Tamil Sanjikai

இராமாயணமும், புராணக்கதைகளும் பண்டைய காலங்களில் எளிய மக்களைச் சென்றடைய தோல் பாவைக்கூத்து என்னும் கலை ஒரு ஊடகமாகத் திகழ்ந்தது. இன்று இந்த கலை அழிவின் விளிம்பில் இருப்பது ஒரு ஆகப் பெரிய சோகம். தோல்பாவைக் கூத்தானது ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒரிசா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இன்னமும் இருந்து வருகிறது. தமிழகத்தில் மதுரை,தூத்துக்குடி,கன்னியாகுமரி,விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடந்து வருகிறது. தோல்பாவைக் கூத்து தற்போதைய காலகட்டத்தில் நலிந்து வருகின்ற கலையாக மாறிவருகிறது.மராட்டியைத் தாய்மொழியாகக் கொண்ட ‘கணிகர்’ சாதியின் உட்பிரிவான ‘மண்டிகர்’ சாதியைச் சார்ந்தவர்கள், இக்கலையை நிகழ்த்துகின்றனர். இவர்களை தவிர வேறு யாரும் இதை நடத்தக் கூடாது என விதி முறைகளும் இருக்கிறது.

ஆட்டுத் தோலில் உருவங்களை தீட்டி, மேடையில் திரையமைத்து, திரைக்கு பின் ஒருவர் அமர்ந்து இயக்க, திரைக்கு பின்னால் இருந்து பாய்ச்சப் படும் ஒளியின் மூலம் திரையில் பாவையின் பிம்பங்கள் தோன்றுவதே தோல்பாவைக் கூத்து.

தோல்பாவைக்கூத்து

பல நூற்றாண்டுகளுக்கு முன் தஞ்சையில் கால் பதித்த மராத்திய மன்னரின் அரண்மனைக் கலைஞர்கள் மூலம் தமிழகத்தில் அறிமுகமானது தோல்பாவைக் கூத்து. தொடக்கத்தில் மன்னரின் அரண்மனையில் மட்டுமே நிகழ்த்தப்பட்ட இக்கலை பின்னர் திருவிழாச் சமயங்களில் பொதுமக்கள் கூடும் இடங்களில் நடத்தப்பட்டன. இதற்கு இருந்த வரவேற்பையும், பாவைகளை கையாளும் விதத்தையும் கண்டு மக்கள் வியந்தனர். இக்கலையை கற்றவர்கள் வம்சாவழியாக தங்களது சந்ததியினருக்கு இதை கற்றுக் கொடுத்தனர். தந்தை பாலகிருஷ்ண ராவ்விடம் இருந்து தோல்பாவைக் கூத்தை கற்றுக் கொண்டவர் கலைவளர்மணி முத்துச்சந்திரன்.

அவரிடம் தோல்பாவைக் கூத்தின் இன்றைய நிலைக் குறித்து முத்துச்சந்திரனிடம் பேசினோம். " தோல்பாவைக் கூத்து மேடைஒளி பிம்பக்கலை என்பதால் தோல்பாவைக் கூத்து ராத்திரியில் மட்டுமே ஊர்ப்பகுதிகளில் நடத்துவோம். இதுக்காக மேடையின் மூன்று பக்கங்களிலும் ஒளி ஊடுருவாத தடிமனான கருப்பு நிறச் சீலை கட்டுவோம். பார்வையாளர்களை நோக்கியிருக்கும் முன் பக்கத்தில் சுருக்கம் இல்லாத வெள்ளை கலர் துணிச்சீலை கட்டுவோம் . மேடையில் இருக்கும் லைட்டுகளை அணைத்து விட்டு திரைகளால் செய்யப்பட்ட, சதுரக் கூட்டின் உள்ளே மட்டும் பிரகாசமான லைட்டைக் கொண்டு வெண்திரையில் ஒளி பாய்ச்சுவோம்.இந்த அறைக்குள் தான் பாவையாட்டிக் கலைஞரான நான் அமர்ந்து பாவைகளை ஆட்டுவிப்பேன். லைட்டின் ஒளி பாவைகளின் மீது மெல்லியதாக படுவதன் மூலமும், நகைகளின் துளைகளின் மூலமும் ஊடுருவி, திரையில் பிம்பமாகத் தெரியும்.வெண்திரையில் காணப்படும் பாவைக் கதாபாத்திரங்கள் வண்ணத்தில் பிரதிபலித்து மிளிர்வது ஒரு சிறப்பம்சம்.

தோல்பாவைக்கூத்து

பாவையாட்டும் கலைஞர் இரு கைகளிலும் விரல்களுக்கிடையே பாவையின் குச்சிகளைப் பிடித்து கதாபாத்திரங்களின் வசனம், பாடல்களுக்கு ஏற்றப்படி அதை ஆட்டுவிப்போம். காட்சியில் வரும் அசையாப் பொருட்களும், காட்சியில் வசனம் பேசாத மற்ற கதாபாத்திரங்களும், திரையை ஒட்டி உட்புறமாகக் கட்டப்பட்டிருக்கும் கயிற்றில் செருகி வைத்து விடுவோம். பாடல்களுக்கு இசை கொடுப்பவர்களும் பின்னால் அமர்ந்திருப்பார்கள். இதையெல்லாம் மிஞ்சும் விசயம், இப்பாவைகளை ஆட்டுவிக்கும் கலைஞர் ஒருவரே இக்கதாபாத்திரங்களின் வசனங்களையும், பாடல்களையும் பாடுவது தான்.இயற்கையாகவே பாவையாட்டும் கலைஞர்களுக்கு பலக் குரல்களில் பேச வந்து விடும்.நான் கிட்டதட்ட 20க்கும் மேற்பட்ட குரலில் பேசி கூத்தை நடத்துவேன்.

அது அவ்வளவு ஈசியான காரியமல்ல. காட்சிக்குத் தேவையான பொருத்தமான பாவைகளைத் தேர்ந்தெடுத்து, அவை பேசும் வசனங்களையும், பாடல்களையும் எல்லோருக்கும் கேட்கும்படி உச்சஸ்தானியில் ஏற்ற இறக்கங்களுடன் பாடிக் கொண்டே விரல்களின் மூலம் வசனத்துக்கு தகுந்தபடி ஒருங்கிணைத்து இயக்குவது மிக மிகக் கடினமான செயலாகும். அதிலும் பெண்கள் உட்பட அனைத்துக் கதாபாத்திரங்களின் வசனங்களையும் பாடல்களையும் குரலை மாற்றி ஏற்ற இறக்கத்தோடு நான் பாடுவேன். இந்த விசயம் தெரியாமல் தோல்பாவைக் கூத்தை பார்க்கிறவர்கள் பல கலைஞர்கள் பேசிப் பாடுவதாகவே நினைத்துக் கொள்வார்கள்.அந்த அளவுக்கு துல்லிய வேறுபாடுகளை எடுத்துக் காட்டுவோம்.

அரிச்சந்திரன், இராமாயாணத்தின் கிளைக் கதைகள் போன்ற புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டே பெரும்பாலும் தோல்பாவைக் கூத்தில் நடத்தப் படுகிறது.இப்போது பொழுதுபோக்குகாக மட்டுமின்றி, சமுதாயத்திற்கு நல்லொழுக்கம், நல்லறம் போன்றவற்றை எடுத்துரைக்கவும் பாவைக் கூத்து பயன்படுது.

தோல்பாவைக்கூத்து

பல வருசங்களாக பெரிய மாற்றமில்லாமல் மக்களுக்கு இது போன்ற புராண நிகழ்வுகளையே கருவாகக் கொண்டு நடப்பதால் கூத்துகள் தங்களைக் கவர்வதில்லை என்றும் பொதுமக்களும், பொது மக்களிடம் போதிய வரவேற்பில்லாததால் கூத்துகளில் பெரிய அளவில் மாற்றங்களையும் புதுமைகளையும் சேர்க்க முடிவதில்லை என்று கூத்துக் கலைஞர்களும் சொல்லி வரும் தற்போதைய காலக் கட்டத்திலும், எங்கள் பிள்ளைகளுக்கும் இதை சொல்லிக் கொடுக்க, அவர்களும் நாங்கள் எப்படி மிகச் சிரமப்பட்டு கற்றுக் கொண்டோமோ? அதுபோலவே இதனைக் கற்று வருகிறார்கள். தோல்பாவைக் கலையின் மூலம் எங்களின் எளிமையான வாழ்க்கைக்கு கூட போதுமான வருமானமில்லாததால் நிகழ்ச்சிகள் இல்லாத நாட்களில் திருவிழாக் கடைகளில் பொம்மை,பலூன் விற்று வருகிறோம்.

தோல்பாவைக்கூத்து உயிருள்ள நாடகத்தின் நிழல் வடிவம் தான்.பாவைகளைப் பின்னாலிருந்து இயக்கும் கலைஞர்களின் எண்ணங்கள் பாவைகள் வழியே வெளிப்படுகின்றன. பாவைகளை, உயிருள்ள கதை மனிதர்களாகவே பார்க்கிறவர்கள் எண்ணுமளவிற்கு அவை படைத்தளிக்கப்படுவதால் தனித்தன்மையுடன் அமைகின்றன.

இன்றைய காலகட்டத்தில், மக்களுக்குத் தேவையான கருத்துக்கள் பலவும் இக்கலை வடிவத்தின் மூலம் பிரச்சாரப் படுத்தப்படுகின்றன. அந்த வகையில் மிகச் சிறந்த கருத்துப் பிரச்சார ஊடகமாக பாவைக்கூத்து விளங்குகிறது . தோல்பாவை கூத்து மூலம் நாங்கள் ராமாயணம், நல்லதங்காள், அரிச்சந்திரா, ஞானசௌந்தரி போன்ற கதைகளை மக்களுக்கு சொல்லி வருகிறோம். இதற்காக ஆட்டுத்தோலில் வரைந்து தயாரிக்கப்பட்டு சில தலைமுறைகளாக பயன்படுத்தும் 100-க்கும் மேற்பட்ட படங்கள் எங்களிடம் இருக்கின்றன. தற்போது பள்ளிக் கூடங்களில் விவேகானந்தர்,பள்ளி கல்வி,ஹெச்.ஐ.வி.,பல்லுயிர் பெருக்கம் ,போன்ற விழிப்புணர்வு கூத்தை நடத்தி வருகிறோம்.எங்களது தோல்பாவைக் கூத்துக்கு தேவையான படங்களை எனது தம்பி ஓவியர் முத்துமுருகனே வரைந்து விடுவான்.பாவைக் கூத்தும் இப்போது நலிவடைந்து வருகிறது. அதேபோன்று நாங்களும் நலிவடைந்து வருகிறோம் என்றார்.

0 Comments

Write A Comment