Tamil Sanjikai

தமிழ்ச் சமூக வரலாறு மாற்றி எழுதப் பட வேண்டும்

அனைத்து மக்களும், அவர்களுக்கான உரிமையைப் பெற்று வாழவேண்டும் என நினைத்தவர் பெரியார். அவர் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக தான் போராடினார் எங்களுக்காக போராட வில்லை என்று தலித்திய அமைப்புகள் சரியான புரிதல் இல்லாமல் குற்றச்சாட்டுகளை வைத்து வந்தன. இந்த பிரச்சாரத்துக்கு எதிராக பெரியாரிய அமைப்புகள் சிறுசிறு பிரசுரங்களை வெளியிட்டு வந்தன. ஆனால் இவை அனைத்துக்கும் பதில் சொல்லும் விதமாக ஒரு முழுமையான தொகுப்பு வரவில்லை. அதனை ப.திருமாவேலன்'ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?' என்கிற நூலாக கொண்டு வந்திருக்கிறார். கடந்த 15 ஆண்டுகளாகப் பெரியாரின்மீது தலித்திய ஆய்வாளர்களும், சிந்தனையாளர்களும் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக இந்த நூல் அமைந்திருக்கிறது. இவர்கள் சொன்னக் கருத்துகளை மறுத்து உண்மையைத் தக்க ஆதாரங்களோடு மறுத்துப் பேசியிருக்கிறார் திருமாவேலன். இதற்காக அவர் கடந்த 10 ஆண்டுகளாக உழைத்ததாக தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். குடிஅரசு, விடுதலை, திராவிடன் போன்ற பத்திரிகைகளில் வந்த செய்திகள் மற்றும் பல்வேறு எழுத்தாளர்களின் புத்தகங்களை மேற்கோள் காட்டி, பெரியாரை விமர்சித்தவர்களின் கருத்துகளை உடைக்கிறார். பெரியார் மீது நூற்றுக்கணக்கான விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் தலித்தியச் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் முன்வைத்த 90 குற்றச்சாட்டுக்கு மட்டுமே இந்நூல் பதில் தருகிறது.

தலித்துக்களுக்காகப் பேசியதில், போராடியதில் அம்பேத்காருக்கும் ,முன்னோடி எம்.சி. ராஜா தான். அயோத்திதாசரின் புகழைப் பெரியார் மறைக்கவில்லை. எம்.சி. ராஜா பற்றியும் அயோத்திதாசர் பற்றியும் இரட்டைமலை சீனிவாசன் பற்றியும், எல்.சி.குருசாமி பற்றியும் பெரியார் குடிஅரசு பத்திரிக்கையில் எழுதியிருப்பதையும், இவர்களின் கருத்துகளை ஆதரித்ததையும், எம்.சி. ராஜாவின் சில கருத்துகளை எதிர்த்திருப்பதைப் பற்றியும் தகுந்த ஆதாரங்களோடு நூலாசிரியர் நிறுவுகிறார். தலித்திய சிந்தனையாளர்கள், ஆய்வாளர்களின் கட்டுரைகளிலும் புத்தகங்களிலும் எம்.சி. ராஜா வாழ்வதைவிட குடிஅரசு பத்திரிகையில் தான் அதிகம் வாழ்கிறார் எனப் பெருமையாக எழுதியிருக்கிறார் திருமாவேலன். தமிழகத்தில் தலித் அரசியல் எப்போது உருவானது, எப்படி உருவானது என்பதை சுவாரசியமாகச் சொல்கிறார். பண்டிதமணி ஜி. அப்பாத்துரையார் அவர்கள் 'இருபதாம் நூற்றாண்டின் புத்தர்தான் பெரியார்' என்று கூறியிருக்கும் அரிய தகவலை இந்தநூல் மூலம் அறிய முடிகிறது. பெரியார் தான் அம்பேத்கார் போராட தூண்டுதலாக இருந்திருப்பது போன்ற மறைக்கப்பட்ட தகவல்கள் இந்த நூலின் மூலம் வெளிச்சத்துக்கு வருகிறது. அம்பேத்காருக்கும் பெரியாருக்குமான நட்பு இன்றைய தலைமுறையினர் தெரிந்துக் கொள்ள வேண்டிய விசயம். வெறும் வைக்கத்தில் மட்டுமே பெரியார் தீண்டாமைக்கு எதிராக நிற்கவில்லை. அதன்பின் அவர் எங்கெங்கு, என்னென்ன போராட்டங்களில், மாநாடுகளில், பொதுக்கூட்டங்களில் பெரியார் பங்கெடுத்திருக்கிறார் என்பது பற்றிய தகவல்களைப் புள்ளி விவரங்களோடு நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார்.

கீழ்வெண்மணி சம்பவம் நடந்தபோதுபெரியார் என்ன செய்தார்? திமுக ஆட்சிக்கு வந்ததும் அண்ணாவை ஆதரித்த பெரியார் அதே அண்ணாவையும் கருணாநிதியையும் விமர்சித்திருக்கிறார். முதுகுளத்தூர் கலவரத்தைப் பெரியார் எப்படி அணுகினார்? அது குறித்து பெரியார் எப்படி எழுதியிருக்கிறார் என்பது இந்த நூலை வாசித்தால் புரியும். மொத்தமுள்ள 16 கட்டுரைகளில், கடைசி கட்டுரையான 'யாருக்கான பெரியார்?' கட்டுரையில் பெரியார் யார்! அவர் யார் பக்கம் நின்றார் என்பது வாசிக்கும் வாசகனுக்குப் புரியும். அம்பேத்கரியம், தலித்தியம், பெரியாரியம் பேசுபவர்களுக்கு இந்த நூல் பேருதவியாக இருக்கும். முனைவர் பட்டப் படிப்பு ஆய்வேடு போல திருமாவேலன் இந்த நூலை உருவாக்கி இருக்கிறார்.இந்த நூலின் ஆய்வில் இருந்து இன்னொருவர் தொடரலாம். திருமாவேலனின் இந்த நூலை முன்வைத்து தமிழ்ச் சமூக வரலாற்றை மாற்றி எழுதும் சூழலுக்கு ஆய்வாளர்கள் நகர்த்தப்படலாம். ப.திருமாவேலனின் முந்தைய நூல்களைப் போல இந்த நூலை சுவாரசியமாக வாசித்து விட்டுச் செல்ல முடியாது. இது ஆய்வு நூல்! மறுப்பு நூல்.

-த.ராம்


 

0 Comments

Write A Comment