Tamil Sanjikai

தனது கடல் தொழில் அனுபவங்களை 'கடல்நீர் நடுவே" நாவலாக கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டிணத்தைச் சேர்ந்த ஆழ்கடல் மீனவர் அருள்ராஜ் எழுதியிருக்கிறார். காற்றோடும், அலையோடும் கடலில் மல்லுக்கட்டும் அவர், ஓய்வுக்காக கரைக்கு வந்த போது , முட்டம் படகு துறைமுகத்தில் அருள்ராஜை சந்தித்து பேசினோம்.

ஆழ்கடல் மீனவர், எழுத்தாளர் கடிகை  அருள்ராஜ் நேர்காணல்

உங்களைப் பற்றிசொல்லுங்கள்?

நான் ஒரு மீனவன். சின்ன வயசுல அம்மையும் அப்பாவும் இறந்துட்டாங்க ,அதுனால தான் கொஞ்சம் கஷ்டம். நான் பத்தாங்கிளாஸ் படிச்சிட்டு தொழிலுக்கு வந்துட்டேன். கடல் தொழிலை பலரும் எனக்கு சொல்லித் தந்தாங்க . எனக்கு மனைவியும், மூன்று பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் . பிறரை மகிழ்ச்சிப் படுத்த அப்பப்ப மிமிக்ரி பண்ணுவேன். பிற கலைகளில் கொஞ்சம் ஆர்வம் உண்டு. நான் மீன்பிடித் தொழில் முறையோடு மீனவனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட "கடல் நீர் நடுவே" என்ற நாவலை எழுதியிருக்கிறேன் .

எழுத்து நோக்கி உங்களை நகர்த்தி நிகழ்வு என்ன?

கடலில் ஒவ்வொரு ஊராக தொழிலுக்குப் போயிருக்கேன்.அதில் கிடைச்ச அனுபவங்கள் என் மண்டைக்குள்ள அப்படியே ஸ்டோராகி கிடந்துச்சி. இப்போ நான் கடல்குள்ள போனால் பத்துப்பதினஞ்ச்சி நாட்கழிச்சித் தான் கரைக்கு வருவேன். கடலுக்கு போனால் கரையில் உள்ள மக்களோடு எந்த தொடர்பும் இருக்காது. செல் போன் சிக்கினலும் கிடைக்காது .அப்படி ஒரு வாழ்க்கை தான் நாங்க வாழுறோம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேசிய வசனங்கள் சிலவற்றை அப்படியே நான் பேசி பிறரை மகிழ்விப்பது வழக்கம். அதில் பராசக்தி படத்தில் கோர்ட் சீன் வசனத்தை அப்படியே உல்டாப் பண்ணி, கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிரமங்களில் ஆண்கள் கடன் பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கின்ற சம்பவத்தை வைத்து நானே எழுதி பேசியதை மொபைலில் பதித்து வைத்திருந்தேன். அந்த பதிவை இலக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்ட எங்கள் ஊரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி ரோஸ் கியூபர்ட்டிடம் கேட்கக் கொடுத்தேன். அவர் அதை கேட்டுவிட்டு, கோர்வையாக எழுதி பேசிய விதத்தை பாராட்டி, "நீங்க எழுதலாமே" என்று ஊக்கப்படுத்தினார். பின்னர் நாகர்கோவிலில் நடக்கும் புத்தக வெளியீட்டு விழாவிற்கும் இலக்கிய கூட்டங்களுக்கும் அழைத்துச் சென்றார். அது எனக்கு மிகப் பெரிய தூண்டுதலை ஏற்படுத்தியது. இவ்வுலகில் நாம் வாழ்ந்ததற்கான அடையாளமாக எதையாவது விட்டுச்செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தோடு எழுதத் தொடங்கினேன்.

உங்கள் நாவல் பற்றி?

"கடல்நீர் நடுவே" நாவல் முழுக்க முழுக்க கடலையும்,கடல் தொழிலையும் மையப் படுத்தி தான் எழுதியிருப்பேன். சின்ன வயசுல நாடகம் எழுதி நடிச்சதால ,எழுத கஷ்டமா இல்லை .கட்டுமரத் தொழில் ,படகு தொழில் ,சுறா வேட்டை தொழில்னு ரொம்ப வித்தியாசமாக எழுதிருக்கேன் . நாவல்ல வருகிற கதாபாத்திரங்கள் எல்லாமே கற்பனை தான். மீனவ தொழில் முறைய மையப் படுத்தி எழுதிருக்கேன். குறிப்பா காத்து அடிக்குற திசை,நட்சத்திரம்,நிலா,சூரியன் பாத்து நாங்க நிக்குற இடத்த கணிச்சி போறது, என முக்கியமான விசயங்களும் . என்னென்ன மீன் வகைகள் எப்பப்போ கிடைக்கும் என்கிறதை கதை ஓட்டத்திலயேயும் சொல்லிருப்பேன். கதை கிளைமேக்சுல கேரளாவுல கடல்ல ஒரு மீனவரை காப்பதுனத தத்ருவமா சொல்லிருப்பேன். அது உண்மையா நடந்தது. அந்த சமயத்துல அரசாங்க படகு கூட தேட போய் பாதில நின்னுட்டு,ஒரே காத்தும் புயலும் அதுல மழை வேற. இருட்டிட்டு ஆனாலும் எதையும் பாக்காம அந்த மீனவனை தேடி அலைஞ்சி கண்டுப்பிடிச்சேன். அப்போ போறப்போ பெரிய ஆபத்து பகுதியில் தான் போனேன்.என் போட்டு உடையலாம் இல்ல நாங்க சாகலாம்னு இருந்த சூழலுல நான் சவாலா நினைச்சிட்டு போனேன். ஏன்னா பொண்ணுக்கு புருசன காட்டனுமே,பிள்ளைகளுக்கு தகப்பனை காட்டனுமே, பெத்தவளுக்கு மகனை காட்டனுமேனு எனக்கு ஒரு வைராக்கியத்துல தேடி கண்டுப்பிடிச்சேன்.அது அப்போ கேரளாவுல எல்லாப் பேப்பருலயும் செய்தியாக வந்துச்சி . இதையெல்லாம் சேர்த்து கதை எழுதுனதுக்கு அப்புறம் பலபேருகிட்ட படிக்க கொடுத்தேன். நானும் சிலருக்கு படிச்சிக்காட்டுனேன் . அவங்க எல்லாருமே நல்லாருக்கு என்று சொன்ன பிறகுதான் புத்தகமா வந்துச்சி.

ஆழ்கடல் மீனவர், எழுத்தாளர் கடிகை  அருள்ராஜ் நேர்காணல்

மீனவருக்கு ஓய்வு நேரம் என்பதே குறைவு. அதிலும் நீங்கள் ஆழ்கடல் மீனவர் எழுத நேரம் எப்படி வாய்க்கிறது?

எங்க மீனவ மக்கள் கடலுக்கு போரதே ஒரு போராட்டம் தான். அதையே கதையா எழுதிருவோம்னு முடிவு செய்தேன். உடனே எனக்கு எழுத நேரம் கிடைக்காதே என்னால முடியுமானு யோசனை வந்தது . கடலுக்கு சென்று விட்டால் எழுத நேரம் கிடைக்காது. இரவும் பகலும் வேலை இருப்பதால் கொஞ்ச நேரம் ஓய்வு கிடைத்தாலும் அந்த நேரத்தை தூக்கத்திற்காகத் தான் செலவிடுவோம். எப்போதாவது சிலவேளையில் கொஞ்சம் வாசிக்க நேரம் கிடைக்கும். என்னுடைய தொழில் கேரளாவைச் சார்ந்து இருப்பதால் நான் அங்கே ஒன்றரை மாதம் தங்கி தொழில் பார்த்துவிட்டு பின்னர் ஒருவாரம் ஊருக்கு லீவுக்கு வருவேன் .அந்த நேரங்களில் எழுதுவதுண்டு. மட்டுமல்லாமல் கிறிஸ்மஸ் நேரங்களிலும், ஈஸ்டர் பண்டிகை நேரங்களிலும் மீன்பிடித் தடைக்கால நேரங்களிலும் கிடைக்கும் நேரத்தை வீணாக்காமல் எழுதிக்கொண்டிருந்தேன். மீன்பிடி தடைக்காலமான 45 நாட்கள் உட்கார்ந்து மூனு வருஷமா எழுதி முடித்ததுதான் இந்த "கடல்நீர் நடுவே" என்கிற நாவல் .

மீனவனும் நாட்டின் ராணுவ வீரனா?

மீனவனும் ராணுவ வீரன்தான். அவன் கடல் எல்லையின் ஊதிய மில்லாத பாதுகாவலன். அன்னிய சக்திகளின் கைகளை கட்டிப் போடும் இரும்புச் சங்கிலி. அந்த சங்கிலியை துருப்பிடித்து அறுந்துபோகச் செய்யக் கூடாது. அப்படி அறுந்து போய்விட்டால் அன்னிய சக்திகளின் பலம் ஓங்கி விடும் . ஈஸியாக நாட்டிற்குள் ஊடுருவக் கூடும். அன்னிய சக்திகளுக்கு மீனவர்களே ஒரு பெரும் தடுப்புச் சுவர். எங்களைத் தாண்டி நாட்டிற்குள் ஊடுருவுவது அவ்வளவு எளிமையான காரியமில்லை.

உங்கள் நாவலில் எழுத முடியாத விசயங்களை மறுபடி புதிதாக எழுதத் திட்டம் இருக்கிறதா?

நிச்சயமாக! யாராலும் அவரவர் நிலம் சார்ந்த விஷயங்களை முழுமையாக பதிவு செய்துவிட முடியாது. கடலைப் பற்றியும் மீன்பிடித் தொழில் முறையையும் ஒரு கையளவுதான் என் நாவலில் பதிவு செய்துள்ளதாக உணர்கிறேன். இன்னும் கடலளவு இருக்கிறது. அடுத்த நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். முதல் நாவலில் சொல்லப் படாத விஷயங்கள் அடுத்த நாவலில் சேர்ந்து வரும்.

சாகர் மாலா திட்டம் மீனவர்களுக்கு நன்மையை தருமா?

சாகர்மாலா திட்டத்தால் மீனவர்கள் அனைவரும் முழுமையாக பாதிக்கப் படுவார்கள். குஜராத் முதல் மேற்கு வங்காளம் வரை கடற்கரை முழுவதும் ஆங்காங்கே பெரிய கப்பல் துறைமுகங்களை கட்டி ஒன்றிணைப்பதால் மீனவர்களின் வாழ்விடங்கள் பறி போகும். மீன்பிடித் தொழில் முற்றிலும் பாதிப்படையும். யாருக்கும் தொழில் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகும். கப்பல்களின் அதிக போக்குவரத்தால் விபத்து ஏற்பட்டு பல மீனவர்களின் உயிர்கள் பறி போகும். இதனால் பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பனிகளுக்கு ஒருவேளை ஆதாயமாக இருக்கலாம். மீனவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பாக அமையும். அன்னிய செலாவணியை நாட்டிற்கு பெருமளவு ஈட்டிக் கொடுப்பது மீன்பிடித் தொழில். கிட்டத்தட்ட வருடத்திற்கு அறுபதாயிரம் கோடி. அப்படிப்பட்ட மீன்பிடித் தொழிலை ஊக்கப்படுத்தினால் நாடும் நன்றாக இருக்கும். மீனவர்களும் நன்றாக இருப்பார்கள்.

சர்வதேச கடல் பரப்பில் எல்லைக் கோடுகள் எப்படி பிரிக்கப்படுகிறது?

1970 களில் ஐ.நா.வின் கடல் சட்டத்தின் படி கடற்கரையிலிருந்து 12 நாட்டிக்கல் மைல் வரையுள்ள பகுதி அந்த நாட்டின் மாநிலத்துக்கு சொந்தமானதாகவும் , 12 நாட்டிக்கல் மைலிலிருந்து 200 நாட்டிக்கல் மைல் வரையுள்ள பகுதி அந்த நாட்டிற்கு சொந்தமானதாகவும், 200 நாட்டிக்கல் மைலுக்கு மேல் சர்வதேச கடல் பகுதியாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது .

ஒகி புயலின் போது ஆழ்கடலில் நடந்தது என்ன?

ஒகி புயல் மீனவர்கள் வாழ்வில் மறக்க முடியாத துயரமான நிகழ்வாகும்.சரியான முன்னறிவிப்பு இல்லாமல் கொடும்புயலில் மாட்டி பல நூறு மீனவர்களின் உயிர்கள் பறிபோயின. புயல் ஓய்ந்த பின் இரண்டு மூன்று நாட்களாக கடலில் தத்தளித்து, நேவிவரும்,ஹெலிகாப்டர் வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்து இறந்தவர்களும் அதிகம் உண்டு.

மீனவர்களின் உண்மையான வாழ்க்கை இதுவரை எழுத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா?

இப்பொழுது குமரி மாவட்டத்திலிருந்து பலர் மீனவ மக்களின் வாழ்க்கை முறையை எழுத்தாக உருவாக்கியிருக்கிறார்கள். முன்பும் ஒரு சிலர் எழுதியிருக்கிறார்கள். என் பங்கிற்கு நானும் எழுதியிருக்கிறேன்.

கப்பல் வழித்தடத்தில் மீன்பிடி படகுகள் பயணிப்பதால் தான் விபத்துகள் ஏற்படுகிறதா?

இதுவரை கப்பலுக்கென்று தனியாக வழித்தடம் இல்லை. எல்லா கடல் பரப்பிலும் ஆடுமாடு போல் மேய்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் படகுகள் தொழில் செய்யும் இடம் நோக்கி ஓடும்போதும், தொழில் செய்யும் போதும் ,கப்பல் மோதி விபத்துக்குள்ளாகி உயிர்சேதம் ஏற்பட்டு விடுகிறது. ஆகவே இந்த கப்பல்களின் வழித்தடத்தை ஒழுங்கு படுத்த, கரையிலிருந்து அறுபது நாட்டிக்கல் மைல் தொலைவில் கப்பல் வழிப்பாதையை அமைத்தால் நன்றாக இருக்கும்.

கடலுக்குள் பருவ நிலை எப்படி எல்லாம் மாறுபடுகிறது?

பொதுவாகவே மழை பெய்யும். குளிர்காலங்களில் மேகங்களிலிருந்து உருவாகும் காற்றழுத்தத்தின் காரணமாக கடல் சீற்றத்தோடு காணப்படும்.வெயில் காலங்களில் கடல் சற்று அமைதியாக இருக்கும்.சில கடல் பகுதிகளில் வெயில் காலங்களிலும் காற்று அதிகமாக வீசிக்கொண்டிருக்கும். அங்கெல்லாம் கடல் சீற்றத்தோடே காணப்படும். குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் வெயில் காலங்களில் வாடைக்காற்று பலமாக வீசிக்கொண்டிருக்கும். அதன் காரணமாக கடல் கொந்தளிக்கிறது. அல்லாமல் புயல்கள் வரும்போது கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். கடலின் அடித்தட்டு அதிர்வினாலும் கடல்அலைகள் உருவாகும்.

எழுத்தின் மூலம் உங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என்ன?

இலக்கியப் பரப்பில் நாவலாசிரியராக அறியப் பட்டிருக்கிறேன். சிறந்த நாவலுக்காக தெற்கு விருதும், தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை விருதும் கிடைத்தது. செங்கோட்டை நூலகத்தில் வாசகர்களுக்கு எனது நாவலை வாசிக்கக் கொடுத்து திறனாய்வுப் போட்டி நடத்தினார்கள். மற்றும் சென்னை அசோக்நகர் வாசகசாலையிலும், தூத்துக்குடி வாசகசாலையிலும் கலந்தாய்வு நிகழ்வில் எனது நாவலை தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்தினார்கள். பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியில் எனது நாவலை பாடத்தில் வைத்திருக்கிறார்கள்.ஒரு மாணவி என் நாவலை ஆய்வு செய்து முதுகலை தமிழ் இலக்கிய பட்டம் பெற்றிருக்கிறார்.

கடலுக்குள் ஒரு நாள் பொழுது எப்படிகழியும் ?

காலை ஆறு மணியளவில் இழுவை வலையை கடலில் விடுவோம். தரை தொட்டுவரும் அந்த வலையை இயந்திரத்தின் உதவியோடு படகு இழுத்துக் கொண்டே வரும். அனைவரும் டீ குடித்துவிட்டு, கேப்டனையும் சமையல் வேலை செய்பவரையும் தவிர மீதமுள்ளவர்கள் உறங்குவார்கள். அவர்களுக்கு இரண்டுமணி நேர உறக்கம் கிடைக்கும். இரண்டரை மணிநேரம் வலையை இழுத்தபின் வலையை படகில் தூக்கி எடுப்போம். தேவையுள்ள மீன்களும் தேவையற்ற மீன்களுமாக படகில் குவியலாக கிடக்கும். அதிலிருந்து ஒவ்வொரு ரக மீன்களையும் தனியாக பிரித்தெடுக்க வேண்டும். பின்னர் அதை நன்றாக கழுவி ஐஸ் ஸ்டோரேஜில் பதப்படுத்தி முடிவதற்குள் இரண்டு மணிநேரம் ஆகிவிடும். அப்போது மீண்டும் கடலில் போடப்பட்டிருந்த வலையை படகில் இழுத்து எடுக்க நேரம் நெருங்கி வந்திருக்கும். மீண்டும் வலையை படகில் இழுத்தெடுத்து மீன்களை தனித்தனியாக பிரித்தெடுக்க வேண்டும். இப்படி பகல் முழுவதும் சென்றுவிடும். மாலை ஆறரை மணியளவில் அன்றைய இறுதி வலையை படகில் இழுத்து எடுத்தபின், இரவு நேரத்தில் தூண்டில் தொழில் செய்வதற்காக குறிப்பிட்ட இடங்களைத்தேடி ஓடிச் சென்று தூண்டில் தொழில் செய்வோம். தொழிலாளர்கள் தூண்டில் போட்டுக் கொண்டிருப்பார்கள். கேப்டன் பார்வையிட்டபடியும் இடையிடையே தூண்டில் போட்டுக் கொண்டும் இருந்து விட்டு, இரண்டு மூன்று மணிநேரம் உறங்குவார். சமையல் வேலை செய்பவரும் இரவில் சற்று உறங்கி ஓய்வெடுப்பார். காலையானதும் மீண்டும் வலை இழுக்கத் தயாராவோம். இதில் வேலை ஓய்வு அனுசரித்து மூன்று வேளையும் சாப்பிடுவோம். இரண்டு நாளைக்கு ஒருமுறை குளிப்போம். இப்படி ஏழெட்டு நாட்கள் கடலில் தங்கி தொழில் பார்ப்போம்.

இயற்கைச் சூழலலை மீனவர்கள் எப்படி கணிக்கிறார்கள்?

இப்போது பைபர்மரப் படகில் செல்பவர்களும் ஜி.பி.எஸ் கொண்டு செல்கிறார்கள். அது இல்லாதவர்கள் வான்வெளி நட்சத்திரங்களையும் சூரிய சந்திரனின் இருப்பை வைத்தும் கணித்து தொழில் செய்வார்கள். கரையில் தெரியும் மலை, கோபுரம், கலங்கரைவிளக்கு, மின்விளக்கு, காடு போன்றவற்றை இரண்டு திசையில் கணித்து, எந்த இடத்தில் எத்தனை பாகத்தில் இருக்கிறோம் என்று கணியம் பார்த்து தொழில் செய்வார்கள். கார்மேகங்களின் வரவை வைத்து மழை பெய்யுமா? பெய்யாதா? கடல் சீற்றம் ஏற்படுமா? என்றும் ஒருவிதம் கணித்து விடுவார்கள். ஒருசில சமயங்களில் கணிப்பு தவறுவதும் உண்டு. இந்த தகவல்களெல்லாம் எனது கடல்நீர் நடுவே நாவலில் இடம் பெற்றிருக்கின்றன.

-த.ராம்

0 Comments

Write A Comment