அந்த வார்த்தையைக் கேட்டதும் அழுகை பொத்துக் கொண்டு வந்து விட்டது. எத்தனையோ கோபமான , துக்கமான , பதட்டமான சூழ்நிலையில் கூட அந்த அளவுக்கு சோகம் என்னை ஆட்டிப் படைத்ததில்லை. ஒரு பெற்ற தாயிடமிருந்து கேட்கப் படக்கூடாத ஒரு வினா.
இது வரையில் ஆண்ட கட்சிகளின் சீமைத்தனத்தாலும், கார்ப்பொரேட்டுகளின் கசவாளித் தனத்தாலுமே நான் இப்படி ஒரு கேள்வியை எதிர்நோக்கி நகர்ந்து வந்திருக்கிறேன். லஞ்ச, லாவண்யங்களின் மேல் விழுந்து , புரண்டு, நக்கி , துடைத்து, நாசமாய்ப் போன அதிகாரிகள் முதற்கொண்டு கடைநிலை ஊழியர்களின் நிமித்தம் தொலை தொடர்புத் துறை , பாஸ்போர்ட் அலுவலகம் என்று எல்லாமே காந்தி ஜெயந்தி டாஸ்மாக் போல மூடப்பட்டு, கார்ப்பொரேட்டுகளிடம் ஒப்படைக்கப் பட்டது.
அரசு, தான் நடத்த வேண்டிய மருத்துவம், கல்வி போன்ற மக்களின் அடிப்படைகளை தனியார் வசம் ஒப்படைத்துவிட்டு, தானே முன்னின்று சாராயமும் , சைடிஷும் விற்பனை செய்துவிட்டு, லாத்திக் கொண்டு திரிகிறது. இந்தப் பன்னாடைகள் ஒழுங்காய் இருந்திருந்தால் எனக்கு முன்பாக இந்த கேள்வி எழுந்திருக்காதே என்ற ஒரு எண்ணம் வந்தது.
ஊரெல்லாம் சுற்றி புகைப்படம் எடுத்துக் கொண்டு திரிந்த சமயத்தில்தான் என் அப்பா விட்ட சாபம் பலித்த காரியம் உரைத்து வலித்தது. நீயெல்லாம் ஊர் சுத்தத்தான் லாயக்கு ! ரெண்டு கழுதை வாங்கித் தாரேன் மேய்க்கிறியா ? நல்லா ஊர் மேயலாம். பளார் ! பளார்! பளார்! என செருப்படிகள் வாய் மீதினிலே மானசீகமாய் விழுந்த போதும் கூட இந்தக் கண்கள் கலங்கியதில்லை.
ஒரு பத்து நிமிடங்கள் பிந்திப் போனாலும் கூட பலபேர் மத்தியில் வைத்து 'சோத்தத் திங்கிறியா ? சாணி திங்கிறியா ? கோவாலு மாதிரி வந்து நிக்கிற ? பத்து நிமிசம் லேட்டுன்னா பத்து ரூவா ஃ பைன கெட்டுனாத்தான் ஒரைக்கும் ! போ அந்தால ! நல்லா சுசீந்திரம் கோயில் தெப்பக் கொளம் மாதிரி மூஞ்சிய வச்சிக்கிட்டு முன்னால நிக்காத ! என்று எங்கள் பிரின்சிபால் பெரியபுராணம் பாடிய போது வராத கண்ணீர் இன்று வந்தது ஏன் ? புரியவில்லை.
ஏட்டி ! ஒன்னய காதலிக்கம்ட்டி ! என்று ஆறாயிரத்து ஐநூற்றி பத்தொன்பதாவது காதலியிடம் சொல்லி, அவள் வாயால் , போல மொண்ணப் பயல ! ஒன்னயக் காதலிக்கதுக்கு ஒரு பண்ணியக் காதலிக்கலாம் என்று கேட்டு , அதற்கு , பண்ணியவா கட்டிக்கப் போற ? வேண்டாம்ட்டி ! ஒங்கம்மைக்க குடும்பத்துல சம்மந்தம் சரிப்படாது ! என்று பதிலுரைத்து , அவள் கையிலிருந்து ராட்டு சோப்பு பறந்து வந்து முகத்தில் பட்டு தெறித்து, காதலியை மறந்து , பெற்றெடுத்த தெய்வத்தை 'அம்மா ' என்று அலறோடு விளித்த போது வராத கண்ணீர், அதே தாயிடமிருந்து வந்த அந்த கேள்வியால் எழுந்ததே ஏன் ?
வாத்தியார் ஒரு மொங்கு மூஞ்சான் என்றறிந்திருந்தும் கூட ஆர்வ மிகுதியால், அடோபி கம்பெனிகாரன் வெளியிட்ட ஃபோட்டோஷாப், லைட்ரூம் , இல்லஸ்ட்ரேட்டர் , இண்டிசைன் என்று அத்தனை மென்பொருள்களையும் உள்வாங்கி, காக்கரையும், கூக்கறையுமான மண்டையன்களைக் கூட அழகாகப் படமெடுத்து கொடுத்திருக்கிறேன். அப்போதெல்லாம் வராத அந்த ஆனந்தக் கண்ணீர்?
பிரதமர் பொய் பேசும்போது வராத கண்ணீர் , ஆளுநர் கக்கூஸில் எட்டிப்பார்த்த போது வராத கண்ணீர் , பன்னாடைகள் கைதுக்குத் தப்பி காவல் சூழ உலா வரும்போது வராத கண்ணீர் இப்போது வந்ததே ஏன் ?
விண்ணப்பித்துவிட்டு ,நாள் கணக்குல காத்துக்கிடந்து அப்பாயின்மென்ட் வாங்கி,டி.சி.எஸ் காரன்கையில சிக்கி , பிச்சைக்காரன்மாதிரி இருந்து அவனுககிட்ட கேட்கக் கூடாத கேள்வியெல்லாம் கேட்டுகிட்டு, மூணாவது கவுண்டர்ல உத்திரத்துல தொங்குற பல்லி மாதிரி ஒருத்தி வந்து , நாடிய டவுன் பண்ணி இங்க பாருங்க ! தலைய அசைக்காதீங்க ! ரைட் சைடு சரிங்க! என்றெல்லாம் அவள் சொன்னதைக் கேட்டுவிட்டு வீட்டுக்கு வந்த பத்தாவது நாள், போக்கிரியைத் தேடுவது போலத் தேடி வந்து வெரிஃபிகேசன் செய்த தாணாக்காரருக்கு இருநூறு ரூவா மொய் வைத்து , மீண்டும் இருபது நாட்கள் கழித்து ஸ்பீடு போஸ்டில் வந்த பாஸ்போர்ட்டில் இருந்த புகைப்படத்தை என்னிடம் காட்டி, யாரு மக்கா இந்த ஃபோட்டோவுல இருக்குற கூதரை? என்று ஒரு பெற்ற தாயின் வாயில் எழுந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வேன் மகா பிரகஸ்பதிகளே ?
பெத்த தாய்க்கே தெரியலை... இம்மிகிரேசன் ஆப்பீசரூக்கு எப்புடி தெரியும்? போட்டோவுல இருக்குற ஆளு வேற! எதுத்தாப்புல நிக்கிற ஆளு வேற! எப்புடி வெளிநாட்டுக்கு போக வுடுவான்? பாஸ்போர்ட்தான் இப்பிடின்னா ஆதார் கார்டு , வோட்டர் கார்டுன்னு பெகளம் இன்னும் நீளம்....
எல்லாம் நேரம் !
0 Comments