Tamil Sanjikai

 

ஆம் கடவுளை நம்புவதில் என்ன தவறு இருக்கிறது. கடவுளை நம்புகிற அனைவரும் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். எந்த ஊர் எந்த நாடு எந்த மொழி எந்த மதத்தினராக இருந்தாலும் கடவுள் நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறார்கள்.

சரியாகக் கவனியுங்கள். அவர்கள் அனைவரும் கடவுளை நம்புவதில் உறுதியாக இல்லை, ஆனால் கடவுள் நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறார்கள்.

கடவுள் நம்பிக்கை, கடவுளை நம்புதல் இரண்டிற்கும் அப்படி என்ன பெரிய வித்தியாசம்?

கடவுள் நம்பிக்கை என்பது ஒரு பழக்கம். அந்தப் பழக்கத்தை கைவிட மாட்டோம் என்று உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் கடவுளை நம்புவதில் கடவுள் இருக்கிறார் என்று நம்புவதில் அவர்கள் உறுதியாக இல்லை.

கடவுள் இருக்கிறார் என்று அவர்கள் நம்பவில்லை என்று எப்படி உறுதியாக கூற முடியும் என்று உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும், வரவேண்டும் அதுதான் சரி.

உலக நாடுகள் அனைத்தும் இதுவரை எத்தனையோ ஆராய்ச்சிகளை செய்திருக்கின்றன. சூரியனைப் பற்றி சந்திரனைப் பற்றி செவ்வாயைப் பற்றி அவ்வளவு ஏன் சமீபத்தில் பூமியை போல இன்னொரு கோள் இருப்பதாகவும் கூட ஆராய்ச்சி செய்து கூறிவிட்டார்கள்.

1400 கோடி வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த பிக் பேங் என்கிற பெருவெடிப்பின் மூலமாகவே இந்த அண்டமானது உருவானது என்று அறிவியல் ஆராய்ச்சியின் வழியே கூறிவிட்டார்கள்.

இன்னொரு பக்கம் மனித இனம் தோன்றிய வரலாறு தோண்டியெடுத்து குகைகளில் வாழ்ந்த சேப்பியன் என்கிற விலங்கு தான் மனிதனில் இன்றைய மனித இனம் என்றும் கூறிவிட்டார்கள்.

வானம் நோக்கியும் வானம் தாண்டியும் பூமி தோண்டியும் பெருங்கடல்களுக்குள் புகுந்தும் பலப்பல ஆராய்ச்சிகளை ஆய்வுகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இதுவரையில் கடவுள் எங்கே இருக்கிறார் என்பது பற்றியும் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பது பற்றியும் எந்த ஆய்வும் உலகில் எங்கும் நடந்ததாக நான் கேள்விப்படவில்லை.

கடவுள் இருக்கிறார் என்று நம்புபவர்கள், தனக்கு வேண்டிய யாவையும் கடவுள் செய்து முடிப்பார் என்று நாள் தோறும் பிரார்த்தனை செய்பவர்கள் ஏன் அவர் இருக்கும் இடத்தை பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை.

எங்கோ ஓரிடத்தில் புதையல் இருப்பதாக கேள்விப்படுபவர்கள் நிச்சயம் அந்த இடத்தையும் அந்த இடத்தில் புதையல் இருப்பதையும் கண்டறிந்து அதை கைப்பற்றுவதில் போட்டி போட்டுக்கொண்டு அந்த இடத்தை தேடிச் செல்வார்கள்.

இதை விடவும் மிக எளிதான ஒரு விளக்கம் தரலாம். காட்டுக்கு ராஜாவாக ஒருத்தர் இருக்கிறார். அவர் காட்டுக்குள் இருந்தபடி ஏதேதோ செய்கிறார் ஆனால் அவரை யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை சென்று கேள்வி பட்டு இருக்கிறோம். ஊருக்குள்ளே வராமல் காட்டுக்குள்ளே வாழ்கிற அந்த காட்டு ராஜா வை பற்றிய தகவலை தெரிந்துகொள்ள ஒரு பத்திரிக்கையாளர் நேரடியாக காட்டுக்குள் சென்று அவரை சந்திக்கிறார்.
வேறு எந்த பத்திரிகையாளர்களும் செய்யாத தேடிச்சென்று செய்கிறார். காட்டு ராஜாவை சந்தித்து பேட்டி எடுக்கிறார். அதைத் தன்னுடைய பத்திரிகையில் வெளியிடுகிறார் என்றும் நாம் பார்த்திருக்கிறோம்.

அப்படியானால் இருக்கிறார் என்று நம்பப்படுகிற ஒருவரை கண்டுபிடிப்பதில் அவரைத் தேடிச்சென்று சந்திப்பதில் நமக்கு அவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்பது நமக்கே தெரியும்.

யதார்த்தம் இதுதான்.
ஆனால் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறவர்கள் கடவுளை அனுதினமும் அல்லும் பகலும் பிரார்த்திக்கிறவர்கள், பூஜை செய்பவர்கள், வழிபடுகிறவர்கள் ஏன் அவரைத் தேடிச் செல்லவில்லை அவரை சந்திக்க விரும்பவில்லை.

நேரில் பார்க்க முடியாத நேரில் வராத ஒருவரிடம் எத்தனையோ பிரார்த்தனைகளை வேண்டுதல்களை முன்வைப்பவர்கள் அவரை நேரில் பார்த்தால் இன்னும் அதை சுலபமாக்க முடியுமே. அவரவர் தேவைகளை இன்னும் தெளிவாக அவரிடம் விளக்க முடியுமே. அவரவருக்கு தேவையானதை நேரடியாக கேட்டு பெற்றுக் கொள்ள முடியுமே. அவரவருக்கு வேண்டியவற்றை செய்யச் சொல்ல முடியுமே.

ஆனால் இதுவரை எவருமே அப்படி கடவுளை தேடி பயண பட்டதாக தெரியவில்லை. எத்தனையோ இடங்களுக்கு பயணங்கள் செல்வதற்கான அத்தனை தகவல்களும் கொட்டிக் கிடக்கின்ற இந்த இணைய காலத்தில் இந்த டிஜிட்டல் யுகத்தில் கடவுளை தேடிச்சென்று சந்திப்பதற்கான எந்த பயணக் குறிப்பும் இல்லை. கடவுளை சந்தித்துவிட்டு வந்தவர் என்று எவரும் ஒரே ஒரு பயணக்கட்டுரை கூட எழுதி வைக்கவில்லை.

அப்படியானால் கடவுள் நம்பிக்கையில் என்ன தவறு இருக்கிறது. அவர்கள் கடவுள் நம்பிக்கை என்பதை அன்றாட பழக்க வழக்கங்களில் ஒன்றாக வைத்திருப்பவர்களில் ஒருவர் கூட கடவுள் இருக்கிறார் என்று நம்புவதையும் அவரைத் தேடிச் செல்வதையும் அவர் எங்கே இருக்கிறார் என்று தேடிக் கண்டுபிடிப்பதையும் இதுவரை ஒருமுறை கூட செய்யவில்லை.

அப்படி என்றால் கடவுள் இருக்கிறார் என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றுதானே பொருள்.

ஆக கடவுள் நம்பிக்கை என்பது கடவுள் இருக்கிறார் என்று நம்புவது இல்லை. கடவுள் நம்பிக்கை என்பது ஒரு நம்பிக்கை. அதிலென்ன தவறு இருக்கிறது.

- முருகன் மந்திரம்

0 Comments

Write A Comment