Tamil Sanjikai

நான் மீண்டும் சென்றபோது
அவ்விடம் முற்றிலும் அழிந்திருந்தது.
தேடிக் களைத்துப் போனேன்
உன் காலடிகளை....
உன் மென்பாதங்கள் ஸ்பரிசித்த
மண்துகள்கள், இப்பூமியைவிட்டு
வெளியே சென்றிருக்க முடியாது...
கிழிந்த என் அரைக்கால் சட்டையை
மறைக்க, பின்னால் நடந்து வந்த
உன் பாதச்சுவடுகளை எங்கே தொலைத்தேன்....
பசிமறக்க நீர்குடித்து, பழுதடைந்தயென்
குடலின் பேரிரைச்சல் தீர்க்க
உன் உணவை எனக்காய்
வேகாத வெயிலில் சுமந்த
உன் காலடிகளை எங்கு தொலைத்தேன்....
அத்தனை பேர் தடுத்தும்
என்கைகளை இறுகப்பிடித்து,
கண்ணீரோடு நடந்து வந்த
உன் பாதச் சுவடுகளை
எங்கு தொலைத்தேன்.....
பிரசவ அறையில் உதடுகடித்து
நீ வெடித்துக் கதறியபோது
உன் பாதங்களைக் கையில் ஏந்தி
நின்ற என் கையில் பதிந்திருந்த
பாதங்களின் ரேகைகளை
எங்கே தொலைத்தேன்.....
தீர்க்க சுமங்கலியாய் உன்னைக் கொடுத்து
தீர்க்கவியலா வெறுமையை உண்டு
எதைச் செரிக்கப் போகிறேன்....
தேடித் தேடிக் களைப்பாய் இருக்கிறது...
என்னையும் கூட்டிப்போ....

- பிரபு தர்மராஜ்

0 Comments

Write A Comment