Tamil Sanjikai

தன் இளமையால், இளையோர் கவரும்
இடைச் சிறுத்த பாட்டன் வயதொத்த
தென்னைமரங்கள்!
ஓயாது முத்தங்கள் பரிமாறும்,
அழகிய நீரோடையும்
அதன் கரைதனில் செழும்பச்சை நாணலும்!
தன் வேர்களால் நீரோடையோடு
தொடர் ஊடல் புரியும் வேப்பமரக் கிளைதனில்,
முன்னொரு காலம் சிங்காரச் சலங்கை கட்டி
இளசுகளின் மனசு கட்டிய நாட்டிய மங்கை
இன்று பித்ருவாகி நாட்டிய பயிற்சி அளிக்கிறது.
அந்த கா.. கா... வை தா... தை யாக்கி
நாட்டிய அரங்கேற்றம் செய்கிறார் ஒரு சீடன்!
அந்த நீரோடைக் கரையோரம்!
பச்சையுடுத்திய வயலையும்,
மேகத்தை அரவணைக்கும் மேற்குத்தொடர் மலையும்,
சங்கீதம் பாடும் குயிலும்,
ஓர் முகம்காட்டா கலைஞனின்
காணொளி பதிப்பும் சாட்சியம் அளிக்கிறது.
குழாய் பதிக்க, நடுவாய் பிளந்து கேட்பாரற்று
விடப்பட்ட தார்ச் சாலைக்கு!

- பினோ செல்வராஜ்.

0 Comments

Write A Comment