Tamil Sanjikai

அருள்மிகு துவாரகை கிருஷ்ணன் கோவில், நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் அருகில் அமைந்துள்ளது. இதன் எதிரே குமரி மாவட்டத்தின் நீராதாரமான பழையாறு ஓடுகிறது. இந்தக் கோவில் பழமையானதும், பாரம்பரியமானதுமாகும். பல ஆண்டுகளாக பராமரிக்காமல் இருந்த இந்த கோவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இங்கு கருவறை, அர்த்த மண்டபம், அந்தராளம், முக மண்டபம், சுற்றாரை மண்டபம், சுற்றிப் பெரிய மதில்கள் என அமைந்தது.இக்கோவில் கருவறை சிறியது. மூலவர் கிருஷ்ணன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

பரிவாரத் தெய்வங்களாக இருக்கும் சாஸ்தாவும், விநாயகரும் பின்னால் வைக்கப்பட்டவை. இக்கோவிலில் நான்கு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் வழியாக இந்த கோவில் பழமையானது என தெரிகிறது. கி.பி.13-ம் நூற்றாண்டின் கல்வெட்டுகள் கோவிலின் அர்த்த மண்டபம் உண்ணாழிச் சுவரில் காணப்படுவதால் இன்றுள்ள கருவறைப் பகுதி வேணாட்டு அரசர்கள் கட்டியிருக்கலாம் என்று தெரிகிறது. கோவில் விமானம் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. விது நாகரம் மற்றும் சுதையால் ஆனது. கோவிலின் ஆகமம் சிவாச்சாரிய மரபில் இருக்கிறது.

கோவிலில் காணப்படும் 1208-ம் ஆண்டு கல்வெட்டுகளில் துவாரகை என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. மூலவர் ஆழ்வார் அல்லது எம் பெருமான் எனப்படுகிறார். வடதிருவிதாங்கூரைச் சேர்ந்த வேதங்களில் புலமை பெற்ற ஸ்ரீ கோவிந்த ப்ரஞபடரர் ஸ்ரீ கான கிராமபகவான் என்ற ஞானி இக்கோவிலில் இருந்துள்ளார். இவரிடம் சில மாணவர்கள் வேதம் கற்றுள்ளார்கள். இவர்கள் கோவில் அருகே இருந்த விடுதியில் தங்கி படித்து இருந்துள்ளனர். இவர்களின் மூன்று நேரச் சாப்பாட்டுக்கான செலவைச் சுசீந்திரம் கோவில் மகா சபை கவனித்துக் கொண்டது. துவாரகை கோவில் சுசீந்திரம் தாணுமாலையன் கோவிலுக்கு அடங்கியே இருந்து உள்ளது. கோவிந்தப் ப்ரஞபடரர் முன்னிலையில் சுசீந்திரம் தாணுமாலையன் கோவில் மகா சபை கூடியிருப்பதை 1230-ம் ஆண்டு கல்வெட்டு தெரிவிக்கிறது.

வேதம் கற்பித்த சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோவில்

இந்த கூட்டத்தில் ஸ்ரீ படரர் ஆளுகையின் கீழ் துவாரகை கோவிலின் முழுபொறுப்பை விட்டுக் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது என்றும் தெரிகிறது. மேலும் திருவனந்தபுரம் பத்மநாபபுரம் கோவில் ஸ்ரீ காரியம் பெரிய படரர் சிபாரிசு செய்யும் நபரை துவாரகை கோவிலின் மேல் சாந்தியாக நியமிக்க வேண்டும் என்றும், இதற்குறிய செலவை சுசீந்திரம் கோவில் மேல் மகா சபை கொடுக்க வேண்டும் என்ற செய்திகளையும் கல்வெட்டு தெரிவிக்கிறது. துவாரகை கோவிலின் 1224-ம் ஆண்டு ஆண்டு கல்வெட்டு கோவிலுக்குக் கொடுக்கப்பட்ட விளக்கு நிபந்தத்தையும், இந்தக்கல்வெட்டானது 1228-ம் ஆண்டு கோவிலுக்குச் சொந்தமாக இரண்டு குளங்கள் இருந்ததைக் கூறுகிறது.

பண்டைய காலத்தில் தற்போதைய குமரிமாவட்டப் பகுதிகளில் இருக்கும் பார்த்திபசேகரபுரம், கோதை நல்லூர், கன்னியாகுமரி போன்று மாணவர்களுக்கு வேதம் கற்பித்த மையமாக துவாரகை கிருஷ்ணன் கோவில் இருந்துள்ளது. இந்த பெரும் பின்னணியைக் கொண்ட கோவில் ஊர்மக்களின் முயற்சியால் சிறப்பாக செயல் படுகிறது. தினமும் பூஜையும், அபிஷேகமுமாக துவாரகை கிருஷ்ணன் கோவில் காட்சி தருகிறது. கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெறுகிறது. புரட்டாசி மாத சனிக்கிழமை விஷேசமான நாள் ஆகும். அன்று துவாரகை கிருஷ்ணனை வழிபட்டால் வேண்டியது நிறைவேறும் என்பது நம்பிக்கை. சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் மும்மூர்த்திகளை தரிசித்து விட்டு கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் கிழக்கு பார்த்து இருக்கும் துவாரகை கிருஷ்ணனை தரிசிக்க பக்தர்கள் நிறைய பேர் தினமும் வருகிறார்கள்.

-த.ராம்

0 Comments

Write A Comment