இந்தியாவில் நான்காவது முறையாக தொடர்ந்து மனித உடல் உறுப்பு தானத்தில் சிறந்த முதல் மாநிலமாக தமிழகம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் மனித உடல் உறுப்பு தானம், 1962-ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் அவரவர் விருப்பம் போல உடல் உறுப்பு மாற்று சிகிச்சைகள் நடக்கத் தொடங்கியது . வழக்கம் போல இதிலும் பணக்காரர்களுக்கு சாதகமாகவே நடந்து கொண்டிருந்தது. இதனால் வசதியற்றவர்களும், ஏழைகளும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். 1994-ஆம் ஆண்டு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை முறைப்படுத்தும் அகில இந்திய சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. தமிழகத்தில் 2008-ஆம் ஆண்டு உடல் உறுப்பு தானத்தை ஒழுங்குபடுத்தும் சட்டம் கொண்டு வரப்பட்டது. முறைகேடுகளை கட்டுப்படுத்த தமிழகம் இந்த சட்டத்தை கொண்டு வந்தது. ஏனெனில் 2000 ஆண்டிலிருந்து 2008-ஆம் ஆண்டு வரையிலும் உடல் உறுப்பு தானத்தில் மோசடிகள் பெரியளவில் பெருகி இருந்ததால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்கள், மாற்று உடல் உறுப்புகள் பெறுவதற்கு என்று ஒரு பட்டியல் அரசால் பராமரிக்கப் படுகிறது. இதில் உடல் உறுப்பு தேவைப்படுபவர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போது தான் அவர்கள் உடல் உறுப்புகளை பெற முடியும். பணக்காரர்கள் தாங்கள் நினைத்த நேரத்தில் உடல் உறுப்புகளை பெறுவதை தடுப்பதற்கும், குறிப்பாக ஏழை மக்கள் இதில்பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. இது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் பொருந்தும். கடந்த 2008-ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் தமிழகத்தில் 1198 இறந்தவர்களிடம் இருந்து அவர்களது 6,886 உடல் உறுப்புகள் மற்றவர்களுக்கு பொறுத்தப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்திலும் இதில் முறை கேடுகள் தலை தூக்கத் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் 2017-ஆம் ஆண்டில் மட்டும் இதய மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்களில் 25 சதவிகதத்தினர் வெளிநாட்டை சேர்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்களில் 33 சதவிகிதத்தினர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் மனித உடல் உறுப்பு தானம் தொடங்கியது. இதில் பல பரிசோதனைகளை வெளிநாட்டு மருத்துவர்கள் செய்யத் தொடங்கினர். உடல் உறுப்பு தானத்தில் பல பரிசோதனைகளை வெற்றிகரமாக செய்ததற்காகவே, பிரான்ஸை சேர்ந்த டாக்டர் அலெக்சிஸ் காரெல் என்பவருக்கு 1912 -ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. உடல் உறுப்பு தானம் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் பல வழிகாட்டு நெறிகளை உருவாக்கியிருக்கிறது. அதில்,
- சம்மந்தப்பட்டவரின் உடல் உறுப்புகள் அந்தந்த நாட்டு சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு எடுக்கப்படவேண்டும்.
- உடல் உறுப்புகளை எடுப்பதற்காகவே பாதிக்ப்பட்டவரின் மரணம் நிகழவில்லை என்று தேர்ச்சி பெற்ற ஒரு மருத்துவர் சான்றிதழ் தர வேண்டும்.
- பணத்திற்காக உடல் உறுப்புகள் எடுக்கப்படவில்லை மற்றும் பெறப்படவில்லை என்று தகுந்த சான்றிதழ் அந்தந்த நாட்டில் இயங்கும், இதற்கான, பிரத்தியேகமான அமைப்புகளிடம் இருந்து பெறப்பட வேண்டும்.
- வயது வராத மைனர்களின் உடல் உறுப்புகள் எந்த காரணத்தை கொண்டும் உறுப்பு தானத்துக்காக எடுக்கப்படக் கூடாது.
- இறந்தவர்களின் உடல் உறுப்புகள் மற்றவர்களுக்கு பொருத்தப்படும் போது, அதன் பயனாளிகள் முழுக்கவும், மருத்துவ தேவைகளின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப் பட வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் பணத்தின் அடிப்படையிலோ அல்லது வேறு காரணங்களின் அடிப்படையிலோ பயனாளிகள் தேர்ந்தெடுக்கப் படக்கூடாது, என்கிற முக்கியமான வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கின்றன.
தமிழகத்தில் தான் மிகச் சிறந்த அரசு மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் இருக்கின்றன. அநேகமாக தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களின் அரசு தலைமை மருத்துவமனைகளிலும் இன்று உடல் உறுப்பு மாற்று சிகிச்சைகளை செய்ய முடியும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த முன்னேற்றம் இல்லை. உடல் உறுப்பு தான விழிப்புணர்வும் பரந்து பட்ட அளவில் இன்று அனைத்து தரப்பு மக்களிடமும் காணப்படுகிறது. சாலை விபத்துகளும், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமாக நடப்பதாக சொல்கிறார்கள். அதுவும், அது ஒரு எதிர்வினை நிகழ்வாக இருந்தாலும் உடல் உறுப்பு தானம் இந்தியாவிலேயே அதிகமாக நிகழும் மாநிலமாக தமிழகத்தை இன்று நிலை நிறுத்தியிருக்கிறது. பள்ளிகளிலும் கூட இன்று உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது .
உடல் உறுப்பு தானத்தில் இன்று உலகில் முதல் இடத்தில் இருப்பது ஸ்பெயின் நாடு. ஸ்பெயினில் பத்து லட்சம் பேருக்கு 39.7 பேர் ஆண்டு தோறும் உடல் உறுப்பு தானம் செய்கின்றனர். அங்கு இருக்கும் நிலைமை வித்தியாசமானது. ஒருவர் சாலை விபத்தில் இறந்து போகிறார் என்றால், மருத்துவமனையிலேயே தானாகவே அங்கேயே அவரது உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு தேவைப்படுபவர்களுக்கு பொறுத்தப்பட்டு விடுகின்றன. ஒருவர் தான் இறந்த பிறகு தன்னுடைய உடல் உறுப்புகளை என்ன செய்வது என்று ஏதும் எழுத்து பூர்வமாக தெரிவிக்காமல் இறந்து விட்டால், அதனது பொருள் அவர் உடல் உறுப்பு தானத்திற்கு எதிர்ப்பு தெரிக்கவில்லை என்று பொருள். ஆனாலும் சம்மந்தப்பட்டவர் உறுப்பு தானம் பற்றி ஏதும் சொல்லாமல் இறந்து போயிருந்தாலும் கூட அவரது உறவினர்களிடம் கருத்து கேட்கப்படும். அவர்கள் தாங்கள் அந்த உறுப்பு தானத்திற்கு சம்மதிக்க மாட்டோம் என்று கூறினால், இறந்தவரின் உடல் உறுப்புகள் எடுக்கப்பட மாட்டாது. என்னுடைய உடல் உறுப்புகள் யாருக்கும் பொறுத்தப்படக்கூடாது என்று சம்மந்தப்பட்ட நபர் சட்ட ரீதியாக தெரிவித்திருந்தால் அவரது உடல் உறுப்புகள் அவரது இறப்புக்குப் பின் எடுக்கப்படாது என ஸ்பெயினில் இயற்றப்பட்ட சட்டம் சொல்கிறது. 2015-ஆம் ஆண்டின் புள்ளி விவரம் இது. தற்போது வரையில் இதில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. இந்தியாவில் தற்போது உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை பத்து லட்சம் பேரில் 0.34 பேராக தான் இருக்கிறது.
0 Comments