Tamil Sanjikai

கடந்த நூற்றாண்டில் மனிதன் கண்டுபிடித்த அபாயகரமான பொருள் பிளாஸ்டிக் ஆகும். மனிதர்களின் அன்றாட வாழ்வில் நீக்கமற நிறைந்து விட்ட பிளாஸ்டிக் கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் புவிக்கும் இந்தப் புவியிலுள்ள ஜீவராசிகளுக்கும் எமனாய் மாறியதைக் கண்டுபிடித்து அதை ஒழிக்கும் நடவடிக்கைகள் பலவற்றை எடுத்தும் கூட பிளாஸ்டிக்கை முழுவதுமாக ஒழிக்க முடியாமல் உலக நாடுகள் தவித்தன. ஏனென்றால் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாய் ஏதேனும் ஒன்றைக் கொண்டு வருவது வரையில் பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது சாத்தியமில்லாமல் ஆகிப்போனது.

பிளாஸ்டிக்கின் வருகைக்கு முன்பு மக்கள் கடைகளுக்குச் செல்லும்போது தங்களது கைகளில் ஏதாவது பையோ , கூடையோ சுமந்து செல்லும் வழக்கத்தைக் கையாண்டு வந்தனர். கடைக்காரர்களும் தங்கள் கடைகளில் கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு துணியால் ஆன பைகளையே தங்கள் கடைகளின் பெயர் அச்சிட்டு வழங்கி வந்தனர்.

கடைகளில் உணவுப் பண்டங்கள் வாங்கச் செல்லும் மக்கள் தங்கள் கைகளில் தூக்குவாளிகள், பாத்திரங்கள் போன்றவைகளை திரவ உணவுக் கொள்முதலுக்காகக் கொண்டு சென்றார்கள். உணவுப் பண்டங்களைக் கூட வாழை இலைகள், தாமரை இலைகள் மற்றும் தேக்கு இலைகளில் பொதிந்து கொடுப்பதை ஹோட்டல்காரர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இந்த இலைகளை நாம் உபயோகப் படுத்தி விட்டு குப்பையில் வீசினாலும் கூட அதை ஆடுகளோ, மாடுகளோ தின்று விடும். இல்லையென்றால் மண்ணோடு மட்கிப் போய்விடும். அந்தக் கழிவுகளால் யார்க்கும் எந்த அபாயமும் இல்லாமல் இருந்தது. ஆனால் பிளாஸ்டிக்கின் பயன்பாடு வந்த பிறகு பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகள் மட்டுமல்லாமல் காட்டு விலங்குகள், ஆகாயப் பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள் துவங்கி மனிதர்கள் வரை பாதித்து ஒரு கொடும் நோயைப் போல பூதாகரமாக உருவெடுத்தது.

பிளாஸ்டிக் என்பவை செயற்கை மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்டவை. இது கிரேக்க மொழியில் “பிளாஸ்டிக்கோஸ்” என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பெட்ரோலியம் வகையைச் சார்ந்தது.

பிளாஸ்டிக் ஒழிப்பு - மாய்மாலமா? மாயாஜாலமா?

பிளாஸ்டிக் பைகளானவை எளிதில் மட்கும் தன்மை அற்றவையாகும். ஒரே ஒரு பிளாஸ்டிக் பையானது மட்குவதற்கு பல ஆண்டுகள் வரை ஆகும். நம் மண்ணின் திறன் அமைப்பிற்கும், மற்றும் மண் சத்துக்களுக்கும் பிளாஸ்டிக்கானது மிகப்பெரிய கெடுதல் புரிகின்றது. பிளாஸ்டிக் பொருட்கள் நாட்டின் சூழ்நிலைகளையும் மாசுப் படுத்துகின்றன. பிளாஸ்டிக் பைகளது உபயோகமே நமது அன்றாட வாழ்வில் கழிவுகளாய் இன்று மிகப்பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.

பிளாஸ்டிக் இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஒன்றாகத் திகழ்கிறது. இவை காய்கறி, பால், துணிக்கடைகள், மருந்துக்கடைகள், மின்னணு சாதனங்கள், மளிகை பொருட்கள், தேனீர் கடைகள், வாகனப் பொருட்கள், உணவுப் பொருட்கள் போன்ற எண்ணற்ற வடிவத்தில் உள்ளது. ஆனால் உபயோகப் படுத்தப்படும் பிளாஸ்டிக்கின் நன்மைகள் அல்லது தீமைகள் பற்றி யாரும் சிந்திப்பது இல்லை. குறைந்த விலையில் பிளாஸ்டிக் கேரிபேக்குகள் கிடைப்பதாலும், வசதியாக இருப்பதாலும் மக்கள் அவற்றை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

பிளாஸ்டிக் குப்பைகளால் பூமி வெகுவாக மாசுபட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். பிளாஸ்டிக் நிறைந்த நிலம் நிலத்தடி நீருக்கு பெரும் ஆபத்தான ஒன்றாகும். அவைகள் பூமிக்கடியில் அடைத்து மழை நீரை உறிஞ்ச மாபெரும் தடையாக இருக்கின்றன.

ஒரு பசுவானது பாலிதீன் பையைத் தின்று விட்டு அது தரும் பாலில் அந்த பாலிதீனிலுள்ள நச்சு கலந்து , அந்தப் பாலை உட்கொள்ளும் மனிதனின் உடலில் அவனையறியாமல் ஊடுருவுகிறது. கடலில் கலக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை உட்கொள்ளும் கடல்வாழ் உயிரினங்களைப் பிடித்து உண்ணும் கடல்வாழ் உணவுப் பிரியர்களின் உடலில் அந்த பிளாஸ்டிக்கின் கேடு கலக்கிறது. இம்மாதிரி அநேகம் நிகழ்வுகளால் மனிதர்கள் தங்களையறியாமலேயே பிளாஸ்டிக் நச்சுக்களை உட்கொள்கிறார்கள்.

இப்படி பிளாஸ்டிக்கின் தீமைகள் ஏராளமாயும், தாராளமாயும் இருக்க அதன் பயன்பாடும் கூட நம் வாழ்வின் தவிர்க்கவியலாத ஒன்றாய் அமைந்து போகும் தருணத்தில் நம் தமிழ்நாட்டு அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடை செய்திருக்கிறது. இது எப்படி சாத்தியம் ?

பிளாஸ்டிக் ஒழிப்பு - மாய்மாலமா? மாயாஜாலமா?

ஏனென்றால் நாம் அன்றாடம் உபயோகிக்கும் சோப்பிலிருந்து, ஷாம்பூ, பால் பாக்கெட், பிளாஸ்டிக் குவளைகள், பிஸ்கெட் பாக்கெட்டிலிருந்து பைகள் வரை எல்லாமே பாலிதீன் வகையறாவைச் சார்ந்தவை. ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்பாட்டு நேரம் வெறும் 20 நிமிடம் மட்டுமே, ஆனால் அவை மட்குவதற்கு ஆகும் காலம் அதிகம். இப்படி வெகுசொற்ப காலம் மட்டுமே நம்முடைய தேவைக்காகப் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்திவிட்டு நம்முடைய எதிர்க்கால சந்ததியினருக்கு அதன் கொடூர விளைவுகளை விட்டுச் செல்வது குறித்த அச்சம் நம் மனிதர்களுக்கு இல்லாமல் போனது ஏன் ?

பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழித்துவிட முடியுமாவென்றால் அது முடியவே முடியாது என்னும் சூழ்நிலையில் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க முடியும் என்ற நம்பிக்கையில்தான் அரசு இந்த முடிவை எடுத்திருக்கக் கூடும். வீட்டில் உபயோகப் படுத்தப் படும் பிளாஸ்டிக் நாற்காலிகள், தட்டுகள், வாளிகள், எலெக்ட்ரிக் பைப்புகள், பிளாஸ்டிக் சிந்தடிக் டேங்குகள், வயரிங், எலெக்ட்ரிக் சுவிட்சுகள், டிவி , செல்போன் என்று பிளாஸ்டிக் இல்லாத ஏதும் இப்போது நம் வீட்டில் இல்லை.

இப்போது கூட சிறுதொழில் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் பெரு வியாபார முதலாளிகளின் Lays, kurkure, போன்ற பிளாஸ்டிக் பொதிந்து வரும் பொருட்கள் தடை செய்யப்படவில்லை. சாமானியர்கள் உபயோகிக்கும் பொருட்கள் தடை செய்யப்படும் போது அது மக்களின் மனதில் ஒரு கேள்வியை எழுப்புவது சாதாரணமேயானாலும் இந்தத் தடை சாமானியர்களை பாதிக்கவே செய்யும்.

இப்போது ரிலையன்ஸ் மால் மாதிரியான பெருமுதலாளிகளின் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது அந்தப் பொருட்களைச் சுமந்து செல்ல அவர்களே பைகளை விற்பனை செய்கிறார்கள். அவர்களின் தயாரிப்புகளை காசு கொடுத்து வாங்கும் ஒரு வாடிக்கையாளனுக்கு அதை சுமந்து செல்ல ஒரு பை கூட இலவசமாகத் தர மறுக்கிறார்கள் பெருமுதலாளிகள். அப்படியே காசு கொடுத்து வாங்கினாலும் கூட அந்தப் பைகள் கூட ஒரு குறிப்பிட்ட அளவு எடையைத் தவிர வேறெதையும் தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு பலவீனமான காகிதப் பைகளாகவே இருக்கின்றன.

இது இப்படியென்றால் சாலையோரத்தில் பூக்களை விற்பனை செய்யும் ஒரு பெண், தான் விற்கும் பூக்களை வாடிக்கையாளருக்கு எதில் பொதிந்து தருவார் ? தாமரை இலைகளில் பொதிந்து தர வேண்டியதுதானே என்று கேள்விகள் நீங்கள் முன்வைக்கும்போது, அந்தத் தாமரை இலைகளின் விலை அவள் விற்கும் பூக்களுக்கு நிகரானது அல்லது மிகையானது எனும்போது அவளால் அந்தத் தாமரை இலையின் விலையை அந்த பூக்களின் விலையோடு சேர்த்து பெற்றுக் கொள்ள முடியுமா ? அப்படி அவள் அந்த இலைக்கும் சேர்த்து விலை வைக்கும்போது அவளிடம் யார் வியாபாரம் செய்வார்கள் ?

இப்படி பூ விற்பவர்கள், காய்கறி விற்பவர்கள், மீன் விற்பவர்கள் என்று பட்டியல் ஏராளம். ஆனாலும் பிளாஸ்டிக்கை அனுமதிக்கக் கூடாது என்பது எல்லா தரப்பிலும் வைக்க வேண்டிய தடைதானே ? இப்போதும் கூட உற்பத்திப் பொருட்கள் மட்டும் பாலிதீன் பைகளில் விற்பனைக்கு வரும்போது அதைச் சுமந்து செல்லும் பாலிதீன் பைகள் மற்றும் சிறுசிறு வணிகம் சார்ந்த பொருட்கள் மட்டும் தடைக்குள்ளாவது சரியா என்பதுதான் கேள்வி.

தற்போது பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் வேறு இந்த முடிவை ஐந்தாண்டுகள் தள்ளிப் போட வேண்டுமென அரசிடம் கோரிக்கைகள் முன்வைக்கிறார்கள். இது ஒரு தனி மனிதக் குழுக்களின் அல்லது முதலீட்டு வியாபாரிகளின் தன்னலம் சார்ந்த ஒரு கோரிக்கையல்லவா? தங்களின் தயாரிப்புகள் இத்தனைத் தீங்குகளை தங்கள் வாடிக்கையாளருக்கு தருகின்றன என்பதையும், அது தங்களின் சந்ததிகளுக்கும் கேடு தரும் என்பதையும் அவர்கள் உணர மறுப்பது ஏன் ? ஒரு பாலிதீன் பை மட்கவே நூறு ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என்பது கண்கூடாக இருக்கும் போது, இன்னும் ஐந்தாண்டுகளில் உற்பத்தி செய்யப் படும் பிளாஸ்டிக் பொருட்கள் மட்குவதற்கு எத்தனை நூற்றாண்டுகள் எடுத்துக் கொள்ளும் ?

இதுவரையில் நாம் பயன்படுத்திய பிளாஸ்டிக் குப்பைகளை இந்த மண்ணிலிருந்து அகற்ற நம்முடைய அரசாங்கம் என்ன மாதிரியான முயற்சிகளை அல்லது திட்டங்களை வகுத்துள்ளது என்பதை பொறுத்தே இந்தத் தடை வெற்றியடையும் வாய்ப்பு இருக்கிறது.

உலகநாடுகள் பிளாஸ்டிக்கின் தீமையை உணர்ந்து சில நடவடிக்கைகள் மேற்கொண்ட போது, டென்மார்க் நாட்டில் 1993 ஆம் ஆண்டு பிளாஸ்டிக் பை உபயோகிப்பதற்கு கட்டணம் விதிக்கப்பட்டது , அதனால் 60% பிளாஸ்டிக் உபயோகம் குறைந்தது

அயர்லாந்து நாட்டில் 2002 ஆம் ஆண்டு bag tax என்னும் வரிவிதிப்பு முறையைக் கையாண்டது. இதனால் பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை விலை கொடுத்து வாங்க வேண்டி வந்ததால் 90% பிளாஸ்டிக் உபயோகம் குறைந்தது, மீண்டும் 2007 ஆம் ஆண்டு பிளாஸ்டிக் பைகளின் தேவை அதிகமான போது பிளாஸ்டிக் பை விலையை அந்நாட்டு அரசு அதிகப்படுத்தியது

94% கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் பறவைகள் வயிற்றில் பிளாஸ்டிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் 267 வகையான உயிரினங்கள் உணவு உட்கொள்ள அவதிக்குள்ளாகின்றன. இதன் காரணமாக 2003 ஆம் வருடம் ஆஸ்திரேலிய அரசு பிளாஸ்டிக் உபயோகத்தை தடை செய்தது

இப்போது இந்தியாவில் சகஜமாக புழக்கத்தில் இருக்கும் எல்லா பிளாஸ்டிக் மற்றும் அதுசார்ந்த பொருட்களுக்குமான மாற்று கண்டுபிடிக்கப் பட்டுவிட்டதா என்றால் அது என்ன ? காகிதப் பைகளா ? காகிதம் அல்லது மறுசுழற்சி செய்யத் தகுந்த ஏதாவது ஒரு பொருளா என்ற ஐயம் எல்லாருக்கும் இருக்கிறது. பிளாஸ்டிக்கிற்கு மாற்று காகிதப் பொருட்கள் என்றால் அதற்கு நாம் நிறைய மரங்களைப் பலிகொடுக்க வேண்டுமே ?

அரசாங்கம் எதைத் தடை செய்தாலும் அது கள்ள மார்க்கெட்டில் கிடைக்கிறதே ? அதை எப்படி ஒழிப்பது ? எது எப்படியோ ? பிளாஸ்டிக் என்னும் அரக்கன் கடந்த முப்பதாண்டுகள் மக்களின் அன்றாட வாழ்வில் ஒட்டிக் கொண்டு மிகச் சொற்ப நாட்களில் ஒழியப் போகிறானா ? அல்லது தொடர்வானா? என்பதுதான் காலத்தின் கையிலுள்ள பதில்...

0 Comments

Write A Comment