Tamil Sanjikai

தமிழுக்கு தொண்டு செய்த ச.வே.சுப்பிரமணியன்

தமிழகத்தில் முக்கியமான ஆறுகளான காவிரிக்கும் தாமிரபரணிக்கும் தமிழ் கலாச்சாரங்களோடு நெருங்கிய தொடர்பு உண்டு .காவிரி கரையில் எப்படி இசையும், நடனமும் வளர்ந்ததோ, தாமிரபரணி கரையில் தமிழும், தேசியமும் வளர்ந்தது. அப்படி தாமிரபரணி கரையில் கிடைத்த சோம சுந்தரநாவலர், கா.சு.பிள்ளை, ரா.பி.சேதுபிள்ளை, தேவநேயபாவண்ணர், ஆப்ரகாம் பண்டிதர், திருக்கூட சுந்தரம்பிள்ளை, வ.உ.சி, வையாபுரி பிள்ளை போன்ற தமிழறிஞர் வரிசையில் தமிழுக்கு கிடைத்த சொத்து ச.வே.சு.என்று அழைக்கப்படும் தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன்.

திருநெல்வேலி மாவட்டம் வீரகேரளம்புதூரில் 1929 டிசம்பர் 31-ம் தேதி, சு.சண்முக வேலாயுதம், ராமலட்சுமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் ச.வே.சுப்பிரமணியன். தொடக்கக் கல்வியை விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள திருஇருதய பள்ளியில் படித்தார். உயர்நிலைப் பள்ளிக்கல்வியை அம்பாசமுத்திரம் தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர், இடைநிலைக் கல்வியை ம.தி.தா இந்துக் கல்லூரியில் படித்த அவர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் படித்தார். முனைவர் பட்டத்தை கேரள பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு முடித்தார்.

ச.வே.சு.வின் தந்தை கம்பராமாயணத்திலும், இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். மற்ற தமிழறிஞர்களுக்கும் ச.வே.சு.வுக்கும் என்ன வித்தியாசம் என்றால் ச.வே.சு. இலக்கணம், சைவ இலக்கியம், வைஷ்ணவ இலக்கியம், நாட்டுபுறவியல் என அனைத்து துறைகளிலும் தடம்பதித்தவர்.

ச.வே.சு., தமிழ்ச் சித்தர்கள் போன்று, தன்னுடைய இல்லத்திலேயே ஒரு கல்லறையை உருவாக்கி, அதனருகே தமிழன்னை சிலையை வைத்தவர். சிலப்பதிகாரத்தில் மொழியியல் பார்வை என்று தனது முனைவர் பட்ட ஆய்வேடை சமர்பித்தவர். நன்னூல் தொல்காப்பியத்தை ஒப்பிட்டு விரிவான ஆய்வு செய்தவர். ஆங்கிலம், மலையாளம் உட்பட மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். தொல்காப்பியத்தில் முழுமையாக ஊறித் திளைத்தவர். அது தொடர்பாகப் பல நூல்கள் எழுதியவர். பல அறிஞர் பெருமக்கள் முனைவர் பட்டம் பெற வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்.

கேரளாவில் ச.வே.சு. நல்ல பேராசிரியர் .எம்.ஏ.க்கு ஆய்வேடாக மாணவர்களை ஏடுகளை பதிப்பித்து புத்தகமாக போட சொன்னவர். அப்போது ஆண்டு தோறும் பல ஏடுகள் பதிப்பிக்கபட்டுள்ளன.ச.வே.சு.வின் பணி அளவிட முடியாதது. தனது நண்பர்களையும் மாணவர்களையும் காணும் போது எப்போதுமே எந்த நூலைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? , என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்பதையே வழக்கமாகக் கொண்டவர். நமது வயது ஆண்டு தோறும் ஒவ்வொன்று அதிகமாவது போன்று நாமும் ஆண்டு தோறும் ஒரு நூலைப் படைக்க வேண்டும் என்ற கொள்கையோடு வாழ்ந்தவர்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்று,தென்காசி ஆலங்குளம் சாலையில், ‘தமிழூர்’ என்ற ஊரை உருவாக்கி, காலமெல்லாம் தமிழுக்கு அரும்பணி ஆற்றிக்கொண்டு இருந்தவர் ச.வே.சு.தனது இறுதி மூச்சு வரை ‘உலகத் தமிழ்க் கல்வி இயக்கம்’ என்ற அமைப்பை, நடத்திக் கொண்டு இருந்தார்.

ஆண்டு தோறும் தனது பிறந்த நாளான டிசம்பர் 31-ம் தேதி நெருங்கி வரும் சனி, ஞாயிறுகளில் தமிழூரில் கருத்து அரங்குகள் நடத்தி, தமிழ் விருந்தும் அறுசுவை விருந்தும் அனைவருக்கும் பரிமாறியவர் ச.வே.சு.

தமிழ் ஆய்வு நூல்களை தம்முடைய கருத்து அரங்குக்கு அனுப்பச் செய்து இலவசமாகப் பதிப்பித்துக் கொடுத்தவர். கடைசியாக பாரதி முதல் தற்காலக் கவிஞர்கள் வரை என்கின்ற தலைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களைப் பற்றிய ஆய்வு நூலைத் தம் பிறந்த நாள் பரிசாக இலவசமாக வழங்கியவர். இளம் தமிழ் ஆர்வலர்கள் வளர்வதற்கு அளப்பரிய ஊக்கம் அளித்து வந்தவர். மொழியியல், நாட்டுபுறவியல், விடுகதைகளை ஆய்வு செய்தவர் இவர் தொகுத்த விடுகதைகளை காப்பியடித்து பல புத்தகங்களும் வந்துள்ளன. தனது ஆய்வு பட்டத்திற்காக சிலப்பதிகாரத்தை எடுத்தார். சங்க இலக்கியங்களை பதிப்பித்தார். உலக தமிழாராய்ச்சி மூலமாக கருத்தரங்கு வைத்து அதின் மூலம் உருவானது இலக்கிய கொள்கை நூல் பல பாகங்களை கொண்டது. திராவிட ஒப்பியல் இலக்கியம் முக்கியமான நூல். இவரது மாணவர்களில் முக்கியமானவர்கள் முன்னாள் பல்கலைகழக துணை வேந்தர் க.பா.அறவாணன், இளவரசு, போன்றவர்கள்.

தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரியில் 1953-ல் பணியைத் தொடங்கிய அவர், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி, திருவனந்தபுரம் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத்தலைவராகவும் பணியாற்றியவர். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநராகவும் செயல்பட்டவர். நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 1969-ல் திருவள்ளுவர் கல்லூரி உருவாக்க காரணமாக இருந்தவர்.

தமிழகத்தில் பல கருத்தரங்குகளில் இலங்கை, ஜெர்மனி, போலந்து, ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கும் சென்று ஆய்வுக் கட்டுரைகளையும் சிறப்பு சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி உள்ளார். இவரது நூல்கள் பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் கல்லூரி மாணவர்களுக்கு பாடநூலாக உள்ளது.

இவரது வீட்டில் பல அரிய நூல்கள் இருந்ததால் எப்போதும் அங்கு மாணவர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களால் நிறைந்து இருக்கும். இவர், செந்தமிழ்ச் செம்மல், நல் அறிஞர், தமிழாசுரர், தமிழ் இயக்கச் செம்மல், தொல்காப்பியச் செம்மல் என பல பட்டங்களையும் விருதுகளையும் பெற்றவர். 1999-ல் சாகித்ய அகாடமி சார்பாக இவருக்கு ‘பாஷாசம்மன்” என்ற உயரிய விருது வழங்கப்பட்டது. தமிழ் மொழிக்காக பங்காற்றியதைக் கௌவுரவிக்கிற வகையில் இந்த விருது சாகித்ய அகாடமியால் வழங்கப்பட்டது.

அநேகமாக தமிழகத்தில் அவரது காலடித் தடம் பதியாத பல்கலைக் கழகங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து பல்கலைக் கழகங்களிலும் அறக்கட்டளைச் சொற்பொழிவை நிகழ்த்தி உள்ளார். இவரது ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கை இருநூற்றைத் தாண்டும். இவரிடம் ஆலோசனை பெற்று முனைவர் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை 50-க்கும் அதிகம். அவர்களுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கி கொடுத்தார். ச.வே.சு.,பழம் தமிழ் இலக்கியவாதியாக இருந்தாலும் தற்கால இலக்கியங்களின் மீது எந்த வெறுப்பும் இல்லாதவர். தனது கடைசி ஆசையாக சிற்றிலக்கிய களஞ்சியத்தை 50 தொகுதியாக கொண்டு வர வேண்டும் என ஆசைப்பட்டு, அதில் 7 தொகுதிகளை கொண்டு வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி தமிழூரில் சாலையக் கடக்கும் போது இருசக்கர வாகனம் மோதி ,மருத்துவமனையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் ஜனவரி 12-ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

‘தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவது இல்லை’ என்பது பாவேந்தர் கூற்று. அது போல தமிழ் வாழும் வரை தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியனின் புகழும் மறைவதில்லை.

த.ராம்

0 Comments

Write A Comment