Tamil Sanjikai

தமிழகத்தையும், கேரளாவையும் இணைக்கும் முக்கிய வழித்தடம் செங்கோட்டை - கொல்லம் ரயில் பாதை. இப்பாதை இரு மாநில மக்களுக்கும் வர்த்தக வழித்தடமாக இருக்கிறது. சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, பாம்புகோவில் சந்தை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் விவசாய பொருட்கள், பலசரக்கு மற்றும் பூக்கள், காய்கறிகள், பஞ்சு, அச்சு வெல்லம், பனை வெல்லம், எள், எண்ணெய், புண்ணாக்கு, சிமிண்ட், பயறு வகைகள் என பல்வேறு பொருட்கள் கேரளாவின் முக்கிய நகரங்களுக்கு இந்த வழித்தடத்தில் கொண்டு செல்லப்படுகிறது. கேரளாவிலிருந்து மிளகு, ஏலக்காய், முந்திரி உள்ளிட்ட நறுமணப் பொருட்கள் ரயில் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. இதேபோன்று தூத்துக்குடி துறைமுகத்திற்கும், திருச்செந்தூர், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், சங்கரன்கோவில், திருவில்லிபுத்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட வழிபாடு, சுற்றுலாத் தலங்களை இணைக்கும் முக்கிய ரயில்வே மார்க்கமாக இருந்து வருகிறது.

கண்ணுக்கு குளிர்ச்சி தரும் திக்திக் ரயில் பயணம்!!!

1873-ஆம் ஆண்டு அப்போதைய ஆங்கிலேய அரசால் தொடங்கப்பட்ட செங்கோட்டை - கொல்லம் ரயில் பாதை பணிகள் 27 ஆண்டுகள் நடைபெற்றது. இப்பாதையை அமைத்திட தென்னிந்திய ரயில்வே கம்பெனி 17 லட்ச ரூபாயும், திருவிதாங்கூர் சமஸ்தானம் 7 லட்ச ரூபாயும், அப்போதைய திருவிதாங்கூர் திவான் ராமய்யர் கொடுத்த 6 லட்சம் ரூபாயும் சேர்த்து 30 லட்சம் மதிப்பீட்டில் இப்பணிகள் தொடங்கப்பட்டு 1901-ஆம் ஆண்டு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டது. தனியார் - அரசு கூட்மைப்பில் உருவான ரயில் வழித்தடம் இதுதான். பாதை அமைப்பதில் பல பிரச்சனைகள் உருவாகின.

அடர்ந்த காட்டுப் பகுதிகளில் பணிசெய்தவர்கள் மிருகங்களால் தாக்கப் பட்டனர். 500 அடி உயரம் கொண்ட மலையில் சுமார் 15 அடி உயரமும், 15 அடி அகலமும், கொண்ட 900 மீட்டர் நீளம் கொண்ட முதல் மலைக்குகை குடையப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி சிறிய மலைகளை குடைந்து குகைகள் அமைப்பது எளிதாக இல்லை. அந்த மலைக்குகைகளின் பக்கவாட்டு சுவர்கள் சரிந்து பாதையை மூடிவிடும் அபாயமிருந்தது. 4 மலைக்குகைகள், 5 பெரிய பாலங்கள், 120 சின்ன சின்னப்பாலங்கள் என்று பயணிக்கும் இந்த ரயில் பாதையின் இரு பக்கமும் பசுமைக்காடு பரவிக்கிடக்கிறது.

பகவதிபுரம் - ஆரியங்காவு என்ற இரண்டு ஸ்டேஷன்களுக்கிடையே ஒரு கிலோ மீட்டருக்கு நீண்ட குகைப்பாதை என திகிலூட்டும் வழித்தடமாக இது இருந்தது. 1902-ஆம் ஆண்டு முதல் இந்த வழித்தடத்தில் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 1904-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொல்லம் ரயில் நிலையத்தில் வைத்து 21 குண்டுகள் முழங்கிட ரயில் நிலைய மேலாளர் ராமைய்யா, முதல் பயணிகள் ரயிலை கொல்லத்தில் இருந்து செங்கோட்டைக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அன்று முதல் இன்று வரை தென்காசி - கொல்லம் இடையேயான இந்த ரயில் தடம் பல வரலாற்று நிகழ்வுகளை கண்டுள்ளது. தமிழகத்தையும், கேரளாவையும் ரயில் பாதையின் வழியாக இணைக்கும் மூன்று முக்கிய பாதைகளில் ஒன்று கொல்லம் - செங்கோட்டை பாதை. நாகர்கோவில், கோயமுத்தூர் என மற்ற இரண்டு முக்கியமான ரயில் பாதைகளுக்கு இல்லாத சிறப்பு, செங்கோட்டை - கொல்லம் ரயில் பாதையில் உண்டு. அது, இயற்கை அழகுடன் கூடிய சுற்றுலாப் பாதை என்பதுதான். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், குகைகளையும் உயரமான மலை முகடுகளையும் கடந்து அமைக்கப்பட்ட பாரம்பரியமான ரயில் பாதை இது.

கண்ணுக்கு குளிர்ச்சி தரும் திக்திக் ரயில் பயணம்!!!

சில மாதங்கள் இப்பாதையில் சென்ற ரயில் தென்மலை - கழுதுருட்டி இடையே உள்ள ஒரு குகையில் மண் சரிவு ஏற்பட்டு அப்படியே பல பயணிகளோடு மண்ணோடு மண்ணாகி புதைந்து போனது. அதன்பின் அருகிலேயே 13 கண் கொண்ட மிகவும் பிரமண்டமான ஒரு பாலத்தை கட்டினார்கள். அப்பாலம் வழியே ரயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது. இரும்பு கர்டர்களை உபயோகிக்காமல் கட்டபட்ட இந்தப் பாலம் பண்டைய தொழில்நுட்பங்களில் மிகப்பெரிய சவாலாகும். பாலம் முடிந்தவுடன் தண்டவாளங்களை பதிக்க ஆரம்பித்துவிட்டனர். இரண்டே ஆண்டுகளில் செங்கோட்டை வரை ரயில் பாதை அமைக்கும் பணி முடிந்துவிட்டது. 1956 வரை செங்கோட்டை தாலுகா திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. ரயில் மலைப் பாதையில் பயணித்து, மலை அடிவாரமான சமதளப் பகுதியில் இறங்கியதும் வரும் முதல் நகரம் செங்கோட்டை. அதனால் அங்கே ஆங்கிலேயர் காலத்தில் ரயில் நிலையம், மிகப் பெரிதாக அமைக்கப்பட்டது. இஞ்சின் மாற்றுவது, தண்ணீர் நிரப்புவது, ஓய்வு எடுப்பது, லோகோ பணிகள், ஷெட், கோளாறுகளை சரிசெய்யும் பணிமனை என்று ரயில் நிலையமும் பெரிதாக அமைக்கப்பட்டது.

கண்ணுக்கு குளிர்ச்சி தரும் திக்திக் ரயில் பயணம்!!!

1956-ஆம் ஆண்டு மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்ட போது, செங்கோட்டை பகுதி தமிழகத்தின் நெல்லை மாவட்டத்துடன் இணைந்தது. இரு மாநில எல்லைப் பகுதி உயர்ந்த மலைப்பகுதியின் கீழ் புறத்தில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 700 அடி உயரத்திலும் ரயில் செல்லத் தொடங்குகிறது. எஸ் வளைவு என்ற பகுதி இரு மாநில எல்லை பகுதியாகும். இங்கு கீழே பேருந்தும், மேலே ரயிலும் செல்ல தொடங்கும் பாதை. இதிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் கடந்தால் அடர்ந்த பாறைகளை உடைத்து உருவாக்கப்பட்ட ரயில் பாதை தொடங்குகிறது. அடுத்து ,ஆயிரம் பேரைக் காவு வாங்கிய குகை இதற்கு இன்றும் செவிவழிக் கதை உள்ளது. இந்த மலைக் குகையினுள் ரயில் செல்ல தொடங்கும் போது கும் இருட்டில் செல்வது போன்ற உணர்வும், ஒரு திகில் கலந்த விவரிக்க முடியாத உணர்வும் ஒரு சேர ஏற்படும். இருந்தாலும் இக்குகையின் உறையவைக்கும் குளிர்ச்சி பயத்தால் வெளியேறும் வியர்வையை தடுத்துவிடுமாம். சுமார் 300 அடி முதல் 500 அடி நீளமுள்ள ஒரு சிறு மலைக்குகைகளை ரயில் கடக்கும்போது இடப்புறம் திரும்பி பார்த்தால் ஆங்கிலேயரின் பிரம்மாண்டமான செயல்திட்டமும், இருமாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பும், தியாகமும் தெரியும். மேலும், தொழில்நுட்ப தொடர்பும் இல்லாத அக்காலகட்டத்தில் தரை மட்டத்தில் இருந்து பல ஆயிரம் அடி உயரத்தில் பாதை அமைத்த திறமை வியக்க வைக்கும்.

கண்ணுக்கு குளிர்ச்சி தரும் திக்திக் ரயில் பயணம்!!!

தென்காசி - கொல்லம் ரயில் பாதை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்ட பின் வனப்பகுதியை சுத்தம் செய்ய ஆட்கள் இன்றி தவித்த ஆங்கிலேயர்கள் அப்பகுதிகளில் வெள்ளி காசுகளை அள்ளி வீசியுள்ளனர். அந்த தகவலையும் மக்களிடம் பரப்பியுள்ளனர். காட்டுத்தீயாக பரவிய இத்தகவலைத் தொடர்ந்து மக்கள் காடுகளை சுத்தம் செய்து காசுகளை பொறுக்கியுள்ளனர். இப்படிதான் இந்த பாதை உருவானதாக வரலாறுகள் தெரிவிக்கிறது. பாயும் நதியின் மேல் பாலம் இதனை தாண்டும்போது கேரளத்தை நோக்கி பாயும் நதியைக் காண முடியும். அதனை ஒட்டி சாலை, அதையடுத்து தரை மட்டத்தில் இருந்து சுமார் 80 அடி உயரத்தில் 13 வாயிற்கொண்ட கற்களால் கட்டப்பட்ட இராட்சத பாலம் வரவேற்கிறது. இதில் ரயில் ஊர்ந்து செல்லும்போது திக் திக் என்ற மனநிலை நிச்சயம் தோன்றும்.

செங்கோட்டை - கொல்லம் ரயில் பாதையை அகலப் பாதையாக்கும் பணிகள், 358 கோடி மதிப்பீட்டில் கடந்த 2010 செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதி தொடங்கப் பட்டது. மூன்று ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப் பட்டு பணிகள் நடந்தன. தென்மலை பகுதியில் புகழ்பெற்ற 13 கண் பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் பாரம்பரிய சின்னமாக கருதப்படும் அதை இடிக்க மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால், பழைய பாலத்தின் தன்மை மாறாமல் பலப்படுத்தப்பட்டு அகலப் பாதை அமைக்கப்பட்டது. நிதி ஒதுக்கீடு தாமதம், பால பிரச்சனை போன்றவற்றால் கடும் இழுபறி ஏற்பட்டு 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி மீண்டும் ரயில் போக்குவரத்துக்கு தொடங்கப்பட்டுள்ளது. எப்போதும் போல இப்போதும் தென்காசி - கொல்லம் ரயில் வழித்தடம் ஓர் சுற்றுலாத் தலமாகவே மாறி விட்டது . இன்றும் இந்த ரயில் செல்லும் பாதையை ரசித்திட பயணிகள் அதிகளவில் பயணிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அப்படி அந்த ரயிலிலும், அது செல்லும் பாதையிலும் உள்ள பசுமையையும், பிரம்மாண்டத்தையும் வார்த்தைகளால் விவரித்திட முடியாது.

0 Comments

Write A Comment