இந்த ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் எழுதி 2014-ம் ஆண்டு வெளியான ‘சஞ்சாரம்’ நாவலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 1966-ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்த எஸ். ராமகிருஷ்ணன். 18 சிறுகதைத் தொகுப்புகள், சஞ்சாரம், உபபாண்டவம்,யாமம் உள்பட 9 நாவல்கள், 36 கட்டுரைத் தொகுப்புகள், 8 திரைப்பட நூல்கள், குழந்தைகளுக்கென 15 புத்தகங்கள், இரண்டு வரலாற்று நூல்கள், 3 நாடகத் தொகுப்புகள், 2 நேர்காணல் தொகுப்புகள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் உள்ளிட்ட நூல்களை வெளியிட்டிருக்கிறார். தொடர்ந்து சினிமா துறையிலும் ஈடுபட்டு வருகிறார்.
விகடனில் மாணவப் பத்திரிகையாளராக தன் எழுத்துப் பணியைத் தொடங்கிய எஸ். ராமகிருஷ்ணன், ஒரு முழுநேர எழுத்தாளர். அவ்வப்போது பல இதழ்களுக்காக பணியாற்றியிருக்கிறார். தமிழ் இலக்கியப் பரப்பில் ஜெயகாந்தனுக்குப் பிறகு எழுத வந்தவர்களில் மிக முக்கியமான இரண்டு பேர் ஜெயமோகனும், எஸ். ராமகிருஷ்ணனும். இருவருமே எழுத்தின் மூலமாகவே பிரபலமடைந்தவர்கள். குறிப்பாக எஸ். ராமகிருஷ்ணன், பதின் வயதிலிருந்து எழுத்தாளராக வேண்டுமென நினைத்து புறப்பட்டவர். தொடர்ந்து பயணம் செய்தவர். பல மக்களின் வாழ்வைப் பார்த்தவர். இந்தப் பயணங்கள்தான் அவரது எழுத்தின் அடிப்படையாக இருந்தன.
பக்கிரி என்ற பாத்திரத்தின் மூலம் நகரும் சஞ்சாரம் நாவல் நாதஸ்வர இசை, நாதஸ்வர இசைக் கலைஞர்களை அடிப்படையாகக் கொண்டது. பெரிதும் அவர்களது துயரம் குறித்துப் பேசுகிறது. வாழ்த்துகள் எஸ்.ராமகிருஷ்ணன் !
0 Comments