Tamil Sanjikai

எதை வேடிக்கை பார்க்கிறீர்கள் மனிதர்களே ?
இது பாசக்கயிறல்ல ! பசிக்கயிறு !
நீங்கள் தரிசித்த சாமிதான் என்னையும் படைத்தான் !
தேரிலிருக்கும் அவனும் என்னைக் காண்கிறான் !
பகட்டாய் பட்டாடை உடுத்த எனக்கும் ஆசைதான்!
கந்தலாடை மட்டுமே எனக்குப் பரிச்சயம் !
தட்டில் காசு விழுந்தால்தான்
பானையில் உலை கொதிக்கும் !
பாழாய்ப்போன வயிறு பசித்துத் தொலைக்கிறதே !
புவியீர்ப்பு விசை என்னை அளவுக்கு அதிகமாக நேசிப்பதால்
எனை விட்டு ஒதுங்கி நிற்கிறது !
கீழே மேளமடிக்கும் என் அண்ணனுக்குத் தெரியும்
நான் ஒருபோதும் வீழ்வதில்லையென !
ஆனாலும் ஒரு கண் என் மீது படர்ந்திருக்கும்...
ஒரு கை எனைத் தாங்கக் காத்திருக்கும்...
உங்களை மேலிருந்து காணும்போது எந்த மேன்மையும் எனக்கில்லை
என்னைக் கீழிருந்து காணும்போது கீழாய்க் காணாதீர்...
இன்மையை மட்டுமே உணர்ந்த எனக்கு
இனிமையின் சுவை எட்டாக்கனி !
வறுமையின் வலிதான் என்னை கயிற்றின் மேலேற்றியது
இறங்க நினைக்கிறேன் ! என்னால் முடியவில்லை !
என் தாய் மொழியைப் பேசுவேன் !
ஆனால் எழுதத் தெரியாது !
பள்ளியைக் கண்டதில்லை ! பசிதான் காரணமென்றால்
இந்த வயிறு எனக்குத் தேவையில்லை !
பறக்க நினைக்கிறேன் ! சிறகுகள் இல்லை !
யாரையும் ஏமாற்றத் துணியாததால்தான்
இந்தக் கயிறு என்னைச் சுமந்து கொண்டிருக்கிறது.
தரையில் நடக்கும் போது நீங்கள் என்னைக் காண்பதில்லை !
உங்களால் இங்கு நடக்க முடியாது என்று எனக்குத் தெரியும்
இல்லையென்றால் நீங்கள் என்னை வேடிக்கை பார்ப்பதில்லை !
நான்தான் தேவதை என்று நான் அறிவேன் !
ஆகையால் நான் வீழ்வதில்லை !
நீங்கள் வேடிக்கை பாருங்கள் மனிதர்களே !

-பிரபு தர்மராஜ்

 

0 Comments

Write A Comment