Tamil Sanjikai

‘தலைவன பரியாசம் பண்ணியே கொன்னுப்புடுவானுவ போலுக்கே’ என்றவாறே தனது துக்க உரையைத் துவங்கிய அந்த தீவிரமான ரஜினி ரசிகரைப் பார்த்தபோது பரிதாபமாக இருந்தது. உண்மையில் ரஜினிகாந்த் தான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பரிதாபத்திற்குரிய ஜீவன் என்று எண்ணத் தோன்றுகிறது.

பேருந்து நடத்துநராய் இருந்து 1975 ஆம் ஆண்டு திரைத்துறையில் நுழைந்து அறிமுகமாகி, ஆரம்ப காலத்தில் வில்லன் வேடமெல்லாம் தரித்து பின்பு மிகப்பெரிய கதாநாயகனாய் உருவெடுத்து, சுமார் நான்கு தசாப்தங்களைத் தன்வசம் வைத்திருந்த ஒரு அசாத்தியமான நிழல் கதாநாயகனை இந்த அரசியலாளர்கள் நிஜத்தில் கோமாளியாக்கி நகைப்புக்குரிய ஒரு பிம்பமாய் மாற்றி வைத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. பிரபல்யத்துக்கும், செல்வாக்குக்கும், பணத்துக்கும், சொத்து வஸ்துக்களுக்கும் எந்தக் குறையுமில்லாத ஒரு மனிதர் அரசியலுக்கு வந்துதான் சம்பாதித்து ஜீவனம் நடத்த வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் அவருக்குத் தற்போது இல்லை.

தன்னுடைய வாழ்வில் எந்த சர்ச்சைக்கும் இடம் கொடுக்காத ரஜினி தன்னுடைய மகள் எடுத்த ‘கோச்சடையான்’ திரைப்படம் நஷ்டத்தைச் சந்தித்த போதும், தன்னுடைய படமான ‘லிங்கா’ தோல்வியடைந்த போதும் தயாரிப்பாளர்களின் தரப்பில் சாதகமாக நிற்காததாக அவர்மீது எழுந்த புகாரும், தன்னுடைய மனைவி நடத்தும் பள்ளிக்குத் தரைவாடகை கொடுக்க முடியாமல் ரஜினிகாந்த் கஷ்டவாழ்வு நடத்துவதாகவும் சமூக வலைத்தளங்களில் அவர் மீது தொடுக்கப்பட்ட எள்ளல் போரும் அவரை நிச்சயம் சஞ்சலத்துக்குள்ளாக்கியிருக்கும். ‘தன்னை இத்தனை அதிகமாக நேசித்த மக்களிடம் இப்படி ஒரு அவப்பெயர் ஏற்பட்டு விட்டதே’ என்ற கலக்கம் எந்தவொரு பிரபலத்தையும் விட்டுவைக்காது என்பது உண்மை.

அதைத் தொடர்ந்து அவர் தன்னுடைய ஒவ்வொரு படங்களின் வெளியீட்டின் போதும் மக்களை ஏமாற்றுவதற்காகவே ‘’தான் அரசியலுக்கு வந்து தமிழ்நாட்டைக் காப்பாற்றுவேன்’’ என்று பொய் பேசிவிட்டு ஓடிவிடுவதாகவும், ‘’அவர் அரசியலுக்கு வருவேன் என்று சொல்வது தன்னுடைய படத்தின் பிரமோஷனுக்காகத்தான்’’ என்று தற்போதுள்ள ரஜினியின் ரசிகர்களே நம்பத் துவங்கியுள்ளதாக வரும் தகவல்கள் ரஜினியின் பிம்பத்துக்கு முற்றிலும் எதிரானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

“ஒரு கருத்து என்பது எந்தக்காலத்திலும் நிரந்தரமாக இருந்து விடமுடியாது, கருத்துக்கள் நாளுக்குநாள் மாறிக் கொண்டேயிருப்பவை. அப்படி நிரந்தரமாக இருக்கும் ஒரு கருத்து என்பது கருத்தே கிடையாது” என்னும்பட்சத்தில் ரஜினியின் கருத்து மாற்றங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான்.

1996 ஆம் ஆண்டு ரஜினி முன்வைத்த கருத்து ஜெயலலிதாவுக்கு எதிராக இருந்த பட்சத்தில் ஜெயலலிதாவின் கோபத்துக்காளாகி ரஜினிக்கு பல்வேறு இன்னல்கள் வந்து சேர்ந்தன. அந்தக் காலகட்டத்தில் ஜெயலலிதாவும் கூட மக்கள் விரோதப் போக்கைக் கடைபிடித்தார் என்பதால் ரஜினியின் கருத்தானது மக்களுக்கு ஆதரவாகவும், ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும், அன்று ஜெயலலிதாவின் ரஜினி மீதான வன்மத்தைக் கடிந்து கொள்வதாகவும் அமைந்து போயின. ஆனாலும் இன்று போல அன்றைக்கு சமூக ஊடகங்கள் இருந்திருந்தால் ஜெயலலிதாவுக்கு மக்கள் மத்தியில் நெருக்கடி ஏற்பட்டிருக்கலாம்.

அன்றைக்கு ரஜினியின் கருத்தின் மீதும், ஜெயலலிதாவின் போக்கின் மீதும் மக்களின் நம்பிக்கை வலுவாக இருந்த பட்சத்தில் ரஜினியின் வார்த்தைகள் மக்களால் ஏற்கப்பட்டுவிட்டது. ஆனாலும் ‘’பிரவேசிக்க தயங்கிய ரஜினியின் அரசியல் பிரவேசம்’’ ஒரு மிகப்பெரிய ஏமாற்றத்தை மக்களுக்கு அளித்தது என்றுதான் சொல்ல வேண்டும். போகாத ஊருக்கு வழிகேட்பது தேவையில்லாத ஒன்றுதான் என்பதை ரஜினியும் அறிந்திருக்கலாம்.

ரஜினி ஏன் தமிழக அரசியலுக்கு வர வேண்டும்? அதன் தேவை என்ன? ரஜினிக்கு மாற்று என்று யாரும் இங்கில்லையா ? என்று எதிர்க்கட்சிகளும், அரசியல் நோக்கர்களும், பொதுமக்களும், இனம் மற்றும் மொழி மீதான அரசியலைச் செய்து கொண்டிருந்தவர்கள் கேள்வியெழுப்பவே, அதற்கு ரஜினியின் ரசிகர்கள் என்று சொல்லிக் கொண்டவர்களின் ஒற்றைப் பதில் “சினிமாவையே கலக்கும் எங்கள் தலைவனால் தமிழகத்தை ஆள முடியாதா” என்று இருந்ததால் ரஜினியின் அரசியல் வரவு மீதான எதிர்பார்ப்பு ஒரு முடியாத திகில்படம் போலவும், வளைந்தும், நெளிந்தும் செல்லும் ஒரு மலைப்பாதையினைப் போல பயணித்துக் கொண்டேயிருந்தது எனலாம்.

2002 ஆம் ஆண்டு வாக்கில் வெளிவந்த 'பாபா' படம்தான் ரஜினியின் கடைசி படம் என்றார்கள். படத்தின் கதையும் ரஜினியின் தோற்றமும் ரசிகர்களுக்கு ஏற்றுக் கொள்ளத் தக்கதாய் இல்லையாதலால் படமும் சரியாகப் போகவில்லை. அந்த சமயத்தில் இளம்நடிகர்கள் பலர் திரைத்துறையில் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ரஜினியின் பாடு பெரும்பாடுதான் என்று எண்ணிக்கொண்டிருந்த போது 2004 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த செல்வி.ஜெயலலிதாவை ‘தைரியலட்சுமி’ என்று புகழ்ந்தார் ரஜினிகாந்த். 2006 ஆம் ஆண்டு சந்திரமுகி வெளியாகி ரஜினிக்கு மிகப்பெரிய ஏறுமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இதே மாதிரியான ஒரு சிக்கலில் கமலும் மாட்டினார். ‘வேஷ்டி கட்டிய தமிழன்தான் தமிழகத்தை ஆள வேண்டும்’ என்ற கருத்தை முன்வைத்த கமலின் அத்தனை முயற்சிகளும் விஸ்வரூபமெடுத்து பின்வைத்தன. அதிரடியான ஜெயலலிதாவின் மறைமுகத் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் ‘நான் நாட்டை விட்டு வெளியேறுகிறேன் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்’ கமலஹாசன். இப்போது ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனின் இந்தக் கருத்துகளுக்கெல்லாம் ஜெயலலிதா ஏன் இத்தனை காட்டமான எதிர்வினைகளை ஆற்றினார் என்றால் அதற்கு ஜெயலலிதாவின் ஆணாதிக்கத்தின் மீதான கடுமையான கோபம்தான் காரணம் என்றெல்லாம் சொல்லிப் புரிய வைக்க வேண்டியதில்லை.

அதற்கு ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம், அரசியலில் வெற்றி, அதற்கு ஜெயலலிதா கொடுத்த விலை என்று சொல்லிக்கொண்டு போனால் ஜெயலலிதாவின் பிம்பம் அசுர வடிவத்தில் பெரிதாகிக் கொண்டே போய் விடும். அத்தனை மன உரமும், தைரியமும் கொண்ட ஆளுமை மிகுந்த பெண்மணி ஜெயலலிதா என்றால் அது மிகையில்லை. எம்.ஜி.ஆர் இறந்தபோது கான்வாய் வண்டியில் இருந்து, கோணி ஊசியால் குத்தி வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டு, நடுரோட்டில் தனித்து நின்ற அந்த அவமானத்தை முதலீடாக்கினார் ஜெயலலிதா. அந்தக் கோபம் அவருக்குள் கனன்று கொண்டே இருந்திருக்க வேண்டும்.

அன்றைய நாளிலிருந்து அவரது உழைப்புகள் அனைத்தையும் கூர்ந்து பார்த்தால் மட்டுமே அவரது கோபத்தின் அருமை சாமானியனுக்குப் புரியும். ஒரே பாடலில் பணக்காரர்களாகி விடும் விந்தை ரஜினிக்கும், கமலுக்கும் நிகழும். ஆனால் அந்த விந்தை ஜெயலலிதாவுக்கு நிகழவில்லை, நிகழாது என்பது ரஜினிக்கும், கமலுக்கும் புரியும். இப்போது ரஜினியின் மீதும், கமலின் மீதும் எழுந்த ஜெயலலிதாவின் கோபம் உங்களுக்குப் புரிந்தால் நீங்கள் சரியாகச் சிந்திக்கிறீர்கள் என்று அர்த்தம். அதிலும் நகைச்சுவை என்னவென்றால் ஜெயலலிதா இவர்கள் இருவரோடும் நேரடியாக மோதவேயில்லை. 

கடலுக்கும், வானத்துக்கும் பெயிண்ட் அடித்துப் புதுப்பிக்கும் வல்லமை பெற்ற இயக்குனர் ஷங்கர் ரஜினிக்கும் புதிய வர்ணம் அடித்து, வயதைக் குறைய வைத்து, எழுத்தாளர் சுஜாதாவின் திரைக்கதையில் பொருத்தி சிவாஜி படத்தில் ரஜினியின் ரசிகர்களுக்கு ரஜினியை இளமையாகத் தந்ததில் 2007 ஆம் ஆண்டு ரஜினி மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்தார்.

மிகுந்த உடல் உபாதைகளினிமித்தம் 2011 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் ரஜினி சிகிச்சை பெற்றபோதும் கூட அவர் இறந்துவிட்டதாக வதந்திகள் வந்தன. அதிலிருந்தும் மீண்டு ஒரு பீனிக்ஸ் பறவையைப் போல வெளிவந்தார் ரஜினி. எந்தவொரு மக்கள் பிரச்சினைக்கும் வாயைத் திறக்காத ரஜினிகாந்த் அவ்வப்போது டிவியில் தோன்றி ‘இதோ வருகிறேன்’ ‘அதோ வருகிறேன்’ என்று சொல்லிய பிற்பாடுதான் மக்களுக்கு லேசாகப் பொறி தட்டத் துவங்கியது. அப்புறமாக பத்திரிகையாளர்கள் துரத்திப் பிடித்து பேட்டி கண்டபோதெல்லாம் லேசாகத் தடுமாறத் துவங்கினார் ரஜினி. எழுவர் விடுதலை, பாலியல் வன்கொடுமைகள் குறித்தெல்லாம் கேள்விகள் கேட்டபோது ‘எனக்குத் தெரியாது’ என்று கூறி மக்களின் மத்தியில் கோபத்தை விதைக்கத் துவங்கினார்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் போது, ‘இந்தப் போராட்டம் சமூக விரோதிகளால் நடத்தப் பட்டது’ என்றுகூறி ‘தானொரு தலைவன் அல்ல ! அதற்கான தகுதி எனக்கில்லை ! என்னால் எப்போதுமே எழுதித் தரப்பட்ட திரை வசனங்களை மட்டுமே பேச முடியும்’ என்பதை நிரூபித்த ரஜினிதான் அதுவரையிலும் தமிழ்மக்கள் பார்க்காத உண்மையான ரஜினிகாந்த். ஏனென்றால் அந்தக் காலகட்டத்தில் ரஜினி நடித்து வெற்றி பெற்ற கபாலி மற்றும் காலா திரைப்படங்களில் மக்களுக்காகப் போராடும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரஜினி திரையில் பேசிய வசனங்களுக்கும், நிஜத்தில் பேசிய வசனத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லாத அந்த நிலைவேறு மக்களுக்கு ரஜினி மீதான நிலைப்பாட்டை சீர்பிரித்து பார்க்க ஏதுவானதாக அமைந்திருந்தது.

காவிரிப் போராட்டத்தின் போது அதில் கலந்து கொண்ட ரஜினி, மற்ற நடிகர்களெல்லாம் கர்நாடகாவையும், அதன் ஆட்சியாளர்களையும் ஆசைதீரத் திட்டிக் கொண்டிந்தபோது ரஜினி தவித்த தவிப்பையும், அந்தத் தவிப்பின் பின்னணியில் இருந்த அச்ச உணர்வையும் பார்த்த போது ரஜினியின் மீது அவரது ரசிகர்களைத் தாண்டியும் பொதுமக்களுக்கு ஒருவித பரிதாபம் எழுந்ததைச் சொல்லியாக வேண்டும்.

ஒருமனிதன் தன்னுடைய மொழி, கலாச்சாரம், புவிசார் அமைப்புகளை விட்டு இடம்பெயர்ந்து இன்னோர் நிலத்தில் வந்தமர்ந்து, தனக்கென்று ஒரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டு தனது சொந்த நிலத்திற்கும், குடிபுகுந்த இடத்திற்கும் இடையே நடக்கும் தர்க்கங்களின் மத்தியில் வாழ்வதென்பது எத்தனை துன்பகரமானது என்பது அனுபவித்தவர்களுக்கு மாத்திரம் புரியும்.

ஒன்று மாத்திரம் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை தமிழர்கள் மாத்திரம் அல்ல அறிவார்ந்த அனைவருக்கும் விளங்கிக் கொள்வார்கள். ரஜினிகாந்தை வைத்து மத்திய மாநில ஆட்சியாளர்கள் உருட்ட நினைக்கும் பகடை உருட்டுதான் அது. இப்போது ரஜினிக்கு தன்னுடைய படங்கள் ஓடினால் மட்டும் போதுமானது. ஆனாலும் அவர் அவ்வப்போது திடீர் திடீரென தொலைக்காட்சிகளில் தோன்றி, ‘இனிமேலும் தாமதித்தால் தமிழ்நாட்டின் நிலைமை மோசமாகிவிடும்!,'சிஷ்டம் சரியில்லை,' ‘இதோ வருகிறேன்’,  அடுத்த வாரம் நிர்வாகிகள் கூட்டம்’ என்றெல்லாம் சொல்லும்போது மக்களுக்கு ஒருவர் நியாபகம் வருவார். அவர்தான் அப்துல் கலாம்.

‘கனவு காணுங்கள்’ என்ற ஒற்றை வார்த்தையின் மூலமும், தனது தனிப்பட்ட வாழ்வின் மூலமும் தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் அப்துல்கலாம். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மகிமையையும், அதன் பாதுகாப்புத் தன்மை குறித்தும் எடுத்தியம்புவதற்காக அப்துல் கலாமை விளம்பரத் தூதராக நியமித்து அனுப்பியது அன்றைய காங்கிரஸ் கட்சியின் மேலிடம். அத்தோடு தமிழக மக்கள் கனவுகள் காண்பதையும், அப்துல் கலாம் குறித்து எண்ணுவதையும் நிறுத்தி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

‘பெரிய பெரிய ஆளுமைகொண்ட பிம்பங்களின் வாயிலாக தாங்கள்  சொல்ல விரும்பும் சவடால்களையெல்லாம் தமிழக மக்கள் நம்புவார்கள்’ என்று எப்போதுமே  ஒரு எண்ணம் டெல்லிக்கு உண்டு. அதைத் தொடர்ச்சியாகத் தவிடு பொடியாக்குவதில் தமிழர்களுக்கு ஒரு சந்தோஷம். அப்படியாக அப்துல்கலாம் என்றொரு மாமனிதரைத் தங்களது தவறான கணிப்புகளால் அழித்தொழித்தது காங்கிரஸ். இப்போது அந்த இடத்தில் ரஜினியை பாஜக வைத்திருப்பதுதான் ரஜினியின் மீதான பரிதாபமாக இருக்கிறது.

உண்மையாகவே தற்போதைய சூழலில் ரஜினி அரசியலுக்கு வருவதை ரஜினியே விரும்ப மாட்டார் என்றுதான் தோன்றுகிறது. அதைத் தாண்டி அவரது வயதும், உடல்நிலையும் பொதுவாழ்விற்கு ஏற்றதல்ல என்பதை அவரது மருத்துவர்களே ஒப்புக் கொள்வார்கள். ஏனென்றால் முதல்வர் வேலை என்பது கேரவேனில் அமர்ந்து கொண்டு, வசனத் தாள்களைப் புரட்டி மனப்பாடம் செய்வதல்ல.

ஒரு கிராமத்தில் உள்ள வார்டு மெம்பர் செய்ய வேண்டிய வேலை முதற்கொண்டு, செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள அத்தனை பணியாட்களும் செய்து கொண்டிருக்கும் பணிகள் வரைக்கும் விரல் நுனியில் வைத்திருக்கும் ஒரு மாயாஜாலத்தை சினிமா நடிகர்கள் கற்றுக் கொள்வதென்பது லேசான காரியமாக இருக்காது. எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் சினிமாவில் இருந்து வந்தவர்கள்தான். ஆனால் அவர்கள் சினிமாவை விட்டு விலகியும், விலகாமலும் மக்களோடு மக்களாக பொதுப்பணியாற்றிவிட்டு, அரசியல் கற்றுக் கொண்டு, மக்களின் மனதில் இடம் பிடித்து ஆட்சியைப் பிடித்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

ரஜினிகாந்துக்கு தன்னுடைய ரசிகர்களைத் தெரியும், ஆனால் அவர்களுடைய குடும்பச் சூழல் தெரியுமா ? தமிழகத்தில் அவர் நடித்த திரைப்படங்களைப் படம்பிடித்த லொக்கேஷன்களைத் தெரியும்! அங்கு வாழும் மக்களைத் தெரியுமா? ரஜினியின் அதீத புகழ் வெளிச்சத்தின் காரணமாக பொதுமக்களால் படப்பிடிப்புக்குத் தடங்கல் வருகிறது என்று சொல்லி லொக்கேஷன்கள் எல்லாம் ஒரு கட்டத்தில் பின்னி மில்லுக்கும், ராமோஜிராவ் பிலிம் சிட்டிக்கும் மாற்றப் பட்டுவிட்டது. ரஜினிக்கும் தமிழ்நாட்டின் சூழலியல் மறந்து போய்விட்டது.

கொடூரமான நோய்களுக்கும் அழுக்கான அரசு மருத்துவமனையில் படுத்துக் கிடக்கும் எளிய மனிதர்களைக் குறித்து, தலைவலிக்கும், காய்ச்சலுக்கும் கூட சிங்கப்பூர், அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளும் சினிமா பிரபலங்களுக்கு எப்படித் தெரியும்?

ரஜினி அரசியலுக்கு வருகிறாரா? இல்லை அதீத அழுத்தம் கொடுத்து அரசியலுக்குள்ளே இழுத்து வரப்படுகிறாரா? ரஜினிக்கு யார் நெருக்கடி கொடுக்கிறார்கள்? ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வருவதாக இருந்த பட்சத்தில் 23 வருட சுணக்கம் ஏன் ? ரஜினி வந்துதான் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற தேவை தமிழ்நாட்டுக்கு இருக்கிறதா? என்ற சந்தேகங்கள் ஒருசேர எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அப்படி ஒருவேளை அரசியலுக்கு வருவதுதான் ரஜினியின் விருப்பம் என்றால் அது தமிழ்மக்களை ஏமாற்றும் ஒரு விருப்பமாகவே கருதப்படும். ரஜினிக்கு உண்மையிலேயே அரசியலுக்கு வர விருப்பமில்லை என்றால் அவர் தன்னுடைய ரசிகர்களை ஏமாற்றுகிறார் என்று சொல்லலாம். ரஜினியை வைத்து யாரோ காய் நகர்த்துகிறார்கள் அல்லது பாவலா காட்டுகிறார்கள் என்றால் உண்மையில் ரஜினியின் நிலைமை சந்தேகமேயில்லாமல் பரிதாபத்துக்குரியதுதான்.

மத்தியில் மோடியாக இருந்தாலும் சரி ! மாநிலத்தில் எடப்பாடி பழனிச்சாமியாக இருந்தாலும் சரி! தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளாத வரைக்கும் மக்களின் செல்வாக்கு என்றும் உங்களுக்குக் கிடைக்கும். மதவாதிகளும், சாதியவாதிகளும், இனவாதிகளும் தமிழ்நாட்டிலும் உண்டு. ஒரே வித்தியாசம் என்னவென்றால் இவர்கள் அனைவருக்கும் பகுத்தறிவு என்ற ஒன்று இருக்கிறது. அதைவிடவும் அதிகமாக கல்வியறிவு பெற்றவர்கள் தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறார்கள்.

மாநிலங்களிலும், மத்தியிலும் மதத்தின் மீதான தீய சக்திகளை ஊக்குவிக்காமல், சமூகக் கட்டமைப்பின் மீது ஒரு அமைதியான புரிந்துணர்வை உருவாக்கி, முட்டாள்தனமான அபவாதங்களைப் பரப்பும் தங்கள் கட்சிகளின் பொறுப்பிலிருப்பவர்களைக் கண்டித்து, மக்களிடையே மீண்டும் ஒரு நல்லிணக்க ஒற்றுமை நிலவ நீங்கள் காரணமாக இருக்கும் பட்சத்தில் மோடியோ, எடப்பாடியோ அடுத்த தேர்தல்கள் குறித்து நீங்கள் அஞ்சத் தேவையில்லை.

இந்தியாவின் சிறப்பே பல்வேறு இன, மத, மொழி மற்றும் கலாச்சார அடையாளங்களைக் கொண்ட நாடு என்பதுதான். இந்திக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க நினைப்பது போலவே அவரவர்களின் மொழி அவரவர்க்கு முக்கியம். அவற்றை நீங்கள் ஊக்குவிக்காமல் இருந்தாலும் பரவாயில்லை. முடக்க நினைப்பது அபத்தமும், அழிவுப்பாதையுமாகும்.

ஏனென்றால் நடிகர்களை மட்டுமல்ல யாரை வைத்தும் இனிமேல் தமிழ்நாட்டை மயக்குவது கொஞ்சம் கடினமான யுக்தி என்பதை ஆளும் கட்சிகள் புரிந்து கொள்ளுதல் அவசியம். இன்று 'அர்ஜுனனும், கிருஷ்ணனும் போல' என்று சொன்ன ரஜினியைக் கதறி அழ வைத்துவிடாதீர்கள். அவரும் அப்துல் கலாம் போன்ற ஒரு பாவப்பட்ட மனிதராய் இருக்கக் கூடும்.

0 Comments

Write A Comment