Tamil Sanjikai

நீங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள் கிறிஸ்தவர்களே !
பண்டிகைக்கால கிறிஸ்தவர்களே
ஜலத்தில் களி கூறுங்கள் !
உங்கள் ஜெகோவாவின் பிள்ளைகள்
திருவோடு ஏந்தி ஆலய வாசலில் அமர்ந்திருக்கிறார்கள்
உங்கள் ஆராதனையின் விடியலை எதிர்நோக்கி !
பசித்த வயிற்றைத் தடவியபடிஇருக்கிறார்கள் !
சாதிக்கொரு இயேசுவாய் அநேகம் இயேசுகிறிஸ்துக்கள் இந்தியாவில் இன்று பிறந்திருக்கிறார்கள் !
பெத்லகேமில் பிறந்தார்!
கல்வாரி மலையில் மரித்தார் !
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் !
மீண்டும் பரலோகம் சென்றார் !
காட்டிக் கொடுத்த யூதாஸ் அவரோடுகூட பரலோகத்திலிருக்கிறான் !
இயேசு அவனையும் மன்னித்தார் !
அவர் யாருக்காக மரித்தாரோ !
அவர்கள் இன்று இறைச்சிக் கடையின்
வாசலில் நிற்கிறார்கள் !
அவர்களது கண்கள் திராட்சை ரசத்தின் நிமித்தம் மரித்திருக்கின்றன !
சமூக நீதி பேசிய இயேசுவின் சமூகம் இன்று
சாதிக்குள் மூழ்கி செத்துக் கிடக்கிறது !
பரலோகக் கதவின் சாவியை
விற்பனை செய்கிறார்கள் வேதவிற்பன்னர்கள் !
விலையதிகமாய் இருக்கிறது !
எனக்கொரு சாவியை இலவசமாய்க் கொடும் இயேசுவே !
விவிலியத்தைக் குறித்து எதுவும் அறியேன் !
இயேசு கூறியது எதுவும் எனக்குத் தெரியாது
ஆனால் நான் இயேசுவின் பிள்ளை !
ஹாலேலூயா என்று கதறுங்கள் !
பசியெனக் கத்துபவனை பசுமாடு
போலக் கடந்து செல்லுங்கள் !
அதுதானே இயேசு போதித்த கிறிஸ்தவம் ?
அந்திக் கிறிஸ்துவின் தற்காலப்பெயர்
இந்தியக் கிறிஸ்தவர்கள் !
சாத்தான் உங்கள் சபையின் பீடத்தில் உட்கார்ந்திருக்கிறான் !
இயேசு வெளியே மணியடித்துக் கொண்டிருக்கிறார் !
காணிக்கை வேண்டும் ! மனசாட்சி வேண்டாம் !
பகட்டு வேண்டும் ! பரிசுத்தம் வேண்டாம் !
எல்லாரும் சமம் என்றார் இயேசு !
அவரை சிலுவையில் அறைந்தீர்கள் !
அதற்கொரு விழா எடுத்தீர்கள் !
எத்தனை முறை மரித்து உயிர்தெழுந்தார் என்ற கணக்கு இயேசுவிடமே இல்லை...
பாவம் இயேசு ! இனி அவர் வரப்போவதில்லை !
இயேசு அழைக்கிறார் ! தயவு செய்து போய்விடுங்கள் !
அவரை அழைக்காதீர்கள் !
அவர் வரப்போவதேயில்லை !
மீண்டுமொரு முறை அவரை சிலுவையேற்ற வேண்டாம் !
இயேசு விடுவிக்கிறார் ! நீங்களும் அவரை விடுவியுங்கள் !
பாவம் பிழைத்துப் போகட்டும் !
கண்ணீர் அஞ்சலி இயேசுவே !
முப்பத்தி மூன்று ஆண்டுகள்
நீர் இந்தப் பொல்லாப் புவியில்
அனுபவித்த பாடுகள் போதும்!
மீண்டுமொருமுறை நீர் இந்த மண்ணுக்கு வரவேண்டாம் !
பரலோகத்தில் சந்திப்போம் !
நீங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள் கிறிஸ்தவர்களே !

-பிரபு தர்மராஜ்

 

0 Comments

Write A Comment