தடித்த மீசையும்
வெடித்த பார்வையும்
அழுக்கு கரங்களாக மட்டுமே
அப்பாவை பலபேருக்கு தெரியும்...
முந்தின வாழ்கையில் குடித்த மதுவும்
பிந்தின வாழ்கையில் போட்ட
சண்டைகளுமே
அப்பாவுக்கான முகவரிகள்...
கல்லுக்குள் ஈரம் என்று
கவிஞர்கள் சொல்வது..
மற்றவர்களுக்கு எப்படியோ....
அப்பாவுக்கு மட்டும்
அப்படியே பொருந்தும். ..
அறியாத வயதில்
அம்மாவை இழந்து
அப்பா பட்ட கஷ்டம் கேட்டு
அழுதிருக்கிறேன்....
சின்ன வயசிலேயே
கடவுள் என்னை
சித்திரவதை பண்ணிட்டாம்டே....என்று நீ
வருத்தப்பட்டு தூங்கி போனாய்...
நானோ அதை நினைத்து
தூக்கமின்றி ஏங்கி போனேன்......
நான் படிக்கும்
பாட புத்தகங்களை
இடவலமாக திருப்பி பார்த்து
அத்தனை புத்தகங்களையும்
ஆர்வத்துடன் தொட்டு பார்க்கும்
அறுபத்தி எட்டு வயது
பள்ளி சிறுவன் என் அப்பா....
நான் வெகுமானப்பட
அவமானம் பொறுத்தவரே...
உவமானம் ஏதப்பா...
உன் தன்மான உழைப்பிற்கு...
மண்ணையும் மாட்டையும் வைச்சு
என்னையும் வீட்டையும் காத்தவனே.... வெறும்
பொன்னையும் பொருளையும் வைச்சு
நான் உன்னைய விலை பேச முடியுமா..
வெறும் காசுக்கு ஆசைப்பட்டு
வெளி நாட்டுக்கு போகையில...
மக அழுக மனைவி அழுக
தாய் அழுக தங்கை அழுக
தந்தை அழல்லையே...
ஏத்தி விடும் நேரம் வர...
என் கூடவே வந்து
அந்த கருப்பு புத்தகத்தை மட்டும்
கவனமா பாத்துக்கோ மக்கான்னு
பாஸ்போர்ட பார்த்து நீ
பரிதவிச்ச வேளையீல
பார்த்திட்டேன் பா...
பார்த்திட்டேன்.....
உனக்கும் அழ தெரியும்கிரத....
மண்ணையும் மம்பட்டியையும்
வச்சிக்கிட்டு
எனக்கு
கல்வியும் கம்புயுட்டரும்
கொடுத்தவனே...
உன் கால் கழுவி குடிச்சா கூட
கைம்மாறு தீராதப்பா.....
-தெரிசை சிவா
0 Comments