஒன்று இருக்கிறது!
ஒன்றே ஒன்று ! ஒற்றைக்காதில்...
அது என் மூளையை நிறைக்கிறது
வெற்றுச் சப்தங்களால்!
கடினப் பட்டுப் போகிறேன் நான்....
அண்ணனிடம் அம்மா வாயால் பேசுகிறாள்..
என்னிடம் விரல்களாலும் , சைகைகளாலும்....
அப்பா அண்ணனை இறக்கிவிடும் பள்ளியின் முகப்பில்
'மெட்ரிக்குலேசன் பள்ளி' என்று எழுதியிருக்கிறார்கள்....
என் பள்ளியின் முகப்பில் 'செவிட்டு ஊமைகளின் சிறப்புப் பள்ளி'
என்றல்லவா எழுதியிருக்கிறார்கள்...
நான் சிறப்புக் குழந்தையா அம்மா?
நான் அப்பா'வென அழைத்த குரலை
ஒருமுறையேனும் கேட்டிருக்கிறாயா அப்பா?
எனக்கென்ன சிறப்பை அருளினாய் கருணையின் கடவுளே?

- பிரபு தர்மராஜ்.

 

0 Comments

Write A Comment