நவீன தொழில்நுட்பத்தின் கரங்கள் வேகவேகமாக இவ்வுலகின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கும் இந்தக் காலச் சூழலை எவ்வாறு கடந்து செல்வது என்னும் முக்கியமான ஒரு கேள்வி எழுந்தால் உங்கள் மூளை சோர்வடைந்திருக்கிறது என்று அர்த்தம். முகநூல் , ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மனிதர்களின் மொத்த நேரத்தையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது.
தனிமை, தோல்வி, விரக்தி, வேலையின்மை, பணம், புகழ் தேடி ஒரு நெடும் பயணம் என்று உழலும் இந்தக் கால மனிதர்கள் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்றொரு மனநிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதைக் கண்டு கோபம் கொள்வதா அல்லது இவர்களுக்காக பரிதாபப்படுவதா என்றொரு கேள்வியை முன்வைக்கிறது. மனிதர்களின் இந்த மந்தமான நிலையைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வியாபார நிறுவனங்கள் மனிதர்களுக்கான பொழுதுபோக்குச் சாதனங்களாக கொஞ்சம் ஆண்ட்ராய்டு செயலிகளை ( APPS) அறிமுகம் செய்து வைத்திருக்கின்றன. டப்ஸ்மாஷ் துவங்கி பிகோ லைவ், விகோ லைவ், மியூசிக்கல்லி, ஸ்ம்யூல், டிக் டொக் என்று அதன் பட்டியல் வெகுநீளம்.
அந்த செயலிகள் அனைத்தும் மிகவும் ரசனையாகவும், தனிமனிதர்கள் தங்களால் சாமானியமாக நிறைவேற்றிக் கொள்ளவியலாத சிறுசிறு ஆசைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. உதாரணமாக செல்போனில் பின்னணியில் பிரபல நடிகர்களின் வசனங்களோ, அல்லது பாடல் வரிகளோ ஒலிக்கும், அப்போது நாம் உதட்டை மட்டும் அசைத்து வீடியோ எடுத்தால் அந்த குறிப்பிட்ட வசனமோ, பாடலோ நாம் பாடியது போலவே அந்த வீடியோவோடு கலந்து வரும். அதை நாம் இணையத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.
மியூசிக்கல்லி, ஸ்ம்யூல், டிக் டொக் போன்ற செயலிகளில் கதை வேறு. அதில் ஏதாவது ஒரு பாடலின் பின்னணி இசை ஒலிக்கும். அப்போது ஹெட்போனில் உள்ள மைக்கில் நாம் நம்முடைய சொந்தக் குரலிலேயே பாடி பதிவு செய்து கொண்டு பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளலாம். இவ்வாறு பாடியும், நடித்தும் பலர் பிரபலமான ஆட்களாய் உருவெடுத்து இணையத்தில் கலக்கி வருவதோடு மட்டுமல்லாமல் ஏராளமான ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். சினிமாக்களில் வாய்ப்பு பெற்றவர்களும் ஏராளம்.
இது போலவே பல்வேறு தலைப்புகளில் விடப்பட்ட சவால்கள் என்கிற ஒரு விஷயம் பிரபலமடைந்து நிறைய பேர்களின் உயிரையும், அங்க அவயவங்களை ஆட்டையைப் போட்ட சம்பவங்களும் உலகமெங்கும் நடந்தேறியது.
வேலை வெட்டி இல்லாதவர்கள் மட்டுமன்றி பெரிய பல பொறுப்புகளில் இருப்பவர்களும்கூட இம்மாதிரியான செயலிகளில் மட்டுமல்லாது நிஜ வாழ்விலும் சவால்கள் விட்டு அதை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என்று ஒரு சவால் இணையத்தில் வைரலாகி, பயங்கர பிரபலமாய் உலா வந்தது. அதாவது கடுங்குளிர்ப் பிரதேசங்களில் வாழும் மனிதர்கள் தங்கள் தலையில் ஒரு பெரிய வாளி நிறைய குளிர்ந்த நீரை பொதுவெளியில் ஊற்றிக் கொள்ளவேண்டும். இதுதான் சவால் ! இப்படி ஐஸ்பக்கெட் சேலஞ்சில் சிக்கி சின்னாபின்னமானவர்களின் வீடியோக்கள் இணையம் முழுவதும் இறைந்து கிடக்கின்றன.
ப்ளுவேல் அதாவது நீலத் திமிங்கலம் என்ற பெயரில் ஒரு ஆப் வெளியாகி பல்வேறு மனிதர்களின் தற்கொலை மற்றும் கொலைக்குக் காரணமாய் அமைந்தது. அதாவது யாரோருவர் தன்னுடைய ஆப்பை டவுன்லோடு செய்கிறார்களோ அவர்களின் மொபைல் போன்களிலுள்ள ரகசியங்களை அவர்களுக்குத் தெரியாமல் உருவி, அதை மறுபடியும் அவர்களிடம் காட்டி மிரட்டி ஒவ்வொரு ஆபத்தான செயலாகச் செய்ய வைத்து, இறுதியில் அவர்களை தற்கொலை செய்து கொள்ள வைப்பதே அந்த ஆப்பின் நோக்கமாக இருந்து இறுதியில் ப்ளூவேல் விளையாட்டு தடை செய்யப் பட்டது.
பிட்னஸ் சேலஞ்ச் என்றொரு சேலஞ்ச் வந்தது. ஒரு பெரிய தேசத்தின் பிரதமர், தன்னுடைய பொறுப்புகளை மறந்து, ஒரு விளையாட்டு வீரனின் சவாலை ஏற்று, பசும்புல்வெளியில் மல்லார்ந்து படுத்தும், தரையில் உருண்டு புரண்டும், வெறித்தனமாக கையில் தடிக்கம்போடு நடந்தும் சவாலை நிறைவேற்றியதுதான் ஹைலைட். இம்மாதிரி பிரபலங்கள் அநேகம்பேர் சவால் என்கிற பெயரில் நிகழ்த்திய கோமாளிக் கூத்துக்களைக் கடந்தவாறே இந்த பூமியும், மனிதர்களும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
கிகி சேலஞ்ச் என்ற பயங்கரமான செயலி ஒன்று அறிமுகப் படுத்தப்பட்டு மக்களை பாடாய்ப்படுத்தியது. அதன் சவால் என்னவென்றால், ஓடுகின்ற வண்டியில் இருந்து கீழே குதித்து நடனமாட வேண்டும். நம்மாட்களைக் கேட்கவா வேண்டும்? துள்ளிக் குதித்து ஆடத்துவங்கினார்கள். பிரபல நடிகர், நடிகையர்கள் துவங்கி கார் வைத்திருப்பவர்கள் வரை வாகனங்களில் இருந்து குதித்து சாலையில் நின்று ஆடியதைக் கண்டு இந்த உலகம் ஆடிப்போனது. ஒருவர் காரில் இருந்து குதித்தவுடன் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி சடுதியில் மரித்தார். இன்னொருவர் காரை விட்டு வெளியே குதிக்கவும் எதிரே வந்த ஒரு கார் அவரை மோதித் தள்ளிக் கொண்டு போனது. இவ்வாறு அநேகம் பேர் மரித்த காணொளிகள் அனைத்தும் இணையத்தில் உள்ளன.
இவை இப்படியிருக்க பிகோ லைவ் சமாச்சாரம் வேறொரு திசையில் பயணிக்கத் துவங்கியது. அதாவது நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் நீங்கள் நேரலையில் வைக்கலாம். உங்களுடைய வீடியோக்களை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலானோர் பார்க்கிறார்களெனில் அந்த குறிப்பிட்ட செயலியின் நிறுவனம் உங்களுக்குப் பணத்தை அள்ளித் தரும். மேலும் பார்வையாளர்களும் தங்களுக்குத் தேவையானவற்றைப் பார்க்க உங்களுக்கு பணம் தருவார்கள். அதற்குப் பிறகு என்ன வேண்டும் ? அந்த செயலி முழுவதும் ஆபாச நேரலைகள் மட்டுமே ஒளிபரப்பாகின. தங்கள் வீட்டுக்குள் நடக்கும் அந்தரங்கம் முதற்கொண்டு மற்றவர்களுக்குத் தெரியாமல் அவர்களின் அந்தரங்கங்களை வீடியோ எடுக்கப் பட்டு அவை காட்டுத்தீ போல உலகெங்கும் பரவத்துவங்கின.
மியூசிக்கல்லி, ஸ்ம்யூல், டிக் டொக் போன்ற செயலிகளை ஆரம்பத்தில் விளையாட்டாகவே ஆரம்பித்த வாடிக்கையாளர்கள் அதன் பின்பு அந்த செயலியிலேயே வாழத் துவங்கினார்கள். அதில் தங்களது குரல் வளம், நடனம் போன்ற திறமைகளை வெளிக்கொணர்ந்து தங்களுக்கான வாய்ப்புகளைத் தேடி அடைந்தார்கள். பாசிட்டிவான பலாபலன்களை அடைந்தோர் சொற்பம் நபர்களே இருந்தாலும் இந்த செயலியின் வாயிலாக இன்னல்களை அடைந்து தங்கள் வாழ்வு மற்றும் எதிர்காலத்தைத் தொலைத்தோர் ஏராளமான எண்ணிக்கையில் இருப்பதுதான் இந்த செயலியில் இருக்கும் ஆபத்தை உணர வைத்திருக்கிறது.
ஏற்கனவே முகநூல் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பெண்களின் புகைப்படங்கள் மார்ஃபிங் எனப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தவறாகப் பயன்படுத்தப் பட்டு ஏராளமான பெண்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டது மற்றும் மனப்பிறழ்வுக்கு ஆளானது என்று நிறைய சம்பவங்கள் நிகழ்ந்தேறியது.
இப்போது இந்த மியூசிக்கல்லி, ஸ்ம்யூல், டிக் டொக் போன்ற செயலிகளை பெண்கள் அனாயாசமாகக் கையாள்கிறார்கள். அரைகுறை ஆடைகளோடு ஆடுவது, நடுத்தெருவில் நின்று கொண்டு ஆடுவது, பாடுவது, தங்களுடைய உடல்பாகங்களை பகிரங்கமாக வெளிப்படுத்துவது, ஆபாசமான அங்க அசைவுகள், ஆபாசமான சினிமா வசனங்களுக்கு உதட்டசைத்தல் அல்லது நடித்துக் காட்டுதல் போன்ற பல்வேறு செயல்களை தங்களுடைய அன்றாட வேலைகளை விட்டுவிட்டு அல்லது வேலைகளுக்கு மத்தியில் செய்து பொழுதைக் கழித்து வருகிறார்கள். இம்மாதிரியான ஆபாசக் காணொளிகளை எல்லாம் இப்போது இணையதளத்தில் சர்வ சாதாரணமாகக் காணமுடியும்.
ஆபாசமான காட்சிகள், உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலான செய்கைகள், ஆடையின்றி அல்லது அரைநிர்வாணமான கோலம் காட்டுதல் அல்லது ஆண் மற்றும் பெண்ணின் நிர்வாணக் காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் அல்லது காணொளிகளை பரப்புதல் அல்லது வெளியிடுதல் போன்ற செயல்களுக்குக் கடுமையான சட்டங்கள் இந்தியாவில் நடைமுறையில் இருக்கிறது. இம்மாதிரியான செயலிகள் இந்த சட்டரீதியிலான நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டு இயங்குகின்றன.
இவை பெரும்பாலும் ஆண்களைப் பாதிப்பதில்லை. தங்கள் குடும்பத்தில் உள்ள பெண்கள் அல்லது தமக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் ஒரு டிக்டொக் வீடியோவை ஒரு ஆபாச வலைப்பக்கத்தில் ஒருவன் கண்டால் அவனுக்கு என்ன தோன்றும் ?
நாம் வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு சைபர் சைக்கோ உலகத்தில் என்பது நமக்குக் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். இன்று உலகிலேயே ஆபாச இணையதளங்கள் மட்டுமே கோடிகோடியான பார்வையாளர்களைத் தங்களுக்குள் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இன்றைக்கு உலகெங்கும் உள்ள தொண்ணூறு சதவிகிதத்துக்கும் அதிகமான இணைய தள உபயோகிப்பாளர்கள் காலையில் எழுந்தவுடன் முதன்முதலாக கண்விழிப்பதே ஆபாச வலைத்தளங்களில்தான் என்று ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது. அதிலும் புதிதாக ஏதாவது காணொளி வந்திருக்கிறதா என்று தேடுவோரின் எண்ணிக்கை அதைவிட அதிகம் இருப்பது அச்சத்தை அதிகரிக்கிறது. ஸ்கேண்டல் வீடியோ எனப்படும் மற்றவர்களுக்குத் தெரியாமல் எடுக்கப்படும் காணொளிகளுக்கு இந்த மார்க்கெட்டில் கிராக்கி அதிகமாக இருக்கிறதாம்.
இப்போது இந்த ஆபாச வலைத்தளங்களில் டிக்டொக் வகையறா வீடியோக்கள் ஒரு புதுமையான வகைமைக்குள் ( category ) வெளியிடப்படுகிறது. அதாவது எல்லாவிதமான ஆபாசக் காணொளிகளும் நிறைந்திருக்கும் தளங்களுக்குள் ஏராளமான வகைமையிலும் காணொளிகள் குவிந்து கிடக்கின்றன. உதாரணமாக கல்லூரி பெண்கள் ( College girls ), வீட்டுத் தயாரிப்பு ( Homemade ) போன்ற தலைப்புகளில் காணொளிகள் இருக்கும். இதில் ஆபாசப் படங்களை சட்ட ரீதியாகத் தயாரித்து வெளியிடும் வெளிநாட்டு நிறுவனங்களின் காணொளிகளை விட அதிகமாக சாமானியர்களின் காணொளிகள் இறைந்து கிடக்கின்றன என்பதுதான் அதிர்ச்சியான ஒரு தகவல்.
தங்களுக்குள் குடும்ப உறவிலோ , காதலிலோ அல்லது அதைத் தாண்டிய தொடர்பிலோ இருக்கும்போது தங்களுக்குள் எடுத்துக் கொண்ட அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தங்கள் உறவு முறிவுக்குப் பின்னர் தங்களது துணையைப் பழிவாங்கும் நோக்கில் பொதுவில் பகிர்ந்து கொள்ளுதல், சர்வீஸ் செய்யப்படும் மொபைல் ஃபோன்களில் இருந்து திருடப்பட்டு பரவும் காணொளிகள், பிறர்க்குத் தெரியாமல் அவர்களது அந்தரங்கங்களைப் படம்பிடித்து வெளியிடுதல் போன்ற செயல்களால் பாதிக்கப் பட்டு அதை வெளியில் சொல்ல முடியாமல், அவமானத்தில் கூனிக்குறுகி தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டோர் பலர். இம்மாதிரியான காரியங்களால் நடந்த கொலைகள், தற்கொலைகள், விவாகரத்துக்கள் மற்றும் சமுதாய நிராகரிப்புகள் போன்றவற்றுக்கு நீங்கள் யாரையும் நோக்கிக் கைகாட்ட முடியாது என்பதே மிகப்பெரிய அச்சுறுத்தல். யார் தவறு செய்தது என்றே அறியாமல் யாருக்குத் தண்டனை வழங்குவீர்கள்?
இம்மாதிரியான ஆபாச வலைத்தளங்களில் தனது மகளின் காணொளியைப் பார்க்கும் தந்தை, சகோதரியின் காணொளியைப் பார்க்கும் சகோதரன், மனைவியின் காணொளியைப் பார்க்கும் கணவன் ஆகியோரின் மனநிலையை எண்ணிப்பாருங்கள்.
மனநல மருத்துவர் ஒருவரிடம் ஒரு முப்பத்தைந்து வயது பெண்மணி கொண்டு வரப்பட்டிருக்கிறாள். என்னை யாரோ பின்தொடர்கிறார்கள்! அவர்கள் என்னைக் கொல்ல முயற்சிக்கிறார்கள்! என்னுடைய காதுகளில் ஏதேதோ குரல்கள் கேட்கின்றன ! தன்னால் தூங்கவே இயலவில்லை ! நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் ! என்று கூறி மருத்துவரை அதிர வைத்தார் அந்தப் பெண்மணி.
பின்பு அவரது கணவர் கூறியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அந்தத் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. கணவர் வேலைக்குச் சென்ற பின்பு வீட்டில் தனிமையில் இருந்த அந்தப் பெண்மணிக்கு ஸ்ம்யூல் அறிமுகமானது. அதைத் தன்னுடைய மொபைல் போனில் டவுன்லோடு செய்துகொண்ட அந்தப் பெண்மணி அதன் இயல்பைத் தெரிந்து கொண்டு அதில் பாடத் துவங்கியிருக்கிறார். தன்னுடைய கணவர் வந்தபின் அவரிடம் அதைக் காட்டியிருக்கிறார். கணவரும் தன்னுடைய மனைவியிடம் இப்படி ஒரு திறமை இருந்திருக்கிறதே! என்றெண்ணி புளகாங்கிதம் அடைந்து அவளைப் பாராட்டியிருக்கிறார். அவரும் அதை அப்படியே விட்டுவிட, அந்தப் பெண்மணி தொடர்ந்து ஸ்ம்யூல் ஆப்பில் பாடிப்பாடி பிரபலமடைந்து விட்டார். அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிரித்துக் கொண்டே போக, முகம் அறியாத ஆட்களுடன் ஜோடி போட்டு பாடத் துவங்கியிருக்கிறார். இது உலகம் முழுக்க பரவியிருக்கிறது.
வீட்டில் சமையல் செய்வதில்லை. கணவர் ஒரு கட்டத்தில் எச்சரித்தும் பலனில்லை. ராத்திரி முழுக்க நோட்டிஃபிகேஷன் சப்தங்களால் படுக்கையறை அலறியது. கணவர் கடுப்பாகி உச்ச கட்டக் கோபத்தில் கத்தியும் பிரயோஜனமில்லாமல் போயிருக்கிறது. பின்பு அந்தப் பெண்மணி தன்னுடைய கணவருக்குத் தெரியாமல் ஸ்ம்யூல் உபயோகப் படுத்தத் துவங்கியிருக்கிறார்.
ஒருநாள் யாரோ ஒரு அறிமுகமில்லாத நபர், அந்தப் பெண்மணியை ஃபோன் செய்து மிரட்டி, அந்தப்பெண்மணியின் குளியல் காட்சி வீடியோ தன்னிடம் இருப்பதாகவும், மீண்டுமொருமுறை நீ குளிக்கும் காட்சியை எனக்கு வீடியோ எடுத்து அனுப்பாவிட்டால் முதல் வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாகவும் பயமுறுத்தவே இந்தப் பெண்மணியும் அவ்வாறே செய்து விட்டிருக்கிறார். அதன் பின்பு அந்த ஆசாமி திடீர் திடீரென ஃபோன் செய்து ஒவ்வொரு கட்டளையாக முன்வைக்க, திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக அவன் சொல்வதையெல்லாம் செய்திருக்கிறார். கணவரிடமும் சொல்ல முடியாது, யாரிடமும் சொல்ல முடியாமல் ஒரு கட்டத்தில் அவரது தூக்கம் மொத்தமாக பறிபோயிருக்கிறது. படுக்கையில் படுத்தாலே யாரோ வந்து அவளது காதுகளுக்குள் ஓலமிடுவது போல மாய சப்தங்கள் (auditory hallucination) எழுந்து அலற வைத்திருக்கிறது.
ஒருநாள் நள்ளிரவில் கண்விழித்து தன்னருகில் படுத்துக் கிடந்த மனைவியைக் காணாமல் தேடிய அந்த மனிதர் அவரது மனையைக் கண்டு மிரண்டு போயிருக்கிறார். அந்தப் பெண்மணி மொட்டை மாடியில் தனியாக நின்று கொண்டு பாடிக் கொண்டிருந்திருக்கிறார்.
அடுத்தநாள்தான் அந்த மருத்துவரிடம் அழைத்து வரப்பட்டிருக்கிறாள்.தீவிர மனோதத்துவ சிகிச்சைக்குப் பின் அந்த பெண்மணி மனநலம் தேறி வந்திருக்கிறாள். கொஞ்ச நாட்களுக்குப் பின் அவளது குளியல் காட்சிகள் வாட்சப் மற்றும் பலான சைட்டுகளில் உலா வரத் துவங்கி அதைக் கண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். இன்னமும் அவளது அந்த வீடியோ இணையத்தில் உலா வருகிறது. எவ்வளவு மோசமான முடிவை அந்தப் பெண்மணி தேடிக் கொண்டிருக்கிறாள்? விளையாட்டாய் துவங்கிய ஒரு விஷயத்தில் எத்தனை தொழில்நுட்ப சீரழிவுகள் பங்கேற்று அந்தப் பெண்மணியின் உயிரைப் பறித்திருக்கிறது?
அதே போல ஒரு ஆசிரியை ஒருவர் ஸ்ம்யூல் ஆப்பில் பலவிதமான மாறுவேடங்களில் ஆடிப்பாடி , இரவும் பகலும் அகமகிழ்ந்து ஒரு கட்டத்தில் பள்ளிக்கூடம் பக்கமே எட்டிப்பார்க்காமல் தொலைக்காட்சிகளில் தலைப்புச் செய்தியாகி இறுதியில் வேலையை விட்டு தூக்கப் பட்டிருக்கிறார்.
மியூசிக்கலி ஆப்பில் இளைஞர் ஒருவர் பெண்வேடம் போட்டு ஆடிப்பாடியதை தெருவில் உள்ளவர்கள் கேலி பேசவே மனமுடைந்த அந்த வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
அதே போல கல்லூரி மாணவி ஒருத்தி டிக்டொக் ஆப் மூலம் தன்னுடைய நடனத்தை ஒளிபரப்பி அதைப் பல்வேறு பேர் கண்டு களிப்பதைக் கண்டு உற்சாகமாகி, சினிமா நடிகைகளைப் போல உடையணிந்து, கவர்ச்சியாக, நடனமாடி அந்த வீடியோக்கள் பல்வேறு ஆபாச இணையாதளங்களில் வெளியாகி, மற்றவர்களின் கேலிக்குள்ளாகி, அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது.
மற்றவர்களைச் சிரிக்க வைக்கிறேன் பேர்வழி என்று இவர்கள் அடிக்கும் கூத்துக்களைப் பார்க்கும்போது சிரிப்புக்குப் பதில் கோபமே வருகிறது. மனித இனம் கோமாளிகளாய் மாறி வருகிறதா என்றே எண்ணத் தோன்றுகிறது. இளைய வயதினர் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் இந்த ஆண்ட்ராய்டு ஆப்புகள் விட்டுவைக்கவில்லை. பிரபலமாக வேண்டும் என்ற முனைப்பு எல்லாருக்கும் இருப்பது சகஜமான ஒன்றுதான். ஆனால் அதற்கும் ஒரு எல்லையிருக்கிறது அல்லவா ? அதிலும் பெண்கள் விஷயத்தில் ஒரு நொடியில் எல்லாமே மாறிப்போகும் வாய்ப்புகள் அதிகம். இதுபோன்று தங்களது உடலின் அந்தரங்க பாகங்களை பிறர் கவனிக்க வேண்டும் என்ற நோக்கில் பொதுவெளியில் காண்பிப்பதை அல்லது தனக்கான கவனத்தை ஈர்க்கும் நோக்கம் கொண்ட ஆடம்பர நடத்தை ( Exhibitionism ) என்றும், இதை ஒரு சித்தக் கோளாறு ( mental disorder )என்று மனோதத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் அறிமுகமாகும் முகம் தெரியாதவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். நீங்கள் காணும் இணையமுகம் வேறாக இருக்கலாம். முகநூல் உட்பட சமூக வலைத்தளங்களின் வாயிலாக இன்னல்களை அனுபவித்தவர்கள் அநேகம் பேர் இங்கே வலியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உடை என் உரிமை என்று சொல்வது உங்கள் உரிமைதான். ஆனால் இன்றைய தொழில்நுட்ப களவாணிகள் கண்டகண்ட மென்பொருட்களை பயன்படுத்தி உங்களுடைய உடைகளை உரிந்து இணையத்தில் பதிவேற்றி விடுவதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்பதை அவர்களுக்கு யார் சொல்வது ? சைபர் கிரைம் வாயிலாக நீங்கள் அவர்களைக் கண்டடைவது மிகவும் சிரமம். அப்படியே கண்டுபிடித்து விட்டாலும் கூட , அவர்கள் தகர்த்துப் போட்ட உங்களது உளவியலை யார் மீட்டெடுப்பது ? பொது இடங்களில் உடை குறித்த பிரக்ஞை இருபாலருக்கும் அவசியம். அதிலும் பெண்களுக்கு இன்னும் கூடுதல் அவசியம். ஏனென்றால் கண்காணிப்பு கேமராக்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. கூடவே சைபர் சைக்கோக்களின் கையிலிருக்கும் கேமராக்களும்....
ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களின் வாயிலாகத் தங்களைப் பிரபலப் படுத்தும் அல்லது வெளிக்காட்டும் நோக்கில் செய்யப்படும் எல்லா விஷயத்திலும் நன்மைகளை விட அதிகமாக தீமைகளே அதிகம் என்பதை இக்காலத்து இளைய தலைமுறை மட்டுமல்லாது எல்லாதரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு விளையாட்டுக்கு தங்களுடைய மானத்தையும், உயிரையும் விலையாய்க் கொடுக்க வேண்டுமா என்பதை உணர்ந்து கொள்பவர்களே இனிமேல் இந்தச் சமூகத்தில் நிம்மதியாக வாழ முடியும். உணர்ந்து கொள்வார்களா ?
2 Comments
நல்ல தகவல்... ஆனா இவளுக திருந்த மாட்டாளுகளே ....
Its a wonderful and useful message at all the time....