Tamil Sanjikai

பேச்சும், எழுத்தும் மிகப்பெரிய ஆயுதங்கள் என்றால் அந்த ஆயுதத்தை ஏந்தி வாதிடுவது என்பது ஒரு போர்வீரன் போர்க்களத்திலிருந்து போராடுவதற்குச் சமம்தான். அவ்வகையில் என்னளவில் மனசாட்சியோடு எழுதுகிறேன் என்கிறார் பத்திரிகையாளர் என்.சுவாமிநாதன். "விகடன்" குழுமத்தில் மாணவப் பயிற்சியாளர் திட்டத்தில் சேர்ந்து கன்னியாகுமரி மாவட்ட நிருபராக பணியாற்றி, தற்போது "தி இந்து" குழுமத்தில் பணியாற்றி வரும் இவர், கலப்பை,பலிகிடா ஆகிய இரண்டு நாவல்களை எழுதியுள்ளார். இதில் கலப்பை நூலானது விவசாயத்தையும், பலிகிடா நூல் சமகால அரசியலையும் குறித்த ஆழமான கருத்தியலை முன்வைக்கிறது. அடிப்படையில் சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் படித்து விட்டு பத்திரிக்கைத் துறையில் நேர்மையான ஒரு ஊடகவியலாளராகப் பணிசெய்து வரும் சுவாமிநாதனுடன் ஒரு உரையாடல்...

சட்டம் படித்த நீங்கள் பத்திரிக்கைத் துறைக்குள் வருவதற்கான காரணம் என்ன?

அடிப்படையில் பள்ளிக்காலங்களில் படிக்கும்போதே பேச்சுப் போட்டிக்கு போவேன். எப்படியாவது பேச்சுப் போட்டியில் மாதத்துக்கு நான்கைந்து பரிசுகள் வாங்கி விடுவேன். திங்கட்கிழமைதோறும் பள்ளியில் அசம்பிளி நடக்கும். அப்போது எங்கள் தலைமையாசிரியர் என்னுடைய பெயரைக் குறிப்பிட்டு ‘ நம் பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவன்’னு எல்லார் முன்னாடியும் சொல்வார். அப்போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும். பத்தாவது பன்னிரண்டாவது படிக்கும் காலத்தில், தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக இருக்கும் நாஞ்சில் விஜயன், நான் மற்றும் நிறைய மாணவர்கள் பேச்சுப் போட்டிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் பரிசுகள் வாங்குவோம். அது எங்களுக்கு நல்ல மகிழ்ச்சியைத் தரும் விஷயமாக இருந்தது. அப்போதான், நாமதான் நல்லா பேசுறோமே ! நல்லா பேசுனா ‘தமிழன்’ படத்துல வர்ற விஜய் போல நல்ல வக்கீல் ஆகிரலாம்! என்று எண்ணிக்கொண்டுதான் சட்டம் படிக்க போனேன்.

அங்கு போன பின்புதான் தெரிந்தது ... மற்ற கல்லூரிகள் மாதிரி சட்டக்கல்லூரி இருக்கவில்லை... அதன் அமைப்பு எப்படி இருக்கும் என்றால், கல்லூரி வாசலில் எல்லா கட்சியின் கொடிகளும், எல்லா சாதிக் கொடிகளும் வரிசையா பறக்கும். அதை தினசரி பார்த்துப் பார்த்து எல்லாருக்குமே அரசியல் ஆசை துளிர் விடும். சட்டக்கல்லூரி என்பது ஒருவித போதை தரக்கூடிய இடம். போலீஸ்க்கு பயப்பட வேண்டாம்! நாம் என்ன செய்தாலும் சட்டக்கல்லூரி பாத்துக்கும்! என்கிற தைரியம் கொடுக்கக் கூடிய இடம். என்னுடைய கல்லூரிக் காலத்தில் சட்டம் படித்து முடித்து விட்டு அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற என்னுடைய எனக்குள் இருந்தது..

நடிகர்கள் ஏன் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்க வேண்டும்? பதிலளிக்கிறார் எழுத்தாளர் என். சுவாமிநாதன்

நான் சட்டக்கல்லூரியில் படித்த காலத்தில் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ஒரு நூலகம் இருந்தது. பொழுது போகாத நேரங்களில் அங்கேதான் செல்வேன். அந்த நூலகத்தில் மாதம் வெறும் ஆறு ரூபாய்தான் நுழைவுக் கட்டணம். அது ஒரு தரமான நூலகம். 2005 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டுவரை சட்டக்கல்லூரியில் படிக்கும் போது அந்த நூலகத்தில்தான் அதிகநேரம் செலவழித்தேன். அங்கு எல்லா தினசரி மற்றும் வார இதழ்கள் வரும். வார இதழ்களை பைண்டிங் செய்து வைத்திருந்தார்கள். அதுபோக 2000 புத்தகங்கள் அங்கே வைத்திருந்தார்கள். ‘ரயில்வே மனமகிழ் மன்றம்’ சார்பில் நடத்தப்பட்ட நூலகம் என்று நினைவு. அதை ஒரு பெரியவர்தான் கவனித்துக் கொண்டு வந்தார். அவருக்கு அப்பொழுதே 80 வயது இருக்கும்.

நான் பத்திரிகைத் துறைக்கு வருவேன் என்று நினைக்கவேயில்லை. அப்போது ஒருநாள், என்னுடைய கல்லூரி நண்பர் ராஜாக்கமங்கலத்தைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் என்னிடம் வந்து, சுவாமிநாதன்! நீதான் நல்லா பேசுற! நல்லா எழுதுற! நீ ஏன் ஊடகத்துறைக்குப் போகக்கூடாதுன்னு கேட்டு, விகடன்ல மாணவப் பயிற்சியாளர் திட்டம் போட்டிருக்காங்க. அதுல முயற்சி பண்ணிப்பாரேன்! என்று சொன்னார். இது ஒரு விபத்துதான். அவரும் ரெகுலர் விகடன் வாசகர் கிடையாது. முயற்சிக்கலாமேன்னு விண்ணப்பிச்சேன். அதிர்ஷ்டவசமா கிடைச்சிது. அதன் பின்தான் மாணவர் பயிற்சியாளர் திட்டத்தில் சேர்ந்தேன். அதில் சேர்ந்ததே பெரிய கதை.

அதற்கு முன்னால் எனக்கும் இதழியல் துறைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. முதன்முதலாக மாணவ பயிற்சியாளர் திட்டத்தில் ‘எங்க ஊர் அந்நியன்’என்றொரு தலைப்பு கொடுத்தார்கள்! அப்போது அந்நியன் படம் வெளியான காலகட்டம். அந்நியன் என்றால் சமூகத்துக்காக உழைக்கிறவர் என்று அர்த்தம். முதல் சுற்றில் எங்க ஊர் அந்நியன் என்கிற தலைப்பில் கட்டுரை எழுதி தேர்வானேன். இரண்டாம் சுற்று மதுரையில் நடந்த எழுத்து தேர்வில் வென்றேன். மூன்றாவது சுற்று சென்னையில் வைத்து நடந்தது. தேர்வான இருபது பேரையும் ஒரு வண்டியில் ஏற்றி, செய்தியாளராக இருந்தால் செய்தி சேகரிக்கவும், புகைப்படக்காரர் என்றால் புகைப்படம் எடுப்பதற்காகவும் சென்னையின் பல்வேறு இடங்களில் எங்களை இறக்கிவிட்டுவிட்டு ஒருமணிநேரம் கழித்து வந்து அழைத்துச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்று விட்டார்கள்.

அப்படியாக என்னை செய்தி சேகரிப்பதற்காக இறக்கிவிட்ட இடம் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி. தமிழகத்தில் இருக்க கூடிய 234 தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கும் இடம். மதியம் 12.45க்கு உள்ளே நுழைந்த எனக்கு நல்ல பசி. உடனடியாக அங்கிருந்த ‘தளபதி செட்டிநாடு’ என்று ஒரு மெஸ் இருந்தது. அங்கே போய் மீன் குழம்பு சாப்பாடு வாங்கி சாப்பிட்டேன். சாப்பிட்டு பசியாற்றிய பின்பு கட்டுரையை எழுதத் துவங்கினேன். அதில், தமிழக சட்ட மன்ற உறுப்பினர்களின் விடுதி எவ்வளவோ பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. ஆனால் ஏனோ அவர்களை ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்த மக்களின் நிலை இன்னும் மாறவில்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில்நான் என்னவெல்லாம் பார்த்தேனோ அதை அப்படியே எழுதினேன். அப்போது அங்க ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் பேசினேன்.

அவர் என்னிடம், எம்.எல்.ஏ ஹாஸ்டல்ல ஆட்டோ ஓடுறதே கஷ்டம் தம்பி! எல்லாரும் சவாரிக்கு ஆட்டோ எடுப்பாங்க, இறக்கிவிடும் பொது காசு கேட்டா, நா யாரு தெரியுமா ? அந்த எம்.எல்.ஏக்க அண்ணனாக்கும் ! , தி.நகர் எம்.எல்.ஏக்க மச்சான் நான்! என சவாரிக்கு பைசா தரவே பேரம் பேசுவாங்க. என்று கவலையில் பேசினார். இம்மாதிரியான அங்கு தினந்தோறும் நடக்கும் விஷயங்களை நான் அந்தக் கட்டுரையில் எழுதியிருந்தேன். அப்படியாக சட்டக்கல்லூரியில் படிக்கின்ற பொழுதே பத்திரிகைத் துறைக்கு வந்து விட்டேன். அப்போது எனக்கு 22வயசு!

சட்டம் படித்து வழக்கறிஞராகி என்ன செய்யப் போகிறோமோ, அதை படிக்கின்ற காலத்தில் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தின் மூலமாக செய்யமுடியும் என்பதை உணர்ந்து கொண்டேன். அதனால்தான் சட்டக் கல்லூரி படித்து முடித்ததும் இதழியல் துறைக்கு வந்து விட்டேன்.

பத்திரிகை துறையில் உள்ளவர்கள் பொருளாதார அடிப்படையில் அவ்வளவு நிறைவாக இருக்கிறார்களா ? ஏன் இந்த துறைக்கு வந்தோம் என என்றாவது வருத்தப் பட்டதுண்டா?

எனக்கு வருத்தம் இல்லை. மாணவ பயிற்சியாளர் திட்டத்துக்கு பல பேர் வருவார்கள்! பயிற்சிக்காலத்தில் தங்களுடைய உழைப்பைக் கொட்டித் தீர்த்துவிட்டு அதன் பின்பு தேர்வாகாமல் போய்விடுவதுண்டு. அது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. சக பத்திரிகையாளர்களுக்கு பல நிறுவனங்களில் சம்பளம் கிடைப்பதில்லை. அவர்களிடம் அசாத்தியமான பல திறமைகள் இருப்பதைக் கண்டு நானே ஆச்சரியப்பட்டிருக்கிறேன். திறமைக்கேற்ற ஊதியம் இல்லாமல் இருக்கும் நிலை மாறவேண்டும். அரசியலுக்கு வருகிறவர்களுக்கு கல்வித்தகுதி தேவை இல்லை, அதுபோலவே பத்திரிகையாளர்களுக்கு கல்வித்தகுதி இருக்க வேண்டும் என்பது முக்கியமல்ல. அவர்களுக்கு இந்தச் சமூகம் பற்றிய புரிதல் இருந்தால் போதும். தன்னுடைய நிறுவனத்துக்காக வேலை செய்யும் கடைநிலை ஊழியனுக்கு வரை அவனுடைய வியர்வைக்கான விலையைக் கொடுக்க வேண்டும் என்ற அறத்தை இன்றைய ஊடக முதலாளிகள் உணர வேண்டும். அப்போதுதான் ஜனநாயகத்தின் நான்காம் தூண் உயிரோடு இருக்கும். மேலும் ஊடக முதலாளிகள் பத்திரிக்கை மாண்பு தெரிந்தவராக இருத்தல் அவசியம். சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டுக்கு போயிருந்தேன். அந்த எழுத்தாளர் 5ம் வகுப்பு வரை மட்டுமேதான் படித்திருந்தார். நன்றாக படித்தவர்களை விட படிக்காதவர்கள்தான் இந்த சமூகத்தை சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். மெத்தப் படித்தவர்களில் பலர் இந்த சமூகத்துக்கு எதையும் செய்வதில்லை, மாறாக அவர்களின் வாழ்க்கை தங்கள் குடும்பம், சம்பாத்தியம் என ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடங்கிப் போய்விடுகிறது என்று எண்ணுகிறேன்.

உங்களுடைய அன்றாட வாழ்க்கை குறித்து...?

எழுத்தும், பேச்சும் தான் எனது இயங்குதளம். பள்ளி, கல்லூரி காலத்தில் பேச்சுப் போட்டிகளில் மேடை ஏறியது, இன்றும் தொடர்கிறது. 6-ஆம் வகுப்பு படிக்கும் போது முதன் முதலில் "வேற்றுமையில் ஒற்றுமை" என்னும் தலைப்பில் பேசினேன். அப்போது முதல் கிடைக்கும் மேடையெல்லாம் ஸ்கோர் செய்ய வேண்டும் என என்னுள் இருக்கும் பேச்சாளன் ஓடிக் கொண்டிருக்கின்றான். இப்போது பெரும்பகுதி நேரங்கள் செய்தி நிமித்தமாய் ஓடுவதும், அந்த செய்திகளை எழுதுவதும் அன்றாடப் பணியாக இருக்கிறது. அதிலும் பிரமாண்டமான கட்டமைப்பு கொண்ட மனிதர்களை செய்தியாக்க நான் விரும்பியதும் இல்லை. வெகுஜென மக்கள், எளியமக்களின் சுவாரஸ்யங்களை எழுதுவதிலேயே எனக்கு அலாதி ஆர்வம் உண்டு. இதுபோக குமரியில் பல்வேறு இலக்கிய அமைப்புகள், பள்ளி, கல்லூரிகளில் பேச அழைக்கின்றனர். அங்கும் போய் பேசி வருகின்றேன். இப்படியாக பள்ளிக் காலத்திலேயே விரும்பிய பேச்சுத்துறை, எழுத்துத்துறை சார்ந்தே அன்றாட வாழ்க்கை நகர்கிறது.

உங்கள் குடும்பம் உங்கள் எழுத்துக்களை எப்படி ஏற்றுக் கொள்கிறது?

என் எழுத்துலகின் அச்சாணியே என்னுடைய குடும்பம்தான். என் அப்பா நாகராஜன் துணுக்கு எழுத்தாளர். அவர் தன்னுடைய பள்ளிக் காலத்திலேயே பத்திரிகைகளுக்கு துணுக்கு, ஜோக் எழுத ஆரம்பித்து விட்டார். இப்போதும் எனக்கான முதல் வாசகன் என்னுடைய அப்பாதான். சாதாரணமாக ஒரு கட்டுரை எழுதி முடிந்ததும் கூட அப்பா நல்லா இருக்கா? என வாசித்து காட்டுவது மாணவப் பருவத்தில் இருந்தே தொடர்கிறது. ஆனால் சில நேரங்களில் மாவட்ட அரசியல் கலாட்டா கட்டுரைகளை எழுதி பரபரப்பைப் பற்ற வைக்கும் போது ‘’உனக்கு யாமுல இந்த வேலை...பேசாம அமைதியா ஏதாச்சும் எழுதிட்டு போகணும்” என்பார்.அது ஒரு தந்தையின் அக்கறை தானே!

ஆனால் நான் அதை கேட்கப் போவதில்லை என என் அப்பாவுக்கும் தெரியும். அம்மாவுக்கும், மனைவிக்கும் இலக்கியத்தில் பெரிய நாட்டம் இல்லை. என் மனைவி முழுதாக படித்த இரு இலக்கிய புத்தகங்கள் நான் எழுதியவையாகத்தான் இருக்கும். ஆனால் அச்சுக்கு செல்லும் முன்பு வாசித்து காட்டினாலும் பொறுமையாய் கேட்பார். பலிகிடாவில் சகல கட்சிகளையும் சகட்டுமேனிக்கு விமர்சித்து எழுதியிருப்பேன். அதில் என் அப்பாவுக்கு என் மீது கோபம். இப்படி தான்தோன்றித்தனமாய், விமர்சிக்கிறாயே...பிரச்சனை வராதா? அரசியல் கட்சிகாரங்களுக்கு கோபம் வராதா? என்றெல்லாம் அப்பாவின் அர்ச்சனை அபிஷேகம் நடந்தது. நேர்மையான கக்கனும், காமராஜரும், பொதுவுடமைத் தலைவர் ஜீவாவும் இருந்த அரசியலில் சில அழுக்கு புழுக்களை பார்க்கையில், அவர்களின் செய்கையில் எனக்கான விமர்சனத்தில் தவறில்லை என்றேன். பல அரசியல் கட்சிகளின் தொண்டர்களும் படித்தார்கள். ஆனால் எதிர்குரல் எழுப்பவில்லை. இன்னொரு நண்பர் சொன்னார். பலிகிடாவில் சகல கட்சிகளையும் விமர்சித்துள்ளீர்களே...இளம் வயதில் இருக்கிறீர்கள். ஏதும் விருதுகளுக்கு அனுப்புகையில் சிக்கல் வராதா? என்று கேட்டார்.

விருது பெற்றால் என்ன நன்மை என்றேன்? வெளியில் கொஞ்சம் தெரியலாம். பல கூட்டங்களிலும் பேச அழைப்பார்கள் என்றார். அதைத்தானே இப்போதும் செய்து கொண்டிருக்கிறேன் என்றேன். விருதுக்கான எழுத்துக்களில் நம்பிக்கை இல்லை. அதற்கு பலர் வருவார்கள். என் வாழ்நாளில், என் கண்முன்னே நடக்கும் அரசியல் அநீதிகளை பதிவு செய்யாவிட்டால் ஒரு படைப்பாளியாகவும், பத்திரிகையாளனாகவும் முழு வாழ்வு வாழாதவனாகி விடுவேன்.

சமீப காலமாக பத்திரிகையாளர்கள் ஏதாவதொரு பிரபலத்திடம் கேள்விகளைக் கேட்கும் போது, அந்த பிரபலத்தை இன்னொரு பிரச்சனையில் தள்ளி விடுவது போல் கேள்விகள் அமைகிறதே அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

ஒரு அரசியல்வாதியோ, ஒரு நடிகரோ ஒரு பிரச்சனையைப் பற்றி பேசும் போதும் சரி! மழுப்பலாக பேசும் போதும் சரி! ஒரு பத்திரிகையாளனுக்கு குதர்க்கமான கேள்விகள் எழும். அதுபோல சூழல்கள் பல நேரங்களில் உருவாகிவிடும். இப்போது ரஜினி அரசியலுக்கு வருவேன் ! அரசியலுக்கு வருவேன் ! என்று சொல்லத் துவங்கி சொல்லி 20 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னும் அவர் அரசியலுக்கு வரவில்லை. சமீபத்தில் ரஜினி மன்ற நிர்வாகி ஒருவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ‘ரஜினி அரசியலுக்கு வருவது உறுதியாகவில்லை’ என்ற தொனியில் என்று சொல்லியிருந்தார். இம்மாதிரியான தருணங்களில் பத்திரிகையாளர்களுக்கு பல கேள்விகள் எழும். அப்போது கேட்கப்படும் கேள்விகள் சில நேரங்களில் பிரபலங்களுக்கு நெருக்கடியையும், ஆத்திரத்தையும் உருவாக்கி விடுவது இயல்புதான். சில ஊடகவியலாளர்கள் பிரபலங்களிடம், ஒரு சர்ச்சைக்குரிய கேள்வியைக் கேட்டால்தான் தாம் பிரபலமாகத் தெரிய வேண்டும், மிளிர வேண்டும் என்பதற்காக கேட்பார்கள். அது அவர்களுடைய மனநிலை.

ஒரு பத்திரிகையாளனை சிலபல வரைமுறைக்குள் வரையறுக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் வேறுவேறு பார்வைகளும் , வேறுவேறு கோணங்களும் இருப்பதொன்றும் தவறில்லையே? ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு தனித்தனி மூளைகளைக் கொண்டவர்கள் என்பதுதானே உண்மை. ஊடகத்துறையில் கூட்டு மனப்பான்மை என்பது ஒட்டுமொத்த ஜனநாயகத்துக்குமே ஆபத்து என்பது நிதர்சனம் எனும்வரையில் ஒவ்வொரு பத்திரிகையாளனும் தனித்தனி பார்வைகளைக் கொண்டிருப்பது நல்லதுதான்.

குதர்க்கமான கேள்விகள் என எதுவும் இல்லை. நமக்கு குதர்க்கமாகத் தெரிவது மற்றவர்களுக்கு அழுத்தமான கேள்விகளாகத் தெரியலாம். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த காலகட்டத்தில் பலரும் பல்வேறு தகவல்களைப் பதிவு செய்தார்கள், பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள், தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தார்கள். அந்த சமயத்தில் அவர்களை தமிழக அரசு கைது செய்தது. அதே கேள்வியைத்தான் இப்போது ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் விசாரணை ஆணையம் கேட்கிறது. அப்படி என்றால் முன்னர் ஜெயலலிதா குறித்து பதிவு போட்டவர்களைக் கைது செய்தது தவறு என்றாகிவிடுமே ? ஒரு குதர்க்கமான கேள்விகளின் பின்னால் ஒரு அர்த்தம் இருக்கும். இந்த கேள்விகளைக் கேட்டால் இவர் கோபித்துக் கொள்வார் என்று தெரிந்தே கேட்பது தவறு. டி.ஆர்.பிக்காக கேள்விகள் கேட்பதுவும் இதில் சேரும். இதிலும் எந்த தவறும் கிடையாது.

பத்திரிகையாளர்கள் சமூக பிரச்சனைகள் குறித்து நடிகர்களிடம் ஏன் கேள்விகளைக் கேட்க வேண்டும்? விவாதிக்க வேண்டும்?

நடிகர்களிடம் கேள்வி கேட்பது என்பது ஒருவர் பிரபலமாக இருக்கும் பட்சத்தில் அவர் சொல்லும் கருத்துகள் நான்கு பேரால் கவனிக்கப்படும் கருத்தாக மாறும். மக்களிடம் சீக்கிரமாக சென்றடையும். விலைவாசி ஏறினால் மக்களிடம் கருத்து கேட்கிறோம் அது போலத்தான் பிரபலங்கள் என்ன மனநிலையில் மக்களையும், அவர்களின் அன்றாட பிரச்சினைகளையும் எப்படி பார்க்கிறார்கள் ? அவர்கள் ஆட்சியாளர்களை எப்படிப் பார்க்கிறார்கள்? அவர்கள் என்ன கண்ணோட்டத்தில் இருக்கிறார்கள் என்று தெரியும். அது தவறான விசயம் கிடையாது.

ஒரு சம்பவத்துக்கோ, ஒரு கேள்விக்கோ பதில் சொல்லாமல் போனால் ஒரு ஊடகவியலாளன் மட்டுமே இன்னாரிடம் கருத்து இல்லை என்று நாடு முழுக்க சொல்கிறார். பிரபலமானவர்கள் தங்களுடைய கருத்துகளைச் சொல்லத் தகுதியானவர் அல்லது கருத்து சொல்ல கடமைப் பட்டவர்களாகவே நான் பார்க்கிறேன்.

ஒரு படைப்பாளி என்பவர் தன்னுடைய சுய காழ்ப்புணர்ச்சி காரணமாக சக படைப்பாளிகளின் மீது வன்மத்தைக் கக்குவது சரியா? உதாரணமாக ஒரு எழுத்தாளர் தனக்கு பிடிக்காத இன்னொரு எழுத்தாளரின் படைப்புகள் மீது முன்வைக்கும் தவறான கருத்தியல் குறித்த உங்களுடைய பார்வை என்ன ? இதை எப்படி பார்க்கிறீர்கள்?

நான் பார்த்தவரை எனக்கு யாரிடமும் பிரச்சனை கிடையாது. எல்லோரிடம் நன்றாகவே பழகுகிறேன். இலக்கியவாதிகள் ஒற்றுமையாக இல்லை. அரசியல்வாதிகளைப் போலதான் பிரிந்து நிற்கிறார்கள். ஒரு படைப்பின் மீது வன்மம் வைக்கப்படுகிறது என்று சொல்வதை விட விமர்சனம் வைக்கப் படுகிறது என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். இலக்கியத் தரப்பில் உள்குத்து நடக்கிறது. ஒருவர் ஒரு படைப்பைப் பற்றி முகநூலில் எழுதினால் அதை வாங்கி வாசிக்க முடியாத மனநிலைக்கு நாம் வந்து விடும் அளவுக்கு இன்றைய இயல்க்கியச் சூழல் இருக்கிறது. முகநூலில் தேவையில்லாமல் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். ஒரு இலக்கிய கூட்டமென்றால் சுமார் 40 பேர் வந்தால் அதுவே ஆச்சரியம்.இலக்கிய அமைப்பு இருக்கிற படைப்பாளிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் அதுவே தமிழ் மற்றும் அனைத்து மொழிகளின் இலக்கியத்துக்குச் செய்யும் மரியாதையாக இருக்கும். எல்லாருமே மொழிக்காக, சமூகத்துக்காக வேலை செய்கிறார்கள். படைப்புகளை கொச்சைப்படுத்தி பேசுவது தவறு. இப்போது புதுமுக எழுத்தாளர்கள் நிறையபேர் வருகிறார்கள். இலக்கிய உலகம் வேகமாக வளர்ந்து வருகிறது. புதிதாக வருகிறவர்களை எல்லோரும் வரவேற்க வேண்டும். என் மீது உள்ள விமர்சனத்தை என் படைப்புகளின் மீது வைப்பது தவறு என்று எண்ணுகிறேன்.

நடிகர்கள் ஏன் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்க வேண்டும்? பதிலளிக்கிறார் எழுத்தாளர் என். சுவாமிநாதன்

இனி இதழியல் துறைக்கு வருபவர்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது என்ன ?

மாணவர் பயிற்சியாளர் திட்டத்தின் மூலமாக வருபவர்களுக்கு பெரிய பலன்கள் மற்றும் நன்மைகள் இருக்கிறதென்றால் அவர்கள் நேர்மையானவர்களாக இருப்பதுதான் காரணமாக அமையும். பயிற்சியின்போதே மூத்த, நேர்மையான அதிகாரிகள் மூலம்தான் பயிற்சிகள் கொடுப்பார்கள். அவர்கள் பேசப் பேச நமக்குள் ஒரு மாற்றம் வரும். அந்த நேர்மையைத்தான் நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நேர்மைதான் முன்மாதிரி என நான் நினைக்கிறேன். பல நூறு நேர்மையான பத்திரிகையாளர்கள் இங்கு இருக்கிறார்கள். நேர்மையானவர்கள் உயர்ந்த இடத்துக்கு போக வேண்டும். இப்போது ஊடக உலகத்தில் ஜாம்பவானாக இருப்பவர்கள் நேர்மையானவர்கள்தான் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நேர்மைதான் பத்திரிகைத் துறைக்கு அடித்தளம். நம்முடைய நேர்மைதான் நம்மைத் தொடர்ந்து எழுதவும் , இயங்கவும் வைக்கும், பலரிடம் நம்மைக் கொண்டு போய் சேர்க்கும். நேர்மைதான் ஒரு ஊடகவியலாளனின் ஆயுதம். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்த போது அவர்களின் குடும்பத்தாரை நான்தான் பேட்டி கண்டேன். நான் நேர்மையாக இருக்கிறேன் என்று நான் நம்புவதால்தான் அந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் உண்மையான வலியை உணர்ந்து எழுத முடிந்தது. துப்பாக்கிக் குண்டு பட்டு இறந்தவர்களில் எட்டு பேருக்கு மேல் போராட்டத்துக்கு சம்பந்தமில்லாதவர்களே. வெறுமனே போராட்டத்தை வேடிக்கை பார்க்க வந்தவர்கள்தான். முகமே தெரியாதவர்களிடம் என்னுடைய நேர்மைதான் கொண்டு போய் சேர்த்தது என்று நினைக்கிறேன். அதுதான் முன்மாதிரி என்று நான் நினைக்கிறன். தன்னம்பிக்கையும் , தைரியமும், நேர்மையும் இருந்தால் பத்திரிக்கைத் துறையில் மிளிரலாம் இதைத்தான் இதழியல் துறைக்கு வருபவர்களுக்கு சொல்ல விரும்புறேன்.

உங்கள் நேர்மை உங்களுடைய பொருளாதாரத்தை பாதிக்கிறதா?

நான் இன்றைக்கு ஒரு வளமான சம்பளம்தான் வாங்குகிறேன். குறைவான சம்பளம் வாங்கும் போதும் நேர்மையாகத்தான் இருந்தேன். இப்போதும் நேர்மையாகத்தான் இருக்கிறேன். நம்முடைய தேவைகளை நாம் நிறைவேற்றும் பொருட்டு நாம் வாங்கி வைக்கும் தேவையற்ற கடன்கள்தான் நம்முடைய அதிகப்படியான தேவைகளாய் மாறும். இது நாம் உருவாக்கி வைப்பதுதான். கமிட்மென்ட் இல்லாத வாழ்க்கை கம்பார்ட்மெண்ட் இல்லாத ரயில் மாதிரி, அதில் யாரும் ஏறமாட்டார்கள். என்னுடைய நேர்மைதான் என்னுடைய மிகப்பெரிய சம்பாத்தியம். ஒருமுறை நம்முடைய நாஞ்சில் பூதப்பாண்டியைச் சேர்ந்த நாட்டின் பொதுவுடமைத் தலைவர் ஜீவா காந்தியடிகளிடம் சென்று, காந்தி ஐயா ! நீங்கள்தான் இந்த நாட்டின் சொத்து! என்று சொன்னார். அதற்கு ஜீவாவுக்கு பதிலளித்த காந்தி, இந்த தேசத்தின் உண்மையான சொத்து நீங்கள்தான்! அது நானில்லை என்று சொன்னாராம். அது தான் ஐயா ஜீவாவின் நேர்மை. ஆறு ஆண்டுகளாய் நான் இந்தத் துறையில் இருக்கிறேன். இன்றுவரையிலும் எந்த காரியத்திற்காகவும், சிபாரிசுகளுக்காகவும் எந்த அரசியல்வாதிகளிடம் போய் நின்றது கிடையாது. பொருளாதாரம் மட்டும்தான் சம்பாத்தியம் என்று நான் நினைத்ததேயில்லை. சமூகத்தில் நாம் உருவாக்கி வைக்கும் மரியாதைதான் மிகப்பெரிய ஒரு சம்பாத்தியம். இதற்கு அப்பால்தான் நான் பொருளாதாரம் இருப்பதாய் நான் நம்புகிறேன்.

0 Comments

Write A Comment