Tamil Sanjikai

வாழ்வு என்பது பெருஞ்சிக்கல்கள்நிறைந்ததாக இருக்கிறது. அதிலும் மனிதர்களின்அக உலகம் அத்தனை ரகசியங்களைஉள்ளடக்கியதாக இருக்கிறது. உலகமெங்கும்எத்தனையோ கலைஞர்கள் மனித மனத்தின்வரைபடத்தை வரைந்து காட்ட இந்த கணம்வரை முயன்று வருகின்றனர். ஆனாலும்புதையலின் இடம்சொல்லும் துண்டுதுண்டாய்உலகெங்கும் வீசப்பட்ட வரைபடத்தாளின்துணுக்கு போல இன்னும் மீதி இருப்பதாகநீண்டு கொண்டே செல்கிறது.எப்படித் தான்மனித மனத்தை முழுவதுமாக அறிவதுஎன்றொரு கேள்வி என்றும் நம் முன் இருந்துகொண்டிருக்கிறது.மேலும் இங்கு நமக்கு பூரணதனிமனித சுதந்திரம் இருக்கிறதா ? என்றவினாவையும் தொடர்ச்சியாக எழுப்பியபடிதான் உள்ளோம்.

பதில் ?

என்னால் பதில்களாக சிலவற்றைதாஸ்தாவெஸ்கியின் கீழ் உலக குறிப்புகள்நாவலில் உணர்ந்து கொள்ள முடிந்தது எனநம்புகிறேன். அதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். ஓரளவேனும்கீழ் உலக குறிப்புகளை பற்றி பேசுவதுமூலம் அந்த நாவலை புரிந்து கொள்ளவும்சமூகத்திலிருந்து தன்னை துண்டித்துக்கொண்ட மனிதனின் அக நிலையைபற்றியும் எப்படியெல்லாம் சமூகம் அவனைவதைக்கிறது எனவும் தெரிந்து கொள்ளலாம்என நம்புகிறேன்.

தாஸ்தாவெஸ்கி:

மனித மனத்தின் அதிதீவிர உணர்வுகளையும்உணர்சிக்கல்களையும் தன் எழுத்துக்களில்இழையோட விட்டவர் தாஸ்தாவெஸ்கி.அவரது படைப்புவெளியை இந்த நவீனகாலக்கட்டத்தில் அணுகி பார்த்தோம்எனில் நமக்கு வாழ்வின் தேடலுக்கு உதவும்ஏராளமானசரடுகள் கிடைக்கக்கூடும் என்பதுஉறுதி.அவருடைய புனைவுகளை போலஅவரது வாழ்க்கை அத்தனை தீவிரமானது.அவரது பெரும்பாலான புனைவுகளுக்கும்வாழ்வுக்கும் பெரிய வேறுபாடு இல்லைஎன்று தான் சொல்ல வேண்டும்.1837ல்காசநோயாளியானதாயின் மரணம், 1839ல்தன்தந்தையின்கொடூர மரணம், தனக்கு ஏற்பட்டவலிப்பு நோய் எனஅவரது வாழ்வு முழுக்கமுழுக்க துயரங்களால் மட்டுமேயானது. ஏப்ரல்1849ல் தொடங்கிய தொடங்கிய அவருடையபிழைத்திருத்தலுக்கான போராட்டமானதுதொடர்ந்தபடியே இருந்தது.

தூக்கு மேடையில் இருந்து பிழைத்து சைபீரியசிறை முகாமில் வதைபட்டு பின்தப்பி ஏறத்தாழமரணத்துடன் சூதாடியபடி வாழ்க்கையைநடத்தினார். அந்த சூதாட்டத்தில் கிடைத்ததோல்வி, துயரங்களில் இருந்து எழுத்துக்களைபிரசவித்தார்.

தாஸ்தாவெஸ்கியின் கீழ் உலககுறிப்புகள்:

தாஸ்தாவெஸ்கி சைபீரிய சிறையிலிருந்துவிடுதலையான பின்பு ஐந்து வருடங்கள் கழித்து1864ல் கீழ் உலக குறிப்புகள் நாவல் (Notesfrom the Underground) வெளியானது. அதன்பின்பு தான் 1866ல் தாஸ்தாவெஸ்கி குற்றமும்தண்டனையும் நாவலைவெளியிட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது. கீழ் உலக குறிப்புகள் நாவலை1863ல் Nicolai G. Chernyshevskyவெளியிட்ட Whatis to be Done ?எனும் நாவலுக்கு எதிர்வினையாகவெளியிட்டார். Chernyshevskyதன் நாவலின்மூலம் மனிதன் என்பவன் அன்புள்ளவன்என்றும் காரணங்களுக்கு இணங்குபவன்,அவனை கொண்டு நல்ல சமூகத்தைஉருவாக்க முடியும் ஆகிய தன் நம்பிக்கைகளைவெளிப்படுத்தினார். தாஸ்தாவெஸ்கி இந்தகருத்துகளுக்கு எதிராகதன் கீழ் உலகவாசியைஉருவாக்கினார். இப்போது இருத்தலியத்தின்முன்னோடி படைப்பாக அது திகழ்கிறது.இந்தநாவல் ஒருவனின்டையரி குறிப்புகள் போன்றவடிவத்தை கொண்டது.

தாஸ்தாவெஸ்கியின் கீழ் உலக குறிப்புகள்(Notes from the Underground) எனும் நாவல்என்பது Underground மற்றும் Apropos of wetsnow ஆகிய இரண்டு பிரிவுகளால் ஆனது.இந்த நாவல் முழுக்க கதாநாயகனேதன்னிலையிலிருந்து நம்மிடம் சொல்வதுபோன்றொரு கதாநாட்டியத்தைக்கொண்டது.

பெயரற்றவன்:

தாஸ்தாவெஸ்கி அந்த கதாநாயகனுக்குஎந்தவிதப்பெயரும் சூட்டவில்லை.இங்கிருந்தே சமூகத்திலிருந்து அவன் விலகத்தொடங்கிவிடுகிறான்.அவனின் இந்த விலகல்வாசனை நாவலின்பக்கங்களெங்கும் கமழ்ந்துகிடக்கிறது.

வலியின் சுகம் மற்றும் மறைந்து வாழ்தல்:

அவன் தன்னுடைய நம்முடனானஉரையாடலை இப்படி தொடங்குகிறான்"நானொரு பலவீனமான மனிதன்... பாபி...கவர்ச்சியற்ற மனிதன். நான் நினைக்கிறேன்என் கல்லீரல் புண்பட்டிருக்கிறதென."(Notes from Underground ,Part1, Chapter1)இப்படி தன்னை பற்றி அறிமுகப்படுத்திக்கொள்ளத் தொடங்கும் அவன் தன்னுடையகல்லீரலில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்காகமருத்துவர்களை அணுகப் போவதில்லைஎனவும் கூறுகிறான்.

இப்படி சொல்லும் இவன் பின்னர்சொல்கிறான்"பிறகு நீங்கள் பல்வலியில் இருக்கும்சுகத்தை கண்டறிந்து கொள்வீர்கள்" நீங்கள்வியப்புடன் நகைப்பீர்கள். "ஏன் இருக்கக்கூடாது பல்வலியிலும் ஒரு சுகம் இருக்கிறது"பதில்சொல்கிறேன். (Notes from the Underground,Part1, chapter 4)

என துயரத்தின், வலியின் அழகியலைபேசிப் கொண்டே செல்லும் கீழ் உலகவாசிசெயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் ஒருஅப்பார்ட்மெண்ட்டில் Appollonஎன்றவேலையாளுடன் வசிப்பவன். அந்த அப்பார்ட்மெண்ட்டைப் பற்றி இப்படிச்சொல்கிறான்"என் அப்பார்ட்மெண்ட்தான் என்மாளிகை,என் கூடு , என் உறை, அங்கிருந்துதான் எல்லா மனிதர்களிடம் இருந்து மறைந்துகொள்கிறேன்"(Notes from the Underground, Part1, Chapter 10)

இயற்கை விதிகளுக்கு எதிரான கலகம்:

இந்த உலகம் அறிவியல் மற்றும் கணிதவிதிகளால் ஆனது. இந்த உலகில் நடக்கும்ஏதோவொன்றிற்கு பின்னால் அறிவியலும்,கணிதமும்,இயற்கையும் உள்ளன .தாஸ்தாவெஸ்கியின் கீழ்உலகவாசி அந்தவிதிகளுக்கு எதிராக கேள்வி எழுப்புகிறான்.

தான் இயற்கையால் இந்த வாழ்க்கையில்தூக்கி எறியப்பட்டவன் என உணர்ந்த அவன்"இயற்கை உன்னுடைய அனுமதியைகேட்பதில்லை;நீ அதன் சட்டங்களைவிரும்புகிறாயா இல்லையா என்பது பற்றிஅதற்கு எந்த கவலையுமில்லை. நீ அதைஅப்படியே ஏற்றுக்கொண்டாக வேண்டும்"(Notes from the Underground, Part1,Chapter 3)என சொல்லுகிறான்.

அப்படித்தானே நம் வாழ்க்கை இருக்கிறது.நம் விருப்பமே இன்றி நம்மை நோக்கிமுட்களாய் வரும் அடையாள அட்டைகள்,நம் விருப்பமேயின்றி நம்மை கட்டுப்படுத்தயத்தனிக்கும் சட்ட திட்டங்கள், நம் விருப்பமேஇன்றி நம்மை நோக்கி பரிதாபப்படும் சகமனிதர்கள் என நம்மை சுற்றி நம் விருப்பமேயின்றிஎத்தனை காரியங்கள் அரங்கேறுகிறது

தனிமனித சுதந்திரத்தின் தேடல்:

2+2=4 என்பதை ஒட்டுமொத்த அறிவியலின்,விதிகளின் பிரதிநிதியாகக் கையாண்டு ஏன் 2+2=5ஆக இருக்கக் கூடாது எனக்கேள்வி எழுப்புகிறான்.2+2=4 என்பதை ஒப்புக்கொள்வது எப்படிதனிமனித சுதந்திரம் ஆகும் என்கிறான். "ஓ,மதிப்பிற்குரியவரே, உங்களுக்கு தெரியுமா,அநேகமாக நான் என்னை புத்திசாலியாககருதிக் கொள்கிறேன் எனில் அதற்குஒரேயொரு காரணம் தான் இருக்க முடியும்நான் எதையும் செய்யதொடங்கியதும் இல்லைமுடித்ததும் இல்லை" (Notes from the underground,part 1,Chapter5) எனச்சொல்லும் அவன்பின்பு “சமூகம் எக்கேடு கெட்டு ஒழிந்தாலும்பரவாயில்லை. என் தேநீரை நான் ஆசுவாசமாகப் பருக முடிய வேண்டும்” என சொல்லிதனிமனித சுதந்திரத்தின் உச்சத்தை அடையவிரும்பும் விருப்பத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறான்.(Notes from the underground,Part2,Chapter 9)

முதல் பாகம்:

நாற்பது வயதுக் காரனாக Undergroundஎனும் முதல் பாகத்தில் அவனை பற்றிஅவனே சொல்வது போல நாவல் விரிகிறது.தன்னை மற்றவர்களை விட புத்திசாலியாகவும்தீவிர பிரக்ஞை உள்ளவனாக உணர்கிறான்.அவன் அதே தன்னுடைய தீவிர பிரக்ஞைகாரணமாக ஒவ்வொரு விஷயத்திலும்மற்றொரு வழியை யோசிக்கிறான். அதன்காரணமாக எந்தவொரு முடிவுகளையும்எடுக்க இயலாதவனாக இருக்கிறான்.அவன் தன்னுடைய புத்திசாலித்தனத்தைதன் சோம்பேறித்தனத்திற்குக் காரணமாககாட்டிக்கொள்கிறான். வலியையும்துயரத்தையும் நீக்குவது என்பது விடுதலையைபிடுங்குவது என கருதுகிறான். இதேகுணாம்சத்தைதாஸ்தாவெஸ்கியின் குற்றமும்தண்டனையும் நாவலின் கதாநாயகனானராஸ்கோலினிகோவ்விலும் காணலாம்.தான்எதுவாகவும் இருக்க முடியாது பூச்சியாக கூடஎன்கிறான்.எப்படி எதுவாகவோ இருப்பதுஎன எனக்கு இப்போதும் தெரியவில்லைஎன்றவாறு வழக்கமான தாஸ்தாவெஸ்கியின்படைப்புகளை போலவே தேடலில் தன்னைதொலைத்தவனாக இருக்கிறான். தன் சுயசிதைவை தீவிரமாக உணர்ந்தவனாகஇருக்கிறான். சமூகத்தின் குரூரம் வலியின்காரணமாக மனிதனை முனக மட்டுமேசெய்கிறது. அந்த முனகலின்நோக்கம் கூட தன்துயரை பிறருக்குக் கடத்துவது என கூறுகிறான்.

தர்க்கங்களை மனித இயல்புடன் பொருத்திப்பார்த்து சமூகத்தைவிமர்சிக்கிறான்.
இரண்டும் இரண்டும் ஏன் ஐந்தாகஇருக்கக் கூடாது என கேள்வி எழுப்புகிறான்.சமூக வரையறையெனும் சுவரை அடித்துநொறுக்க முயற்சி செய்பவனாக இருக்கிறான்.இப்படியாக நாவலின் முதல் பாகமெங்கும்குறிப்புகளாக நீள்கிறது.

இரண்டாம் பாகம்:

இரண்டாம் பாகத்தில் (Apropos of wet snow)தனக்கு இருபத்தி நான்கு வயது அப்போதேதனது வாழ்க்கை உற்சாகமற்ற, ஒழுங்கற்ற,யாருடனும் இணங்காத பேசாத வாழ்க்கைஆக இருந்தது என அறிமுகப்படுத்திக்கொண்டு நம்முடன்பேசத் தொடங்குகிறான்.சுய பிரக்ஞையின் தீவிரம் அவனை வாட்டிவதைக்கிறது. தன்னை பற்றி தான் என்னநினைக்கிறேனோ அதைத்தான் மற்றவர்களும்நினைப்பார்கள் என நம்புகிறான்.

மூன்று துயர நிகழ்வுகளை துண்டு துண்டாகஉள்ளடக்கியது இரண்டாம் பாகம். முதல்நிகழ்வாக, வீதியில் ஒரு அதிகாரி அடிக்கடிஅவன் அங்கு இருப்பதையே கருத்தில்கொள்ளாதவாறு மோதிவிட்டு கடந்துசெல்கிறார். அவன் வீதியை பார்க்கிறான்மேலும் எப்படியாவது பழிவாங்க வேண்டும்என நினைக்கிறான். பின்பு அதற்காக வலிந்துஒருவரிடம்(Anton AntonychSetochkin ) இருந்துகடன் வாங்கி உயர்குடியினர் அணியும்மேலாடைகளை வாங்கி அணிந்து கொண்டுஅவர் முன் தோன்றுகிறான். அப்போதும்கூட அந்த அதிகாரி அவனைக் கண்டுகொள்ளாதவாறு சென்றுவிடுகிறார்.

இரண்டாவது துயர நிகழ்வாக, அவன்தன் பழைய பள்ளிக்கூட நண்பர்களை ((Simonov, Zverkov , Fergichkin, Trudolyubov )சந்திக்கிறான். அவர்கள் ஒரு விருந்துக்கு ஏற்பாடுசெய்கின்றனர். அவனிடம் சரியானநேரத்தைச் சொல்லத் தவறிவிடுகின்றனர். ஆனாலும்எப்படியோ சற்று முன்பே வந்துவிடுகிறான்.அவனுடைய இருப்பு அங்குள்ள யாருக்குமேபிடிக்கவில்லை. அவர்கள் அவனை விட்டுவிட்டுவிபச்சாரவிடுதிக்கு செல்கின்றனர். அவன்இதற்கு முன்பு நடந்தற்காக அவர்களைப்பழிவாங்க பின்தொடர்கிறான். அங்கு லிசாஎனும் இளம் விபச்சாரியை எதிர்கொள்கிறான்.அவளுடன் உறவு கொள்கிறான். பின்புஅவளிடம் விபச்சாரத்தை விட்டுவிடும்படி தன்உரையை நிகழ்த்துகிறான். அவனது உரையைகேட்டுவிட்டு சிரித்தபடி, நீ புத்தகங்களில் உள்ளதுபோலவேபேசுகிறாய்! என்கிறாள்.அவன் கூனிக்குறுகி அவமானமாய் உணர்கிறான்.

அவள் அவனுடைய முகவரியைக்கேட்க, அவனும் கொடுத்துவிட்டு தனதுஅப்பார்ட்மெண்ட்டிற்கு திரும்புகிறான்.அவன் தன்னுடைய வேலையாளுடன்பேசிக்கொண்டிருக்கும் போது லிசாஎதிர்பாராவிதமாக அப்பார்ட்மெண்ட்டிற்குள்நுழைகிறாள். அவளைக் கண்டு ஏளனமாகசிரிக்கிறான். தன் அறிவுரைகளைத் திரும்பப் பெறுவதாகச் சொல்கிறான். வலியின் உச்சத்தில்தன்னைத்தானே விமர்சித்து கொள்ளத் தொடங்குகிறான். லிசா அவன் மீது கருணைகொள்கிறாள் . பரிதாபம் கொள்கிறாள்.

அவன்"அவர்கள்- அவர்கள் என்னைஇப்படி இருக்க விடமாட்டார்கள்,நான்-நான் நல்லவனாக இருக்க முடியாது" எனதன்னுள்ளே கதறுகிறான்.(Notes from theUnderground,Part2,Chapter 9)
லிசாவின் ரொமான்டிஸமான பேச்சும்நெகிழ்வும் அவனை எரிச்சல் அடைய செய்கிறது.அவளைக் கோபமூட்டுகிறான்.காட்டிய கனிவுக்கு பணம்கொடுக்கிறான் . அ வ ள்அதை அவனது மேசையின்மேல் எறிந்து விட்டுவெளியேறுகிறாள். தான்கொடுத்த பணத்தைமேசையின்மீது காணநேர்ந்த போதுஅவளைத் தேடுகிறான். அவள்தொலைந்து மறைகிறாள். இதுமூன்றாவது துயர நிகழ்வு.அதன்பிறகு இதற்கு மேல்இதனை இந்த கீழ் உலகத்தில்இருந்து எழுத விரும்பவில்லைஎனக் கூறித் தன் பேச்சைநிறுத்துகிறான்

அவன் எப்படி கீழ்உலகவாசியானான்:

சரி இந்த மூன்று நிகழ்வுகளையும் இப்படிதொகுப்போம்.

1)இருப்பு மறுக்கப்படல்

2)அனைவராலும் கைவிடப்படல்

3) இயந்திரத்தனமான உரையாடலைநிகழ்த்தல்

தாஸ்தாவெஸ்கியின் கீழ் உலக வாசிSchizoid மனநிலை கொண்டவன் என நாம்வகைப்படுத்தலாம். இயந்திரத்தனமானஉரையாடல்கள் மற்றும் தீவிரமான சுயபிரக்ஞை, வெறும் பங்குகொள்ளல் என்றஅளவில் மட்டுமே நிலவும் சமூகத்துடனானஉறவு, உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்தல்,தனக்குத்தானே பேசிக் கொள்ளல் ஆகியவைஏறத்தாழ Schizoid மனோநிலைக்கு உரியதுதான். Schizoid மனோநிலைகொண்டவர்களின்செயல்கள் அறிவுரீதியான முடிவுகளில் இருந்துஉருவாகிறது. அவர்களிடம் நம்மால் ஒருபோதும்மெய்யான உணர்ச்சி நிலையை காணவேமுடியாது.அவனுடைய இளம்வயதில் நடந்தஅந்த மூன்று துயர நிகழ்வுகளும் அவனுக்குஇந்த மனோநிலை ஏற்பட காரணமாகஅமைந்திருக்கிறது.

வதைத்தொழில் நடத்தும் சமூகம்:

ஏன் அவன் தன் வீட்டிற்குள் ஒளிந்துகொள்ளவேண்டும் ? எப்படி தன்வலியை சுகமென அனுபவித்துக்கொள்ள முடிகிறது என்றஇரு கேள்விகளைக் கேட்டுக்கொள்வோம்.
சமூகம் என்பது ஒருநிறுவனமாக இருக்கிறது.சமூகமெனும் நிறுவனம்என்பது தான் கற்பித்தவையேமுழுமுற்றானது எனும் குறுகியபார்வை கொண்டது. அந்தநிறுவனத்தால் கூட அதற்குவெளியே என்ன என யோசிக்கஇயலாது. அந்த நிறுவனத்திற்குள்விருப்பத்துடனோ,விருப்பமின்றியோ ஊழியர்களாகமனிதர்கள் இருக்கின்றனர். அந்த ஊழியர்களின்வேலையென்பது பிழைத்திருப்பது. அந்தபிழைத்திருத்தல் எனும் பணிக்காக சகஊழியர்களை வதைத்துக் கொள்கின்றனர்.இந்த வதைத்தலை அடிக்கடி சமூகம் தன்விதிமுறைகளால் நெறிப்படுத்துகிறது. மேலும்தனக்கு மேல் எவருமே வராதபடி பார்த்துக்கொள்வதை அன்றாட பணிகளில் ஒன்றாகப் பழக்கி வருகிறது.

ஆனாலும் ஏதேனும் விதிவிலக்காக இந்தசமூக நிறுவனத்தில் பிழைத்திருத்தல் எனும்பணியை புரிய விருப்பமில்லாமல்சமூகம் எனும்நிறுவனத்தை விட்டு வெளியேற முயல்பவனைஅல்லது தனக்கு வெளியே என்ன இருக்கிறதுஎன காண முயல்பவனை தனக்கு சிதைவைவிளைவிப்பவன் என கருதுகிறது. அவனைத் தனக்குள்ளேதக்க வைக்க தன்செல்வங்களானபுகழ், பணம், மகிழ்ச்சி ஆகியவற்றைக்காட்சிப்படுத்துகிறது. பிறகு தன்னிலிருந்துவெளியேறினால் புகழ், பணம் ஆகியவற்றைஇழக்க நேரிடும். தனிமைப்படுத்தப்பட்டு,ஒதுக்கப்பட்டு வாழ நேரிடும் என்கிறது.அதையும் மீறி வெளியேறுபவன் முழுமுற்றானசுதந்திரத்தை சுவைக்கிறான்.
அந்த சுவையில் வலிகளெல்லாம்சுகங்கள் ஆகிறது. அவனுக்கு சமூகம் எனும்நிறுவனத்திற்கு ஆள் சேர்ப்பவர்களாக சகமனிதர்கள் காட்சி தருகிறார்கள். இயந்திரத்தனமான உரையாடல்களை அவர்களுடன்நடத்தி தன்னை வேறாக நிறுவுக் கொண்டேஎல்லையற்ற சுதந்திரத்தை அனுபவிப்பவனாகஇருக்கிறான்.சமூக நிறுவனத்தின் ஆடைகளை தனதுஆடையாக அணிந்து கொண்டு திரியாமல்அதைக் கழற்றி எறிந்துவிட்டு சுயத்தின்ஆடையை அணிந்துகொண்டு அலைபவனால்தான் வலியை சுகமென அனுபவிக்க முடியும் அப்படிப்பட்ட ஒருவனாகத் தான்தாஸ்தாவெஸ்கியின் கீழ் உலக குறிப்பு நாவலின்கதாநாயகன் இருக்கிறான்.

கடைசியாக:

நாகரீகத்தின் ஒரே பயன் பலவகையானகிளுகிளுப்புகளே என நம்பும் கீழ் உலகவாசிஎக்கணமும் மனிதர்கள் வன்முறையைஅரங்கேற்ற தயாராகத் தான் உள்ளனர்என்பதை உறுதியாக சொல்கிறான். "நான்பலமுறை பூச்சியாக மாற முயற்சித்தேன்ஆனால் அதற்கு கூட நான் சரிபட்டுவரவில்லை. மேன்மையானவர்களே! நான்உறுதியாகக் கூறுகிறேன் அதீத பிரக்ஞையோடுஇருப்பதென்பது ஒரு சுகவீனம்" என மறுபடியும்மறுபடியும் கூறி நம்மை எச்சரிக்கிறான். (Notesfrom the underground, Part1,Chapter 2)இன்றும்இச்சமூகத்தில் அனைவராலும் கைவிடப்பட்டு,சமூகத்தை விட்டு வெளியேறி மறுபுறமிருந்துசமூகத்தின் இரும்பு சுவரை முட்டியவாறுஒருவன் இருக்கத்தான்செய்வான். அவனுக்காகலிசா'க்களும் தோன்றியபடி தான் இருப்பர்.காலத்தின்டயரிகளில் நாள்தோறும் ஒரு கீழ்உலக குறிப்புகள் எழுதப்பட்டுக் கொண்டுதான்இருக்கும். அந்த வகையில்தாஸ்தாவெஸ்கியின்கீழ் உலகவாசி அழிவற்றவன்.

நடுகல் முதல் இதழான முதுவேனில் கால இதழில் ஆகஸ்ட் மாதம் 2017 - ல் வெளிவந்த வே.நி.சூர்யா எழுதிய கட்டுரை.

கட்டுரைக்கு உதவிய நூல்கள் மற்றும்கட்டுரைகள்:

1)Notes from the Underground and The Double: Penguin Classics
2)Criminal Psychology : A beginner's guide
3)The Underground Man :A Question of Meaning- Linda L. Williams
4)Nihilism and "Notes from the Underground"-Joseph Frank

0 Comments

Write A Comment